கிறிஸ்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்போர் அதிலும் தலித் கிறிஸ்தவர்கள் பெரும்பாலானோர் தங்களுக்குள் ஒரு எலைட் மனோபாவத்தை கொண்டு நடப்பது விவாதத்திற்கு உரியது.
ஆண்ட பரம்பரை என தங்களைக் குறிப்பிடும் வகையினருக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
தங்களது எலைட் மனோபாவம் ஆபத்தானது; அது சமூக நீதி அரசியலுக்கு எதிரானது என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பது பெரும் கேள்விக்குறி!
“கிரேக்கனென்றும் இல்லை யூதனென்றும் இல்லை” எல்லாரும் கடவுள் முன்னால ஒண்ணு தான் அப்படின்னு பவுல் எழுதியிருந்தாலும், நீர் சொல்றத சொல்லும் நாங்க பின்னொட்டு வச்சி கிறிஸ்தவ ப*#ர், கிறிஸ்தவ சா#*, கிறிஸ்தவ வ*#%@ அப்படின்னு சாதியால் தான் அறியப்படுவோம் என பிரிவினை செய்பவர்கள் தான் So Called கிறிஸ்தவர்கள்.
(இதனாலேயே தான் தலித் கிறிஸ்தவர்கள் என்றும் குறிப்பிட்டு எழுத வேண்டி இருக்கிறது.)
தலித் கிறிஸ்தவர்களை மற்ற கிறிஸ்தவ சபையினர் புறந்தள்ளுவது காலங்காலமாக நடந்து வருகிற ஒன்று. (இந்த தலைமுறையினர் ஓரளவு மாறியிருக்கின்றனர்)
இதில் இன்னும் முரண் நகை என்னவென்றால் ‘தலித் கிறிஸ்தவர்கள் இடையே கூட ஒற்றுமை கிடையாது.’
அது கூட பரவாயில்லை… NEET தேர்வு உள்ளிட்ட எந்த பொது நலன் சார்ந்த விசயத்திலும் தமிழர்களுக்குள்ளேயே அரசியல் கட்சிகள் துவங்கி , அரசியல் சாரா அமைப்புகள் வரை நமக்குள்ளேயே ஒருமித்த கருத்து கிடையாது.
இஸ்ரேலியர்கள் - இஸ்ரேல் அல்லாதோர் ( புற ஜாதியினர்) என்கிற விவரணைக்கு இணையானது தான் தலித் - தலித் அல்லாதோர் என்கிற விவரணையும்.
இது கிறிஸ்தவத்தின் அடிப்படையிலேயே பிரிவினை இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. அதே போன்ற பிரிவினை தமிழர்கள் இடையேயும் சாதி வடிவில் தொடர்கிறது.
சாதிய வேறுபாடு பார்க்காமல் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் செய்து விட்டுப் போன நற்செயல்கள் தொடராமல் போனதிலும்; ஒடுக்கப்பட்டோர் நலனிற்காக அவர்கள் செய்த சேவைகளை மறந்துவிட்டு தங்கள் சுய லாபத்திற்காக கிறிஸ்தவ தத்துவத்தை வியாபாரமாக்கியதிலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு பெரும்பங்கு உண்டு.
இப்படி உள்ளடி வேலைகள் செய்து தங்கள் மேட்டிமைத்தனத்தை நிறுவி அதன் வழியாக பொருளீட்டும் தலித் கிறிஸ்தவர்கள், பெருநகரங்களில், கேள்விகளுக்கு உள்ளாகும் போது தங்களின் தலித் அடையாளத்தையும் துறந்து விட தயாராக இருக்கிறார்கள்.
தலித் என தங்களை அடையாளப்படுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை.
தங்களை தலித் என்கிற அடையாளத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக…
“நாங்க அந்த ஆளுங்க இல்ல”
“சே… சே… நாங்க SC இல்ல! நாங்க BC தான்” என்பார்கள்.
அதாவது தங்களை பிற சாதியினருக்கு ஒப்பாக காண்பிக்க இவர்கள் முன்வைக்கும் பொய்கள் இவை.
‘தலித் என்றால் இழிவு’ என காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் விவரணைக்கு, தங்கள் நிஜ அடையாளங்களில் இருந்து தப்பிக்க முயலும் தலித்களின் இது போன்றதான சொல்லாடல்கள் மேலும் வலு சேர்க்கின்றன.
இவற்றை கண்டும் காணாமல் இருந்து விட்டு, இடைநிலைச் சாதியினரை தூக்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவை அளிப்பதும், அவர்களது சாதிய ஒடுக்குமுறைகளை கண்டிக்காமலும் இருப்பது சமூக நீதி அரசியலில் நம்பிக்கையுடையவர்களுக்கு அழகல்ல.
#தேர்தல்2026
#DalitChristians

No comments:
Post a Comment