July 01, 2020

எட்வின் எனும் நான்...


என்ன இவன் வர வர கழுத தேஞ்சி கட்டெறும்பா ஆன கத மாதிரி மத (மூட) நம்பிக்கைகளை கேலியா எழுதிட்டிருக்கான்னு சிலருக்கு தோணும். தோணலன்னா தான் பிரச்சன!

2008 ல தான் ஆசான் உந்துதல்ல பொதுவெளில எழுத ஆரம்பிச்சேன். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' ங்கிற தலையங்கத்தில எழுதின மொத பதிவுலயே 'இறைவன் வரும் வரை இந்திய மண்ணில் சமாதானத்திற்கு வாய்ப்பில்லை" ன்னு தான் முடிச்சிருப்பேன்!

இலக்கிய, வரலாறு, மண், தமிழ் சார்ந்த புத்தகங்கள் வாசித்திராத காலம் அது. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்கிற பெயரில் 'ஜெயகாந்தன்' எனும் பெரிய எழுத்தாளர், நாவல் எழுதி இருக்கார் அப்டிங்கிறதே ஆசான் சொல்லித்தான் தெரியும். அது தெரியாமத்தான் நான் அந்த தலைப்புல கிறுக்கி வச்சிருந்திருக்கேன்!!

அவ்வளவு புரிதல் தான் அப்போது இருந்தது. 2008-2020 பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்திருக்கின்றன, கூடவே, சில அறியாமைகளும், சுயபிடித்தங்களும் கடந்திருக்கின்றன. 

தொடர் வாசிப்பும் அதன் நீட்சியாக வரலாற்றை, சமகால நிகழ்வுகளை, ஆன்மீக விழுமியங்களை ஓரளவு பகுத்தறியும் மனதும் விசாலமாகியிருக்கிறது. 

சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் உரையாடல்களை முன்னெடுப்போரையும், உள்ளதை உள்ளபடி பொதுவெளியில் விவாதிப்போரையும் நாடிச் சென்று வாசித்தறியும் வேட்கை அதிகரித்திருக்கிறது.

சாதியம், தீவிர அடிப்படைவாதம், மதவாதம் குறித்து பேசுவோர் பலரையும், தனி மனித தாக்குதல் செய்வோரையும் விலக்கி வைத்திருக்கிறேன்; அது கிட்னிக்கு நல்லது என்பதாலும்!

இன்றைய தேதியில் இதனாலேயே எனது கருத்துகள் மனிதம் மறுக்கும் மத அடிப்படைவாதங்களுக்கு எதிராக இருக்கிறது; ஈயம் பூசின மாதிரியும்/ பூசாத மாதிரியுமான போலி அன்பை வெளிப்படுத்துவோரையும் எதிர்க்கிறது.

நம்பிக்கை என்பது அவரவர் மனது சார்ந்த விடயம். அதை மற்றவர் மீது திணிப்பதில் எள்ளளவும் நியாயம் இல்லை.

நம்பிக்கைகள் - மூடநம்பிக்கைகள் ஆகி விட்டால் பேரன்பிற்கு அங்கு இடமில்லை; பேரழிவே நிச்சயம்.

பேரன்பிற்கு மனிதம் போதும், மதங்கள் தேவையில்லை. அன்பு செய்வோம் ❤

எட்வின்
1/7/2020
சென்னை

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails