விழாக்கள் என்றதும் நினைவிற்கு வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும், பலகாரங்களும், இனிப்புகளும் தான். குறிப்பாகப் பட்டாசுகள் ஏற்படுத்தும் உவகை அலாதியானது. சிறுவயது முதல் இன்று வரை அதிக ஒலி எழுப்புகின்ற பட்டாசுகளின் மீது பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை என்கின்ற போதிலும், வாணவேடிக்கைகளில் மனம் லயித்தே இருந்து வந்திருக்கிறது.
ஒரு காலமும் இல்லாத அளவிற்கு இந்த முறை பட்டாசுகளுக்கு தடை கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு பல மாநிலங்களில் தடைகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பட்டாசுகள் இல்லையேல் விழாக்களைக் கொண்டாடவே முடியாதா என்கிற கேள்விக்கு பதில்… முடியும் என்பது தான்.
ஆனால், பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பி தங்கள் உயிர்களையும் பணயம் வைத்து வேலை செய்கின்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகைகளைச் செய்து விட்டு இது போன்ற தடைகளை நடைமுறைப்படுத்துதலே அரசுகளுக்கு அழகு.
இதில் இன்னும் நம்மை உறுத்துவது… ‘பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு இத்தனை பேர் மரணம்’ என அடிக்கடி நாம் கேள்விப்படுகிற பரிதாபச் செய்தி!
எத்தனை ஆட்சிகள் மாறினாலும் தொழிலாளர்களின் துயரங்கள் இன்னும் மாறாமல் தொடர்வது மிகவும் வருத்தப்படவேண்டிய விடயம். தொழிலாளர்களின் பாதுகாப்போ, தொழிற்சாலைகளின் பாதுகாப்புத்தன்மையோ இங்கு உறுதி செய்யப்படுவதில்லை.
சிவகாசி பட்டாசு ஆலைகளில் பணிபுரிவோர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணிபுரிவது கண்கூடு.
கொரோனாவிற்கு பயந்து முகக் கவசங்கள அணிவது கட்டாயம் என்கிற அரசு பட்டாசுத் தொழிலாளர்கள், கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்பவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மனித மலம் அள்ளுவோர் முதலானோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் என்பதில் உறுதியாய் இருப்பதில்லை, அதற்குரிய நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும்,
பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விதிமுறைகளையும் புறந்தள்ளுகிற நம் சமூகம் மனித உயிர்களைக்
கிள்ளுக்கீரைகளாகப் பாவிப்பதில் ஆச்சர்யமில்லை!
No comments:
Post a Comment