March 16, 2025

வாசிப்பு - The Grapes of Wrath

இத்தனை ஆண்டு கால வாழ்க்கையின் ஊடே நிகழ்ந்தவைகளில் ஆகச்சிறந்ததாக நான் கருதுவது வாசிப்பைத்தான்; இசையிலும், விளையாட்டிலும் அதீத ஆர்வம் இருந்து வந்தாலும் அவைகள் தராத உணர்வையும், நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வாசிப்பு தந்திருக்கிறது என்பேன். 

உலகைச் சரியாக அறிவதற்கும், முலாம் பூசிய போலியான வாழ்க்கை முறைகளை முன்னிறுத்தும் எவைகளின் (எவர்களின்) தாக்கமும் நமது யதார்த்தங்களைச் சிதைக்காமல் தொடர்வதற்கும் வாசிப்பு மிக மிக அவசியம். 

அப்படியான தொடர் வாசிப்பில் (கற்றலில்) John Steinbeck எழுதிய The Grapes of Wrath என்கிற ஆங்கில நாவலை சமீபத்தில் வாசித்து முடித்தேன்.

1939 ல் வெளியான இந்நாவலின் பக்கங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்தும் அன்றைய அமெரிக்காவின் முகத்தை நம் கண் முன்னர் அப்படியே காட்சிகளாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அது தான் புத்தகங்களின் வல்லமை. 

முப்பதுகளில் அமெரிக்காவில் சம்பவித்த புழுதிப்புயல், புலம்பெயர்தல், வேலைவாய்ப்பின்மை, அதிகார வர்க்கத்தின் மூர்க்கம், மாநிலங்களுக்கு (மக்களுக்கு) இடையேயான சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை, பஞ்சம், பட்டினி, கிறிஸ்தவ மதத்தை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் மூட நம்பிக்கைகள், இடது - வலது அரசியல், கம்யூனிசம், புரட்சி என இந்நாவல் தொடாத இடங்கள் இல்லை. 

குறிப்பாக ஜிம் கேசி (Jim Casey) என்கிற ஒரு கதாபாத்திரம் வருகிறது. கிறிஸ்தவப் போதகராக இருந்த அவர் வறட்சி, வறுமை, பட்டினியால் மக்கள் படுகிற அல்லல்களைப் பார்த்து அதனின்று வெளியேறி, வெறும் மதப்பிரச்சாரம் மக்களுக்கு விடுதலை தராது; பாவ - புண்ணியத்தைக் கடந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், சக மனிதனின் பசியைப் போக்குவதுமே உயர்ந்தது என இயங்குகிறார். அந்த பாத்திரம் அப்படியே Jesus Christ (JC = Jim Casey) பாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது என இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார்கள். நாவலை தீவிரமாக வாசித்துக் கொண்டிருக்கும் போது அந்த கண்ணோட்டம் நமக்கு வராத அளவிற்கு நாவல் எழுதப்பட்டிருக்கிறது.  

ஆங்கிலத்தில் கதைகள், கட்டுரைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்திருந்தாலும் மனதிற்கு மிக மிக நெருக்கமாகிப் போகும் அளவிற்கு இப்படியான ஒரு நாவலை இப்போது தான் வாசித்திருக்கிறேன். 

அதற்குக் காரணம் என்னவாக இருக்குமென்றால் ஒடுக்குபவர்கள் Vs ஒடுக்கப்படுபவர்கள் தான்; கூடவே விவசாய வெளி, பயணம், புலம்பெயர்தல், வறுமை, கம்யூனிசம், Guitar, சாரோனின் ரோஜா எனப்படுகிற 'Rosasharn' கதாபாத்திரம் என நான் தொடர்பு படுத்திக் கொள்கிற பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

Grapes of Wrath குறித்து எழுத இன்னும் பல உண்டு. 

ஆங்கில இலக்கியப் படைப்புகளில் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் இது என பரிந்துரைத்த அண்ணன் அன்பு அவர்களுக்கு நன்றி. 

புத்தகம் - The Grapes of Wrath | எழுதியவர் - John Steinbeck | பக்கங்கள் - 528 | வெளியீடு - Penguin Books

March 09, 2025

இளையராஜாவும் சிம்பொனியும் பெருங்கனவுகளும்!




 1970 லேயே தொலைதூர பயிற்சி வழியாக செவ்விசை (Classical) கிட்டார் இசைப்பதில் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் தங்கப்பதக்கம் பெற்ற இளையராஜா அவர்கள் அதன் பிறகு லண்டனுக்கு நேரடியாக வந்து பல கச்சரிகளை செய்திருந்தாலும் அவரது வேர்களான நாட்டுப்புற இசை, இந்திய செவ்விசை, கர்நாடக சங்கீதம் என  அவரது பின்னணிக்கு எவ்வித தொடர்புமில்லாத மேற்கத்திய இசையை சிம்பொனி வடிவில் இன்று (மார்ச் 8, 2025) Ilaiyaraaja Symphony No. 1 - (Valiant) என்ற பெயரில் Royal Philharmonic Orchestra வழியாக நிகழ்த்துவது தான் அவரது இசையின் உச்சம் எனலாம். 

இளையராஜா அவர்கள் மேலும் பல Symphony இசைக் கோர்வைகளைப் படைக்கக்கூடும். அதனாலேயே இந்த முறை Symphony No. 1 என பெயர் சூட்டியிருக்கிறார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.   

இளையராஜா அவர்கள் இந்த அளவு உயர்ந்து நிற்பதற்கு அவர் ஒருவரே காரணம். அவரைக் கேட்டால் இறைவனையும், ரசிகர்களாகிய நமையும் காரணம் சொல்வார். 

இசையின் மீதான அவரது தீரா காதலும், அர்ப்பணிப்பும், நேரம் தவறாமையும், இழப்புகளை இசையினாலே வென்றெடுத்த அற்புதத் திறமையும் எண்பத்தொரு வயதிலும் அவரை தொடர்ந்து இயங்க வைப்பதுமன்றி சாதனைகளையும் நாம் எண்ணுவதற்கும் அப்பாற்பட்ட இசைக் கோர்வைகளைப் படைக்கவும் செய்திருக்கின்றன என்பது தான் நிதர்சனம். 

இத்தனைச் சாதனைகளுக்குப் பின்னர் இன்றளவும் வெறுப்பை உமிழும் ஆதிக்க  மனோபாவம் உடையோரையும், வன்மமேறிய ஊடகங்களின் முட்டாள்தனமான கேள்விகளையும் அவர் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை, கூடவே அவை அவரது இசை ராஜாங்கத்தை எவ்விதத்திலும் பாதிப்பதுமில்லை என்பது தான் ஆச்சர்யம். 

அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘முயன்றால் முடியாத கனவுகள் எதுவுமில்லை’. அதனை நானும் என் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன்; இப்போதும் அதனை நுகர்ந்து கொண்டே இசைஞானியின் இசைக்கோர்வைககளின் மாயாஜாலத்தின் ஊடே Eventim Apollo அரங்கிலிருந்து இதனைப் பதிவு செய்கிறேன்.

Royal Philharmonic Orchestra வலைத்தளம் இப்படியாக இசைஞானியை பதிவு செய்கிறது. 

The release of Symphony No. 1 – Valiant on 26th January 2025 marks a groundbreaking milestone in global music history as the first full Western classical symphony composed in the UK by an Indian artist. This momentous achievement highlights Ilaiyaraaja’s unparalleled artistry and cements his legacy as a trailblazer across cultures and genres.

பண்ணைபுரம் ஞானதேசிகன் இசைஞானி இளையராஜா அவர்கள் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரும் பேறு தான்.

January 28, 2025

தப்பரும்பு - கவிதைத் தொகுப்பு - ப்ரிம்யா கிராஸ்வின்


ப்ரிம்யா கிராஸ்வின் அவர்கள் பேஸ்புக் வழியாகத் தான் பரிச்சயம். தனிப்பட்ட முறையில் அவரைத் தெரியாது எனினும் அவரின் நண்பர்கள் பகிரும் அவரது பதிவுகளை வாசிக்கும் போதெல்லாம் அன்றாட நிகழ்வுகளை அவர் சொற்களில் விவரிக்கிற முறைமையை,  சொல்லாடல்களை ரசித்திருக்கிறேன். பின்னர் அவரது பதிவுகளை பின் தொடரவும் செய்திருந்தேன். கடந்த விடுமுறையில் திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையம் சென்றிருந்த போது எதேச்சையாக ‘தப்பரும்பு’ கண்ணில் படவும் வாங்கிக் கொண்டேன். 


தப்பரும்பு கவிதைத் தொகுப்பு -  பிரிவாற்றாமையை, துயரை, தனிமையை சன்னமாக பேசுகிறது; சமயங்களில் உரக்கச் சொல்கிறது. 


வெறும் புலம்பல்கள் அல்ல அவை; கவித்துவமான சொற்களின் வழியாக வாழ்வனுபவங்களை முன்வைக்கிற தன்முனைப்பு அவை. பிரிவாற்றமையோடு நின்று விடாமல் கூடவே பூக்குட்டியையும், அன்றாட வாழ்வியலையும் கவிதைகளாக்குகிறார். 


அதில் ஒன்று


பூக்குட்டியும் புடவைத் தலைப்பும்!


தாத்தா வெற்றிலை போட்டுக்கொள்வார்... ஆச்சிக்கு கால் நீட்டி அமர வேண்டும்... அப்பாவுக்குப் பல்குச்சி...

அக்காளுக்கு இளையராஜா…

அன்னையின் புடவைத் தலைப்பை

தேடி உண்ட வாய் துடைத்தால்தான்

சாப்பிட்டு முடித்ததாய்

அர்த்தம் கொள்கிறாள் பூக்குட்டி!


சமகாலத்தில் நேசமித்ரன், நர்சிம், வெய்யில் இவர்களின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். எனினும் பெண் ஒருவரின் பார்வையில் வாழ்வனுபவங்கள் கவித்துவம் பெறுகிற போது வாழ்வின் இன்னொரு கோணம் நமக்கு புலப்படுகிறது. 


உடன் பிறந்த சகோதரிகள் இல்லாத நிலையில், கலையில், எழுத்துகளில் பரிணமிக்கும் பெண்டிரை எனக்குப் பிடித்துப் போவதில் அதிகம் வியப்பில்லை. 


ப்ரிம்யா அவர்கள் இதற்கும் ‘ எழுதும் பெண் ’ என கவிதை ஒன்றை வைத்திருக்கிறார். ‘ எழுதும் பெண்ணை விரும்பாதீர் ’ என முடிக்கிறார் அந்த கவிதையை 🤭


ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் (M Phil) பட்டமும் பெற்ற ப்ரிம்யா அவர்கள் தமிழில் எழுதுகிறார் என்பது அழகிய முரண்! 


ஒவ்வொரு கவிதைக்கும் தனி ஒரு பதிவே போடலாம் என்கிற அளவிற்கு ஒவ்வொன்றும் மனதிற்கு நெருக்கமானவை. 


அவைகளில் இருள் என்கிற தலைப்பில் எழுதப்பட்ட…


நான் இருளைத்தான் இறுக்கமாய்ப் பற்றியுள்ளேன்.

அது என்னைக் கடைத்தேற்றும்!

இருளே

நட்சத்திரங்களைப் புலப்படுத்தும்!


என்கிற பகுதியும் 


கோளாறு விழிகள் தலைப்பில் எழுதப்பட்ட…


கத்திரி வெயிலில்

தட்டோட்டில் விழுந்த

மழைத்துளி போல

அரை நொடியில் உன்னை

உறிஞ்சிக்கொள்ளும்

கோளாறு

விழிகளை என் செய்ய?


என்கிற பகுதியும் அட! என அதிகம் ரசிக்க வைத்தன.


கூடவே, நெல்லையின் தகிக்கும் வெயிலின் இடையில் அரிதாக விழும் சிறு தூறல்களை கண நேரத்தில் விழுங்கும் தட்டோடுகளைப் பார்த்து, தண்ணீரைத் தெளித்து விளையாடிய பொழுதுகள் நினைவிற்கு வந்தன. 


சகா என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில்


தனிக்குவளை நீட்டும் மதியிழந்த ஊரில்

எனக்கென பெருமழை பெய்ததல்லவா உன் வானம்! 


என நம் சமூகத்தின் அவலத்தையும் எழுதி கூடவே ‘மதியிழந்த’ என கொட்டும் வைக்கிறார் 🤭


தப்பரும்பு - தவற / தனித்து விடப்பட்ட அரும்பு அல்ல! அது மலர்ந்து கமழும் வாழ்வியல் அனுபவங்கள்🌹 


அன்பும் மகிழ்ச்சியும் ப்ரிம்யா அவர்களே 🥰


புத்தகம் - தப்பரும்பு | எழுதியவர் - ப்ரிம்யா கிராஸ்வின் | பதிப்பகம் - வாசகசாலை | பக்கங்கள் - 122









January 11, 2025

புத்தகம் - 1865 இரட்சணிய சேனை உருவான ஆண்டு


தந்தையை இளவயதில் இழந்து, பசி பட்டினியில் உழன்று, அடகுக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் வறுமையில், மது போதைகளில், களிப்பாட்டங்களில், விபச்சாரத்தில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டுருவாக்கம் செய்ய என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்; அதனால் என்னென்ன இழி சொற்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளானார் என்பது தான் இப்புத்தகத்தின் சுருக்கம் என்றாலும், கேத்தரின் பூத் எனும் பெண் இல்லாமல் போயிருந்தால் அவரால் இவ்வளவு செய்திருக்க முடியுமா என்கிற கேள்வியையும் நமக்குள் எழுப்புகிறது. 

இன்னும் சொல்லப் போனால், Salvation Army என்னும் உலகளாவிய அமைப்பு தோன்றுவதற்கு வில்லியம் பூத்தை விட கேத்தரின் பூத் தான் அதிக சிரமங்களை மேற்கொண்டிருக்கிறார் என்பது விளங்குகிறது. 



அப்படியான இணையரை மார்பகப் புற்று நோய்க்கு பலி கொடுத்த பின்னர், தனது வயோதிபத்தில் கண் பார்வையை இழந்த பின்னரும் மக்களுக்காக தொடர்ந்து பிரசிங்கித்து வந்த மனிதரின் இறுதிச் சொல் ஒன்று போதும் அவரது அர்ப்பணிப்பை நமக்கு உணர்த்த அல்லது நமக்கும் கடத்த. 

Albert Orsborn இடம் வில்லியம் பூத் இப்படியாகச் சொல்கிறார் ‘கடவுளை ஏற்றுக்கொண்டு ஒரு முறைமைகளில் வாழும் மக்களை என் கூட்டங்களுக்கு தயவு செய்து கூட்டாதே! இந்நகரத்தின் கொடும் துயரத்தில் உழலும், பாவச்செயல்களில் மூழ்கிக் கிடக்கும் மக்களை கூட்டுவாயானால் அதுவே சாலச்சிறந்தது’ 

கெடுபேறாக, இன்று அப்படித்தான் பெரும்பான்மையான கிறிஸ்தவச் சமூகம் சபை கூடுதலோடு நின்று விடுகிறது. ஏழ்மையில், வறுமையில், தேவைகளில் இருக்கும் மக்களைத் தேடிச் செல்வோர் வெகு அரிது! 

புத்தகம் - 1865 The Year that made The Salvation Army

எழுதியவர் - Peter Farthing 

வெளியீடு - Carpenter Media, Sydney, Australia 

பக்கங்கள் - 134

December 30, 2024

கிறிஸ்துமஸ் மரமும் புரிதலும்

ஏன் கிறிஸ்துமஸ் மரம் என பச்சையான ஒரு மரத்தை வீடுகளில் வைத்து அலங்கரிக்கிறார்கள் என சிறுவயது முதலே எழுந்த சந்தேகம் ஓரளவு தற்போது தான் தெளிந்திருக்கிறது. 

இலையுதிர் காலத்திலும் கூட பசுமையாய் இருக்கும் மரங்கள் (Evergreen trees) நித்திய வாழ்க்கையை உணர்த்துவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. 


அதே நேரத்தில் இலையுதிர் காலத்தில் இலைகளை இழந்து வெறுமையாய் இருக்கும் மரங்கள் குளிர்காலத்தின் சீற்றத்தையும் தாங்கி இளவேனிற்காலம் வரும் போது தனது வாழ்க்கையை / பசுமையை மீண்டும் அடைகிற ஒரு நம்பிக்கையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.



அதே போன்று பச்சை நிறம் (பசுமை) தீய சக்திகளிடமிருந்து மக்களை விலக்கி செழிப்பாக வைக்கும் என்கிற நம்பிக்கை இருப்பதாலும் இப்படியாக மரங்களை வெட்டி அலங்காரம் செய்கிறார்கள் என்பது விளங்குகிறது. 



கூடவே வட்ட வடிவிலான கிறிஸ்துமஸ் சரம் / Wreath என்பது Evergreen இலைகளான Holly மற்றும் Ivy இவைகளால் உருவாக்கப்படுகின்றது. அவை இயேசுவின் தலையில் வைக்கப்பட்ட முட்கிரீடத்தையும், சிவப்பு Berries அவர் சொரிந்த இரத்தத்தையும் அடையாளப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. 




ஆங்கில தேசத்திற்கு வந்து நான்கு பருவங்களையும் (Fall / Autumn - Winter - Spring - Summer)  ஒரு முழு சுற்று கண்ட பின்னர் தான் இவை விளங்கியிருக்கிறது. அப்படியான சில படங்களை இணைத்திருக்கிறேன். 



பால்யத்தில், வெட்டப்பட்ட Fir மரங்களின் ஒரு பகுதியை எங்கிருந்தாவது வாங்கி வந்து வாளியில் மணலைப் பரப்பி அதில் நட்டு பின்னர் அலங்காரங்களை தகப்பனார் செய்வது உண்டு. காலப்போக்கில் அவை கிடைக்காமல் போகவே செயற்கை மரங்களை வாங்கி அலங்கரிப்பு செய்வார். எனினும் இவைகளில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை என்பது வேறு விடயம் 🤭


August 25, 2024

Capernaum - Capharnaüm - கப்பர் நகூம்

 



Capernaum - Capharnaüm - கப்பர் நகூம்

திரைப்படம் குறித்து பிரபாகரன் சேரவஞ்சி அவர்கள் பதிவைப் பார்த்ததும், அட! இது பைபிள்ள வர்ர ஊராச்சே; அது சம்பந்தமான எதும் படமா இருக்குமோன்னு ஆரம்பிச்ச தேடல் கிட்டத்தட்ட மூன்று மணி நேர வாசிப்பில் கொண்டு விட்டதோடு பல தகவல்களை அள்ளித்தந்தது.

வாழை திரைப்படம் எப்படியாக அந்த மண்ணையும், அது சார் வாழ்வியலையும் பிரதிபலிக்கிறதோ அதற்கு  நிகராக, லெபனானின் பெய்ரூட் நகரில் அகதியாக வாழும் சிரியா தேசத்தைச் சார்ந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையையும் அம்மண் சார்ந்த வாழ்வியலையும் கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் Capernaum. 

இதனை இயக்கியவர் ஒரு பெண் என்பது இன்னும் சுவாரஸ்யம்; அவர் (Nadine Labaki) லெபனான் நாட்டைச் சார்ந்தவர். மத்திய கிழக்கு நாடுகளின் போர் அவலத்தில் அவரும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர். 

ஒரு நேர்காணலில் ‘ பெரியவர்களான நமது தவறுகளுக்காக குழந்தைகள் பெரும் விலை கொடுக்கிறார்கள் ’ ; ‘ மெக்சிகோவின் எல்லைப் பிரச்சனைகளால் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைககள், இந்தியாவில் தங்கள் குடும்பங்களின் உணவுத் தேவைக்காக வேலை செய்யும் சிறார்கள், இரசாயன ஆயுதங்களால் மடியும் பாலஸ்தீன், துருக்கி மற்றும் சிரியாவைச் சார்ந்த குழந்தைகள் என இவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய கல்வியும் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன என்கிறார்.

அடக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை, குழந்தைகளின் மீதான வன்முறைகளை லெபனான் நாட்டைச் சார்ந்த ஒருவரால் விளங்கிக் கொள்ள முடிகிறது; கூடவே தனது மண்ணை மட்டும் பாராமல் உலகின் பாலும் தனது பார்வையைத் திருப்பி அனைவருக்குமான ஒரு அரசியலை, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்! ஆனால் இங்கு வாழை மாதிரியான படத்தை முன்வைத்தால் அதனை பகடி செய்யும் சற்றும் அறமற்றவர்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பது எவ்வளவு இழிவு. 

Capernaum என்பது விவிலியத்தின்படி இஸ்ரவேலில் இருந்த ஒரு மீன்பிடி கிராமம். அது இரண்டாவது நூற்றாண்டில் ‘ஆறுதலின் கிராமம்’ என்று அழைக்கப்பட்டிருந்து பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு சிதிலம் அடைந்தும் போயிருக்கிறது. 

பிரெஞ்சில் Capharnaüm என்பதற்கு Ruin (அழிவு) என பொருள். இவைகளின் அடிப்படையில் தான் இந்த திரைப்படத்திற்கு Capernaum என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் Nadine Labaki.

அடக்குமுறைகளும், ஆதிக்கவாதமும் எந்த தேசத்தில் எந்த வடிவில் இருந்தாலும் அவற்றிற்கு எதிராக குரல் எழுப்புவது தான் மனிதம் என்கிற புரிதல் இருந்தால் போதும் நாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள. 

2018 ல் வெளியான Capernaum திரைப்படத்தில் நடித்தவர்களில், (அகதியான) சிறுவன் Zain உட்பட பெரும்பாலானோர் திரைத்துறையை சாராதவர்கள் என்பதும் அவர்கள் அந்த பகுதியில் நிகழ்ந்த போர்க்கொடுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இப்படம் வெளிவந்த பின்னர் நார்வே அரசு சிறுவன் Zain ஐயும் குடும்பத்தினரையும் நார்வேயில் குடியமர்த்தி சிறப்பு செய்தது. கூடவே, போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் இருக்கும் சிறார் பலருக்கும் கல்விக்கான வாசலும் UNHCR வழியாக திறந்தது. 

ஒரு திரைப்படம் அப்படி என்ன பெரிதாக செய்து விட முடியும் என்பதற்கான பல பதில்கள் Capernaum ல் அடங்கியிருக்கிறது. 

அதன் இயக்குனரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான Nadine Labaki போற்றுதலுக்குரியவர் 🥰👏

Capernaum திரைப்படம் Netflix ல் இருக்கிறது.

August 14, 2024

தொரசாமி - அம்பேத்கரிய நாவல்

 “ இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா ” என்கிற பொத்தாம் பொதுவான சொலவடை, மேம்போக்காக பார்க்கையில், ‘ அட ஆமால்ல ’ அதான், பலரும் நல்ல நிலைமைக்கு வந்தாச்சே என கருதத் தோன்றும். 

ஆனால், இன்றளவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் தொடர்ந்து தங்களை பலி கொடுத்து வருவது தாழ்த்தப்பட்ட சமூகம் தான். 

இதற்காகத் தான் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தொடர்ந்து வலியறுத்தி வந்தார். 

சுய சாதிப் பெருமை பேசுவது எந்த அளவு ஏற்புடையது இல்லையோ, அதே போன்றதே உரிமைகளுக்காக குரல் எழுப்பாமல் இருப்பதும். 

இன்றைய தேதியில் சாம்பவர் சமுதாயத்தில் இருந்து ஒரு எம். எல். ஏ வோ எம். பி யோ கிடையாது. அதன் பாதிப்பை எம் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். 

தலித் அரசியல் பேசுபவர்களும், அரசியல் ஆளுமைகளும் தலித்துகளை முன் வைத்து அரசியல் செய்கிறார்களே ஒழிய நமக்கான உரிமைகளை அவர்களால் கூட பெற இயலாத நிலை தான் சுதந்திரம் அடந்து 77 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. 

சாம்பவர் சமூகத்தில் இருந்து படித்து உயர்ந்தவர்களோ பிற ஊர்களுக்கு / நாடுகளுக்குப் போனோமா சம்பாதித்தோமோ என இருக்கிறார்கள். உள்ளூரில் இருப்பவர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என குரலெழுப்ப மறுக்கிறார்கள். 

எனினும் அண்ணன் அன்பு நமது குரல்களும், எழுத்துகளும் பதிவு செய்யப்பட வேண்டும். உரிமைகளுக்காக தொடர்ந்து நாமும் பேச வேண்டும் என்கிற அடிப்படையில் ' தொரசாமி ' நாவலை (அறம் வெளியீடு) முன் வைத்திருக்கிறார். தொடர்ந்து பல்வேறு தளங்களில் அவர் களமாடியும் வருகிறார். 

கல்வியே நம்மை விடுதலையாக்கும் என தொடர்ந்து களமாடும் அண்ணன், தோழர் மற்றும் ஆசானாகிய ஜெ. அன்பு Jai Anbu அவர்களின் எழுத்துகளும், கனவுகளும் மெய்ப்பட வாழ்த்துகள். 

அன்புகளுடன்,

எட்வின்

Related Posts with Thumbnails