March 09, 2009

கூட்டணி கூத்துகள்

15 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்பொழுது எந்த மாநிலத்தை நோக்கினும் கூட்டணி கூடும் முயற்சியில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.


இரு பெரும் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க வும் போட்டி போட்டுக் கொண்டு மாநில கட்சிகளை வளைத்துப் போடும் படலங்களில் பம்பரமாக இயங்கி வருகின்றன.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னமே கட்சிகள் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம், இல்லை இல்லை இது பழைய கூட்டணி, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இன்ன இன்ன தொகுதிகளில் தான் இடம் தருவோம், இன்ன இன்ன மாநிலங்களில் இத்தனை தொகுதிகள் தான் தருவோம் என தம்பட்டம் அடிக்க தொடங்கி இருந்தன.

கட்சிகளின் கொள்கைகளை (இன்றைய அரசியல் சூழ்நிலையில் அப்படின்னா என்னாங்க என கேட்கிற சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கத்தான் செய்வார்கள்)மூட்டை கட்டி வைத்து விட்டு நாணயமின்றி,வெட்கமின்றி வெறும் பதவி ஆசைக்காக மட்டும் கூட்டணி தர்மம் என்ற பெயரில் மகா கேவலமாக நடந்து கொள்வதை காண சகிக்கவில்லை.

கொள்கைகளை வியாபாரம் செய்து வெறும் பதவிகளுக்காக மட்டுமே அரசியல் செய்து, விடியலை காண்பிக்க வேண்டிய நாட்டிற்கு இருளை காண்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

கொஞ்சமும் கூச்சமில்லாமல் தங்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களிடம், தங்களை சிறை தள்ளியவர்களிடம் கூட கூட்டணி எப்படித் தான் வைத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

இந்தியாவில் எந்த கட்சியும் இது போன்ற கபட கூட்டணிகளுக்கு விலக்கில்லை,கட்சிகளினிடையே நடந்து வரும் கூட்டணிப் பேச்சுக்கள் கட்சிகளின் மேல் அதிருப்தியையே ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தை நோக்கினால் தங்களை மதசார்பற்றவர்கள் என தங்களை எப்போதும் அறிவித்து கொண்டிருக்கிற தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகள் பா.ஜ.க வுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டனர் கடந்த தேர்தல்களில்.

பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் போது மதவாதத்தை குறித்து தி.மு.க வோ, அ.தி.மு.க வோ கவலைப் படுவதில்லை.

பா.ஜ.க வுக்கு எதிரணி என்றால் போதும், உடனே ஆரம்பித்து விடுவார்கள் பா.ஜ.க வினரை குற்றம் குறைகள் சொல்ல.என்ன அரசியல்/கூட்டணி தர்மமோ இது!

காங்கிரஸ் மட்டும் சளைத்தவர்களா என்ன கூட்டணி அரசியலுக்கு. மத்தியில் ஆட்சியில் அமர மாநிலங்களில் எதையும் விட்டுக்கொடுப்பார்கள் அவர்கள்.

திராவிட கட்சிகள் ஒன்று மாறி ஒன்று ஏமாற்றவே, தமிழகத்தில் தற்போது சரியான பாடம் படித்துள்ளனர் பா.ஜ.க வினர்.எனினும் அகில இந்திய அளவில் அவர்களை முன்பு ஏமாற்றிய சிவசேனா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளன.

தோழர்களை குறித்து சொல்லவே வேண்டாம்.

இப்படியாக கட்சிகள் அனைத்தும் பதவிகளுக்காக,நாற்காலிகளுக்காக தங்கள் கொள்கைகளை ம(து)றந்து கூட்டணி மாறி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்

தேர்தல் ஆணையமும்,சட்டமும் இது போன்ற கூ(கெ)ட்டணிகளை வைத்து 5 வருட கேலிக் கூத்துகளுக்கு காரணமாகின்றன.இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதோ என்னமோ(கூட்டணிகளே இருக்கக் கூடாது என கருதுபவன் நான்.அது போன்று தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர் தனது 5 வருட காலத்தில் பிறிதொரு கட்சிக்கு மாறுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது)

அப்படியே கூட்டணிகளால் ஆட்சி அமைந்து விட்டாலும், ஒரு முடிவெடுக்க அல்லது புதிய திட்டங்களை நிறைவேற்ற அவர்களுக்குள்ளாக கருத்து வேறுபாடு வேறு.

இந்த வேறுபாடுகள் மறைந்து திட்டங்கள் அமல்படுத்தும் முன்னர் 5 வருடமும் முடிந்து விடும், பின்னர் திட்டங்கள் மக்களை சென்று சேர்வது என்றோ?

அவர்கள் அடிக்கும் கூத்தை மக்கள் வேடிக்கை பார்க்கிறதோடு சரி, மீண்டும் தேர்தல் வந்துவிட்டால் அதிகம் பணமளிப்பவருக்கு ஓட்டளித்து விட்டு அவரவர் வேலையை கவனிக்க சென்று விடுவர்.

இது போன்ற கூட்டணி கூத்துக்களுக்கு முடிவு தான் என்றோ?

ஆர்குட்டிற்கு நான் அடிமை!

இன்று பதிவுலத்திற்கு மட்டுமல்லாது ஆர்குட், ஃபேஸ்புக், hi5 என பல community இணையங்களுக்கும் அடிமையாய் கிடக்கின்றவர்கள் ஏராளம். இன்றைய தேதியில் பிரேசில் நாட்டவருக்கு அடுத்தபடியாக ஆர்குட் தளத்தில் அதிகம் உலவுவது இந்தியர்கள் தான்.

டேய் மச்சான் இன்னும் ஒரு scrap வந்தா இன்னையோட 1000 ஆயிடும்டா, ரமேஷ் என்னடா 50 பிரண்ட்ஸ் வச்சிருக்கது. நாளைக்கு பாரு நம்ம பிரண்ட்ஸ் லிஸ்ட்ட, சும்மா எகிறும் இல்ல!என்கிற உரக்க தொனிகளும்.

மாமே profile க்கு இந்த ஃபோட்டோ ஓகேவா பாரேன், டேய் பன்னாட இது போதுமானு நீயாவது பாத்து சொல்லேன்.மச்சி அவ என் ப்ரெண்ட் ரெக்வஸ்ட்ட அக்சப்ட் பண்ணுவாளாடா. காலேஜ்ல வேற அவள செமையா திட்டுபுட்டேன் டா போன்ற ஏக்கங்களும்…

என்னடா நம்ம ஒரு ஃபோட்டோ போட்டா ஒருத்தனும் கமெண்டு அடிக்க காணோம், வழக்கமா கமெண்டுற பொண்ணுங்கள கூட காணோமே, சரிடா இன்னைக்கு சன்டே தான! நாளைக்கு பாப்போம் என தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்ளும் சமாதானங்களும்…

நண்பா இந்த அனிமேசன் கிரீட்டிங் அவளுக்கு பிடிக்குமாடா,ஓகே சொல்வாளா. போடா அவ என்ன ஓகே சொல்றது,எத்தன பொண்ணுங்கள நான் பாத்திருப்பேன்,இவ இல்லனா இன்னொருத்தி என கூண்டு விடு கூண்டு பாய்வதும் ஆர்குட் போன்ற இணையங்களில் சர்வசாதாரணமாகி விட்டது.

குறிப்பாக இளவட்டங்கள் அதிக அளவில் இது போன்ற இணையங்களில் அதிக நேரம் செலவிடுவது பெருகி வருகிறது.

பதிவுலகைப் போன்றே இங்கும் குழுக்களும்,நண்பர் வட்டாரங்களும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் பதிவுலகை விட இது போன்ற தளங்களில் தான் மொக்கைகளும்,அரட்டைகளும் அதிகம்.

அவற்றில் சில ஆரோக்கியமான விவாதங்களாக இருக்கும் சில மகா கும்மிகளாக இருக்கும். சிலர் இது போன்ற இணையங்களில் பிறரை ஏமாற்றும் வகையில் புனைப்பெயர்களிலும் தங்களை பதிவு செய்திருப்பார்கள்.

இன்னும் சிலர் விவரமாக பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் புகைப்படம் மற்றும் விவரங்களை அளிக்காமல் இருப்பார்கள்.

15 வருடங்கள்... இல்லை 10 வருடங்களுக்கு முன்புவரை கடிதம் மற்றும் வாழ்த்து அட்டை பரிமாற்றங்கள் அதிகமாகவே இருந்து வந்தன. அதன் பின்னர் எழுத்துக்கள் குறைந்து மின்னஞ்சல் வழி தகவல் பரிமாற்றமும், வாழ்த்து பகிர்தலும் இருந்து வந்தது.

தற்போது ஓரிரு வருடங்களாக மின்னஞ்சல்களும் குறைந்து Hi, h r u... 5n, Hpy B'Dy Tk Cr போன்ற சுருக்கெழுத்துக்களில் scrap களாக, குறுந்தகவல்களாக தகவல் பரிமாற்றங்கள் குறைந்து வருவது நிச்சயமாக ஆரோக்கியமானதாக இல்லை.

இன்றைய சமுதாயத்தின் சிலர் இந்த நிலைமைக்கு மாறியிருக்கின்றனர்,பலர் மாற்றப்பட்டிருக்கின்றனர்.ஆர்குட்டிலோ ஃபேஸ்புக்கிலோ தங்களை இணைத்துக் கொள்ளாதாவர்களை ஏளனத்துடன் பார்க்கின்றனர் சக ஜீவிகள்.

ஆர்குட்டில நீ இல்லயா மச்சான், சே என்னடா நீ இது கூட தெரியாதா என கல்லூரிகளில் ஏளனமாய் பார்க்கின்ற நிகழ்வுகளும் உண்டு.

இந்த நிலை தொடருமானால் பாசம் நிறைந்த கடித கருத்துப் பரிமாற்றங்களை, அன்பானவர்களின் அன்பு கையெழுத்துக்களை,கைவண்ணங்ளை நாம் இழக்க நேரிடும். அதோடு சிந்தனைகளும், எண்ண ஓட்டங்களும் இன்னும் மழுங்கிப் போகவும் வாய்ப்புள்ளது.

(வழக்கமாக காகிதத்தில் எழுதும் என்னையும் இந்த இணையமும், கணினியும்,கீ போர்டும், கட்டிப்போட்டிருக்கின்றன. கையெழுத்தே மறந்து விடும் போல!)

வருங்காலங்களில் "மம்மி என் name ரமேஷ் னு சொல்ற" அப்போ என் பாஸ்வேர்ட் என்னமா என கேட்கிற சந்ததி வந்தாலும் வரும்!!

"அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி அனைத்து விஷயங்களுக்கும் பொருந்துவது போல ஆர்குட்,ஃபேஸ்புக் போன்ற இணைய உலவிகளுக்கும் பொருந்தும்.

இது போன்ற இணையதளங்களில் குழுக்களுக்கும் (community)பஞ்சமில்லை, சாதி வாரியாக, சமய வாரியாக மொழிவாரியாக என பல குழுக்கள் உள்ளன.விளையாட்டு அணிகள், உடல்நலம், அரசியல், நடிக நடிகைகள், இசை,பலான விஷயங்கள் என குழுக்கள் பரந்து விரிந்துள்ளன.

இவற்றில் நன்மையும் தீமையும் ஒரு சேரவே காணப்படுகின்றன.

சமீபத்தில் கூட அஜித் என்றவர் ஆர்குட்டில் ஆரம்பித்த குழுவில் சிவசேனாவை குறித்து தவறான கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததற்காக அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனவே குறைவாக கும்மியடித்து, அளவோடு மொக்கை போட்டு ... வளமாக வாழ வாழ்த்துக்கள்.

March 07, 2009

சர்வதேச மகளிர் தினம்

பெண்கள்,அவர்களின் தாய்மையால்,பெண்ணினத்திற்கே உரித்தான மனிதாபிமானத்தால் மகத்தானவர்கள்,மரியாதைக்குரியவர்கள் என்றே காலங்காலமாக கருதப்பட்டு வந்திருக்கின்றனர். இப்போதும் அந்த கருத்திற்கு நிச்சயமாக மாற்றுக் கருத்து இல்லை எனலாம்.

என்றாலும் அதே மகத்தான,மரியாதைக்குரிய மங்கையர்கள் பிறரிடம் தரந்தாழ்ந்து தர்க்கம் செய்யும் பொழுதும்;நடந்து கொள்ளும் பொழுதும்,ஆசைகளை குறிப்பாக பண ஆசைகளை அடக்கவியலாமல் போகும் பொழுதும், மற்றவர்(பெரும்பாலும் ஆடவர்?) மடிய காரணமாகும் பொழுதும்,மடையர்களாக்கி மறைந்து விடும் பொழுதும் அவர்கள் மேலுள்ள நல்லெண்ணத்தை அவர்களே பாழாக்கி விடுகின்றனர்.

மகளிர் அனைவருமே மனிதாபிமானம் மிக்க மகளிராக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தலும் நியாயமல்லவே. இது ஆடவர்க்கும் கூட பொருந்தும். எல்லா ஆடவரும் ஆணவமின்றி அன்பாக இருந்து விட்டால் உலகில் ஏது பிரச்சினை.

ஒவ்வொருவரையும் அவரவர் இருக்கும் சூழ்நிலைகளே அவர்களை நல்லவராகவும், தீயவராகவும் தீர்மானிக்கிறது.ஆதலால் அவர்களை மட்டுமே குற்றம் சாட்டுவதற்குமில்லை.

முந்தைய நூற்றாண்டுகளை விட இன்று மகளிர் சுதந்திரமாக ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். எனினும், நூற்றாண்டுகள் பல ஆயினும் இன்றும் உலகின் பலபகுதிகளில் பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதும்,பெண்கள் தங்களுக்கு அடிமை என ஆண்களால் கருதப்படுவதும் தொடரத்தான் செய்கின்றது.

எதுவாயினும் ஆடவர் மகளிர் என்ற வேறுபாடு இன்றி மானிடப்பிறவியாக பாவித்து, பிழைநோக்காமல், பரிவு காட்டி, புரிந்து கொண்டு வாழ்ந்தால் மண்ணுலகில் பிரிவினைகளுக்கு இடமில்லை.

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த வருடத்தின் மகளிர் தினத்திற்கான ஐ.நா சபையின் குறிக்கோள்:ஆண்களும் பெண்களும் ஒருங்கிணைந்து பெண்களுக்கும்,பெண்குழந்தைகளுக்கும் எதிரான கொடுமைகளை ஒடுக்குதல்

மகளிர் தினத்தின் வரலாறு மற்றும் அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடக்கம்

பெண்கள் உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளன.முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.இன்று நடந்த முதல் போட்டியில் 10விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வென்றிருக்கிறது.ஆண்கள் அணியைப் போன்றே இதற்கு முன்னர் நடந்த உலகக் கோப்பை போட்டிகள் அனைத்திலும் பாகிஸ்தானை இந்தியா வென்றுள்ளது.

இந்திய அணித்தலைவி கோஸ்வாமி


கடைசியாக இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த போது 5-0என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

அந்த மனநிலையிலிருந்து மாற இன்று பெற்ற வெற்றி ஊன்றுகோலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.இந்திய அணியில் சொல்லும்படியாக முன்னாள் அணித்தலைவி அஞ்சும் சோப்ரா,இன்னாள் அணித்தலைவி கோஸ்வாமி,ஆல்ரவுண்டர்கள் ருமேலி தர்,மித்தாலி ராஜ் ஆகியோர் உள்ளனர். மற்றவர்கள் புதியவர்களாகவே தெரிகிறது.

பாக்கிற்கு எதிராக எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா,இங்கிலாந்து அணிகள் கடும் சவாலை கொடுக்கக்கூடும்

இங்கிலாந்து அணித்தலைவி Charlotte Edwards

இன்றைய ஆட்டத்தின் ஓட்ட விவரம்

பாகிஸ்தான்-57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு(29 ஓவர்களில்)

இந்தியா-58 ஓட்டங்கள்,விக்கெட் இழப்பின்றி(10 ஓவர்களில்)

இனிவரும் ஆட்ட விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

நன்றி: cricinfo

(இலங்கையின்) சர்வதேச பாடகி M.I.A மாதங்கி அருள் பிரகாசத்தின் வலைப்பூ


2009 ல் பிரிட்டனின் சிறந்த பாடகி விருது பெற்றவரும் இரு கிராமி விருதுகளுக்கும் ஒரு ஆஸ்கர் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச பாடகியுமான (இலங்கையின்) M.I.A மாதங்கி அருள் பிரகாசத்தின் வலைப்பூவை யாஹூவில் செய்திகளை அலசியபோது தற்செயலாக காணநேர்ந்தது.

மிகக்குறுகிய காலத்தில் அடைந்த புகழ் குறித்து அவரிடம் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் "இதற்காகவே ஆரம்பத்திலிருந்தே நான் கடுமையாக உழைத்து வந்தேன்" தொலைக்காட்சிகளில் இலங்கையின் இனப்படுகொலைகளை குறித்து சர்வதேச சமூகத்தில் எடுத்துரைக்கும் வாய்ப்பாக இதைக் கருதுகிறேன் என்று பதிலளித்திருக்கிறார்.

M.IA ன் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். அவரது Myspace வலைப்பூவிற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

நன்றி: யாஹூ

March 05, 2009

ICC ன் நூறாண்டு சில நினைவுகள்

நூறு ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் 1909-2009சர்வதேச கிரிக்கெட் கழகத்திற்கு(ICC)வாழ்த்து தெரிவிப்பதோடு (எனது நினைவில் நிற்கும்)கடந்த காலங்களின் சில முக்கியமான கிரிக்கெட் நிகழ்வுகளை இங்கு தொகுத்திருக்கிறேன். 100 வருடம் முழுவதையும் தொகுக்க இயலாவிட்டாலும் கடந்த 30ஆண்டுகளின் நிகழ்வுகள் பெரும்பாலும் இதில் இடம் பெற்றிருக்கும்.

எனது நூறாவது கிறுக்கலான இது, சர்வதேச கிரிக்கெட் கழகத்தின் நூறாவது ஆண்டுடன் ஒன்றிப் போவதில் மகிழ்ச்சியே.

வேற்று மொழியில் கிறுக்கிக் கொண்டிருந்த என்னை தமிழில், தமிழ்மணத்தில் எழுத வைத்த அண்ணன் அன்பு ஜெயினுக்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழ்மணம், தமிழிஸ் மற்றும் பிற திரட்டிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

பின்னூட்டமிட்டும்,வாக்களித்தும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து இணைய அன்பர்களுக்கும் எனது நன்றியை நவில்கிறேன்.அனைவரின் பெயர்களையும் குறிப்பிடுதலில் சிலரின் பெயர்கள் விடுபட வாய்ப்புள்ளதால் அதனை தவிர்க்கிறேன். பெயர்களை குறிப்பிட முடியாமைக்கு அன்பர்கள் பொறுத்துக் கொள்ளும் படி கேட்கிறேன்.

1975ல் பெற்ற உலகக் கோப்பை உடன் மே.இ.தீவின் கிளைவ் லாயிட்
1979ல் இரண்டாவது முறை பெற்ற உலகக் கோப்பை உடன் மே.இ.தீவின் கிளைவ் லாயிட்
1983 ல் பெற்ற உலகக்கோப்பை உடன் இந்தியாவின் கபில் தேவ்
1987 ல் பெற்ற உலகக்கோப்பையுடன் ஆஸியின் ஆலன் பார்டர்
1992ல் பெற்ற உலகக்கோப்பையுடன் பாகிஸ்தானின் இம்ரான்கான்
1996 ல் பெற்ற உலகக்கோப்பையுடன் இலங்கையின் ரணதுங்கா
1999,2003,2007ல் பெற்ற உலகக்கோப்பையுடன் ஆஸியினர்
டெஸ்ட் போட்டிகளில் அதிக சராசரி வைத்திருக்கும் (99.94)ஆஸியின் பிராட் மேன் உடன் வார்ன்,சச்சின்
இந்தியாவின் சுனில் கவாஸ்கர்-டெஸ்ட் போட்டிகளில் 10.000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர்
"ஆஸ்திரேலியர்களின் வித்தியாசமான களத்தடுப்பு"
டென்னிஸ் லீலியின் உக்தி
"ஆஸ்திரேலியர்களின் வித்தியாசமான களத்தடுப்பு"
(2001 ல் சிம்பாப்வே அணிக்கு எதிராக ஸ்டீவ் வாவ்)
மேலே, 1981 ல் அணித்தலைவர் கிரேக் சேப்பலின் (பந்தினை உருட்டிவிடும்)சர்ச்சையை உருவாக்கிய உத்தரவை நிறைவேற்றும் பந்து வீச்சாளர் ட்ரெவர் சேப்பல்!!

கீழே "சகோதரர்கள் கிரேக்,ட்ரெவர் மற்றும் இயன் சேப்பல்"
டிக்கி பேர்ட்-முதன் முதலில் 50 க்கும் மேலான டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பங்குவகித்தவர்
1970-1980 களில் மிரட்டிய மே.இ.தீவின் விவியன் ரிச்சர்ட்ஸ்,ரிச்சர்ட்ஸன்
ரவி சாஸ்திரி-ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்,வர்ணனையாளர்
ஆஸியின் ஆலன் பார்டர்-கவாஸ்கரின் 10,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர்
இந்தியாவின் கபில் தேவ்-ஹாட்லியின் 431 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்த முதல் வீரர்,உலகக்கோப்பையை வென்ற ஒரே இந்திய அணித்தலைவர்
நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி-டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர்
மே.இ.தீவின் மிரட்டும் வேகப்பந்து வீச்சாளர்கள்
மே.இ.தீவின் கோர்ட்னி வால்ஷ் - டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர்.
அம்ப்ரோஸ்-வால்ஷ் இணை அவர்களிடையில் 49 டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்

எதிரணிகளை திணறடித்த பாகிஸ்தானின் அதி வேகப்பந்து வீச்சாளர்கள் வாசிம் அக்ரம்-வக்கார் யூனிஸ். வாசிம்-டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கடந்த முதல் பந்து வீச்சாளர்

பாகிஸ்தானின் ஜாவித் மியான்டட்-பாகிஸ்தானிற்காக டெஸ்ட் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்.1986,ஷார்ஜாவில் இந்தியாவிற்கு எதிரான ஒருதின போட்டி ஒன்றின் இறுதிப் பந்தில் சிக்சர் அடித்து பாக்கின் வெற்றிக்கு வழிவகுத்தார்.1992 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் கிரண் மோரேயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர். ஆஸியின் டென்னிஸ் லீலி சீண்டியதால் அவரை மட்டையால் தாக்கவும் பார்த்தவர்.

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்-மிக இள வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில்
அறிமுகமான முதல் இந்திய வீரர்

நடுவர் டேவிட் ஷெப்பர்ட்-நெல்சன் என அழைக்கப்படும் 111 ஓட்டங்களின் போது ஒற்றைக்காலில் நிற்பது இவரின் தனித்தன்மை

ஆஸி வீரர் மெக்கிராத்,இந்தியாவின் கம்பீர்,பிரசாத்,பாக்கின் சொஹைல் ஆகியோரின் கோபம் தெறிக்கும் வாக்குவாதங்கள்

இந்தியாவின் மூன்று அணித்தலைவர்கள் கபில்,அசார்,சச்சின்

1998,ஷார்ஜாவில் தனி ஆட்டக்காரராக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெற்ற கோகோ கோலா கோப்பையை வென்றுத் தந்த சச்சின்
1996,கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் மோசமான ஆட்டத்தை காணசகிக்காத ரசிகர்கள் தீயிட்டனர்.ஓட்ட விகித அடிப்படையில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ்-மிகச் சிறந்த களத்தடுப்பாளர்
கங்குலி-ஃப்ளின்டாஃபின் பழிக்குப் பழி மேலாடை உரிப்புகள்
ஆஸியின் வாவ் சகோதரர்கள்-சிம்பாப்வேயின் ஃப்ளவர் சகோதரர்கள்


நான் அதிகம் ரசிக்கும் வர்ணனையாளர்கள் ஹார்ஷா,ஆலன் வில்கின்ஸ்,டோனி கிரெயிக்,இயன் சேப்பல்,ரவி
தென்னாப்பிரிக்காவின் முதல் உலகக்கோப்பை போட்டியான 1992,உலகக்கோப்பை போட்டியின் சோகமான முடிவு
தென்னாப்பிரிக்காவிற்கு மீண்டும் துரதிருஷ்டம். சமநிலையில் முடிந்த பரபரப்பான 1999 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி. வேதனையில் தென்னாபிரிக்க வீரர் "க்ளூஸ்னர்". உற்சாகத்தில் ஆஸியினர்

2003 உலகக் கோப்பை போட்டியில் பான்டிங்கின் அதிரடியால் தோல்வியடைந்த இந்திய அணிக்கு சச்சினுக்கு கிடைத்த "தொடரின் சிறந்த வீரர் விருது" சிறிய ஆறுதல். பாக்கிற்கு எதிரான போட்டி ஒன்றில் அக்தரின் பந்தை சிக்சருக்கு விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.அதற்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விருது வழங்கப்பட்டது



கங்குலி-சேப்பல் ஒத்துப்போகாத இணை


ஓவல் டெஸ்ட் ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணி மீது குற்றம் சாட்டப்பட்டதால் விளையாட மறுத்தது பாக் அணி. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை வென்று 2008 காமன்வெல்த் கோப்பையை வெல்ல காரணமாயிருந்த சச்சின் கோப்பையுடன்.

இந்தியாவின் யுவ்ராஜ் சிங்-T20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனை செய்தார்


2007 ல் முதல் T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினர்
பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்-பாகிஸ்தானிற்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்,டெஸ்ட் போட்டிகளில் சொற்ப ஓட்டங்களில் ஜாவித் மியான்டடிடம் முதலிடத்தை பறிகொடுத்தவர்.



1985-2008 வரை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலிய அணி
2007-2008, இந்தியா-ஆஸி இடையேயான சிட்னி டெஸ்ட் போட்டி பிரச்சினை

ஹர்பஜன்-சைமன்ட்ஸ் இனவெறி தாக்குதல்?
2008 IPL T20 போட்டிகளின் நாடகங்கள்
ஆஸ்திரேலியாவின் ஷேர்ன் வார்ன்-டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர்
இலங்கையின் முத்தையா முரளிதரன்-டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்துவீச்சாளர்

இந்தியாவின் அனில் கும்ப்ளே-ஒரு இன்னிங்க்சில் 10 விக்கெட்டுகள் முழுதும் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர்.600 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியர். டெஸ்ட் ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களுள் சதமெடுத்த முதல் சுழற்பந்து வீச்சாளர்.
மே.இ.தீவின் பிரயன் லாரா-டெஸ்ட் ஆட்டங்களில் 400 ஓட்டங்கள் எடுத்த முதல் மட்டையாளர்.

டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் 10,000 ஓட்டங்களுக்கும் மேல் குவித்த முதல் மே.இ.தீவு மட்டையாளர்
தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ்-2007,உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்திற்கு எதிராக ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை செய்தார்

தென்னாப்பிரிக்காவின் ஹான்சி குரோனியே-தென்னாப்பிரிக்க அணியை பயிற்சியாளர் பாப் ஊல்மருடன் இணைந்து அருமையாக வழிநடத்திய அணித்தலைவர். கிரிக்கெட் சூதாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவர் 2002 ஆம் ஆண்டு மர்மமான முறையில் விமான விபத்தில் மரணமடைந்தார்


பயிற்சியாளர் பாப் ஊல்மர்-2007 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் அயர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அடைந்த தோல்வியின் பின்னர் சோகமாக காணப்பட்டவர் அன்று இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார்.

2007 உலகக் கோப்பை போட்டியில் பங்களாதேஷிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியின் சோக முகங்கள்

டெஸ்ட் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் எடுத்திருந்த மே.இ.தீவை சார்ந்த லாராவின் சாதனையான 11,953 ஓட்டங்களை முறியடித்த சச்சின்

3.3.2009 அன்று லாகூரில் நிகழ்ந்த துயர சம்பவம்

ஆப்கனில் கிரிக்கெட் ஆடும் இளைஞன் ஒருவன்!
ஆப்கன்,பாக்,இலங்கை மற்றும் தெற்காசிய பகுதிகளில் அமைதி ஒளி என்று வீசுமோ?




புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் நன்றி: cricinfo bbc nytimes sundaymercury

Related Posts with Thumbnails