April 18, 2010

மானங்கெட்ட தமிழகத் தலைமை

சென்னை விமான நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மையார் பார்வதி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தமிழனத்தலைவர் என பெருமைப்பட்டுக் கொள்ளும் திராவிட முதியவர் ழகத் தலைவர் என்ன பதிலளித்தாலும் அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது.

இவரையெல்லாம் பதவியில் வைத்த தமிழக மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழன் என்று சொல்வதற்கு நானும் இன்று வெட்கப்படுகிறேன்.

இனிமேல் தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பதை "தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா" எனவும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதை "வந்தாரை வீழவைக்கும் தமிழகம்" எனவும் கூறினாலும் தகும்.

மனசாட்சி இல்லாத, இத்தாலி அம்மணிக்கு செவிமடுக்கும் தமிழகத்தலைமை இத்தகைய கடின மனமுடையது தான் என்பது முன்னரே தெரிந்திருந்தாலும் இத்தனை கேவலமாக இருக்கும் என்பது எதிர்பாராதது.

மருத்துவ சிகிச்சைக்காக வந்தவரைக் கூடவா மனசாட்சி இல்லாமல் திருப்பி அனுப்புவார்கள். அதோடு விமானநிலையத்தில் வை.கோ விடமும், பழ.நெடுமாறனிடமும் காவல்துறை நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது.


என்ன கொடும இதெல்லாம்.

இப்படியும் சில மனிதர்கள்

காலங்கள் கடந்தாலும், காட்சிகள் மாறினாலும், கணினி மயமானாலும் மனிதர்கள் நாங்கள் இன்னமும் காட்டானாகவே இருப்போம் என வரிந்துக் கட்டிக்கொண்டு இருப்பவர்களை என்னன்னு சொல்றது.

மனுஷன் கணினி உலகத்திற்கு மாறிய பின்னரும்,கணினிய வைக்கிறதுக்குக் கூட வாஸ்து பாத்து தான் வைக்கிறான் இன்னைக்கு.

இப்படித்தான் கடந்த வருடம் நண்பர் ஒருவர் அவரது கடையிலிருக்கும் கணினியை வாஸ்துப்படி வேறு இடத்தில் வைத்தார். அதன் பின்னர் இரண்டே மாதங்களில் கடையை மூடுமளவிற்கு வந்ததில் இருந்து வாஸ்து என்றால் இப்போதெல்லாம் வாயே பேசாமல் இருக்கிறார்.

பூனை குறுக்கே வந்தால் நல்ல சகுனமில்லை; பதிமூன்றாம் தேதியோ சனிக்கிழமைகளிலோ விழா ஏதும் எடுத்தால் நல்லதில்லை; நல்ல விஷயத்திற்கு கிளம்பும் முன்னர் விதவைப்பெண் வந்தால் ராசியில்லை; இப்படி எத்தனை இல்லை இல்லைகள் தான் நம்மவர்கள் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறை தான் குருட்டு நம்பிக்கைகளுக்கும், மூட பழக்கவழக்கங்களுக்கும் அடிமைப்பட்டு கிடந்தார்கள் என்றால் இன்றைய தலைமுறை நவீன யுக்திகளின் மூலம் அதே குருட்டு நம்பிக்கைகளில் தான் மீண்டும் சிக்கிக் கிடக்கிறார்கள்.

ஒரு மின்னஞ்சலையோ அல்லது குறுந்தகவலையோ அனுப்பிவிட்டு இதனைக் குறைந்தது பத்து பேருக்காவது அனுப்பினால் நல்லது அல்லது கேட்டது நிகழும் எனவும் அப்படி அனுப்பவில்லையென்றால்   கெட்டது நிகழும் எனவும் வரும் தொல்லைகள் தினம் தினம் பெருகி வருகின்றன.

அப்படியென்றால் அனைவரும் மின்னஞ்சலையோ அல்லது குறுந்தகவலையோ மட்டும் பிறருக்கு (forward) அனுப்பிவிட்டு சும்மா இருந்தால் செலவச்சீமான்கள் ஆகிவிடலாம் போல. ஒவ்வொரு கிராமத்திலும் கணினி வசதியும் இணைய வசதியும் செய்து கொடுத்தால் போதுமானது; வறுமை ஒழிப்பு திட்டமெல்லாம் தேவையே இல்லை. இத யாரும் செய்யமாட்டேன்றாங்கப்பா.

இப்படியும் சில மனிதர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில என்பதை விட பல என்று கூட கூறலாம். தினம் தினம் மின்னஞ்சலும் குறுந்தகவலும் செய்யும் நம் சக ஜீவிகளே இதற்கு உதாரணம்.

April 13, 2010

என்னைக்கு தான் தமிழ் புத்தாண்டு?


ஏப்ரல் 14 @ சித்திரை ஒன்றில் தமிழ் புத்தாண்டு அப்படின்னு தான் சொல்லிட்டு இருந்தாங்க; ஆனா இப்போ இரண்டு வருஷமா அரசு உத்தரவால் தை ஒன்றிற்கு புத்தாண்டு மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த கத இன்னைக்கும் பல பேருக்கு தெரியாம இருக்கிறது இன்னமும் சுவாரஸ்யமான விஷயம்.

ஏற்கெனவே ஆங்கிலத்தில சோலார் காலண்டர் அப்படின்றாங்க, லூனாருன்றாங்க, கிரிகோரியன்றாங்க, மாயன் காலண்டரைக் காட்டி 2012 ல உலகம் அழியும்னு சினிமா வேற எடுத்து பீதிய கிளப்புறாய்ங்க.

பத்து மாசத்தோட ஜீலியஸ் சீசருக்கும், அகஸ்டஸ் சீசருக்கும் சேத்து 12 மாசமாக்கினதாகவும் வரலாறு சொல்லுது அப்படின்றாங்க.

ஆங்கிலத்தில் அப்படின்னா தமிழில் திருவள்ளுவர் ஆண்டு என்று வேறு குறிப்பிட்டு 31 ஆண்டுகளைக் கூட்டிச் சொல்கிறார்கள்.

நாட்காட்டி என்பது பலரது விருப்பு வெறுப்புக்கேற்ப மாற்றப்பட்டு வந்ததாகவே தெரிகிறது. நாட்காட்டிகளை மாற்றியதோடு தற்போது கொண்டாட்டங்களையும் மாற்றி வருகிறார்கள்.

எத்தனை நாட்கள் மாற்றப்பட்டாலும், எத்தனை ஆண்டுகள் மாறினாலும், மனிதன் மனிதத்திலிருந்து மாறாமலிருந்தால் எல்லா நாளும் இனிய நாளாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மலரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

புகைப்படம் நன்றி விக்கி

April 08, 2010

250 பதிவுகளும் ஏமாற்றமும்

Animated Rain And Lightning Pictures, Images and Photos

எனதருமை வலையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவோடு 251 பதிவுகளைக் கிறுக்கியிறேன் (251 + 2 மீள்பதிவுகள்) என்ற சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும் இன்னமும் மனநிறைவு அடையவில்லை என தான் என்னால் சொல்ல முடியும்.

பெரிய அளவில் எதுவும் சாதித்துவிடவில்லை என்றாலும்; பெரிய எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும்படி நான் இல்லை என்றாலும்; பதிவுலகமும், வலையுலகமும் முகமறியாத பல நண்பர்களையும், நாடு கடந்த நட்புகளையும் தந்திருக்கிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

எனினும் நான் வளர்ந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்களும்; எனது வட்டாரத்தைச் சார்ந்த சில அன்பர்களும் ஆரோக்கியமான ஒரு விவாதம் என்று வரும் போது விலகிச் செல்வது, மனதை ஏதோ செய்வதை மறுக்க முடியாது.

ஆர்குட்டிலும், முகப்புத்தகத்திலும்(facebook) அரைகுறை ஆடையணிந்த அம்மணிகளின் புகைப்படங்களுக்கு ஓடோடிச் சென்று கருத்துரைக்கிற என் சமூகத்தைச் சார்ந்த பலர் கிறிஸ்தவர்களைக் குறித்த எனது சமீபத்திய பதிவிற்கு கருத்துரைக்க இன்னமும் யோசித்துக் கொண்டிருப்பது நிச்சயம் மனவருத்தம் தான்.

அதிலும் கடமைக்கென்று தான் எனது பதிவுகளில் கருத்துரைப்பதாக ஒரு அன்பர் கூறியிருந்ததும்; பின்னர் விவாதத்தில் இருந்து ஒளிந்து மாறியதும் வியப்பிற்குரியது.

எனது எழுத்துக்களை வாசிக்கிறவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்... என்னை நான் எப்போதும் நல்லவன் என்று முன்னிறுத்தியதில்லை. தவறு செய்யாத மனிதர்கள் என்று எவருமில்லை. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.

நான் சந்திக்கும் நபர்களைக் குறித்தும், கடந்துவரும் அனுபவங்களைக் குறித்தும் வலையுலகில் பகிர்ந்து கொள்வதற்குத் தான் இந்த வலைப்பூவேயன்றி விரோதங்களை விதைப்பதற்கு அல்ல.

அனைத்து அன்பர்களுக்கும் எனது பணிவான நன்றிகள். இந்த நேரத்தில் என்னை பதிவுலகில் தமிழில் எழுதும்படி ஊக்குவித்த அண்ணன் அன்பு ஜெயின் அவர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

April 07, 2010

ஜெயவர்தனே எனும் Class act


Form is temporary but the Class is permanent அப்படின்னு ஒரு வாக்கு சொல்வாங்க கிரிக்கெட்ல, அது தான் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ஜெயவர்தனே சதமெடுத்த போது நினைவிற்கு வந்தது.

என்னைக் கேட்டால் ஐ.பி.எல் 3 ல் இதற்கு முன்னர் முன்னர் எடுக்கப்பட்ட மூன்று சதங்களை விட ஜெயவர்தனேவின் சதம் தான் சிறந்தது என்பேன்.

மும்பைக்கு எதிராக யூசுப் பத்தான் அதிரடியாக எடுத்த 100 ம் (8 சிக்ஸர்கள்), ராஜஸ்தானிற்கு எதிராக முரளி விஜய் குவித்த 127 ம் (11 சிக்ஸர்கள்) blast என்றால் ஜெயவர்தனே எடுத்த சதம் class எனலாம். வார்னர் கொல்கத்தாவிற்கு எதிராக எடுத்த சதமும் சிறந்தது என்றாலும் ஜெயவர்தனேவின் சதம் அதிலும் சிறந்ததே.

ஜெயவர்தனே கொல்கத்தாவிற்கு எதிராக சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார்.  அதன் பின்னர் அவர் அடித்த 13 பவுண்டரிகளும் மிக நேர்த்தியாக, அருமையாக, கணித்து ஆடப்பட்ட shot கள். மொத்தம் 14 பவுண்டரிகளை அடித்த அவர் மூன்றே சிக்ஸர்களைத் தான் அடித்திருந்தார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சதமெடுத்தவர்களில் குறைவான சிக்ஸர்கள்(3) அடித்தவர் ஜெயவர்தனே தான். அதே நேரம் அதிக பவுண்டரிகளை(14) எடுத்தவரும் ஜெயவர்தனே தான். இதிலிருந்தே ஜெயா ஒரு class stroke player என்பது புரியும்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் 8000 ற்கும் மேல் ஓட்டங்கள் குவித்திருக்கும் ஜெயவர்தனே டெஸ்ட் போட்டிகளில் தான் அதிக சராசரி வைத்திருக்கிறார். 

2006 ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் அவர் குவித்த 374 ஓட்டங்கள் ஜெயசூர்யாவின் சாதனையான 340 ஓட்டங்களை முறியடித்தது இன்னமும் இலங்கைக்கான சாதனையாக தொடர்கிறது.

வாழ்த்துக்கள் ஜெயவர்தனேவிற்கு.

April 04, 2010

“கிறிஸ்தவர்கள்” நாங்கதான் ரைட் மத்தவங்க ராங்

கிறிஸ்தவர்கள் என ஒரு அடையாளத்தை தங்களுக்கென்று கொண்டு நடப்பவர்கள் செயல்படும் விதமும், அவர்கள் வாழ்க்கை முறையும் இன்று பெரும்பாலும் சுயநலம் நிறைந்ததாகவும், பொதுநலமற்றதாகவும், சிந்தனை அற்றவதாகவும் இருப்பதாகவே உணர்கிறேன்.

நாங்கள் கிறிஸ்தவர்கள்; நாங்கள் தான் உத்தமர்கள்; நாங்கள் மட்டுமே மேலோகிற்கு செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பாக்கியமற்றவர்கள் என்ற நினைப்பும் ஏளனமும் இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற பலரிடமும் அதிகமாகவே நிலவி வருகிறது.

இவர்களின் இத்தகைய எண்ணத்திற்கு அவர்கள் மட்டுமே காரணமும் அல்லர். அவர்களுக்கு போதிக்கப்படுகின்ற கிறிஸ்தவ கோட்பாடுகளும், போதிக்கின்றவர்களும், அவர்கள் வாழும் சூழ்நிலையும் கூட காரணம் என சொல்லலாம்.

பிறருக்கு உதவி என்று வருகின்ற போது இன்று பல கிறிஸ்தவர்கள் பின்வாங்கிப் போவதும்; ஆலயங்களுக்கு லட்சங்களாய் காணிக்கை அளிக்கும் பலர் பிறருக்கு உதவி என வரும் போது இல்லையென கைவிரிப்பதும் சகஜமாகி வருகிறது.

முன்னொரு பதிவில் "பணம் பெருகப் பெருக பலருக்கு குணம் சிறுத்துப் போவது ஏனோ" என எழுதியிருந்தேன்; அதுவும் இவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கண்கூடாக நான் கண்டவையே.

விவிலியத்தில் மத்தேயு 25:40 ல் கூறியிருக்கிறபடி என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்பதையும் அதே மத்தேயு 25:46 ல் கூறியிருக்கிறபடி இப்படி செய்யாதவர்கள் நித்திய ஆக்கினை அடைவார்கள் என்பதையும் இந்த கிறிஸ்தவர்கள் அறியாதவர்களா என்ன?

இன்னும் சிலர் தங்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றிக் கொண்டாலும் அவர்களின் சான்றிதழ்களில் முன்னர் பின்பற்றி வந்த அதே பழைய சமயத்தை வைத்திருப்பதன் மர்மம்... கிறிஸ்தவர்கள் (BC) என சான்றிதழில் இருந்தால் தங்களின் பணிக்கும், பணி நிமித்தம் கிடைக்கும் வசதிகளுக்கும் பங்கம் வந்து விடும் என்பது தான் அது. ஏனென்றால் அது SC இது BC. இவர்களை பெயர் கிறிஸ்தவர்கள் என கூட கூறலாம்.

வேறு சிலர் இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வண்ணம் 40 நாள் அசைவம் சாப்பிட மாட்டார்களாம்; அது என்னத்திற்கு என்று தான் புரியவில்லை. 40 நாளும் சாப்பிடாமல் இருப்பதை ஏன் கடைபிடிக்கவில்லையோ தெரியவில்லை!

அதை மற்றவர்களிடமும் சொல்லிப் பெருமைப்பட்டு கொள்கிறார்கள். விவிலியத்தில் மத்தேயு 6:17ல் "நீயோ உபவாசிக்கும் போது, மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக..."என எழுதியிருப்பதற்கு என்ன சொல்வார்களோ?

கிறிஸ்தவன் பெரியவன்; கிறிஸ்தவம் பெரியது; மற்றவர்கள் எல்லாம் யாரோ! என்ற மனப்பாங்கு உடையவர்கள் அனைவரையும் குறித்து பரிதாபப்படுகிறேன். கிறிஸ்தவம் என்பது குறித்து இயேசு பிரசிங்கித்ததாக விவிலியத்தில் காணப்படவில்லை. அவர் நீதி நியாயத்திற்காக போராடினாரேயன்றி ஒரு சமயத்தையோ, மதத்தையோ உருவாக்க வரவில்லை.

இயேசுவின் மரணத்திற்கு பின்னர் அவரது சீஷர்களுக்கு தான் முதலாவது கிறிஸ்தவர்கள் (அப்போஸ்தலர் 11:26) என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே கிறிஸ்தவர்கள் என்ற பெயர் உடையவர்கள் தான் மேலோகிற்கு செல்வார்கள் என்பதை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தான் பார்க்கிறேன்.

கிறிஸ்தவன் என்ற பெயர் உடையவனோ இல்லையோ உண்மையாயிருக்கிற எவரும், உத்தமமான வாழ்க்கை நடத்தும் எவரும் இறைவனடி சேர்வர் என்ற கோட்பாட்டையே விவிலியம் உரைக்கிறதேயன்றி சக மனிதனிடம் பகைமை பாராட்டவோ, எந்த சமயத்தாரையும் வெறுக்கவோ விவிலியம் வியாக்கியானம் செய்யவில்லை.

இதற்கு மாறாக பிற சமயத்தினரை எதிரியாக பார்ப்பதும், தாங்கள் தான் பரிசுத்தர்கள், மேலோகிற்கு போகும் பாக்கியம் பெற்றவர்கள் என சில பெயர் கிறிஸ்தவர்கள் சொல்லித் திரிவது அவர்களுக்கும், அவர்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும் அழகல்ல.

அப்படிப்பார்த்தால் இன்று கிறிஸ்தவர்கள் பாடவும், கேட்கவும் செய்கின்ற பல பாடல்கள் பிற சமய நம்பிக்கையுடைய பாடகர்கள் பாடினவை தான். இதற்கு என்ன சொல்லுவார்களோ!!

மதங்கள் வாழ்ந்தது போதும்; மனிதர்களை வாழ விடுங்கள்; மனிதம் வாழட்டும்.

சிலுவையில் இயேசு மொழிந்ததாக 7 வசனங்களை நினைவு கூறுபவர்கள் மலைப்பிரசங்கத்தின் போது அவர் மொழிந்த எட்டாவது வசனத்தை மறந்து போவது ஏனோ!  நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. (மத்தேயு 5:11)

April 02, 2010

ஏப்ரல் முட்டாளாக்கும் நாமே தான் முட்டாள்கள்

இன்றைய காலகட்டத்தில்  மார்ச் 31 இரவே சில அறிவாளிப் பெருமக்கள் மறுநாள் யாரை முட்டாளாக்கலாமென்று யோசித்துக் கொண்டிருப்பதும்; அதற்கான புதிய வழி முறைகளை ஆலோசனை செய்வதுமாக இருப்பதில்  ஆச்சரியமில்லை.

மற்றவரை முட்டாளாக்கிப் பார்ப்பதில் சில அறிவாளிப் இவர்களுக்கு  அத்தனை மகிழ்ச்சி. இதற்காக பந்தயம் கட்டவும் தயாராக இருக்கின்றனர். [ஓசியில் வயிற்றை நிரப்பலாமென்ற நினைப்பிலிருக்குமோ ;) ]

அனைவரையும் குறை சொல்வதற்குமில்லை. நட்பு வட்டாரத்தில் சகஜமாக மற்றவரை கேலி செய்வதும், கிண்டல் செய்வதுமாக இருக்கத்தான் செய்கின்றனர். அதனை சக நண்பர்கள் சகித்துக் கொள்ளவும் செய்கின்றனர்(வேறு வழி இல்லாமலோ என்னமோ !! )

ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை எவரும் மறுக்கவியலாது. வரம்பு மீறி ஏப்ரல் ஒன்றாம் தியதி வரிந்து கட்டிக்கொண்டு தொலைபேசியிலும், குறுந்தகவல்களிலும், மின்னஞ்சல்களிலும் பிறரை முட்டாளாக்குபவர்களை முற்போக்கு சிந்தனையில்லாத கோழைகள் என்பதாகவே கூறுவேன்.

நண்பர் விபத்திற்குள்ளாகி விட்டார் என பொய் உரைத்ததையும், நண்பர் இன்ன நேரத்திற்கு வர சொன்னார் என கூறி விட்டு காத்திருக்கச் செய்ததையும் வரம்பு மீறிய செயலன்றி வேறு என்னவென்று பொருள் கொள்வது!!

இவை போன்ற செயல்கள் சாதாரண கிண்டலுக்கு செய்யப்படினும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு அசாதாரணமானது என்பதும், ரணம் ஏற்படுத்துவது என்பதும் வேதனைக்குரிய விஷயம். அதிர்ச்சியை அனைவரும் சுலபமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஏப்ரல் ஒன்றாம் தியதி மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் சகஜமாக செய்யப்படும் இது போன்ற கேலி கிண்டல்கள் ஏற்படுத்தும் மன உளைச்சலும் மன வருத்தமும் பல நேரம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

இத்தகைய மொள்ளமாரித்தனம் தொலைக்காட்சியையும் விட்டுவைக்கவில்லை. பிறரை முட்டாள்களாக்கி (அவர்களது பார்வையில்) Just For Laughs Gags என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளில் ஒளிபரப்பாகி வந்தவை இன்று இந்தியாவிலும் MTV ன் Bakra உள்ளிட்ட பல பெயர்களில் ஊரை ஏமாற்றி வருகின்றன.

மற்றவரை மனநிறைவடையச் செய்து காணும் மகிழ்ச்சியை விட்டு மற்றவரை முட்டாள்களாக்கி முகம் மலரும் இவர்கள் தான் முட்டாள்கள் என கருதப்படுவரேயன்றி இவர்கள் முட்டாள்களாக்கப்பார்க்கும் மற்றவர்கள் அல்ல.
Related Posts with Thumbnails