February 11, 2009

உ.பி யிலும் ஆ.பி.யிலும் எம்.எல் ஏ க்கள் அட்டகாசம்

நேற்று உத்திரப்பிரதேசத்திலும் இன்று ஆந்திர சட்டசபையிலுமாக எம்.எல் ஏ க்களின் நடவடிக்கைகள் எல்லை மீறி சென்று கொண்டிருப்பது ஜனநாயக நாட்டுக்கு அழகல்லவே. அமைதியான முறையில் போராட்டங்களோ இல்லை நியாயமான முறையிலோ தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பதை விட்டு விட்டு இப்படி கூச்சல் கூப்பாடு போடுவது நமது சார்பாக சட்டமன்றங்களுக்கு பேச சென்றிருக்கும் எம்.எல்.ஏ க்களுக்கு வழக்கமாகி வருவது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

உத்திரப்பிரதேசத்தின் கவர்னர், முதல்வர் மாயாவதியின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்றும்;என்ஜீனியர் ஒருவர் கொலையில் ஆளுங்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு பங்கு இருந்தும் அது குறித்து விசாரிக்க கவர்னர் உத்தரவிடவில்லை என்றும் அதனால் கவர்னர் பதவி விலகுவதோடு ஆட்சியையும் கலைக்கும் படி கோரி முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர்.


கவர்னரை நோக்கி பேப்பர்களும் பேனர்களும் எறியப்பட்டன; கவர்னர் உரையாற்ற பலத்த எதிர்ப்பு தெரிவித்து நாற்காலி மற்றும் மேஜைகளின் மீதும் ஏறி நின்று எதிர்ப்பு பேனர்களை பிடித்துக் கொண்டிருந்தனர்.

நேற்று (10.02.2009) வட இந்தியாவில் தான் அப்படியென்றால் தென்னியந்தர்கள் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சத்யம் ராஜூவை விசாரிக்கும் விவகாரத்தில் அரசு சரிவர செயல்படவில்லையென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் சட்டமன்ற காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி சட்டமன்றத்தின் வெளியே ஆக்கப்பட்டனர்.

இந்திய ஜனநாயக நாட்டில் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க முறையான பல போராட்டங்கள் இருக்க, நம்மைப்போன்றவர்கள் தெரிந்தெடுத்த இது போன்ற எம்.எல்.ஏ க்கள் குண்டாக்கள் போல் செயல்படும் விதத்திற்கு ஓட்டுப்போட்ட நாம் தான் பிற நாட்டவர் மத்தியில் வெட்கி தலைகுனிய வேண்டியிருக்கிறது.

நன்றி hindustantimes.com மற்றும் hindu.com

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails