December 03, 2009

ஏ.ஆர்.ரஹ்மான்-கிராமி விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்


ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகியும் இன்னமும் பேசப்பட்டு தான் வருகிறது.

ஏற்கெனவே கோல்டன் குளோப், BAFTA, Critics Choice, ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிற ஸ்லம்டாக் மில்லினியர் தற்போது அதன் இசைக்காக இசைக்கான அமெரிக்காவின் உயரிய விருதாகக் கருதப்படும் GRAMMY விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்த 'ஜெய் ஹோ' சிறந்த பாடலுக்கான விருதிற்காகவும், சிறந்த இசைக்கான விருதிற்காக ரஹ்மானும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள்.

1958 முதல் வழங்கப்பட்டு வரும் Grammy விருதுகள் இசைக்கான ஆஸ்கர் எனவும் அறியப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மான் கிராமி விருதிற்காக பரிந்துரைக்கபடுவது இது தான் முதல் முறை என தெரிகிறது.

52 ஆவது கிராமி விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள மற்ற இசைத் தொகுப்புகளையும், இசைக்கலைஞர்களையும் இங்கே சுட்டினால் தெரிந்து கொள்ளலாம்.

(இதில் category 81 லும் category 83 லும் ஸ்லம்டாக் மில்லினியரின் பரிந்துரையைக் காணலாம் அதாவது Best Compilation Soundtrack Album For Motion Picture, Television Or Other Visual Media மற்றும் Best Song Written For Motion Picture, Television Or Other Visual Media)

கிராமி விருதுகள் 2010 ஆம் வருடம் ஜனவரி 31 ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்படவிருக்கின்றன.

நன்றி: கிராமி

November 30, 2009

மன அழுத்தம் தரும் நாகரீக வாழ்க்கை



'கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன், அன்று தூக்கம் வந்ததே அது அந்த காலமே' 'மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கமில்லையே அது இந்த காலமே' என்ற கவிஞ்ர் வைரமுத்துவின் இந்த பாடல் வரிகள் இன்று எத்தனை பேரின் வாழ்க்கையில் நிஜமாயிருக்கிறது என கேட்டால் பலர் ஆம் எனவே சொல்வார்கள்.

மனித வாழ்க்கை இன்று எத்தனை மன அழுத்தம் நிறைந்ததாகவும், மன நிறைவற்றவதாகவும் இருக்கிறது என்பதற்கு பெருகிவரும் தற்கொலைகளும், விவாகரத்துகளும், வெறுப்பும், பொறாமைகளுமே சாட்சி.

இரு வாரங்களுக்கு முன்னர் வேலை நிரந்தரமாகாத காரணத்தால் விமானி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிக்கை ஒன்றில் படிக்க நேரிட்டது.

இரு தினங்கள் முன்பு கூட திருமணமான அன்று இரவே முதலிரவு சரியாக அமையாத காரணத்தால் மாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தியை காண நேரிட்டது.

சிறிய விஷயங்களில் கூட மன நிறைவு அடையவில்லை என்றாலோ, தோல்வியடைந்து விட்டாலோ மீண்டும் அதனை அடையும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தற்கொலை, பழிவாங்குதல் என திசைமாறுவது சமூகத்தில் இன்று பெருகி வருவதும் நல்லதல்லவே.

பணம் பெருக பெருக இன்று பலருக்கு குணம் சிறுத்துப் போவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

பணம் பெருக தனி மனித தேவைகளும், குடும்பத் தேவைகளும் இன்றைய இயந்திர உலகத்தில் பெருகவே செய்கின்றன.

ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ஒரு சராசரி மனிதனுக்குத் தான் இன்று எத்தனை commitments,எத்தனை deadlines.

நகரத்தில் பணி செய்பவர்களுக்கு ... சரியான சமயத்தில் பேருந்தையோ, மெட்ரோ ரயிலையோ பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்,போக்குவரத்து நெரிசல் என இன்னும் மேலதிக நெருக்கடிகள்.

சம்பள நாளிலும் அதற்கு அடுத்த சில நாட்களிலும் மட்டுமே நண்பர்களானாலும் உறவினர்களானாலும் சிரித்துப் பேசுவார்கள் என எத்தனை பேர் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கார்கள் என்பதும் உண்மையே.

அயல் நாட்டில் இருப்பவர்களை கேட்டால்... மாதத்தின் முதல் வாரம் மட்டும் (பணம் கேட்டு)வரும் தொலைபேசி அழைப்புகள் எண்ணற்றவையாக இருக்கும் என சொல்வார்கள்

இன்று மனிதம் என்னும் புனிதம் மறைந்து பணம் பெரிதாகிப் போனது மனிதத்தை எங்கே கொண்டு சேர்க்கும் என தெரியவில்லை.

உண்மையில் நாம் நாகரீகமடைந்து விட்டோமா? சந்தேகமாயிருக்கிறது! என இயக்குனர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார், அவரின் வரிகளில் தான் எத்தனை உண்மை !

November 29, 2009

தங்லீஷ் பாடல்களும்-பிறைசூடன்,எஸ்.பி.பி யின் கருத்துக்களும்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "வானம் பாடி" என்னும் நிகழ்ச்சியில் இந்த வாரம் கந்தசாமி திரைப்படத்திலிருந்து அலேக்ரா என்ற பாடலை ஒரு பெண் போட்டியாளர் பாடியிருந்தார்.

பாடலை அறிவிக்கையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடல்: அலேக்ரா, படம்:கந்தசாமி, எழுதியவர்:கவிஞ்ர்.விவேகா என அருமையாகத் தான் ஆரம்பித்தார்; ஆனால் பாடல் பாடப்படுகையில் பாடலின் மீது அத்தனை ஈடுபாடு காண்பிக்கவில்லை.

அது, பாடல் சுருதியில்லாமல் பாடப்பட்டதாலா இல்லை பாடல் வரிகள் பாடும் நிலா பாலுவிற்கு பிடிக்காததாலா என தெரியவில்லை.

எனினும் போட்டியாளர் பாடிய விதத்தை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே பாடலைக்குறித்தும் சில வரிகள் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பாலுவிற்கு.... என்னவெல்லாமோ பாடல் எழுதுகிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை என நிறுத்திக் கொண்டார்.

கவிஞர். பிறைசூடன் விமர்சிக்கையில் இந்திய பொண்ணுக்கு இத்தாலிய கண் ஒத்து வருமா என்றார். இணையத்தில் இருந்து என்னவெல்லாமோ வார்த்தைகளைக் கோர்த்து தங்கிலீஸ் பாடல்களை எழுதுகிறார்கள். வெகு நாட்கள் இவை நிலைக்காது என்றார்.

இது மாதிரியான தமிழையே வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுப் போனால் அது தவறு என்றார். மேலும், இறைவனுக்கும், நான் நேசிக்கும் தமிழுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றைச் சொல்கிறேனேயன்றி பாடல் எழுதிய கவிஞரைக் குறை கூறுவதற்காக அல்ல எனவும் கூறினார்.

முன்னொரு வார வானம் பாடி நிகழ்ச்சியில் வில்லு திரைப்படத்தின் பாடல் குறித்து... 'டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை' என்றெல்லாம் பாடல் எழுதிகிறார்கள் இவற்றையும் இன்றைய சின்னஞ்சிறுசுகள் (புரியாமலேயே) முணங்கிக் கொண்டிருக்கின்றன, இவை எங்கே போய் முடியுமோ என அங்கலாய்த்தார்.

இவை... நிச்சயமாகவே வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுப் போகிற நல்ல சங்கதிகள் இல்லை தான்.


வானம்பாடி நிகழ்ச்சியின் காணொளி கீழே... சுட்டியை அளித்த பதிவர் சாஷீக்கு நன்றி


@ Yahoo! Video

November 28, 2009

மழை-கிறுக்கல்கள்



கார் முகிலால்

நீல வான் மறைகையில்

எழும் கவலையினால்

விழும் வானின்

கண்ணீர் திவலையா-நீ















அடை மழை

மெதுவாய் துவங்கும்

உன் விசும்பல்களை

பீரிட செய்தவர்-யாரோ

வான்வெளியிலும் பாகுபாடோ
















வெண் முகிலாய் இருக்கையில்

கவலை கொள்ளா வானம்-நீ

கரிய நிறம் கொள்கையில்

வெறுத்து கீழே தள்ளுதல்

வர்ண பேதமோ


















எவருமில்லா தனிமையில்

என்னுடன் ஆடும்

என்னுயிர் தோழியா நீ













தோழி என்றதால்-நின்

அடை மழையால்

அடம் பிடித்து-என்

அலுவல்களை பாதிக்கிறாயோ




















சங்கீதச் சாரலில்

சங்கேதங்களால்-தன்

அகம் மகிழும்

சிறு குழந்தையை

சினம் கொண்டு அழைக்கும்

அன்னைக்கு தெரியுமா

சாரலின் சங்கேதங்கள்




















கருப்புக் குடை

காண்பித்தால்-நீ

மீண்டும் வரமாட்டாய்

என்பதாலா-இவள்

வர்ணக் குடை

விரிக்கிறாள்

-------

நவம்பர் மழையில்
குவைத் நகரத்தில்
முடங்கிய போது
கிறுக்கியவை

November 25, 2009

2012 ம் 200 ஆவது பதிவும்!

200 ஆவது பதிவு பேரழிவைக்குறித்து இருக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.... இருக்கட்டும் இருக்கட்டும்.

மாயன் நாட்காட்டி, 2012 ல் உலகம் அழிவு, நாசா விஞ்ஞானிகளின் மறுப்பு என பல வருடங்களாகவே புகைந்து வரும் உலகம் அழிவதைக் குறித்த குறிப்புகள் கொண்ட மாயன் கலாச்சாரத்தின் மையக்கருத்தை கொண்டு Independence Day(1996), The Day After Tomorrow(2004) போன்ற அழிவைக் குறித்த திரைப்படங்களால் மிரட்டிய இயக்குனர் ரோலண்ட் எம்மெரிக் 2012 என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.


Y2k விவாதங்கள் உட்பட இதற்கு முன்னரும் பலராலும் பலமுறை இன்ன நாளில் உலகம் அழியப்போகிறது என முன்குறிக்கப்பட்டாலும் எந்த கருத்துக்களும் மெய்யாகவில்லை.


2012 திரைப்படத்தில் சினிமாத்தனங்கள் இருந்தாலும்,தொழில்நுட்பத்தின் உதவியுடன் (Graphics) 2012 வருடத்தின் போது தொடர்ச்சியாக உலகம் முழுவதும் ஏற்பட போவதாக எடுக்கப்பட்டிருக்கும் ஆழிப்பேரலை(சுனாமி), நிலநடுக்கங்கள், நோவாவின் பேழை போன்ற மிகப்பெரிய கப்பல்கள், எரிமலை சீற்றங்கள் என பிரம்மாண்டங்கள் வியக்கவைக்கின்றன.


திரைப்படத்தில் உலகின் ஒவ்வொரு பகுதிகளும் ஒன்று மாறி ஒன்று நிலைகுலையும் போது நமது ஈரக்குலையும் நடுங்கத்தான் செய்கிறது.


இத்தனை பிரம்மாண்டங்களைக் கொண்டுள்ள இத்திரைப்படத்திற்கான செலவு 1400 கோடியாம்!!!


இந்த பேரழிவிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் மிகப்பெரிய கப்பல்கள் வடிவமைக்கப்படுவதற்கு இந்தியர் ஒருவர் காரணமாவதாகவும், சீனாவில் அவை வைக்கப்பட்டிருப்பதாகவும் கதை அமைக்கப்பட்டிருப்பது வருங்காலத்தில்(இப்போ மட்டும் என்னவாம்!) மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை ஆசிய நாடுகள் தகர்க்கும் என்பதற்காக அமைக்கப்பட்டதா என தெரியவில்லை.


எதுவாக இருந்தாலும் இந்த திரைப்படம் அதன் பிரம்மாண்டத்திற்காக ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டிய திரைப்படமே.


தற்போது '2012' திரைப்படத்தைக்குறித்து இணையத்தில் விவாதிக்கப்படாத நிமிடங்கள் இல்லை எனலாம்.


மாயன் நாட்காட்டியைக்குறித்தும் 2012 திரைப்படத்தைக் குறித்தும் விக்னேஷ்வரன் என்பவரால் இணையத்தில் எழுதப்பட்டிருக்கும் இடுகைகளை கீழே உள்ள சுட்டி யை சுட்டினால் படிக்கலாம்.


http://vaazkaipayanam.blogspot.com/2009/11/2012.html







November 24, 2009

மாலை நேரம் - பாடல் வரிகளுடன் காணொளியாய்

'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "மாலை நேரம்" பாடல் குறித்து இப்போது சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.இதமான காதல் பாடல்களை ரசிக்கும் அனைத்து தமிழ் ரசிகர்களையும்; இசைப்பிரியர்களையும் சில மாதங்களாகவே கட்டிப்போட்டிருக்கிறது என்பதற்கு அந்த பாடலைக்குறித்து இதுவரை எழுதப்பட்டிருக்கும் எண்ணற்ற வலைப்பதிவுகளே சாட்சி.

இந்த பாடல் குறித்து பதிவர் கார்க்கியின் பதிவு இங்கே

பாடல் வரிகளை புகழ்வதா இல்லை மெட்டைப் புகழ்வதா இல்லை பாடகியை புகழ்வதா என தெரியவில்லை.

அற்புதமாக கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அதே போன்று ஆன்ட்ரியாவின் குரலை எத்தனை பாராட்டினாலும் தகும். பாடல் வரிகளைக் குறித்து சொல்லவே தேவையில்லை. பாடலாசிரியர் செல்வராகவன் பாடல் வரிகளுக்கு காதல் வர்ணம் தீட்டியிருக்கிறார் என்று கூட சொல்லலாம்.

பாடகி ஆன்ட்ரியா (ல,ள) (ன,ண) உச்சரிப்புகளில் கவனம் செலுத்தியிருந்தால் பாடல் இன்னும் சிறப்பைப் பெற்றிருக்கும்.

மாலை நேரம் பாடலை பாடல் வரிகளுடன் கீழே காணொளியாக கோர்த்திருக்கிறேன்...




Search and Download More Music Free

November 20, 2009

பிரிவினைகளுக்கு எதிராக குரல் கொடுத்த சச்சினும் ராகுலும்

இந்திய தேசத்தில் சாதியினாலும், மதத்தின் பெயராலும், மொழியினாலும், எல்லைகளினாலும் தொடர்ந்து இருந்து வரும் பிரிவினைகளுக்கும் அதனை ஊக்குவித்து வரும் பிரிவினை சக்திகளுக்கும் எப்போதுமே குறைவில்லை.


எனினும் முன்னிருந்ததை விட தற்போதைய கணினி யுகத்தில் பிரிவினைகள் குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இதில் இளைஞர்களின் பங்கு நிச்சயம் உண்டு என்பதில் சந்தேகமில்லை.


இது ஒருபுறமிருந்தாலும் சட்டக்கல்லூரி சம்பவம் போன்ற காட்டுமிராண்டித்தனத்தையும் மறந்து விட முடியாது.


தாங்கள் எந்த சாதி, மதத்தையும் சாராதவர்கள் எனவும் தங்கள் பிள்ளைகளின் சான்றிதழ்களில் சாதி,மதமற்றவர்கள் என்பதைக் குறிப்பிடவும் போராடி வருபவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.


இவற்றிற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்த சச்சின் மற்றும் ராகுல் காந்தியின் அறிக்கைகள் மேலும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.


நான் மகாராஷ்டிரத்தைச் சார்ந்தவன் என்பதில் எனக்கு பெருமையென்றாலும் முதலில் நான் ஒரு இந்தியன் என சச்சின் கடந்த வார பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.


அதே போன்று கடந்த மாதம் கேரளாவில் பேட்டி ஒன்றின் போது ராகுல் காந்தி... நான் ஒரு மனிதனின் வீட்டிற்கு தானே போகிறேனே அல்லாமல் ஒரு தலித்தின் வீட்டிற்கு அல்ல; பத்திரிக்கைகள் தான் இத்தகைய பாகுபாட்டைக் குறிப்பிட்டு எழுதி வருகின்றன என பத்திரிக்கைகளை சாடியிருந்தார்.

இவை சாதி, மத, இன பேதமற்ற இந்தியாவை காண ஆவலாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் மேலும் ஊக்கமளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Posts with Thumbnails