March 19, 2009

சொந்த மகள்களை கற்பழித்த தகப்பன்களின் கொடூரம்

கடந்த இரு நாட்களாக ஊடகங்கள் வழி கேள்விப்படும் செய்திகளை கேட்கவே அதிர்ச்சியாயிருக்கிறது.

ஆஸ்டிரியாவில் 72 வயதான ஜோசஃப் பிரிட்ஸ்ல் என்றவர் தனது சொந்த மகளுடன்(எலிசபெத் தற்போது 42 வயது) 25 வருடம் குடும்பம் நடத்தி 7 குழந்தைகள் (மன்னிக்கனும் பேரக்குழந்தைகள்) பிறக்கவும் காரணமாகியிருக்கிறார்.

அவற்றில் ஒரு குழந்தையை கொலையும் செய்திருக்கிறான் இந்த கொடியவன். விசாரணையின் போது நீதிமன்றத்தில், அவள் என்னுடைய குழந்தைகளை பெற்றால் என்னைத் தவிர வேறு எந்த ஆணிடமும் நெருங்கி பழகாமலிருப்பாள் என கருதியே இதைச் செய்ததாக தெரிவித்துள்ளார் !!

கடந்த 25 வருடங்களாக மகளை எவரும் அறியாவண்ணம் பாழ்கிடங்கு ஒன்றில் ஒளித்து வைத்திருக்கிறார். என்ன கொடுமை!

-----------------
இன்று காலை கேள்விப்பட்ட இதே போன்ற மற்றொரு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளிநாட்டில் அல்ல இந்திய மண்ணில் (மும்பையில்) நடந்திருக்கிறது.

செல்வச்சீமான் ஆவதற்கு இதுவே வழி என்ற சாமியார் ஒருவரின் அறிவுரைக்கு இணங்கி 9 வருடம் தனது மூத்த மகளின் 15வயது முதல் கற்பழித்து வந்திருக்கிறார் ஒரு தகப்பன்(தொழிலதிபர்).

இரண்டாவது மகளிற்கு 11வயதிருக்கும் போதே காம விளையாட்டிறகாக சாமியாருக்கு படைத்திருக்கிறார்.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் தந்தையின் இச்செயலுக்கு தாயாரும் உடந்தையாம்.

கொடுமை தாங்காத பெண்கள் இருவரும் தங்கள் தாத்தா மற்றும் மாமனாரிடம் இரு தினங்களுக்கு முன்னர் தான் (காலந்தாழ்ந்து?)தெரிவித்துள்ளனர்.தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கேட்கவே அதிர்ச்சியளிக்கும் இந்த கொடூரங்களை அனுபவித்த இப்பெண்கள் எவ்விதமான மனநிலையிலிருப்பார்கள், எத்தகைய அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார்கள் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

கொடுமைப்பா...

மற்றொரு செய்தி. ஷிம்லாவில் காது கேளாதவர்கள் பள்ளி ஒன்றில் மூன்று ஆசிரியர்களும் ஒரு பிரின்சிபாலும் இணைந்து மாணவிகளை தங்கள் காம இச்சைக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இந்தியாவின் பெரும்பாலான பள்ளிகளில் இது போன்ற அவதிக்கு ஆளாகி வருகிறார்கள் மாணவிகள்.

என்ன உலகமய்யா இது!
நன்றி: skynews ndtv

March 18, 2009

பார்ட்டி,டிஸ்கொத்தேக்களின் பகீர் அரங்கேற்றங்கள்

இன்று நகரங்களில் பார்ட்டிகள்,டிஸ்கோத்தேக்கள் என அழைக்கப்படும் கேளிக்கை விருந்துகளில் அரங்கேறி வரும் சம்பவங்கள் முகம் சுளிக்க வைப்பவையாக இருக்கின்றன.

நள்ளிரவுகளில் நடக்கும் இது போன்ற கும்மாளங்களில் பெரும்பாலும் இள வட்டங்களே ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி கலந்து கொள்கின்றனர்.

சென்ற வாரத்தில் இந்திய பெருநகர் ஒன்றில் நடந்த பார்ட்டி ஒன்றின் சில புகைப்படங்ளை மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்றேன். முகம் சுளிக்க வைக்கும் இந்த புகைப்படங்களில் ஆண் பெண் வேறுபாடு மட்டுமின்றி வயதும் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என புலப்படுகிறது.

ஒரு புகைப்படத்தில் குறைந்தது 45 வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் தன்னை விட 20 வயது குறைவான பெண்ணுடன் சல்லாபிக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் இரு ஆண்களும் இரு பெண்களும் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றனர்.


என்ன கொடும அய்யா இது! திரை உலகிலும் இது சகஜமே!

பார்ட்டிகள்,டிஸ்கொத்தேக்கள் மட்டுமே தங்களுக்கு உற்சாகம் தருவதாக பெரும்பாலான இளமைப் பட்டாளம் நம்புகிறது.

திங்கள் முதல் சனி வரை ப்ராஜக்ட்,அசைன்மன்ட் என களைத்துப் போயிருக்கும் எங்களுக்கு சேட்டர்டே நைட் பார்ட்டிகள் தான் "சின்ன" ஆறுதல் என புலம்பவும் செய்கின்றனர் இளசுகள்.

இது போன்ற கும்மாளங்களில் ஆட்டம் மற்றும் உணவு பரிமாறுதல் மட்டுமல்லாது,மதுவும்,புகையும் மிக சகஜம். இன்னும் சொல்லப்போனால் மதுவிற்கு தான் முதலிடம் அதன் பின்னர் தான் ஆட்டமெல்லாம்.

வரைமுறைகள் pub ற்கு pub மாறவும் செய்கிறது, சில பப் களில் ஜோடியாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கிறார்கள்.சிலவற்றில் மதுவுக்கு தடையும் உண்டு.

பெருநகரங்களில் அரங்கேறி வரும் இது போன்ற கும்மாளங்கள் ஒரு எல்லைக்குள் நிற்பது வரை எவர்க்குமே பிரச்சினை இல்லை.

இது போன்ற கூத்துகளால் இன்று மதுவிற்கும்,புகைக்கும் அடிமையாகி வரும் இளசுகள் ஏராளம்.அதோடு கருக்கலைப்பு வரை இட்டுச் செல்கிறது இவர்களின் எல்லை மீறல்.

இப்படி இருப்பவர்கள் தங்கள் வருங்கால (தற்கால!!!)துணைகளுக்கு எப்படி உண்மையாக,ஒழுக்கத்துடன் இருப்பார்கள் என்பது யாரறிவார்?

இதனால் தானோ என்னமோ இன்று இந்திய நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன.

மது மற்றும் புகையினால் வரும் வியாதிகளையும், விளைவுகளையும் பட்டியல் போட வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்!

இவர்களின் இம்மாதிரியான உறவுகள் முறிவடைந்தால் இவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றொரு உபரி வியாதி.

வேலைப்பளுவினால் ஏற்பட்ட மன அழுத்தத்தை மாற்ற வழி தேடியோர்க்கு பல நேரங்களில் அதுவே மன அழுத்தமாக மாறி விடுவது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி!

March 17, 2009

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் ஆட்டங்கள் ஒரு முன்னோட்டம்

நியூசிலாந்திற்கு எதிரான 20-20 ஆட்டங்களில் தோல்வியடைந்த இந்திய அணி ஒரு தின ஆட்டங்களில் மழையின் குறுக்கீடுகளினாலும்,மட்டைவீச்சாலும் வெற்றியை ஈட்டியது.
ஒரு தின போட்டிகளின் அனைத்திலும் நியூசிலாந்து அணியினர் இந்தியாவிற்கு சரிசமமாகவே ஆடினர்.20-20 மற்றும் ஒரு தினபோட்டிகளை மொத்தமாக கணக்கிட்டால் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சரிசமமாக வெற்றி ஈட்டியுள்ளன.


நாளை முதல் டெஸ்ட் ஆட்டம் தொடங்கவிருக்கிறது.டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைய வேண்டும்.மட்டை வீச்சை மட்டுமே நம்பியிருந்தால் இந்திய அணி வெற்றி பெறுவது நிச்சயமாக கேள்விக்குறிதான்



திராவிட்டை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி


பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் மகன் ஜோஷ் யங் உடன் சச்சின்
பயிற்சிக்கு பின்னர் சேவாக்
நியூசிலாந்தின் மாநில அணியான கேன்டர்பெர்ரிக்காக சதமடித்து புதுப் பொலிவுடன் இருக்கும் திராவிட்
விக்கெட்டுக்களுக்காக ஹர்பஜனின் பின்னால் தோனி நிச்சயம் ஓட வேண்டியிருக்கும்
ஒரு தினப் போட்டிகளின் போது காணப்பட்ட இந்திய ரசிகர் கூட்டம் டெஸ்ட் ஆட்டங்களிலும் தொடருமா?
"பயிற்சிக்கு பின்னர் சோர்வுடன் தோனி"
(டெஸ்ட் போட்டிகளின் இறுதியில் இப்படி நாக்கைத் தள்ளாமல் இருந்தால் சரிதான்)

புகைப்படங்கள் நன்றி: cricinfo

March 16, 2009

விடை தெரியாத சில 'எடக்கு மடக்கான' கேள்விகள்

'எடக்கு மடக்கு' அப்படின்னா என்னன்னு பதிவர் ஜீவா கிட்ட கேட்டுக்கோங்க, அவரு ஏற்கெனவே "குண்டக்க மண்டக்க" "ங்கொய்யாலா" போன்ற இலக்கியத் தமிழ்!!! (*#%@*# அப்படின்னு நீங்க மனசில திட்டுறது நல்லாவே கேக்குது)வார்த்தைகளுக்கு விளக்கமளித்திருக்கிறார்.

1.சாவகாசமாக (இது போன்ற)மொக்கை பதிவு போடும் போதோ அல்லது (பெண்) நண்பர்களிடம் சாவகாசமாக அரட்டை அடிக்கும் போதோ காட்டாத வேகம் பென் ட்ரைவை கழட்டும் போது மட்டும் ஏன்? (safe to remove என தெரிவதற்கு முன்னரே!)

(அப்பப்பா Rhymic ஆ எழுதனுமே நு பெண்-பென் அப்படின்னு எதோ எழுதி விட்டாச்சு)

2.ஓடும் அலார மணியையும் அணைத்து விட்டு தூங்கும் நாம், தாமதமாகி விட்டது என ஓடும் பேருந்தை பிடிக்க ஓடுவது ஏன்?

3.சாப்பிடும் முன்னர் கை அலம்ப சோம்பல் கொண்டு... இன்று ஒரு நாள் தானே; ஒரு நாள் கை அலம்பாவிட்டால் என்ன ஆகப் போகுது என நினைப்பது ஏன்?

4.கடிதம் அல்லது மின்னஞ்சல் ஒருவருக்கு எழுத வேண்டும், அத்தனை அவசரம் ஒன்றுமில்லையே மெதுவாக எழுதலாம் என சோம்பலுற்று படுக்கைக்கு போவது ஏன்?

5.நண்பனை தொலைபேசியில் அழைக்க வேண்டும்,வேலை முடிந்த களைப்பில் அவன்/அவள் தானே நாளை பேசிக் கொள்ளலாம் என கருதுவது ஏன்?

6.Repair என்பது (Re+Pair) பழுதானதை ஒன்று சேர்த்தல் என்று பொருள்படும், ஆனால் டிவி ரிப்பேர் ஆகி விட்டது, மிக்ஸி repair ஆகி விட்டது என நாம் சொல்வது ஏன்?

7.சினிமா தியேட்டரில் டிக்கெட் இல்லையென்றால், ப்ளாக்கில் எவ்வளவு ஆனாலும் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க யோசிக்காத நாம், இல்லாதவருக்கு கொடுக்கும் விஷயத்தில் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது ஏன்?

8.வாக்களிக்கும் உரிமை இருந்தும், 'நம்ம ஒரு ஆள் ஓட்டு போடா விட்டால் என்ன ஆகிவிடப் போகிறது' என நினைப்பது ஏன்?

எனவே இம்முறையாவது வாக்கு அளியுங்கள் அன்பர்களே வாக்கு அளியுங்கள்.

(வெளியில் இருக்கும் எங்களைப் போன்றோருக்கு தான் வாக்களிக்கும் உரிமை இல்லையென்கிறார்கள்... ஊரில் இருக்கும் நீங்களாவது வாக்களியுங்கள்)

March 14, 2009

பிரதமர் பதவியை குறிவைக்கும் பிரபலங்கள்

ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான கூட்டு சதிகளும் கூட்டு இல்லாத சதிகளும் இப்போதே அரங்கேற தொடங்கி விட்டன.

கடந்த 14 ஆவது பாராளுமன்ற தேர்தல் போலல்லாது காங்கிரஸ் தலைமை வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும்,பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக முன்னணிக்கும் சவாலாக ஒரளவு பலம் நிறைந்த! மூன்றாவது அணியும் உருவெடுத்துள்ளது.

கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கின்றனவோ இல்லையோ அதற்கு முன்னர் பிரதமராக யார் வேண்டுமென்பதில் குறியாக இருக்கின்றன.

பிரதமர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கே முன்னிறுத்தப்பட்டிருந்தாலும் சோனியா/ராகுல் காந்தியின் பெயர்களும் அடிபடாமல் இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அத்வானியின் பெயர் முன்மொழியப்பட்டாலும் குஜராத் முதல்வர் மோடிக்கும் பா.ஜ.க வில் ஓரளவு ஆதரவு உள்ளது.

மூன்றாவது அணியில் தற்போது அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் பிரதமர் நாற்காலியை குறி வைத்தே மூன்றாவது அணியில் இணைந்திருப்பதாகத் தெரிகிறது.

பகுஜன் சமாஜின் மாயாவதி,தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு,அ.இ.அ.தி.மு.க வின் அம்மா,முன்னாள் பிரதமரான மதசார்பற்ற ஜனதா தளத்தின் தேவேகவுடா என அனைவரும் பிரதமர் பதவியைப் பெற இப்போதே வியூகம் அமைக்கத் தொடங்கி விட்டனர்.

மூன்றாவது அணியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்த இரு பெண் பெரும்புள்ளிகளான மாயாவும்,ஜெயாவும், எங்களிடம் நீங்கள் தான் கையேந்தி நிற்க வேண்டும் என்ற செய்தியையும்;பிரதமர் பதவிக்கு நாங்களும் போட்டியாளர்கள் தான் என்ற தங்கள் குறிக்கோளையும் மறைமுகமாக அறிவித்தாகி விட்டது.

மூன்றாவது அணியின் கட்சிகளுக்கு, நாளை (15.03.09) இரவு விருந்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் மாயா என்ன மாயையை ஏற்படுத்த போகிறாரோ?

ஜெயாவின் விருந்தையும் விரைவில் எதிர்பார்க்கலாமோ!

இதனிடையில் பிரதமர் நாற்காலிக்கு குறி வைத்திருக்கும் மற்றொரு பிரபலம், ஏற்கெனவே பல நாற்காலிகளைக் கண்ட தேசியவாத காங்கிரசின் நாற்காலி நாயகன் சரத்பவார்.

"மகாராஷ்டிராவில் இருந்து பிரதமர் ஒருவர் வருவதை மகாராஷ்டிரா மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என கூறியிருப்பதிலிருந்து இவரும் மறைமுகமாக தனது நாற்காலி மோகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

ஆனாலும் தற்சமயம் உள்ள மூன்று அணிகளிலும் இவர் இதுவரை தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.

கிரிக்கெட் வாரிய தலைவராகவும்,மத்திய விவசாயத்துறை அமைச்சராகவும் உள்ள இவரையும் நாற்காலி மோகம் விட்டு வைக்கவில்லை. 2010 முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இவர் பொறுப்பேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலை பொருத்த மட்டில் ஒற்றை நாற்காலிக்கு போட்டி போடுபவர்களில் எவர் பிரதமராக வருவார் என கணிப்பது மிகக்கடினமே.

இப்படியாக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கின்றனவோ இல்லையோ பிரதமர் பதவிக்கான தங்கள் பிரதிநிதியை நேரடியாகவோ/மறைமுகமாகவோ அறிவித்திருப்பதிலிருந்து தங்கள் பதவி மோகத்தை மீண்டும் பிரகடனப்படுத்தியுள்ளன.

March 12, 2009

தினகரன் பெயரில் சாலை ஏன்?

சென்னை கிரீன்வேஸ் சாலை,இயேசு அழைக்கிறார் நிறுவனர் திரு.தினகரன் அவர்களின் பெயரில் மாற்றப்படும் என கடந்த மாதத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மீதான நல்லெண்ணம் காரணமாக என கருதவியலவில்லை.


இரு மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் உள்நோக்கத்தோடு அறிவிக்கப்பட்ட வாக்குறுதியாகவே தெரிகிறது.


கிரீன்வேஸ் சாலையின் பெயர் மாற்றப்படுதலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகையில், சாலைக்கு பெயர்மாற்றுதல் மேலும் பிரச்சினைகளையும்,பிற சமயத்தவரிடையே வெறுப்பையுமே ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


சில வருடங்களுக்கு முன்னதாக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களினால் அரசுப் பேருந்துகள் பிரிவினைப்படுத்தப் பட்ட போது ஏற்பட்ட மனக்கசப்பு தற்போதும் ஏற்பட வாய்ப்புள்ளது.


அதன் பின்னர் "தமிழ்நாடு அரசுப் பேருந்து" என மட்டுமே பேருந்துகள் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு தேர்தலை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட தீர்மானமாகவே தெரிகிறது.


சமயங்களினால் பிற மாநிலங்கள் கண்டு வரும் கலவரங்களை தமிழகமும் காண வேண்டும் என யாரும் எழுதி வைத்திருக்கிறார்களோ என்னமோ!


ஏற்கெனவே ஈழப்பிரச்சினைகளினாலும்,வழக்கறிஞர்கள்-போலீசார் மோதல்களினாலும் கலவரமாகி இருக்கும் தமிழகத்தில் மேலும் பிரச்சினைகள் அவசியம் தானா? அதுவும் தேர்தல் நெருங்கி வரும் காலகட்டத்தில்!

March 11, 2009

நியூசிலாந்தில் ரன் மழை; யூரோப் கால்பந்தில் கோல்மழை

நியூசிலாந்தில் மழை ஒருபுறமிருக்க மறுபுறம் ரன் மழை பெய்து வருகிறது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் ஒருதின கிரிக்கெட் போட்டிகளின் நான்காவது போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது ஆடிய நியூசிலாந்து 47 ஓவர்களிலேயே 270 ஓட்டங்கள் குவித்தது.அதனை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி மழைகுறுக்கிட்ட போது 23.3 ஓவர்களிலேயே 201 ஓட்டங்கள் எடுத்து டக்வர்த் லூயிஸ் முறையில் வெற்றியும் ஈட்டியுள்ளது.அதோடு நியூசிலாந்தில் முதல் முறையாக ஒருதின கிரிக்கெட் தொடரையும் வென்றுள்ளது இந்திய அணி.

பிற நாட்டு மைதானங்களை விட நியூசிலாந்து மைதானங்கள் சிறியதாக இருக்கின்ற காரணமாகவே இத்தனை ஓட்டக் குவிப்புகள் சாத்தியமாகியிருக்கின்றன.கடந்த மூன்று போட்டிகளிலும் கூட இரு அணிகளும் மிக அதிகமான ஓட்டங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பதிவர் லோஷன் அவரது பதிவில் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சேவாக் இன்றைய போட்டியில் மிகக்குறைந்த பந்துகளில்(60)சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார்.இதற்கு முன் அசாருதீன் பரோடாவில் 62 பந்துகளில் எடுத்த சதமே முதலிடத்தில் இருந்தது.அதுவும் நியூசிலாந்து அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது தான்.

----------------------------

ஐரோப்பாவின் சிறந்த கிளப் அணிகளுக்குள்ளாக நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளின் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளின் இரண்டாம் நிலை போட்டிகள் (second leg) நேற்றும் (10.03) இன்றுமாக(11.03) நடைபெற்று வருகிறது.


இவற்றில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்தின் லிவர்பூல் அணி உலகில் அதிகம் பணம் புரளும் அணியான ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் உடன் ஆடியது.ஆரம்பம் முதலே லிவர்பூல் அருமையாக ஆடியது. இறுதியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.லிவர்பூலின் அணித்தலைவர் ஸ்டீவன் ஜெரார்டு இரண்டு கோல்களை அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் Bayern Munich கிளப் போர்ச்சுகல்லின் Sporting Lisbon அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

மற்ற இரு போட்டிகளில் இங்கிலாந்தின் செல்சீ மற்றும் ஸ்பெயினின் வில்லாரீல் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று நடக்கவிருக்கும் போட்டிகளில் குறிப்பிடும் படியாக நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைட்டட்,மற்றொரு இங்கிலாந்து அணியான அர்சினல்,ஸ்பெயினின் பார்சிலோனா,இத்தாலியின் இன்டர்மிலன் ஆகிய அணிகள் ஆடவிருக்கின்றன.ஆட்ட விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

நன்றி espn & cricinfo

Related Posts with Thumbnails