February 21, 2009

மீண்டு வந்த இலங்கை அணி

மற்ற அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்து வருகிற நிலையில் இலங்கை அணியினர் சுற்றுப்பயணம் செய்து ஆடி வருவதற்கு அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்.

கராச்சியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்று அபாரமாக ஆடி முதல் நாளிலேயே மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 406ஓட்டங்கள் குவித்துள்ளது.

இந்திய அணியிடம் பரிதாபமாக சொந்த மண்ணிலேயே தொடரைப் பறிகொடுத்த இலங்கை அணியினர்,நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என தங்கள் தோல்விகளிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

அணித்தலைவராக தனது இறுதி டெஸ்ட் தொடரில் ஆடும் ஜெயவர்தனே 20 பவுண்டரிகளுடன் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். இவர் ஒரு முனையில் தனது அனுபவத்தால் டெஸ்ட் போட்டிக்கே உரித்தான பாணியில் மெதுவாக ஆட மறுமுனையில் சமரவீரா ஒருதின போட்டிகளைப் போன்று வேகமாக ஆடி 127பந்துகளிலேயே சதமெடுத்தார்.இருவரும் ஆட்டமிழக்காமலிருப்பது இலங்கை அணி முதல் இன்னிங்க்சில் மேலும் ஓட்டங்களை குவிக்க உதவும்.


இலங்கை அணி இன்றைய ஆட்டத்தில் 4.51 ரன் விகித வேகத்தில் ரன் குவித்ததும் இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம். மொத்த டெஸ்ட் ஆட்டங்களை நோக்கினால் வேறு எந்த அணிகளைக் காட்டிலும் மிக அதிக ரன் விகிதத்தில் ஓட்டங்களை (3.04)குவித்து வருவதும் இலங்கை அணி தான்.

வரலாறை நோக்கினால் டெஸ்ட்,ஒருநாள் மற்றும் 20-20 ஆட்டங்கள் அனைத்திலும் மிக அதிக ஓட்டங்களை முறையே 952/6 இந்தியாவிற்கு எதிராக,443/9 நெதர்லாந்திற்கு எதிராக,260/6 கென்யாவிற்கு எதிராக குவித்திருப்பவர்களும் இலங்கையே.

டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைவான ஓட்டங்களை எடுத்த அணிகளில் இலங்கைக்கு கடைசி இடமே.(71 ஓட்டங்கள்)

டெஸ்ட் போட்டியானாலும்,ஒருநாள் போட்டியானாலும்,20-20 ஆனாலும் மட்டை வீச்சுகளில் சிறந்து விளங்கும் இலங்கை அணி பந்து வீச்சில் (வாஸ் மற்றும் முரளிதரனை தவிர)சிறந்த அணியாக இல்லாததே அவர்கள் சோடை போவ(ன)தற்கு காரணமாகயிருக்கலாம்.
நன்றி: cricinfo

1 comment:

Anonymous said...

wel done boys
lions rocks..............

Post a Comment

Related Posts with Thumbnails