May 30, 2020

இளையராஜா – Father. Severios Thomas – மாப்பிளபாட்டு

கலைக்கு முன்னர் மதம் ஒன்றுமில்லை என்பதை கேரள மண் மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.

மார்ச் மாதத்திற்குப் பிறகு குஜராத் மாடலை கழுவி ஊற்றலும், கேரள மாடலை சிலாகித்துப் பேசுவதும் பரவலாகி நிற்கிறது.

இது போதாதென்று சமூக வலைதளங்களில் கேரளத்தைக் குறித்த தொடர்ச்சியான நேர்மறையான தகவல்களைக் கேட்டும், பார்த்தும் நானும் ஓரளவு கடுப்பில் தான் இருந்தேன்.

இதன் பின்னே, திட்டமிட்ட செயல்நோக்கம் ஏதும் இருக்குமோ என்கிற அளவிற்கு கேரள மண் சிலாகிப்பு தொடரத்தான் செய்கிறது, ஆனால், அதில் பெருமளவு உண்மையிருப்பதாலாயே தொடர்ந்து மக்களால் பாராட்டப்படுகிறது என்பது யதார்த்தம்.

Fr Severios Thomas என்பவர் பாடிய சில பாடல்களை கேரள நண்பர் ஒருவர் Facebook ல் பகிர்ந்திருந்ததை இன்று கேட்க நேரிட்டது.

Father பாடியவைகளில் ஒரு பாடல், இளையராஜா அவர்கள் இசையில் 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்நேகத்தின் பூஞ்சோல’ என்கிற மலையாளப் பாடல். அப்பாடலை அவர் பாடிய நேர்த்தியும், அவரது குரலும் மனதை கட்டிப் போடக்கூடியவை. (இளவலின் மெட்டும் கூட)


அவர் குறித்த மேலதிகத் தேடலில் கிடைத்த தகவல்கள் அலாதியானவை. Jacobite Syrian Orthodox Church ஐ சார்ந்தவர் Fr Severios.

கேரளத்தில், மாப்பிள பாட்டுகள் எனப்படுகிற மண்ணின் மணம், வாழ்வியல், மென் மனித உணர்வுகளை வெளிப்படுத்துகிற இஸ்லாமியப் பாடல்களை அதிகம் ரசித்துப் பாடுவதில் சிறந்தவர். மாப்பிள பாட்டுகள் அரேபிய, பெர்சிய, உருது, தமிழ், இந்துஸ்தானி சொற்களை உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

போதகர்களுக்குரிய அங்கியை அணிந்தே இப்படியான பாடல்களைப் பாடுகிறார் Fr Severios; இவரது பாடல்களைக் கேட்கிற இஸ்லாமியச் சமூகம் இவரை “ஞங்களுடே அச்சன்” என்று பெருமைப் படுகிறார்கள்; அதைக் கேட்டு இவர் பேரானந்தப்படுகிறார். கூடவே, பிற சமூகத்தினரும் இவரைச் சிலாகிப்பதில் வெளிப்படுகிறது மத நல்லிணக்கம்!

உங்களது சபையில் இதற்கு என்ன சொல்கிறார்கள் என்கிற கேள்விக்கு, அச்சன் அவர்களின் பதில் ‘என்னுடைய மூத்த போதகர் இதற்கு தடை போடாமல், என்னுடைய திறமையை மேலும் ஊக்குவிக்கிறார்; மனிதர்கள் ஒருவரிலொருவர் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென்கிற கொள்கையோடு இருப்பவர் அவர்; சிலர் இதற்கு எதிராக இருந்தாலும் மனிதம் போற்றுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் இதை நான் கருதுகிறேன் என்கிறார் Fr Severios Thomas.

மனம் நெகிழ்கிறது, மதங்கள் கடந்து அன்பு செய்வோம், கலைகளைப் போற்றுவோம்.

என்றும் அன்புடன்,
எட்வின்
30/5/2020
சென்னை

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails