January 28, 2012

ஆஸ்திரேலியா: கவிழ்த்த கிரிக்கெட்டும்; கவர்ந்த லியாண்டர் பயசும்


பதிவுலகம் பக்கம் வந்தே பல நாட்கள்/ மாதங்கள் ஆகி விட்டது. குடும்பப் பொறுப்புகள் சிந்தனைகளை சுருக்கியிருப்பதை மறுப்பதிற்கில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த ஆறு மாத கால செயல்பாடும், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசும் இந்த பதிவை எழுத தூண்டியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குள் வைக்கப்பட்ட அதே நாள் தான்... மற்றொரு இந்தியர் லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்று இந்தியர்களை பெருமைப்பட வைத்திருக்கிறார்.

சச்சின் சதம் அடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது.  கடைசியாக அவர் களம் இறங்கிய பதினாறு முறையும் சதமடிக்க தவறியிருக்கிறார். லக்ஷ்மணும் அதே நிலைமையில் தான் இருக்கிறார்.

திராவிட், இங்கிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டங்களில் மூன்று சதங்கள் எடுத்து தான் ஒரு தூண் என்று நிரூபித்தாலும் தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 8 இன்னிங்க்ஸ்களிலும் ஒரே ஒரு அரை சதத்தோடு திருப்திப்பட்டுக் கொண்டார். 

தங்களது ஆட்டம் உச்சத்தில் இருக்கும் போதே யாரும் விடைபெற வேண்டுமென்று கருதுவதில்லை போலும். சச்சின் உலகக் கோப்பையை வென்றதுமே விடை பெற்றிருக்கலாம். திராவிட் இங்கிலாந்தில் மூன்று சதங்கள் எடுத்ததும் விடை பெற்றிருக்கலாம். இவர்கள் இருவரும் செய்யாத சாதனைகள் இல்லை. இனிமேலும் என்ன சாதிக்கவிருக்கிறார்கள் என தெரியவில்லை.

ஆஸ்திரேலியர்கள் ஹெய்டன்,கில்கிறிஸ்ட் உள்ளிட்ட பலர் அவர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கையில் தான் விடை பெற்றார்கள். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிர்ஸ்டன் உலகக்கோப்பையை வென்ற கையோடு பதவியை துறந்தார். இந்த மனநிலைமை ஏன் இவர்களுக்கு இல்லை என தான் தெரியவில்லை.

இரண்டு ஆட்டங்கள் தோற்றதுமே ரோகித் ஷர்மாவிற்கு வாய்ப்பளித்திருக்கலாம்; அல்லது ஆடுபவர்கள் வரிசையையாவது மாற்றியிருந்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. எதையுமே பரிசோதனை செய்யாமல் தோல்வி! தோல்வி!! என்றால் என்னவென சொல்வதற்கு?!

கிரிக்கெட் அணி காலையில் கவிந்திருக்க; மாலையில் இந்தியாவின் பெயரை லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தின் மூலம் உயர்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இதோடு பயஸ் டென்னிஸின் நான்கு பெரிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் (ஆஸ்திரேலிய ஓபன், ஃப்ரெஞ் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன்) வென்று சாதனை படைத்திருக்கிறார். 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் பயஸ் பெற்ற ஒற்றையர் வெண்கலப் பதக்கத்தையும் மறந்து விட முடியாது.

கிரிக்கெட்டிற்கும் ஐ.பி.எல் ற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் விளையாட்டு ரசிகர்களும், இந்திய அரசாங்கமும் டென்னிஸ் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவமும், ஊக்கமும் அளித்தால் இந்தியா விளையாட்டு அரங்கில் புகழ் பெற்று விளங்கும்.


December 25, 2011

Facebook - Fastfood உலகால் மறக்கப்பட்டு வரும் விழாக்கால மகிழ்ச்சிகள்


சிறுவயதில் விடுமுறைக்காலம் என்றாலே அது டிசம்பர் தான். என்ன தான் ஏப்ரல் மே மாதத்தில் பள்ளி விடுமுறையாய் இருந்தாலும்/அது ஒன்றரை மாத கால நீண்ட விடுமுறையாய் இருந்தாலும் டிசம்பர் மாத விடுமுறையின் சந்தோசம் ஒரு பிரத்தியேக சந்தோசம் தான்.


அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. கிடைக்கவிருக்கும் புத்தாடைகளும், பரிசுப் பொருட்களும்; அம்மாவின் கரங்களால் தயாரிக்கப்படும் பலகாரங்களும், இனிப்பு வகைகளும்; நண்பர்கள் கூடி ஆரவாரிக்கும் பொழுதுகளும்; தெருவெங்கும் களைகட்டும் மின் அலங்காரங்களும்; அப்பாவால் வண்ண விளக்குகளால் அமைக்கப்படும் வீட்டு அலங்காரங்களும்;உறவினர்கள் கரங்களிலிருந்து குறிப்பாக தாத்தா, பாட்டியிடமிருந்து   கிடைக்க விருக்கும் பணப் பரிசுகளும் தான் காரணங்கள். இன்னும் சொல்லிப்போகலாம்.

இளைஞர் பருவத்தில் டிசம்பர் என்றால் தெருவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளும், உறவினர்களிடமிருந்து வரும் வாழ்த்து அட்டைகளும் இன்னும் பரவசமாக்கும். குறிப்பாக வெளிநாடுகளில் இறுதி கிடைக்கப்பெறும் வாழ்த்து அட்டைகளில் ஒட்டப்பட்டிருக்கும் தபால் தலையை பார்த்தாலே மேலும் பரவசம் தான். உறவுகளின் கூடுகை இன்னும் உற்சாகம் தரும்


இவை போதாதென்று நண்பர்கள் கூட்டத்துடன் அடிக்கும் அரட்டைகளும், பட்டாசு வெடித்தலும் விடுமுறைக்காலத்தை இன்னும் அமர்க்களப்படுத்தும் சுவாரஸ்யங்கள்.

ஆனால் இன்று இத்தகைய சுவாரஸ்யங்கள் குறைந்து கொண்டே வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம். உறவுகளை பார்ப்பதே கடினமாகி வருகிறது. உறவினர்கள் விடுமுறைக் காலங்களில் கூடி வருவதே அரிதாகி விட்டது இப்போது.

வெளி ஊர்களிலும், வெளி நாட்டிலும் புலம் பெயர்ந்து வாழுகின்றவர்கள் உறவுகளை சந்திப்பது அபூர்வமாகிப் போனது இன்று. இது போதாதென்று ஒரே ஊரில் வசிப்பவர்கள் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதும் குறைந்து வருகிறது. தான், தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்பது தான் மேலோங்கி நிற்கிறது.

வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பேனா பிடித்து எழுதி அனுப்பப்படும் கடிதங்களும்,  இன்றைய டிஜிட்டல்  உலகில்  பெருவாரியாக குறைந்து வருவது வேதனைப்பட வேண்டிய விஷயம்.பேனாவால் எழுதப்படும் ஒரு கடிதம் தரும் மகிழ்ச்சியை மின்னஞ்சலோ அல்லது டிஜிட்டல் வாழ்த்து அட்டையோ தந்து விடாது.  இன்று இயல்பாக இருக்க விரும்பும் மனிதர்கள் வெகு சிலரே.

கடந்த வாரம் கூட நான் அனுபவப்பட்ட ஒரு நிகழ்வு இந்த கால சந்ததியினரின் மனநிலைமையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. ஊருக்கு வாழ்த்து அட்டை அனுப்ப போகிறேன் என்று நண்பரிடம் நான் கூற அதற்கு பதிலாக நண்பர்... "என்னங்க இந்த காலத்தில யாருங்க இதெல்லாம் பண்ணிட்டு இருப்பாங்க" ஒரு தொலைபேசி அழைப்பே  அதிகம் என்றார்.  அவருக்கு கடிதம் எழுதுவதில் அவ்வளவு தான் ஆர்வம் என்று எண்ணிக்கொண்டேன்.  

பகட்டிற்கும், Fastfood - எந்திர வாழ்க்கைக்கும், Facebook - ஆர்குட் உலகிற்கும் அடிமையாகி போன இந்த கால சந்ததி இழந்திருக்கும் சிறு சிறு சந்தோசங்கள், மகிழ்ச்சிகள் ஏராளம்.  

பணம் சம்பாதிக்கும் அவசரத்தில் பாசங்களையும், பந்தங்களையும், பகிர்வுகளையும் இழந்து நிற்கிறார்கள். என்ன தான் இருந்தாலும் தொண்ணூறுகளில் இருந்த வாழ்க்கை முறை இனி மீண்டும் வருவது கடினம் தான்.

December 05, 2011

திரைப்படம் அரசியல் ஆக்கப்படுவது அழகல்லவே

குத்தாட்டங்களும், அரைகுறை ஆடைகளும் பெரும்பாலான திரைப்படங்களில் முன்னிறுத்தப்பட்டாலும் சில திரைப்படங்கள் கடந்த காலங்களிலும் சரி இன்றைய காலகட்டத்திலும் சரி சமூக நலன் கருதிய கருத்துக்களை பறைசாற்றி வந்திருக்கின்றன என்று சொல்லலாம்.

எனினும் திரைப்படங்கள் சமூக நலனை பாதிக்கும் வண்ணம் எடுக்கப்படுவதாக ஒரு சாரார் குறை கூறாமலும் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் திரைப்படம் DAM 999.

திரைப்பட இயக்குனர் சோகன் ராய், தமிழகத்தை சார்ந்தவர் அல்ல என்பதும், தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுக்க மற்றொரு காரணமாக அமைந்து விட்டது.

DAM 999 திரைப்படம் வெளியானால், தமிழக கேரள மக்களிடையே நிலவும் இணக்கமான நிலைமை மாறி கோபமும், மனக்கசப்பும், கைகலப்பும் ஏற்பட்டு விடும் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள் அரசியல்வாதிகள்.


ஆனால் இன்றைக்கு, தமிழக - கேரள எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது என்றால் அதற்கு முழு காரணம் இரு மாநில அரசியல்வாதிகளும்,அவர்களின் தவறான பிரச்சாரமும் தானேயன்றி வேறொன்றுமில்லை.


சிகரெட் பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற காட்சிகள் அமைக்கடுவதால் ஏற்படாத பாதிப்பு ஒரு அணை உடைவது போன்ற காட்சி அமைப்பதால் ஏற்பட்டு விடப் போகிறதா என்ன!?

மற்றொரு கேள்வியும் இங்கு முன் வைக்க வேண்டியது கட்டாயமாகிறது. DAM 999 திரைப்படம் வெளியாவதற்கு இத்தனை எதிர்ப்பு காட்டுபவர்கள். முல்லைபெரியார் அணையைக் குறித்த Dams - The Lethal Water Bombs என்ற குறும்படம் வெளியான போது எங்கிருந்தார்களோ?

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கு விஷயத்தில் இத்தனை அறிக்கைகள் விடுவதும், போராட்டம் நடத்துவதும் கேரள அரசியல்வாதிகளுக்கு அழகோ என்னவோ?

திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்த்தல் சிறந்தது, அரசியலையும் திரைப்படத்தையும் ஒப்பிடுவது அழகல்லவே.

October 03, 2011

என்ன கேட்பாய்! என்னவென கேட்பாய்!!

எப்படி இருக்கிறாய் என
என்னிடம் வினவினாலும்

என்ன செய்கிறேன் என
என் நண்பனிடம் கேட்டாலும்

என்ன நிகழ்ந்தது என
என் உறவுகளிடம் அங்கலாய்த்தாலும்

என் மனதை நீ அறிவாய்
என நீ கருதினாலும்

என் தலையணையை
என் கண்ணீர் ஈரமாக்கிய
என் தலையணையை - நீ வினவாத வரை

என் கவலையை - நீ
என்றும் விளங்கிக் கொள்ளவியலாது

September 30, 2011

வலைப்பூ - காத்திருப்பு

எண்ணம் எனும் தோட்டத்தில்
எழுத்து எனும் பூ பூக்கும் - தருணம்
ஏனோ இன்னும் வாய்க்கவில்லை

உள்ளுவதையெல்லாம் உடனே
வலையேற்ற வரமுமில்லை

எண்ணம் எனும் தோட்டம்
ஏனோ வாடி நிற்கிறது

எழுதுகோல் எனும்
ஏரைப் பிடித்து
எழுதும் காலம்
எப்போதோ!

பூக்கள் பூப்பது எப்போதோ!!

August 23, 2011

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி!!



இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் நான்கிலும் தோல்வியடைந்து முகம் குப்புற கவிழ்ந்து கிடக்கிறது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சியின் ஆரம்பமாகத்தான் இதனை கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்திய அணியின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணங்களாக ஆட்டக்காரர்களின் ஏனோ தானோ போக்கினையும் சரியான திட்டமில்லாமையையும் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிறோம் என்ற பாங்கு பெரும்பாலான ஆட்டக்காரர்களிடம் இல்லை. குறிப்பாக மட்டை வீச்சாளர்கள் ஒரு தின போட்டிகள் அல்லது இருபது ஓவர் ஆட்டங்கள் ஆடுகின்ற பாணியிலேயே ஆடியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

சரியான பயிற்சிகள் இல்லாததும், பயிற்சி ஆட்டங்கள் இல்லாததும் இங்கிலாந்தின் காலநிலையோடு ஒன்றிப் போகாமலும் இருந்த ஆட்டக்காரர்களும், போராடும் குணம் இல்லாமையும், அனைத்து ஆட்டங்களிலும் மட்டை வீச்சாளர்களின் சரியான துவக்கமில்லாமையும் இந்தியாவின் , தோல்விகளுக்கான காரணங்கள் தான்.

உலகக்கோப்பை ஆட்டங்களுக்கு பின்னர் சரியான ஓய்வில்லாமல் ஐ.பி.எல் ஆட்டங்களில் ஆடியதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஐ.பி.எல் ஆட்டங்களினால் ஏற்பட்ட காயங்கள் சேவாக், காம்பீர்,  ஷகீர் கான் ஆகியவர்களை சரிவர பங்களிக்க விடாமல் செய்து விட்டது.

அணியினை முன்னிறுத்தாமல் தனி ஒருவரின் சாதனைகளை மட்டுமே குறிப்பாக சச்சினின் 100 ஆவது சதத்தை முன்னிறுத்திய ஊடகங்களையும், விமர்சகர்களையும், ரசிகர்களையும் இங்கு கண்டிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. இனியாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணிக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஐ.பி.எல் போன்ற பணம் கொழிக்கும் வியாபாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை கைவிட முன்வர வேண்டும்.

இங்கிலாந்து அணியினைப் போல சரியான திட்டம் வகுக்காமல் ஆடிய இந்திய அணி தோல்வியடைந்தது அதன் அகங்காரத்திற்கு கிடைத்த வெகுமதியாக கொள்ளலாம். சரியான அறிவுரைகளும் பயிற்சியாளர்களிடமிருந்து இந்திய அணிக்கு கிடைக்கப்பெறவில்லை; இல்லையென்றால் இத்தனை கேவலமான தோல்வி இந்தியா அடைந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவின் பெருமை காத்த ஒரே ஆட்டக்காரர் ராகுல் திராவிட் தான். மூன்று சதங்களை கண்ட திராவிட்டிற்கு தொடர் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.


பந்து வீச்சில் பிரவீன் குமார் மற்றும் இஷாந்த் ஷர்மா நன்றாக வீசினாலும் பிறர் இவர்களுக்கு பக்கபலமாக சரியாக வீசுவதில்லை. சுழற்பந்து வீச்சிற்கு பெயர் போன இந்திய அணியில் தற்போது சொல்லிக் கொள்ளும்படி எவரும் இல்லாதது மேலும் வருத்தம் தான்.

இந்திய அணியில் லக்ஷ்மண், ரெய்னா, தோனி இவர்களின் மட்டை வீச்சில் குறிப்பாக Away Swinging மற்றும் Inswinging பந்து வீச்சுகளை எதிர்கொள்ளுகையில் அவர்கள் சரியான மாற்றம் கொண்டு வரவில்லையென்றால்... இந்திய அணி தரவரிசையில் மேலும் கீழிறங்கும் நாட்கள் வெகு தொலைவிலில்லை.

இந்திய அணி சமீப காலங்களில் மிக மிக மோசமாக ஆடிய தொடர் இதுவாகத்தானிருக்கும். தோனி தலைமையில் இந்திய அணி அடைந்த முதல் தொடர் தோல்வியும் இதுவே. இந்திய அணியின் குறைகளை விமர்சிக்கையில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறப்பான ஆட்டத்தைக் கண்டிப்பாக பாரட்டியாக வேண்டும். 

August 17, 2011

உறங்கும் உணர்வுகள்




உணர்வுகளை எவர் தான் அறிவார் - ஒருவர்
உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டால்
உவகை கொள்ளுமே உலகம்

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப் படுமோ - இல்லை
உதைத்துத் தள்ளப்படுமோ என்ற
உள்ளார்ந்த பீதி ஒருபுறம்!

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுதலால்
உயரவிருக்கும் - மன
உளைச்சல்கள் மறுபுறம் - என்பவற்றால்
உள்ளுக்குள் உறங்கும் உணர்வுகள் ஏராளம்!!

உணர்வுகளை உள்ளுக்குள் புதைத்து - உயிரிருந்தும்
உயிரற்ற சடலமாய் நீங்குகிறது மனித வாழ்க்கை.  
உள்ளக்கிடக்கைகளை  எவர் அறிவாரோ! 


Related Posts with Thumbnails