இந்த உள்ளிருப்பு காலங்கள் கோடிக்கணக்கான இந்திய சாமானியர்களின் இயல்பு வாழ்க்கையைத் திருப்பிப் போட்டிருக்கிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும் போது இங்கு இறப்பு விகிதம் குறைவு என்றாலும், கிராமங்களுக்கும் பரவி விட்ட தற்போதைய நிலையில் இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் ஆறு மாத காலம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அரசு பணியிலிருப்போரும், தனியார்ப் பணிகளில் மாத ஊதியம் பெறுபவர்களும் தவிர்த்து கூலித்தொழிலாளர்கள் துவங்கி வியாபாரம் செய்பவர்கள் வரை அனைத்துத் தர மக்களும் பெரும் அல்லல் படுகிறார்கள்.
சிலர், அறிந்தவர்களிடம் உதவிகளைக் கேட்டு விடுகிறார்கள்; பலர், கேட்கும் திராணியின்றி பசிக்கொடுமையில் மடிகிறார்கள். வேலைகளைப் பறிகொடுத்த மன அழுத்தத்தில் பலர் உயிரை மாய்த்திருக்கின்றனர்.
கடந்த நான்கு மாதங்களில் அரசு கொடுத்தது ரூ. 2,000 மட்டுமே. அரிசியும், பருப்பும் இலவசம் என அறிவித்து விட்டு, எரிபொருளிலும், மின்சாரத்திலும் கை வைத்து இருக்கிறார்கள்.
இப்படியான தருணத்தில் இன, மத, மொழி வேறுபாடு இன்றி பல்வேறு தரப்பினர் உதவிகள் செய்து வருகின்ற நிலையிலும் சுயபிடித்தங்களுடன் சிலர் தங்கள் கரங்களைக் குறுக்கிக் கொள்வதும் தொடர்கிறது.
மாத ஊதியம் பெறுகின்ற ஒருவரிடம் சிறு உதவி கேட்டு நண்பர் ஒருவர் முறையிடுகையில்... ' அய்யோ என் கிட்டவே பெருசா எதும் இல்ல ' என்றவர், தவறாமல் ஆன்லைனில் கோடிக்கணக்கில் புரளும் சாமியார்களுக்கு அனுப்புவது முரண்.
தனியார்ப் பள்ளி/ கல்லூரி ஆசிரியர்களும், ஊழியர்களும் போதுமான ஊதியமின்றி தவிக்கிறார்கள். மாத ஊதியம் தவறாமல் பெறுவோரேனும் நமது பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றும் கற்பிப்பவர்களுக்கு உதவியாய் இருத்தல் அவசியம்.
பெரிய அளவில் செய்யவில்லை எனினும், குறைந்த பட்சம், நமக்கு அருகில் இருப்பவரின் பசிப்பிணி போக்கினாலே போதுமானது. கூடவே தனிமையில் இருக்கின்ற உறவுகளை அடிக்கடி அழைத்து அவர்களின் மன உறுதியை உறுதி செய்து கொள்ளுங்கள். பேரன்பினால் எதையும் எதிர்கொள்ளவியலும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன்
எட்வின்
சென்னை
No comments:
Post a Comment