அண்மை காலங்களில், தினசரிகளைத் திறந்தாலே பக்கென்றிருக்கிறது. நின்று கொண்டிருப்பவர்
முதல் பயணம் செய்பவர் வரை விபத்துகளால் மடிவது மிகச் சாதாரணமாகிப் போய் விட்டது. பல
வழிகளிலும் பாழ் படிந்த நம் சமூகக் கட்டமைப்பையே இதற்கு முழு முதற் காரணமாக விளங்கிக்
கொள்ள முடிகிறது.
தமிழகம், இந்தியாவிலேயே அதிக விபத்துகளை எதிர்கொள்கிற மாநிலமாகத் திகழ்வதாக,
கடந்த ஆண்டின் ஆய்வு
ஒன்று சுட்டிக்காட்டுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.
போக்குவரத்து விதிகளையும், சட்டங்களையும் கடைபிடிக்கத் தவறும் இந்த சமூகமும், தவறுபவர்களைத் தண்டிக்க
வேண்டிய போக்குவரத்து காவல்துறையினர் தமது பணியை நிறைவேற்ற தவறுவதும், ஊழல் பேர்வழிகளால்
அமையப்பெற்ற தரமற்ற சாலைகளும் மிகவும் வருத்தப்பட வேண்டிய விடயம் மட்டுமல்லாமல், வெட்கப்பட
வேண்டிய விடயமும் கூட.
எதிர்பாரா நிகழ்வை விபத்து என்று கணக்கில் கொள்ளலாம், ஆனால் வரைமுறைக்கு அதிகமான
வேகத்தில் சென்றால் விபத்து ஏற்படும் என்பதறிந்தும்; தலைக்கவசம் அணியாமல் சென்றால்
உயிருக்கு ஆபத்து என்பதறிந்தும்; இடம் வலம் திரும்பும் முன்னர் சைகை காண்பித்த பின்னரே
திரும்ப வேண்டும் என்பதறிந்தும்; பின்பற்றாமல் ஏற்படுத்தும் மோதல்களை விபத்துகள் கணக்கில்
எடுத்துக் கொள்ளல் ஆகாது. அவை கொலை/தற்கொலைகளாகவே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
சமுக அக்கறையின்றி, வெறும் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்து
வரும் இந்த சமுதாயமானது, சட்டங்களையும், விதிகளையும், வெறும் ஏடுகளில் உறங்கும் எழுத்துக்களாகவே
தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயம்.
விதிமீறல்கள், எந்தவொரு குற்ற உணர்ச்சியுமில்லாமல் அப்பட்டமாக இங்கு செய்யப்படுவது
தான் நம் சமூகத்தின் மிகப் பெரிய நோய்! எப்படி ஒரு அமைச்சர் காலாற நடந்து சென்று மக்களின்
குறைகளைக் கேட்பதென்பது நம் சமூகத்தில் சாத்தியமில்லையோ, அதே போன்று, போக்குவரத்து
விதிமீறல்களில் ஈடுபடுவோர், தண்டனைகளுக்கு அஞ்சுவது என்பதும் இங்கு சாத்தியமில்லை.
ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், பிரதிபலிப்புக் கண்ணாடிகள் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் (குறிப்பாகப் பள்ளி,
கல்லூரி மாணவர்கள்) தலைக்கவசம் இன்றி வாகனம்
ஓட்டுபவர்கள், அதி வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கு தாண்டுதல் என விதிமீறல் செய்வோர் தினம் தினம் லட்சக்கணக்கானோர்.
இப்படியாக விதிமீறல் செய்பவர்களால் கடந்த ஆறு மாதங்களில், இருமுறை சிறிய காயங்களுடன்
இருசக்கர வாகன விபத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக
வேண்டும். (இரு தினங்கள் முன்னர் சரக்கு வாகனம் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் 24 வயதே
நிரம்பிய சகோதரர் ஒருவர் சென்னையில் மாண்டிருக்கிறார்).
அப்படியே விதிமீறல் செய்வோர், போக்குவரத்துக் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டாலும்,
எனக்கு இன்னாரைத் தெரியும், நான் அன்னாரின் உறவு என்று கூறி சமாளித்து விடுகிறார்கள்.
மறுபுறம் காவல்துறையினர், அரசு அலுவலகங்களில் பணியிலிருப்பவர்களையும், அரசியல் செல்வாக்கு
உடையவர்களையும் அவர்களுக்கு பரிச்சயமானவர்களையும் எவ்வித சோதனைகளுக்குள்ளாக்குவதுமில்லை.
இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் இருந்தும் அதை அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம்
கொடுத்து வைத்தலும், காவல்துறையினரைக் கண்டால் மட்டுமே அதைத் தலையில் அணிவதும். நான்கு
சக்கர வாகனங்களில், இருக்கைப் பட்டையை (சீட் பெல்ட்) காவல்துறையினரின் சோதனையின் போது
மட்டுமே அணிவதும், சிவப்பு விளக்கு நிறுத்தங்களில், காவல்துறையினர் இல்லாவிடில் எளிதாகக்
கடந்து செல்லுதலும் நம்மவர்களுக்கு கைவந்த கலை.
இவை போன்றதான நம் சமூகத்தின் ‘ஏனோதானோ’ பழக்கவழக்கங்களும், பெரு வாகன ஓட்டுனர்கள்,
பாதசாரிகளையும், சிறு வாகன ஓட்டுனர்களையும் (குறிப்பாக மிதிவண்டிகளை) ஏளனமாகப் பாவித்தலும்,
போக்குவரத்து விதிமுறை மீறல்களும், கண்காணிப்புப் புகைப்படக் கருவிகள் இல்லா நிலையும்,
பாதசாரிகளுக்கான நடைபாதை ஆக்கிரமிரப்புகளைக் கண்டுகொள்ளாமையும், விதிமுறைகளை சரிவர
நடைமுறைப் படுத்தாமையும், காவல்துறையின் கண்டுகொள்ளாமையும், மிக மோசமான சாலைகளும் மாறாத
வரை, விபத்துகள் @ கொலைகளும், தற்கொலைகளும் தொடர்ந்து நிகழவே அதிகம் வாய்ப்பிருக்கின்றது.