March 05, 2009

ICC ன் நூறாண்டு சில நினைவுகள்

நூறு ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் 1909-2009சர்வதேச கிரிக்கெட் கழகத்திற்கு(ICC)வாழ்த்து தெரிவிப்பதோடு (எனது நினைவில் நிற்கும்)கடந்த காலங்களின் சில முக்கியமான கிரிக்கெட் நிகழ்வுகளை இங்கு தொகுத்திருக்கிறேன். 100 வருடம் முழுவதையும் தொகுக்க இயலாவிட்டாலும் கடந்த 30ஆண்டுகளின் நிகழ்வுகள் பெரும்பாலும் இதில் இடம் பெற்றிருக்கும்.

எனது நூறாவது கிறுக்கலான இது, சர்வதேச கிரிக்கெட் கழகத்தின் நூறாவது ஆண்டுடன் ஒன்றிப் போவதில் மகிழ்ச்சியே.

வேற்று மொழியில் கிறுக்கிக் கொண்டிருந்த என்னை தமிழில், தமிழ்மணத்தில் எழுத வைத்த அண்ணன் அன்பு ஜெயினுக்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழ்மணம், தமிழிஸ் மற்றும் பிற திரட்டிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

பின்னூட்டமிட்டும்,வாக்களித்தும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து இணைய அன்பர்களுக்கும் எனது நன்றியை நவில்கிறேன்.அனைவரின் பெயர்களையும் குறிப்பிடுதலில் சிலரின் பெயர்கள் விடுபட வாய்ப்புள்ளதால் அதனை தவிர்க்கிறேன். பெயர்களை குறிப்பிட முடியாமைக்கு அன்பர்கள் பொறுத்துக் கொள்ளும் படி கேட்கிறேன்.

1975ல் பெற்ற உலகக் கோப்பை உடன் மே.இ.தீவின் கிளைவ் லாயிட்
1979ல் இரண்டாவது முறை பெற்ற உலகக் கோப்பை உடன் மே.இ.தீவின் கிளைவ் லாயிட்
1983 ல் பெற்ற உலகக்கோப்பை உடன் இந்தியாவின் கபில் தேவ்
1987 ல் பெற்ற உலகக்கோப்பையுடன் ஆஸியின் ஆலன் பார்டர்
1992ல் பெற்ற உலகக்கோப்பையுடன் பாகிஸ்தானின் இம்ரான்கான்
1996 ல் பெற்ற உலகக்கோப்பையுடன் இலங்கையின் ரணதுங்கா
1999,2003,2007ல் பெற்ற உலகக்கோப்பையுடன் ஆஸியினர்
டெஸ்ட் போட்டிகளில் அதிக சராசரி வைத்திருக்கும் (99.94)ஆஸியின் பிராட் மேன் உடன் வார்ன்,சச்சின்
இந்தியாவின் சுனில் கவாஸ்கர்-டெஸ்ட் போட்டிகளில் 10.000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர்
"ஆஸ்திரேலியர்களின் வித்தியாசமான களத்தடுப்பு"
டென்னிஸ் லீலியின் உக்தி
"ஆஸ்திரேலியர்களின் வித்தியாசமான களத்தடுப்பு"
(2001 ல் சிம்பாப்வே அணிக்கு எதிராக ஸ்டீவ் வாவ்)
மேலே, 1981 ல் அணித்தலைவர் கிரேக் சேப்பலின் (பந்தினை உருட்டிவிடும்)சர்ச்சையை உருவாக்கிய உத்தரவை நிறைவேற்றும் பந்து வீச்சாளர் ட்ரெவர் சேப்பல்!!

கீழே "சகோதரர்கள் கிரேக்,ட்ரெவர் மற்றும் இயன் சேப்பல்"
டிக்கி பேர்ட்-முதன் முதலில் 50 க்கும் மேலான டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பங்குவகித்தவர்
1970-1980 களில் மிரட்டிய மே.இ.தீவின் விவியன் ரிச்சர்ட்ஸ்,ரிச்சர்ட்ஸன்
ரவி சாஸ்திரி-ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்,வர்ணனையாளர்
ஆஸியின் ஆலன் பார்டர்-கவாஸ்கரின் 10,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர்
இந்தியாவின் கபில் தேவ்-ஹாட்லியின் 431 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்த முதல் வீரர்,உலகக்கோப்பையை வென்ற ஒரே இந்திய அணித்தலைவர்
நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி-டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர்
மே.இ.தீவின் மிரட்டும் வேகப்பந்து வீச்சாளர்கள்
மே.இ.தீவின் கோர்ட்னி வால்ஷ் - டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர்.
அம்ப்ரோஸ்-வால்ஷ் இணை அவர்களிடையில் 49 டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்

எதிரணிகளை திணறடித்த பாகிஸ்தானின் அதி வேகப்பந்து வீச்சாளர்கள் வாசிம் அக்ரம்-வக்கார் யூனிஸ். வாசிம்-டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கடந்த முதல் பந்து வீச்சாளர்

பாகிஸ்தானின் ஜாவித் மியான்டட்-பாகிஸ்தானிற்காக டெஸ்ட் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்.1986,ஷார்ஜாவில் இந்தியாவிற்கு எதிரான ஒருதின போட்டி ஒன்றின் இறுதிப் பந்தில் சிக்சர் அடித்து பாக்கின் வெற்றிக்கு வழிவகுத்தார்.1992 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் கிரண் மோரேயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர். ஆஸியின் டென்னிஸ் லீலி சீண்டியதால் அவரை மட்டையால் தாக்கவும் பார்த்தவர்.

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்-மிக இள வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில்
அறிமுகமான முதல் இந்திய வீரர்

நடுவர் டேவிட் ஷெப்பர்ட்-நெல்சன் என அழைக்கப்படும் 111 ஓட்டங்களின் போது ஒற்றைக்காலில் நிற்பது இவரின் தனித்தன்மை

ஆஸி வீரர் மெக்கிராத்,இந்தியாவின் கம்பீர்,பிரசாத்,பாக்கின் சொஹைல் ஆகியோரின் கோபம் தெறிக்கும் வாக்குவாதங்கள்

இந்தியாவின் மூன்று அணித்தலைவர்கள் கபில்,அசார்,சச்சின்

1998,ஷார்ஜாவில் தனி ஆட்டக்காரராக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெற்ற கோகோ கோலா கோப்பையை வென்றுத் தந்த சச்சின்
1996,கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் மோசமான ஆட்டத்தை காணசகிக்காத ரசிகர்கள் தீயிட்டனர்.ஓட்ட விகித அடிப்படையில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ்-மிகச் சிறந்த களத்தடுப்பாளர்
கங்குலி-ஃப்ளின்டாஃபின் பழிக்குப் பழி மேலாடை உரிப்புகள்
ஆஸியின் வாவ் சகோதரர்கள்-சிம்பாப்வேயின் ஃப்ளவர் சகோதரர்கள்


நான் அதிகம் ரசிக்கும் வர்ணனையாளர்கள் ஹார்ஷா,ஆலன் வில்கின்ஸ்,டோனி கிரெயிக்,இயன் சேப்பல்,ரவி
தென்னாப்பிரிக்காவின் முதல் உலகக்கோப்பை போட்டியான 1992,உலகக்கோப்பை போட்டியின் சோகமான முடிவு
தென்னாப்பிரிக்காவிற்கு மீண்டும் துரதிருஷ்டம். சமநிலையில் முடிந்த பரபரப்பான 1999 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி. வேதனையில் தென்னாபிரிக்க வீரர் "க்ளூஸ்னர்". உற்சாகத்தில் ஆஸியினர்

2003 உலகக் கோப்பை போட்டியில் பான்டிங்கின் அதிரடியால் தோல்வியடைந்த இந்திய அணிக்கு சச்சினுக்கு கிடைத்த "தொடரின் சிறந்த வீரர் விருது" சிறிய ஆறுதல். பாக்கிற்கு எதிரான போட்டி ஒன்றில் அக்தரின் பந்தை சிக்சருக்கு விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.அதற்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விருது வழங்கப்பட்டது



கங்குலி-சேப்பல் ஒத்துப்போகாத இணை


ஓவல் டெஸ்ட் ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணி மீது குற்றம் சாட்டப்பட்டதால் விளையாட மறுத்தது பாக் அணி. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை வென்று 2008 காமன்வெல்த் கோப்பையை வெல்ல காரணமாயிருந்த சச்சின் கோப்பையுடன்.

இந்தியாவின் யுவ்ராஜ் சிங்-T20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனை செய்தார்


2007 ல் முதல் T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினர்
பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்-பாகிஸ்தானிற்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்,டெஸ்ட் போட்டிகளில் சொற்ப ஓட்டங்களில் ஜாவித் மியான்டடிடம் முதலிடத்தை பறிகொடுத்தவர்.



1985-2008 வரை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலிய அணி
2007-2008, இந்தியா-ஆஸி இடையேயான சிட்னி டெஸ்ட் போட்டி பிரச்சினை

ஹர்பஜன்-சைமன்ட்ஸ் இனவெறி தாக்குதல்?
2008 IPL T20 போட்டிகளின் நாடகங்கள்
ஆஸ்திரேலியாவின் ஷேர்ன் வார்ன்-டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர்
இலங்கையின் முத்தையா முரளிதரன்-டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்துவீச்சாளர்

இந்தியாவின் அனில் கும்ப்ளே-ஒரு இன்னிங்க்சில் 10 விக்கெட்டுகள் முழுதும் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர்.600 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியர். டெஸ்ட் ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களுள் சதமெடுத்த முதல் சுழற்பந்து வீச்சாளர்.
மே.இ.தீவின் பிரயன் லாரா-டெஸ்ட் ஆட்டங்களில் 400 ஓட்டங்கள் எடுத்த முதல் மட்டையாளர்.

டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் 10,000 ஓட்டங்களுக்கும் மேல் குவித்த முதல் மே.இ.தீவு மட்டையாளர்
தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ்-2007,உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்திற்கு எதிராக ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை செய்தார்

தென்னாப்பிரிக்காவின் ஹான்சி குரோனியே-தென்னாப்பிரிக்க அணியை பயிற்சியாளர் பாப் ஊல்மருடன் இணைந்து அருமையாக வழிநடத்திய அணித்தலைவர். கிரிக்கெட் சூதாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவர் 2002 ஆம் ஆண்டு மர்மமான முறையில் விமான விபத்தில் மரணமடைந்தார்


பயிற்சியாளர் பாப் ஊல்மர்-2007 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் அயர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அடைந்த தோல்வியின் பின்னர் சோகமாக காணப்பட்டவர் அன்று இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார்.

2007 உலகக் கோப்பை போட்டியில் பங்களாதேஷிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியின் சோக முகங்கள்

டெஸ்ட் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் எடுத்திருந்த மே.இ.தீவை சார்ந்த லாராவின் சாதனையான 11,953 ஓட்டங்களை முறியடித்த சச்சின்

3.3.2009 அன்று லாகூரில் நிகழ்ந்த துயர சம்பவம்

ஆப்கனில் கிரிக்கெட் ஆடும் இளைஞன் ஒருவன்!
ஆப்கன்,பாக்,இலங்கை மற்றும் தெற்காசிய பகுதிகளில் அமைதி ஒளி என்று வீசுமோ?




புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் நன்றி: cricinfo bbc nytimes sundaymercury

March 04, 2009

பொருளாதாரத்தை சீர்குலைக்க நடத்தப்பட்ட தாக்குதல்

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீதான தாக்குதலை அவர்கள் மீதான தாக்குதலாக மட்டுமே கருத முடியாது.ஏற்கெனவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தெற்காசிய பகுதியை மேலும் பொருளாதார சீர்கேட்டிற்குள்ளாக்கும் மற்றுமொரு முயற்சியாகவே இது தோன்றுகிறது.

இந்தியாவின் பொருளாதார மையமான மும்பையில் 2008,நவம்பர் மாதம் நடந்த தாக்குதலுக்கும் தற்போது லாகூரில் நடந்த தாக்குதலுக்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லையெனவே படுகிறது.

இரு தாக்குதலையும் தொடுத்தவர்கள் மிக சாதாரண வழிபோக்கர்களைப் போலவே செயல்பட்டு தங்கள் இலக்கை அடைந்திருக்கின்றனர்.

இரு நாட்டு பாதுகாப்பு கவசங்களையும் மிக எளிதாக கடந்து தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். தாக்குதலுக்கு பின்னர் சர்வ சாதாரணமாக மும்பை விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்து சென்றது போல லாகூரிலும் தப்பித்து சென்றிருக்கின்றனர் தீவிரவாதிகள்.

தற்போது வெளியாகியுள்ள ஜியோ தொலைக்காட்சியின் வீடியோக்களில் லாகூரில் இரு சக்கர வாகனங்களில் தீவிரவாதிகள் தப்பி செல்லும் போது அவர்களை எதிர்க்க ஒரு போலீசையும் கூட காணவில்லை.பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரத்தில் பாதுகாப்பு அத்தனை பலமாக இருந்திருக்கிறது!!!

தாக்குதல் நடந்த அன்று பேருந்திற்கு வழக்கமாக அளிக்கப்படும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என ஆட்டக்காரர்கள் சென்ற பேருந்தின் பின்னால் சென்ற வேனில் பயணித்த ஆட்ட நடுவர் கிரிஸ் ப்ரோடும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடரும் தீவிரவாத தாக்குதல்களால் ஏற்கெனவே பிற நாடுகள் விளையாட்டிற்காக பாகிஸ்தானிற்கு செல்ல மறுத்து வருகையில் தற்போதைய லாகூர் தாக்குதல் மற்றும் மும்பை தாக்குதலினால் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசியாவின் பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் சர்வதேச ஆட்டக்காரர்களும் கூட செல்லத் தயங்கலாம்.

இதனால் விளையாட்டின் மூலம் கிடைக்கும் வருவாயும், சுற்றுலா பயணிகள்,விளையாட்டுகளை கண்டுகளிக்க வரும் வெளிநாட்டு பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயும் வெகுவாக பாதிக்கப்படும்.

IPL போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் மட்டும் சுமார் 4000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுமென தெரிகிறது.அப்படியென்றால் 2010ல் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகள்,2011 ன் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் மேலும் பிற விளையாட்டுகள் ரத்து செய்யப்படுமானால் நிச்சயமாகவே பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு அதிக பாதிப்பு ஏற்படலாம்.

அதோடு சர்வதேச அரங்கில் தெற்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு முறைகளும் கேள்விகளுக்குள்ளாகும், இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையில் காணப்படும் எஞ்சிய சகோதரத்துவமும் குறையலாம்.

இவைகள் தான் தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக இருந்திருக்க வேண்டும்,இதில் அவர்கள் வெற்றியும் கண்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் நடைபெறப் போகின்ற தேர்தலிலும் அதன் பின்னர் ஆட்சி அமைப்பதற்காக நடக்கவிருக்கும் முயற்சிகளினிடையிலும் என்னென்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.

இலங்கை ஆட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு பிந்தைய புகைப்படங்கள்

தாக்குதலுக்குள்ளான பேருந்து
தாக்குதலுக்குள்ளான பேருந்தின் முகப்பு
ராணுவ ஹெலிகாப்டரில் ஏறி லாகூர் விமான நிலையம் செல்ல தயாராகும் இலங்கை அணியினர்
அந்த இக்கட்டான நிலையிலும் இலங்கை அணியினர் புகைப்படம் எடுத்துக் கொண்டது தான் நல்ல காமெடி
சமரவீரா

தாக்கப்பட்ட பேருந்தினருகில் பாக் கேப்டன் யூனிஸ்

மெண்டிஸ், ஜெயவர்தனே மனைவி கிறிஸ்டினாவுடன்


வரலாற்றிலேயே மைதானத்தினுள் நுழைந்த முதல் ராணுவ ஹெலிகாப்டர் இதுவாகத்தானிருக்கும்.
இலங்கை அணியின் துணை பயிற்சியாளர் பால்
கடாஃபி மைதானத்தின் மேல் பாதுகாப்பிற்காக பறக்கும் ராணுவ ஹெலிகாப்டர்
இலங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் ஜெயவர்தனே
இலங்கை விமான நிலையத்தில் மனைவி கிறிஸ்டினாவுடன் ஜெயவர்தனே
நன்றி: cricinfo

கம்ப்யூட்டர இங்க கூட வைக்கலாமோ!

சோனியின் இந்த Pocket PC 9.65" x 4.72" அளவே உள்ளது.
மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.
சோனி அறிமுகப்படுத்தியுள்ள புதிய P-series Pocket PC தொலைக்காட்சி விளம்பரத்தின் காணொளி கீழே

March 03, 2009

கிரிக்கெட் ராஜாக்களின் திருட்டுப் பார்வை!

எங்க பாக்குதுங்க இந்த கிரிக்கெட் மட்டைங்க...
பொது இடத்திலயுமா இப்பிடி. ஏன்டா மானத்த வாங்குறீங்க

லலித் மோடி தான் அப்பிடினா லலித் மோடி கோஷ்டிகளும் இப்பிடி தானா!


நல்ல பிள்ளயாட்டம் சச்சின் மட்டும் வேற எங்கயோ பாத்ததால மீடியா பார்வையில இருந்து தப்பிச்சிட்டாரு போல.

உபரி தகவல்:லலித் மோடி மார்ச் ஒன்றாம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

March 02, 2009

ஓப்ரா நிகழ்ச்சியில் ரஹ்மானின் ஜெய்ஹோ

ஆஸ்கர் விருது பெற்ற மறு தினமே அமெரிக்காவின் புகழ்பெற்ற ஓப்ரா வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்லம்டாக் மில்லினியரின் ஜெய்கோ பாடலை நடனக்குழுவினருடன் ரஹ்மான் நிகழ்த்தி காட்டினார்.

நிகழ்ச்சியில் ரஹ்மானின் பெயரை கூட சரியாக உச்சரிக்க வரவில்லை ஓப்ராவிற்கு... ஆனால் எப்படியோ ஜெய்ஹோவை மட்டும் சரியாக உச்சரித்து விட்டார்.(அமெரிக்கர்கள் உச்சரிக்கும் அளவிற்கு புகழ் பெற்றுள்ளது குல்சாரின் ஜெய்ஹோ வரிகள்)காணொளியை இங்கே இணைத்துள்ளேன்

ரஹ்மானின் (அமெரிக்க) காட்டில மழை... எல்லா புகழும் ரஹ்மானுக்கே

March 01, 2009

அதிகாலை உத்வேகம்...

பனி மூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தாலும் அதிகாலமே நெத்தியில் பட்டையும், தோளில் துண்டுமாக சாயக்கடை மணி சேட்டன் கடையை திறந்து வைத்துக் கொண்டு "கோயம்புத்தூரில ஷோப்பின(Shop)வச்சிருக்கணும், மேட்டுப்பாளயத்து வந்து ஒண்ணும் நடக்கல", சின்ன வயசில எதும் படிச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா என முனங்கிக் கொண்டே கடைக்கு சாம்பிராணி காட்டிக் கொண்டிருந்தார்.

எப்போவும் போலில்லாமல் டிசம்பரில் ஆட்கள் கடைக்கு வருவது குறைவு தான்.அத்தனை பனிமூட்டத்தில் காலையிலே யார் தான் வருவார்!

"ஈஸ்வரா இன்னெங்கிலும் நல்ல விதம் நாலு காசு கிட்டனே" என சொல்லி முடிக்கும் முன்னரே வழக்கமாக வரும் பாலக்காட்டு சேல்ஸ் ரெப் விமல் ஆஜர். சேட்டா சுகம் தன்னே, என்ன ஒரு வல்லாத்த சோகம்,என்றார்.

ஒந்நுமில்லா என்ற சாரே... ஹோர்லிக்ஸானோ(Horlicks) அதோ கோஃபியானோ(Coffee) என தொழிலில் மும்முரமாயிருந்தார் சேட்டன்.

கோஃபி போதும்,ப்ரோப்ளம் (Problem)உண்டெங்கி சொல்லு அண்ணாச்சி,நம்ம கிட்ட சொல்றதுக்கு ஏன் தயங்குது என்றார் விமல்.

ஏ... பெருசா பிரஸ்னம் இல்லா,ஷோப்பில (Shop) மும்பு(முன்பு) போல ஆள் வரத்து இல்லே,அது தன்னே; வேற ஒண்ணுமில்ல என்றார் காஃபியை கொடுத்தவாறு.

அதனிடையில் கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் படிக்கும் சிநேகிதர் ராஜனும் வரவே சேல்ஸ் ரெப்புக்கு அரட்டை அடிக்க துணையாகி விட்டது.

என்ன ராஜன் பாஸ்,கால்ல என்ன கட்டு என்று கேட்டார் சேல்ஸ் ரெப்,அது ஒண்ணுமில்ல சார் நேத்து வாலி பால் விளையாடினப்போ கீழ விழுந்திட்டேன்,சின்ன அடி தான் என்ற ராஜன்,சேட்டா ஒரு வில்ஸ் ஃபில்டர் ஒரு காஃபி என்று ஆப்பத்திற்கு மாவு கலக்கிக் கொண்டிருந்த சேட்டனிடம் கூவினார்.

"வோளிபோள் (Volley ball) மும்பு நானும் விளையாடி இருக்கு கோலேஜ்ல(College) படிக்கும் போது"என சேல்ஸ் ரெப் கதை அளக்க தொடங்கினார்.கிரிக்கெட் தான் ஆனா எனிக்கு இஷ்டம்,ஞான் நல்ல ஸ்பின் பௌளர்(பௌலர்/bowler) ஆணு என்று பழைய நினைவுகளில் மூழ்கினார்.

காஃபி டம்ளரை சேட்டனிடம் நீட்டியவாறு ... ராஜனிடம், பின்னே ... ராஜன்ற ஓரஞ்சு (Orange) பிசினஸ் எங்கன உண்டு என்றார் சேல்ஸ் ரெப்,

அது பரவாயில்ல சார்,அப்பாக்கு உடம்பு சரியில்லாத தால சாயந்திரம் முழு நேரமும் நானே பாக்க வேண்டியதா இருக்கு;அங்க இருந்தே படிக்கவும் செய்யணும் சார்,வீட்டில போனா வீட்டு வேலக்கே நேரம் சரியா இருக்கும் என்றார் வருத்தத்துடன் ராஜன்.

அய்யோ பாவம்,இது போலே செறுக்கன்(பையன்) எல்லா அச்சன்மார்க்கும் (அப்பா) கிட்டியால் பாக்கியம், என்ற வீட்டில பிசாசு ஒண்ணு இருக்கே... பறஞ்சா (சொன்னா) கேக்காது என்று கோபத்தில் தோளில் கிடந்த துண்டை உதறிக் கொண்டு காஃபியை ராஜனிடம் கொடுத்தார்.

இப்போ தொழிலும் ரொம்ப மோஷம்,வீட்டிலே டிவி பின்னே கம்பியூட்டர் ஷோப்புகள்(shop) வந்த பின்னாடி முன்னப் போல பத்திரம்(செய்தித்தாள்), புஸ்தகம் வாங்கான் கூட ஆள் இல்லா.

டிஃபனும் சரியா போறது இல்ல,இதின்ற இடையில் கலியாண வயசாய மோளின்ற (மகளுடைய) செலவுக்கு எங்க இருந்து காசு பாக்கும் ஞான்;எந்தா செய்யா( என்ன செய்ய) என்ற ஈஸ்வரா என புலம்பினார் சேட்டன்.

வீடுகளில் சன்டே விடுமுறையில் அதிகம் விற்பனை செய்யலாம் என்பதால், சன்டே அல்லே இன்னு,ஓஃபீஸில(Office) நெறய பணி உண்டு. சரி ஞான் கொஞ்சம் சீக்கிரம் போகுவா என்றார் சேல்ஸ் மேன்.

சார் உங்க நாவல மறந்து வச்சிட்டு போறீங்க என்றார் ராஜன்,ஓ என்ற நோவல்( Noval) மறந்நு போயி என அதை வாங்கியவர் சாலையின் அந்த பக்கம் நின்று கொண்டிருந்த ஆட்டோவை பார்த்து ஓட்டோ (Auto) என்று கத்தினார்.

சவாரி இருக்கு சார் என்றார் ஆட்டோ டிரைவர் பதிலுக்கு.
ஓ என்ற தெய்வமே, இந்நு என்ற நோவல் மறந்நு,இப்போள் ஓட்டோ கிட்டுந்நில்லா, பஸ்ஸும் இப்போ இல்லா ... எப்போளும் எனிக்கு ராசியே இல்ல ராஜன் என்று சலித்துக் கொண்டு சேட்டன் கடையில் சோகமாக வந்து அமர்ந்தார்.

இதோ வந்திருச்சிங்க பஸ், என்ற ராஜன்... சலிச்சுக்காதீங்க சார்.வாழ்க்கைல எல்லாம் நல்லதுக்காகத் தான் நடக்கும்,ஒண்ணு போனா இன்னொண்ணு வரும்,இப்போ கூட பாருங்க ஆட்டோ இல்லனா என்ன! பஸ் இருக்கு.

நாம விரும்பினது கிடைக்கலனா,கிடைச்சத வச்சு சந்தோஷப்பட்டுக்கணும்,எதயுமே பாஸிட்டாவா பாருங்க சார் என ராஜன் கூறவும் டீ கடை சேட்டன் பிரமித்தார்.

விடுமுறை நாளில் கூட உழைக்கும் சேல்ஸ் மேனையும்,சின்ன வயதில் இத்தனை பக்குவம் கொண்டு படிப்பையும் அப்பாவின் தொழிலையும் கவனிக்கும் ராஜனையும் கண்டு கண்கலங்கினார் சேட்டன்.

இனிமேல் ஏன் படிக்கவில்லை என நினைப்பதும்,சலித்துக் கொள்வதும் தவறு;தொழிலை முன்னேற்ற வழியில்லாமலா போய்விடும் என அந்த தெளிவற்ற பனி மூட்டத்தினிடையிலும் தெளிவான மனம் கொண்டார் சாயக்கடை மணி சேட்டன்.

பின்குறிப்பு:இச்சிறுகதையில் வரும் சில ஆங்கில சொற்களின் உச்சரிப்பு கேரளத்தவர்களுக்கே உரித்தான உச்சரிப்புகள்.அவற்றை கேரளத்தாரின் பேச்சு வழக்கிலேயே எழுதியிருக்கிறேன்; அவை அவர்களின் பேச்சு வழக்கை இழித்து எழுதப்பட்டதல்ல.
Related Posts with Thumbnails