May 16, 2010

கோடை என்னும் கொடை

கோடைக் காலமென்றாலே பலருக்கும் பல விஷயங்கள், நினைவிற்கு வருவது இயல்பு தான். கோடை விடுமுறை, நண்பர்களின் சந்திப்பு, மதில் மேல் அமர்ந்து அடிக்கும் அரட்டைகள், ஊர் விட்டு ஊர் சென்று ஆடும் விளையாட்டுப் போட்டிகள் (குறிப்பாக கிரிக்கெட்), உறவினர்களின் வருகை, உறவினர்களின் ஊர்களுக்கு செல்லுதல், குழந்தைகளின் குதூகலம், சிறுவர்களின் ஆரவாரம் என பலதும் சொல்லிப்போகலாம்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலானவர்களுக்கு கோடை விடுமுறை இப்படித்தான் இருந்தது என்றே கருதுகிறேன். ஆனால் இன்றைய தலைமுறைக்கு கோடைக்காலம் அந்த விதமான ஒரு அனுபவத்தை அளிக்கிறதா என்பது கேள்விக்குறி தான்.

ஆண்டு முழுவதும் காலையில் பள்ளிக்கூடமும், பாடபுத்தகமும் என்றால் மாலையில் சிறப்பு வகுப்புகள், Tution வகுப்புகள் என பரபரப்பாக இருக்கிறார்கள் இன்றைய இளம் சமுதாயத்தினர். இது போதாதென்று வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளிலும் கூட Extra வகுப்புகள் என்ற பெயரில் பாடங்கள் அவர்களுக்குள் திணிக்கப்படுகின்றன.

பள்ளிப் பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்ற நிலைமை தான் இன்று தொடர்கிறது. வாழ்க்கைக்கு உகந்த பாடங்கள் பயிற்றுவிக்கப்படுவதோ அல்லது மாணவர்கள் விரும்பும் பாடங்களில்  கவனம் செலுத்தவோ கிடைக்கும் வாய்ப்புகள் வெகு குறைவே. கோடை விடுமுறைகளிலேயே பெரும்பாலான பெற்றோர்களால் பிள்ளைகள் அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடங்களில் கவனம் செலுத்த கட்டாயப்படுத்துகிறார்கள்.

ஏட்டுச் சுரைக்காய் வாழ்க்கைக்கு உதவும் தான் ஆனால் அது மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது என்பதையும் பெற்றோர்கள் உணர வேண்டும்.

கட்டாயப்படுத்துதலும், மாணவர்கள் மேல் சுமத்தப்படும் அதிக சுமையும், விடுமுறைகளைக் கூட விடுமுறைகளாக செலவழிக்க அனுமதி மறுக்கப்படுதலும் இன்றைய இளம் சமுதாயத்தினரின் மனநிலையை வெகுவாக பாதிக்கிறது என சொல்லலாம்.

இது ஒருபுறமென்றால் இளைய சமுதாயமே அவர்கள் நன்மைக்கு தடையாக இருப்பதும் இருக்கத்தான் செய்கிறது. தங்கள் மூதாதையர் ஊர்களுக்கு செல்வதென்றால் அறவே பிடிப்பதில்லை பலருக்கு. 'அது வில்லேஜ் மம்மி' 'அங்க எல்லாம் எப்பிடி இருக்கிறது' என ஆரம்பித்து விடுவார்கள். இதனால் கிராமங்களில் இருந்தும், அங்குள்ள உறவுகளிடமிருந்தும் கற்று கொள்ளும் வரங்களும் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

மறுபுறம் பிறருடன், உறவினர்களுடன், நண்பர்களுடன், குடும்பத்தினருடன் ஏன் பெற்றோர்களுடன் கூட சரிவர பேசுவதற்கும் தங்கள் விருப்பு வெறுப்பை பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் அமையாதது இன்றைய மாணவ சமுதாயத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல. பள்ளிக்கூடம், பாடம், வெற்றி இவை மட்டுமே அவர்கள் முன்னிறுத்தப்படுகிறது.

இவைகள் தொடர்வதால் தான் பிரச்சினைகள் தோல்விகள் என வரும் பொழுது அதனை எதிர்கொள்ளும் மனதைரியம் இன்றைய தலைமுறைக்கு வராமல் போய் விடுகிறது. சிறிய தோல்வி ஏற்பட்டால் கூட அதனை எதிர்கொள்ள தைரியமில்லாமல் தற்கொலை வரை செல்ல அவர்களது மனம் தள்ளப்படுகிறது.  மற்றவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் எத்தனையோ இருக்கையில் காகிதங்கள் மட்டும் அவர்கள் காதலாகிப் போனது கவலைக்குரிய ஒன்று; அதனை காலத்தின் கட்டாயம் என சிலர் கூவுவதும் காதில் விழாமலில்லை.

இன்றைய கோடை விடுமுறைகளில் குழந்தைகளுடன் அமர்ந்து அவர்கள் விருப்பு வெறுப்புகளை கேட்டறியவும், அவர்கள் பகிர்வதை செவிமடுத்து கேட்கவும் தயாராக இருப்பவர்கள் எத்தனை பெற்றோர்கள் என்பது தெரியவில்லை.

குழந்தைகளை கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு அனுப்பலாமா? சங்கீதம் படிக்க அனுப்பலாமா? அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகளுக்கு அனுப்பலாமா என ஆலோசனை செய்யும் பெற்றோர்கள் தான் இன்று அதிகம். என்னங்க... பக்கத்து வீட்டுப் பொண்ணு என்னமா ஆடுறா தெரியுமா! அந்த வீட்டுப் பொண்ணு என்னமா பாடுறா தெரியுமா! நம்ம வீட்டுக் கழுதையும் இருக்குதே அப்படியென்று ஒப்பிட்டு பேசுவதையும் சரளமாக கேட்க முடிகிறது.

முதலில் பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவதை பெற்றோர்கள் நிறுத்தி விட்டு, தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை ஊக்குவிக்கப் பழகினாலே பிற்காலத்தில் குழந்தைகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய அது அடித்தளமாக இருக்கும். மட்டுமல்லாமல் கோடை விடுமுறைகளில் குழந்தைகளுடன் அமர்ந்து மனம் விட்டு பேசினாலே சுடும் கோடை குழந்தைகளுக்கும், வீட்டிற்கும், வருங்காலத்திற்கும் ஒரு கொடையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இல்லையென்றால் கொடை போன்ற இந்த கோடைக்கால தருணத்தை பாடையேற்றிய குற்றம் பெற்றோர்களையேச் சாரும்.

3 comments:

Chitra said...

முதலில் பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவதை பெற்றோர்கள் நிறுத்தி விட்டு, தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை ஊக்குவிக்கப் பழகினாலே பிற்காலத்தில் குழந்தைகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய அது அடித்தளமாக இருக்கும். மட்டுமல்லாமல் கோடை விடுமுறைகளில் குழந்தைகளுடன் அமர்ந்து மனம் விட்டு பேசினாலே சுடும் கோடை குழந்தைகளுக்கும், வீட்டிற்கும், வருங்காலத்திற்கும் ஒரு கொடையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


....... சரியா சொல்லி இருக்கீங்க. குழந்தைகளை குழந்தைகளா இருக்க விடணும். ...... இதை வாசித்து விட்டு, யாராவது திருந்தினால், எவ்வளவு நன்றாக இருக்கும்........ம்ம்ம்ம்....... !

எட்வின் said...

சரி தான் அக்கா... எனது பதினொன்றாம் வகுப்பு விடுமுறையில் கூட சிறப்பு வகுப்புகளுக்கு வலுக்கட்டாயமாக சேர்த்து விட்டார்கள். ஆனால் நான் சரியாக செல்லவில்லை; ஊர் சுற்றிக்கொண்டு இருந்தேன். எனினும் எங்கள் பள்ளியின் பன்னிரெண்டாவது வகுப்பு தேர்வு முடிவில் மதிப்பெண்களில் நான் தான் முதலிடம்.

வலுக்கட்டாயமாக எதையும் சாதித்து விட முடியாது என்பது ஆணித்தரமான உண்மை.

Joe said...

Wonderful & very useful article.

Keep up the good work, Edwin!

Post a Comment

Related Posts with Thumbnails