தேர்தல் - சமூக வலைதளம் - யதார்த்த வாழ்க்கை இவை இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது. அதை நம்மால் புரிந்து கொள்ள் முடியும் ஆனால் ஏற்றுக்கொள்வதில்லை.
பணத்தினால் எதுவும் செய்து விடலாம் என கருதும் கட்சிகளும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை விவாதிக்காத சமூக வலைதள பதிவர்களும் / எழுத்தாளர்களும்/ ஊடகங்களும் அதன் போக்கிலேயே தொடர்கின்றன.
இவை பெரும்பாலும் Like/ TRP / Votes இவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன.
கன்னியாகுமரியின் இயற்கை வள அழிப்பு; கேரளாவில் இருந்து கன்னியாகுமரியில் கொண்டு கொட்டப்படும் கழிவுகள்; சிவகாசி, விருதுநகர் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்; மாஞ்சோலை மக்களின் வாக்கு பறிப்பு… இவை முதலான இன்னும் பல நூறு பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் / தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இந்த தேர்தலை ஒட்டி நிகழவில்லை.
ஆனால் வாக்கை மட்டும் இன்னாருக்கு போடுங்கள், அன்னாருக்கு போடுங்கள் என உழப்பல் தொடர்ந்தது.
கல்வியை அளித்து விட்டு கூடவே வாக்குக்கு காசையும், பொன்னையும், பொருளையும் கொடுக்கிற கட்சிகள் சமூகத்தில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வரும்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்த பிறகும் சாதியினால் பிரிந்து கிடக்கிறோம், இளைஞர்களை அரசியல் படுத்தாமல் திரை மோகத்தில் வைத்திருக்கிறோம்; அவர்களை தற்குறிகள் என்றும் அழைக்கிறோம், நகரங்களை மேம்படுத்த பல ஆயிரம் கோடிகள் செலவழித்து விட்டு நம் முதுகெலும்பான கிராமங்களை தேய விட்டிருக்கிறோம்.
பொத்தாம் பொதுவாக சனாதனத்தின் மீது குற்றம் சுமத்தி விட்டு, இடைநிலை சாதியினர் தலித் மக்களின் மீது தொடர்ந்து நிகழ்த்தும் வன்முறைகளை ஒடுக்க தவறிய திராவிட கட்சிகள் இருந்தென்ன பயன். இவர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் தலித் தலைவர்களும் வாயை மூடிக்கொண்டு இருப்பது தான் பேரபத்தம்.
இவர்கள் இப்படியாக மக்களை பிளவுபடுத்தி வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவது வெறும் வாக்குகளுக்காகவும் அதன் வழியாக பெறும் அதிகாரத்திற்கும் தான் என்பது தான் உண்மை.
அதனை திராவிட கட்சிகளுக்கு கொடி பிடிப்போர் அறிந்திருந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால் பெரும்பான்மையின் பக்கம் நின்று ஒத்து ஊதுவதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள்.
#தேர்தல்2026

No comments:
Post a Comment