September 10, 2026

Worship-ஆராதனை எனும் ஊதி பெரிதாக்கப்பட்ட மாயை



சமகாலத்தில் 2000 ற்கு பின்னர் கிறிஸ்தவ ஆலயங்களிலும், கிறிஸ்தவ மேடைகளிலும் Worship என்பதன் பெயரில் நிகழ்பவைகள் வெகுவாக அயர்ச்சியைத் தருகின்றன. 


நீரின்றி அமையாது உலகு என்பது போன்றே இசையில்லாத உலகமும் சாத்தியமில்லை. காற்று, நீர், மழை, மரங்கள், பறவைகள், பூச்சியினங்கள் என நம்மைச் சுற்றி இருப்பவைகளின் வழியே இயற்கை நம் செவிகளை இசையின்பத்தில் தொடர்ந்து லயிப்பில் வைத்திருக்கின்றன. போலவே, மனித வாழ்க்கையும் குழந்தையின் அழுகுரல் துவங்கி, தாலாட்டு, எசப்பாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி வரை இசையால் நிறைந்த ஒன்று தான் 


(இவைகளுக்கு அப்பால் காதல், பிரிவு, கொண்டாட்டங்கள் என வாழ்வின் எல்லா நிலைகளிலும் இசையைத் தவிர்க்கவியலாது).


இவைகளோடு கடவுள் வாழ்த்தையும் / கடவுளைப் போற்றிப் பாடுதலையும் பொருத்திக் கொள்ளலாம். 


கடவுள் வாழ்த்து / கடவுளை போற்றிப் பாடுதல் என்கிற மட்டில் அது நிற்குமானால் சரி; ஆனால், மனித வாழ்வியலுக்கு சற்றும் இசைவில்லாத, எள்ளளவும் பொருத்தமற்ற, அதீத பகட்டையும், மின்னணு கருவிகளால், தாள நடை அதிகரிக்கப்பட்டும், அதீத ஒலியில், செவிகள் அதிர பாடப்படும் பாடல்கள் எதைக் கொண்டு வரும் என்பது விளங்கவில்லை. 


புகைமூட்டத்தில் நின்று கொண்டு, டிஸ்கோ விளக்குகள் ஒளிர, தொண்டை கிழிய பாடுகிறார்கள். இசைக்கருவிகள் இல்லையென்றால் இப்படியான ஆராதனை என்கிற Worship கிடையாது என்கிற அளவிற்கு Template ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.


சாவு வீட்டிலும் கூட G Major / D Minor இல்லையென்றால் பாடவியலாது என்கிறார்கள். கூடவே, இதனை நடத்துபவர் சொல்வது போன்று கைகளைத் தூக்கவும், நடன அசைவுகள் செய்யவும் மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பது அடுத்த மூடத்தனம்.


கிறிஸ்தவத்தின் அடிப்படையே அன்பும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தலும், மக்களைச் சந்தித்தலும், பிறர் தேவைகளை நிறைவேற்றுதலும் தான். ஆனால், சமகாலத்தில் இவை நிகழ்வதில்லை; பகட்டும், இசைக்கருவிகள் வழியே தங்களை மட்டுமே முன்னிறுத்துவதும், Worship என்பதன் பெயரில் மக்களை Trance எனப்படுகின்ற பரவச நிலையில் வைத்திருப்பதும், கன்வென்சன் என்பதன் பெயர்களில் கூடுகைகள் நடத்தி பொருள் ஈட்டலும் தான் கிறிஸ்தவம் என்கிற அளவில் தான் சமகால கிறிஸ்தவர்கள் தொடர்கிறார்கள்.


இன்னமும் இஸ்ரவேலின் தேவன் என துதிகள் செய்யும் கிறிஸ்தவர்கள் எவரும் பாலஸ்தீனிலும், லெபனானிலும் இஸ்ரேல் நிகழ்த்தும் இன அழிப்பைக் குறித்து வாய் திறப்பதில்லை. 


Worship @ ஆராதனை எனும் போலித்தனம் மனித வாழ்வியலுக்கு எவ்வித நன்மைகளையும் பயத்தல் சாத்தியமில்லை. மக்களின் தேவைகளை சந்திக்காத, மக்களின் பிரச்சனைகளைப் பேசாத கிறிஸ்தவ நம்பிக்கை வெள்ளையைடிக்கப்பட்ட கல்லறைக்கு சமானம்.


No comments:

Post a Comment

Related Posts with Thumbnails