போராளிகள் எல்லா காலத்தும் வியப்படையச் செய்கிறார்கள். அதிலும் பெண் போராளிகள் சற்று அதிகமாகவே வியப்பில் ஆழ்த்துகிறார்கள். இப்படியான மனத்திண்மை கொண்ட பெண்களை இதுவரை சந்திக்காததும், எம் நிலப்பரப்பில் இப்படியான பெண் ஆளுமைகள் இல்லாததும் ஒரு வகையில் என் வியப்பிற்கு காரணம் எனலாம்.
நேகா போரா (Neha Bora) வயது 29.
அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்,
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்,
நாடகக்கலைஞர்
என்கிற முகங்களுக்கு சொந்தக்காரர். உத்தராகண்ட் மாநிலத்தைச் சார்ந்த நேகா அவர்கள் அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறார்.
ஒரு போராளிக்குத் தேவையான முதல் சிறப்புப் பண்பு துணிவு தான். அதனை எல்லோராலும் சாத்தியப்படுத்தி விட முடியாது. நேகா எப்போதும் பெரும் துணிச்சலுடன் களத்தில் நிற்கிறார். கூடவே, அவரது செறிவு மிக்க பேச்சின் வழியாக அவரது ஆழ்ந்த வாசிப்பும், தெளிவும், உறுதியும் நமக்கு புலப்படுகிறது. நேற்று கரன் தாப்பர் அவர்களுக்கு அளித்த பட்டாசான பேட்டி அதை வெகுவாக உறுதிப்படுத்துகிறது. ( https://youtu.be/ZY2mmqFWT4k?is=qSI0OM0Rhs9m0eRI )
மாணவர் நலன்களுக்காக, விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்காக, நலிவடைந்த சமூகத்தில் உள்ளவர்களுக்காக 23 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாதது. நேகாவுடன் அவரது மாணவர் சங்க சகாக்களான மனிஷ் குமார் மற்றும் அமீன் அமிட்டோஜ் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
நமக்கு சாவித்திரிபாய் பூலே அவர்களையோ, பாத்திமா ஷேக் அவர்களையோ நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை; அவர்களது காத்திரமான பேச்சுகளையும் கேட்கும் வாய்ப்பு அமையவில்லை; ஆனால், அவர்களை நேகாவின் உருவில் பார்க்கும் பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என நேகா அவர்களது தொடர்ச்சியான கள செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஒருவர் எழுதியிருந்தார்.
அதனுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.
நேகா போரா போன்றோர் எக்காலத்தும் தங்கள் நலனை விட இந்த சமூகத்தின் நலனை, எதிர்கால சந்ததியினரின் நலனை தொடர்ந்து முன் வைக்கிறார்கள்; அவர்கள் பெரும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரியவர்கள்.
இதனால் தான் திருவள்ளுவர்…
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"
என்று எழுதி வைத்தார் போலும்!
✊🏼ஜெய் பீம்!



No comments:
Post a Comment