August 17, 2011

உறங்கும் உணர்வுகள்




உணர்வுகளை எவர் தான் அறிவார் - ஒருவர்
உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டால்
உவகை கொள்ளுமே உலகம்

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப் படுமோ - இல்லை
உதைத்துத் தள்ளப்படுமோ என்ற
உள்ளார்ந்த பீதி ஒருபுறம்!

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுதலால்
உயரவிருக்கும் - மன
உளைச்சல்கள் மறுபுறம் - என்பவற்றால்
உள்ளுக்குள் உறங்கும் உணர்வுகள் ஏராளம்!!

உணர்வுகளை உள்ளுக்குள் புதைத்து - உயிரிருந்தும்
உயிரற்ற சடலமாய் நீங்குகிறது மனித வாழ்க்கை.  
உள்ளக்கிடக்கைகளை  எவர் அறிவாரோ! 


July 21, 2011

வெற்று வேர்கள்: புதைத்தவர் எவரோ!!



உறவாடிய பொழுதுகளும்
உணர்வாடிய நிமிடங்களும்
உள்ளிருக்க

வெறுமையாய் பரந்து
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

தொலைந்து போன தூக்கங்களும்
தொலைதூரமாய் அகன்ற நேசங்களும்
தொலையாமல் இன்னும் உள்ளிருக்க

வெறுமையாய்
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

மீள வழியறியாமல்
மேலெழவும் அறியாமல்
மௌனங்கள் மட்டுமே உள்ளிருக்க

வெறுமையாய் பரந்து
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

புதைக்கப்பட்டிருக்கும் வேர்களின் 
வலியை உணர்ந்தவர் எவரோ!
புதைத்தவர் எவரோ!!

வேர்கள் நிச்சயம்
வெற்று அல்ல - அவை ஒரு விருட்சத்தின்
வெற்றி
------------

புகைப்படம் நன்றி: அலெக்ஸ்


July 14, 2011

தெய்வத் திருமகன்-விழிகளில் ஒரு வானவில்-சைந்தவி

தெய்வத் திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிற "விழிகளில் ஒரு வானவில்"  பாடலை இரு தினங்கள் முன்னர் தான் கேட்க நேரிட்டது முதல் முறை கேட்ட போதே அது சைந்தவியின் குரலாகத் தான் இருக்கும் என உணர முடிந்தது. இணையத்தில் தேடிப் பார்த்து சைந்தவி தான் என உறுதி செய்து கொண்டேன்.

அன்றிலிருந்து இதனைக் குறித்து கண்டிப்பாக பதிவிட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மேலோங்கி இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அந்த பாடலை இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இசையும், அவர் திருமணம் செய்யவிருக்கும் சைந்தவி அவர்களின் குரலும் தான் முதல் முக்கிய காரணங்கள்.

ஜி.வி.பிரகாஷின் பாடல்களில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்ற  மாலை நேரம் பாடல் தான் இதற்கு முன்னர் நான் அதிகம் ரசித்தது. "விழிகளில் ஒரு வானவில்" பாடல் அந்த பாடலை விடவும் அதிகம் ரசிக்க வைத்திருக்கிறது. நா.முத்துக்குமார்  அவர்களின் பாடல் வரிகள் குறித்து எதுவும் சொல்ல தேவை இல்ல. பாடல் வரிகளும், இசையும், குரலும் மென்மையாய் இதமாக மனதை வருடுகின்றன. 

அனுபல்லவி உயர்ந்த சுருதியில் பாடப்பட்டாலும் "விழிகளில் ஒரு வானவில்" பாடல் "மாலை நேரம்" பாடலைப் போன்றே தாழ்ந்த சுருதியில் பாடப்பட்ட பாடல்.  மாலை நேரம் பாடலை இயக்குனர். செல்வராகவன் அவர்கள் எழுதி இருந்தார்; இந்த இரு பாடல்களுமே காதலை மையமாக வைத்து எழுதப்பட்டவை; எளிய தமிழில் சிறப்பாக எழுதப்பட்ட இரு பாடல்கள் என்றும் கூறலாம்.

சைந்தவி அவர்களைக் குறித்து 2003 முதல் கேள்விப்பட்டிருக்கிறேன் ஜெயா தொலைக்காட்சியின் ராகமாலிகா நிகழ்ச்சியில் தான் அவர் முதலில் பாடக் கேட்டிருக்கிறேன். அப்போதே அவரது குரலை அதிகம் வியந்ததுண்டு. அவரது பன்னிரெண்டாவது வயதில் இருந்தே மேடைகளில் பாடத் துவங்கி விட்டாராம் சைந்தவி.

இவரது சகோதரி வினயா உடன் இணைந்து பல கர்நாடக மேடைக் கச்சேரிகளும் செய்திருக்கிறார் சைந்தவி. இன்றைய இளைய தலைமுறையில் கர்நாடக இசையிலும், மெல்லிசையிலும் மிகச்சிறப்பாக பாடுபவர்களில் சைந்தவி குறிப்பிடத்தக்கவர். அதோடு திரை இசைப்பாடல்களிலும் முத்திரைப் பதித்து விட்டார். மேற்கத்திய இசையும் முறையாக கற்று தேர்ந்தவர் என்பது இணையத்தில் உலவிய போது கிடைத்த தகவல்.

நாளை (15.07.2011) வெளியாகவிருக்கும் தெய்வத்திருமகன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். மாலைநேரம் பாடலைப் போன்றே விழிகளில் ஒரு வானவில் பாடலையும் எனது கைவண்ணத்தில் சில புகைப்படங்களுடன் + பாடல் வரிகளுடன் காணொளியாக மாற்றியிருக்கிறேன். அதன் யூடியூப் சுட்டி இங்கே. பாடலை கீழே இணைக்கவும் செய்திருக்கிறேன்.



புகைப்படம் நன்றி: http://www.lakshmansruthi.com/index.asp 


July 11, 2011

கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டம்: இதெல்லாம் ஒரு பொழப்பு

அடப்பாவிகளா 15 ஓவர் மீதியிருந்திச்சேடா அதுக்குள்ள Mutual Understanding அது இதுன்னு சொல்லி ஆட்டத்த நிறுத்திப்புட்டு Draw னு ஏமாத்திப்புட்டீங்களே.(மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில்) இதுல தரவரிசைல முதல் இடமாம் இந்தியாவுக்கு... நல்லாக்கீது உங்க அழுகுனி ஆட்டம்

இந்த அழுகுனி ஆட்டம் ஆடுறதுக்கு ஆட்டமே ஆடியிருக்க வேண்டாமே! ஆட்டம் ஆரம்பித்த முதல் நாளிலேயே ஆட்டத்த சமநிலைல முடிச்சிருவோம்னு சொல்லிட்டு கும்மியடிக்கவாது போயிருக்கலாமே.

பதினைந்து ஓவர்கள் அதாவது 90 பந்துகளுடன் ஏழு விக்கெட்டுகளும் மீதமிருக்க 86 ஓட்டங்கள் எடுக்க முடியாதா என்ன? இரு பக்கமும் வெற்றி சாதகமாகத் தானே இருந்தது.

இரு அணிகளுக்குமே தோற்று விடுவோம் என்ற பயமா இல்லை ஐந்து நாட்கள் ஆடி விட்டோம் என்ற களைப்பா தெரியவில்லை?! இத்தனைக்கும் முதல் மற்றும் இரண்டாம் நாள் ஆட்டங்கள் மழையினிமித்தம் முழுமையாக நடைபெறவில்லை.

இப்படி அழுகுனி ஆட்டம் ஆடினால் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க எவர் தான் மைதானத்திற்கு வருவார்?

இரு அணித்தலைவர்கள் பரஸ்பரம் பேசி சமநிலையில் முடித்துக் கொள்கிறார்கள்; இன்றையதினத்தை கிரிக்கெட்டில் மற்றுமொரு கருப்புதினமாக கணக்கில் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும் ஒரு கிரிக்கெட் ரசிகனால் :(


July 01, 2011

ஜூன் போனா ஜூலைக் காற்றே...

குடும்பப் பொறுப்புகள் ஏதும் எழுத விடாமல் முடக்கிப்போட்டு விட்டன. எழுதப்பட்டும் முடங்கிக் கிடக்கும் கட்டுரைகள் வலையேற்றப்படாமல் இருக்கின்றன.

ஜூலையிலாவது வாய்ப்பு அமையுமா தெரியவில்லை. அனைவருக்கும் இந்த மாதம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள். 

நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு... 

May 31, 2011

அது ஒரு அழகிய கனா காலம்

காலங்கள் எத்தனை வேகமாய் செல்கிறதோ அத்தனை வேகமாய் கவனங்களும் எண்ணங்களும் வேகமாய் கடந்து போகத்தான் செய்கின்றன. ஆனால் நமது எண்ணங்களும் கவனங்களும் எத்தனை அதிக சந்தோஷத்தை நமக்கு அளிக்கின்றன என சற்றே எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறி தனிக்குடித்தனம் நடத்தி வரும் பலர் இன்று இழந்து வரும் சந்தோஷங்கள் கணக்கில் அடங்காதவை. பெற்றோரின் அரவணைப்பு, சுற்றங்களின் நேசபாசம் இவை தான் அவை எல்லாவற்றிலும் முதன்மையான மிகப்பெரிய இழப்பு.

கிராம வாழ்வை விட்டு நகரில் குடியேறியிருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் அலுத்தாலும் பின்னர் ஆடம்பர வாழ்வு அவர்களை ஆக்கிரமித்து விடுகிறது அல்லது கட்டிப்போட்டு விடுகிறது. கிராமத்து வாசமும், திண்ணைப் பேச்சுகளும்; ஆலமர, ஆற்றோர ஆசுவாசமும் மெல்ல மறந்து டிஸ்கோத்தே ஆர்ப்பாட்டங்களும், தொழிற்சாலை, வாகனங்களில் இருந்து வெளியேறுபவற்றையே சுவாசித்து ஆசிவாசித்து விடுதலும் பழகிப் போய்விடுகிறது.

அஞ்சல் அட்டை @ போஸ்ட் கார்ட்; உள்ளூர் கடிதம் @ inland ஆனது. பின்னர் கடிதப் போக்குவரத்தும் குறைந்து மின்னஞ்சல் ஆனது. இன்று மின்னஞ்சல் அனுப்பினால் கூட கண்டு கொள்பவர்கள் வெகு சிலரே. முகநூலும் ஆர்குட்டும், டிவிட்டரும் முக்கியமாகிப் போனது இன்று.

ஆர்குட்டில் ஏன் எனக்கு scrap அனுப்பவில்லை, முகநூலில் ஏன் எனக்கு Post எதுவும் பண்ணவில்லை என கேள்வி கேட்பவர்கள் மின்னஞ்சலை கூட கவனிக்க நேரமின்றி இருக்கின்றனர். தேவையற்ற spam மின்னஞ்சல்களை நீக்குவதற்கு கூட இந்த facebook உலகில் நேரமில்லை.

இந்த facebook உலகம் கடிதம் வரைதலிலும் கரங்களால் எழுதப்பட்ட வாழ்த்து அட்டைகள் அனுப்புவதிலும் இருக்கம் சுவாரஸ்யத்தை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது.

தனிமையில் தியானம் செய்யவோ; தனிமையாக சிந்திக்கவோ இன்றைக்கு பலருக்கும் சமயம் வாய்ப்பதில்லை. பணியிடங்களில் பணிகளின் தலை வலியென்றால்; வீடுகளில் சீரியல் எனப்படும் மகா மெகா தொடர்களின் ஆர்ப்பாட்டம் ;அல்லது நடிகர் உடல்நல குறைவு, நடிகை கால் தவறி விழுந்தார் போன்ற Breaking News களின் பிதற்றல்கள். இவற்றினிடையில் தனிமைக்கும் சுயமாக சிந்திப்பதற்கும் குடும்பத்தினரோடு உறவாடுவதற்கும், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் ஏது சமயம்.

இன்னும் உண்டு...

May 29, 2011

ஐ.பி.எல் கிரிக்கெட் ஒரு பார்வை


"Cricket Overdose" ஆகி விட்டதாகத் தான் கிரிக்கெட் விமர்சகர்கள் கடந்த ஒரு மாத காலமாக கருத்துரைத்து வருகிறார்கள். ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெற்ற நேற்றும் கூட ரவிசாஸ்திரி அவர்கள் அதைத் தான் குறிப்பிட்டிருந்தார்கள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மிக அதிகமாவே விளையாடப்பட்டு வருகின்றன. ஆட்டக்காரர்களுக்கு சரியான ஓய்வும் கிடைப்பதில்லை. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஆடவிருக்கும் ஆட்டங்களில் மூத்த ஆட்டக்காரர்கள் பலரும் காயத்தின் காரணமாக சேர்க்கப்படவில்லை என்பது இந்த cricket overdose ஆல் தான்.

உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஒரு வாரத்திற்குள்ளாக ஐ.பி.எல் போட்டிகள் துவங்கியது; அன்பரும், பதிவருமான லோஷன் அவர்கள் முன்னொரு பதிவில் எழுதியிருந்தது போல இந்திய அணி உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடுவதற்கு கூட நேரமில்லாமல் போனது ஒரு வகையில் துரதிருஷ்டம் தான்.

ஐ.பி.எல் இருபது ஓவர் ஆட்டங்கள் எந்த அளவுக்கு திறமையை வெளிக்கொணரும் என்ற கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் பஞ்சாப்பின் பால் வால்தட்டி, கொல்கத்தாவின் அப்துல்லா, கேரளாவின் பரமேஸ்வரன் ன புதிய திறமைகளை வெளிக்கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சியே.

இந்த நான்காம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் எனக்கு சுவாரஸ்யமாக தோன்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவிடுகிறேன்.

1. சச்சினின் பெருந்தன்மை

மும்பை இன்டியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சச்சின் பெங்களூருக்கு எதிரான போட்டி ஒன்றின் முடிவில் தனக்கு அளிக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதினையும் ஒரு இலட்ச ரூபாயையும் அம்பத்தி ராயுடுவுடன் பகிர்ந்து கொள்வதாக கூறியதோடு மட்டுமல்லாமல் அவரது கையில் காசோலையையும் அளித்தது தான் என்னை அதிகம் நெகிழ வைத்த நிகழ்வு. (நியாயப்படி ராயுடுவிற்கு தான் விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வெற்றியில் சச்சின் 55 ஓட்டங்களும் ராயுடு 63 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்)

2. கங்குலியின் பிரவேசம்

இந்த ஐ.பி.எல் தொடரின் நகைச்சுவைகளில் ஒன்றாக கங்குலியின் பிரவேசத்தைக் குறிப்பிடலாம். கொல்கத்தா அணியினர் வங்காளத்தின் புலி, தாதா கங்குலிக்காக இந்த முறை கோப்பையைக் கைப்பற்றுவோம் என கொக்கரிக்க அவரோ 'போங்கடா நொன்னைகளா' என்கின்ற மாதிரி புனே அணியிடம் சென்று சரணடைந்தார். அவரது காலில் விழுந்து நமஸ்கரித்த ரசிகர் ஒருவரைப் பார்த்தால் அ.தி.மு.க தலைமை பெருமைபட்டுக்கொள்ளலாம். 


3. இஷாந்த் ஷர்மா 3-0-12-5

கேரள அணிக்கு எதிராக ஐதராபாத்தின் இஷாந்த் ஷர்மா வீசிய மூன்று ஓவர்கள் தான் இந்த ஐ.பி.எல் லின் சிறந்த பந்து வீச்சாக நான் கருதுகிறேன். 3-0-12-5 என்பது அவரது பந்து வீச்சின் சுருக்கம். மூன்று ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்தார் இஷாந்த். கேரளா 74 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஆட்டத்தையும் இழந்தது.

4. சென்னை சூப்பர் கிங்க்ஸ் - Super தான்

இறுதிப் போட்டியின் இடைவேளையின் போது சென்னையின் ஆட்டத்தைக் குறித்து ரவிசாஸ்திரி அவர்கள் கூறும் போது... முரளி விஜய் மற்றும் ஹசியின் ஆட்டம் கிரிக்கெட்டிற்கான அனைத்து அம்சங்களும் உடையதாயிருந்தது என புகழ்ந்திருந்தார். சிக்ஸர்களையும், பவுண்டரிகளை மட்டுமே நம்பியிராமல் அவர்கள் இருவரும் ஓடி சேர்த்த ஓட்டங்கள் தான் ரவியை இவ்வாறு புகழச் செய்தது. அது தான் சென்னையின் பலமும் கூட. இருவரும் முதல் விக்கெட்டிற்கு 158 ஓட்டங்கள் குவித்தனர்.

பலரின் வாதத்திற்கு வாய்ப்பூட்டும் போட வைத்தார் Captain Cool தோனி. கெய்லின் விக்கெட்டிற்கு அத்தனை சந்தோஷப்பட்ட மனிதர் வெற்றி பெற்ற போது அத்தனை அமைதி காத்தார். அது தான் ஒரு தலைவனுக்கு அழகும் கூட.

மற்ற அணிகளைப் போலல்லாமல் திரைத்துறையினர் அதிகம் திரண்டு வராத ஒரே அணி சென்னை மட்டும் தான். அவர்களின் ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த கோப்பை. வாழ்த்துக்கள் சென்னை சிங்கங்களே.

நன்றி: கிரிகின்போ 
Related Posts with Thumbnails