June 14, 2009

தோனி,ரொனால்டோ,அயன்

சரியான இணைய இணைப்பு கிடைக்கப்பெறாமையால் அதிகம் எழுத இயலுவதில்லை. எனினும் கடந்த இரு வாரங்கள் நான் கவனித்ததும் எழுத நினைத்ததுமான சில விஷயங்கள் இவை.

தோனி

ஐ.பி.எல் 20-20 போட்டிகளின் தாக்கம் மாறும் முன்னரே ஐ.சி.சி 20-20 உலகக் கோப்பைப் போட்டிகள் துவங்கியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தாலும் பல வீரர்களுக்கு வில்லங்கமானதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவரான தோனிக்கு இது போதாத காலம் போலும்.



தோனியின் புறத்தோற்றமே நம்பிக்கை அளிக்கும் படியாக இல்லை,மிகவும் சோர்வுற்றவராகவும் நம்பிக்கை இழந்தவராகவும் இருப்பதாகவே படுகிறது.பெங்களூர் அணிக்கு எதிரான ஐ.பி.எல் அரை இறுதி போட்டியில் தான் எதிர்கொண்ட பந்துகளுக்கு தக்கதாக ஓட்டங்கள் எடுக்கத் தவறியது தோல்விக்கு காரணமானது போன்றே மே.இ தீவிற்கு எதிரான முதல் சூப்பர் 8 ஆட்டத்திலும் சீரான ஓட்ட விகிதத்தில் ஓட்டம் எடுக்கத் தவறினார்;ஒரு ரன் அவுட்டையும் தவற விட்டார்;அணியும் தோல்வியைத் தழுவியது.

சரியான ஓய்வும் தன்னம்பிக்கையும் தோனியை மீண்டும் புத்துணர்ச்சி பெறச் செய்யலாம். இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் எப்படி பங்காற்றுகிறார் என பாப்போம்

ரொனால்டோ

இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து கிளப்பிலிருந்து 80 மில்லியன் பவுண்ட் (சுமார் 800 மில்லியன் ரூபாய்) பணம் பரிமாற்றத்தில் ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் கிளப்பிற்காக வாங்கப்பட்டிருக்கிறார் போர்ச்சுக்கல்லைச் சார்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.



கால்பந்து வீரர் ஒருவர் இத்தனை அதிகமான பணத்திற்கு விலை போவது சரித்திரத்திலேயே இது தான் முதல் முறை.கடந்த மாதம் பார்சிலோனாவிற்கு எதிராக நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியிலும்,கடந்த சீசனிலும் சரிவர ஆடாத பின்னரும் இத்தனை கோடி ரூபாய் ரொனால்டோவிற்காக செலவழிக்கப்பட்டிருப்பது முந்தைய ஆட்டங்களில் அவர் காண்பித்த தனித்திறமைக்கும், ஆட்டத்திறனுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையாகவே தெரிகிறது.

பார்சிலோனவிடம் ஸ்பானிஷ் லீக் சாம்பியன் பட்டத்தைப் பறி கொடுத்த ரியல் மேட்ரிட் அணி ரொனால்டோவின் வருகையால் பட்டத்தை மீண்டும் கைப்பற்றுமா என பார்க்கலாம்,

அயன்

ஒளிப்பதிவாளர், கேமரா மேன் என பன்முகம் கொண்ட திரு. கே.வி.ஆனந்த் அவர்களின் இயக்குனர் என்ற மற்றொரு முகம் 'அயன்' திரைப்படம் மூலம் வெளிவந்திருக்கிறது. கடத்தல் மூலம் என்ன விதமான பாதிப்பு நாட்டிற்குள்ளும், ஒரு குடும்பத்திற்குள்ளும், கடத்தலில் ஈடுபடும் தனி ஒருவனின் வாழ்விலும் ஏற்படுகிறது என்ற அருமையான கதைக்கருவைக் கொண்டு திரைப்படத்தைத் தீட்டியிருக்கிறார் ஆனந்த் அவர்கள்.



கதைக்கரு பாராட்டும்படி இருந்தாலும் திரைக்கதையில் சீரான வேகம் இல்லாமையும் தொய்வான ஆரம்பமும் படத்தின் மேல் பிடிப்பை ஏற்படுத்தவில்லை. தேவையற்ற இடங்களில் வரும் பாடல்களும் கதையில் இருந்து நம்மை சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளச் செய்கின்றன.

ஆனாலும் பாடல்கள் எடுப்பதற்கு காண்பித்திருக்கும் சிரத்தையும்,ஒளிப்பதிவும்,கேமராவின் கண்ணியமும் கண்களுக்கும்,மனதிற்கும் விருந்தளிக்கின்றன. குறிப்பாக ஆப்பிரிக்க நாடு ஒன்றில் படமாக்கப்பட்ட வைரத்தைத் திருடியவர்களை சூர்யா துரத்துகின்ற காட்சியும்,இறுதி சண்டைக் காட்சியும் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக படமாக்கப்பட்டுள்ளது.

சூர்யாவும்,பிரபுவும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கின்றனர்.தமன்னாவிற்கு சொல்லும்படியான காட்சிகள் அமையவில்லை.இரு பாடல்களைத் தவிர இசையும் சொல்லும் படியாக இல்லை.அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான பாணியைக் கடைபிடிக்கும் ஹாரிஸ் அவர்கள் தனது பாணியை சற்றே மாற்றிக் கொண்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

May 27, 2009

கோடையும்,நெல்லையும்,சில உரையாடல்களும்

பதிவு பக்கம் வந்தே ஒரு வாரம் ஆகி விட்டது. விடுமுறையில் இருப்பதால் கணினி பக்கம் அடிக்கடி வர இயலுவதில்லை. நெல்லைக்கு வந்ததுமே வளைகுடா நாடு மறந்து, நெல்லை வட்டார பேச்சும்,நெல்லை மண்ணின் மணமும் மனதிற்கு நிறைவை தந்தன என்று கூறலாம். வந்து இறங்கியதுமே மழைத் தூறல் உள்ளத்தையும் உடலையும் தணித்தது.

ஊருக்கு வந்து சில நாட்கள் ஆகிய நிலையில் என்ன எழுதலாம் என எண்ணிக்கொண்டிருந்த போது நாம் கேட்ட சில உரையாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே என தோன்றியது.

கடைகளுக்கும், பேருந்து நிலையத்திற்கும், மைதானத்திற்கும் சென்ற போது அருகிலிருந்தவர்கள் உரையாடியதை (ஒட்டு)கேட்க :) நேரிட்டது.அவற்றில் சில சுவாரஸ்யமானவை இங்கே.

விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பும் பள்ளி பயிலும் இரு சிறுவர்கள்:

சிறுவன் 1: ஏல என்ன நீ காலைல பர்ஸ்டு ஷோவுக்கு வரியா இல்லியா ? முத்து காலைலயே சைக்கிள கொண்டு வந்திருவான். நான் அவன் கூட வந்திருவேன். வீட்ல என்ன சொல்லுவியோ தெரியாது. சைக்கிள தூக்கிட்டு வந்திரு ஆமா.

சிறுவன் 2: சரி சரி... கிரவுண்டுக்கு போறேன்ன்னு சொல்லிட்டே வரேன்.

----------------------------------

பேருந்து முன்பதிவு மையத்தில் வரிசையில் நிற்கும் ஒருவர் தொலை பேசியில்

சவம் என்னா வெயிலடிக்குடே... டிக்கெட் இன்னும் லேட் ஆகும்நு நெனக்கேன். நீ எதுக்கும் ஒரு கேஸ் பீரு வாங்கி வைக்க சொல்லீரு. சாய்ங்காலம் வாரேன் நான்.பயலுவ கிட்டயும் சொல்லீரு.குடிக்காத நானே சூடு தாங்க முடியாம முந்தா நாளு ரெண்டு பீர குடிசிட்டேனே டே.

-----------------------------------

மைதானத்தில் ...

ஏல் ரமேஷ்... அந்த ரயில் நகர் டீம் வரலன்னா மேட்ச மறு நாளெல்லாம் வெக்க முடியாதுன்னு சொல்லீரு ஆமா, அவனுவ நெனச்ச நேரத்துக்கு எல்லாம் வெளயாட இது என்ன அவனுவ அப்பன் வீட்டு கிரவுண்டா?

---------------------------------

பேருந்தில் இருவர்...

நபர் 1: கருணாநிதிக்கு ஓட்டு போட்டது தப்பா போச்சே சார். மகனுக்கும், மகளுக்கும் மந்திரி பதவி கிடைக்காத தால பிரதமரோட பதவி ஏற்பு விழாவுக்கே இருக்காம வந்திட்டாரே .

நபர் 2: தான் விரும்பினத சாதிக்க அவருக்கா சொல்லிக் குடுக்கணும்.. நீங்க வேற :)
---------------------------------

மழையினால் சில தினங்கள் முன்பு வரை இருந்த வெயில் குறைந்து வானிலை சற்றே சாதகமாக உள்ளது. குற்றாலத்திலும் ஓரளவு நீர் வீழ்ச்சி உள்ளதால் நண்பர்கள் பலர் குற்றாலத்திற்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

ஊட்டிக்கு செல்வதானால், தங்குவதற்கே இடமில்லை என அங்கிருந்து திரும்புகிறவர்கள் தகவல் தருகிறார்கள். தங்குமிடம் முன்பதிவும் நிரம்பி வழியத்தான் செய்கிறது.

மேலும் தகவல்களுடன் அடுத்த பதிவில்.

May 20, 2009

ஆட்டம் போட்டவர்களை அடக்கிய ஐ.பி.எல்

20-20 கிரிக்கெட் ஆட்டம் கிரிக்கெட்டிற்கு பிரபலமோ இல்லையோ... ஆட்டத்திற்கும், பாட்டத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பிரபலமே.

கல்வியைப் போன்று கிரிக்கெட்டும் , இன்று வியாபாரமாகி நிற்கிறது. ரஞ்சி ஆட்டங்கள் என்றால் என்னவென்று தெரியாத பலர் ஐ.பி.எல் என்றதும்... அப்படி இப்படி... ஷில்பா டீம் சூப்பர்... ஷாரூக் டீம் சரி இல்லை என வந்து விடுவார்கள் வாக்குவாதத்திற்கு.

சிலர்... நடனமாடும் மங்கைகளை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்கிறார்கள்.கிரிக்கெட் மைதானத்தில் அரைகுறை ஆடையணிந்த அம்மணிகளுக்கு என்ன வேலை என்பது தான் இன்னும் புரியவில்லை. முன்பு குறிப்பிட்டது போன்று... வியாபார நோக்கத்திற்காக இருக்கலாம்.


இந்த வருட ஐ.பி.எல் ஒரு வழியாக அரை இறுதி நிலையை எட்டியுள்ளது. சினிமாக்காரர்கள் கிரிகெட்டை குத்தகைக்கு எடுத்தால் கூத்திற்கு குறைவிருக்குமா?

அப்படி கூத்து காட்டிய சினிமாக்காரர்கள் ஷில்பா,பிரீத்தி,ஷாரூக் ஆகிய மூவரின் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.பிரீத்தியின் அணிக்கு மட்டும் 10% வாய்ப்பு எஞ்சி உள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் டெக்கன் சார்ஜர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் தோல்வி அடையும் அணியின் ஓட்ட விகிதம் குறைந்தால் பஞ்சாப்பிற்கு ஒருவேளை அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அது சாத்தியமல்லவேன்றே தோன்றுகிறது.

பிரீத்தி ஸிந்தா அனைத்து ஆட்டங்களிலும் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்ச ஆட்டமா? குறிப்பாக சென்னைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில்... சென்னையை 116 ஓட்டங்களுக்குள்ளாக கட்டுப்படுத்தி விட்டோம் என அப்படி குதிக்கிறார்.


மறுபுறம் ஸ்ரீசாந்த்... தோனி விக்கெட்டை கைப்பற்றியதும் மைதானம் முழுதும் ஓடுகிறார்... காயத்திலிருந்து திரும்பிய பின்னரும் இன்னமும் அடக்கி வாசிக்க தெரியவில்லை. மற்றொரு ஆட்டத்திலும் ஆவேசப்பட்டதை காண நேர்ந்தது. சென்ற வருடம் ஹர்பஜனிடம் கன்னத்தில் வாங்கிய அறை மறந்து விட்டதோ என்னமோ?


ஷில்பாவிற்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.இந்திய ஆடுகளத்தில் அதிரடி ஆடிய அஸ்நோத்கர் போன்ற வீரர்கள் தென்னாப்பிரிக்க களத்தில் தடுமாறியது நன்றாகவே தெரிந்தது.

ஐ.பி.எல் துவங்கும் முன்னரே நான்கு அணித்தலைவர், கங்குலி நீக்கம் என அதிரடி செய்த கொல்கத்தா அணியினையும், பயிற்சியாளர் புக்கனனையும் அடையாளமே தெரியவில்லை.

கவாஸ்கரை ஆரம்பத்தில் திட்டி விட்டு... பின்னர், நான் அவரைச் சொல்லவில்லை என சீன் போட்ட ஷாரூக் இப்போது சப்தமே இல்லாமல் இருக்கிறார்.


வீட்டில் அல்லது பயிற்சி மைதானத்தில் நிம்மதியாக இருந்திருக்க வேண்டிய சச்சின் வீணாக தன்னை அலைக்கழித்திருக்கிறார். அணித்தலைவராக சச்சின் எடுத்த சில தவறான முடிவுகள் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு பாதகமானது.

ஒரு சில ஆட்டங்களில் நான்கு ஓவர்கள் முழுமையாக பந்து வீச வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற சின்ன விஷயத்திற்கு … அணியில் எனது இடம் என்னவென்று விளங்கவில்லை என கூக்குரலிட்ட ஹர்பஜனுக்கு ஹெய்டனும்,தோனியும் ஐ.பி.எல்லின் 47 ஆவது ஆட்டத்தில் 18 ஆவது (அவருக்கு அது 3 ஆவது)ஓவரை வீசுகையில் தக்க அடி கொடுத்தனர். அந்த ஓவரில் மட்டும் 17 ஓட்டங்கள் எடுத்து மும்பையை ஐ.பி.எல் தொடரிலிருந்தே வெளியேற்றினார்கள்.

இப்படியாக ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கி விட, வெற்றியிலும் வீம்பு பேசாத டெல்லி,சென்னை,ஹைதராபாத்,பெங்களூர் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்திருப்பது நல்ல விஷயம்.

இந்த நான்கு அணிகளின் உரிமையாளர்களும் மற்ற அணிகளின் உரிமையாளர்களைப் போல அலட்டுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

May 16, 2009

சந்தர்ப்பவாத அரசியலுக்கு சம்மட்டி அடி


பதினைந்தாவது பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் வர ஆரம்பித்ததிலிருந்தே எளிதில் வெற்றி பெறலாம் என எண்ணிக் கொண்டிருந்த சந்தர்ப்பவாத அரசியல்கட்சிகளுக்கும் "அரசி"யல்வாதிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

குறிப்பாக தமிழகத்தில் அய்யா அவர்களின் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி,விருதுநகரில் அண்ணன் அவர்களின் தோல்வி, தேர்தலுக்கு நாற்பது நாட்களிருக்கையில் ஈழம் ஏற்படுத்துவோம் என்றதோடு நாற்பதும் நமக்கே என நாடகமாடிய அம்மாவின் பின்னடைவு,காங்கிரஸ் பெருந்தலைகளுக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வி, என வரிசையாக நோக்கினால் மக்கள் தெளிவாக வாக்களித்து சந்தர்ப்பவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள் எனலாம்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அனைத்து மத்திய அமைச்சரவைகளிலும் பதவி வகித்து வந்திருக்கும் 'அய்யா' வின் பதவி மோகத்திற்கு மக்கள் சரியான சம்மட்டி அடி அடித்திருக்கிறார்கள்.ஆவேச பேச்சாளர் அண்ணனின் சந்தர்ப்பவாதத்தைக் குறித்து சொல்லவே தேவையில்லை.சொந்த தொகுதி மக்களின் பிரச்சினைகளை அலசாத 'எம்.பி'க்களுக்கும் அமைச்சர்களுக்கும் தக்க அடி கிடைத்திருக்கிறது.

விலைவாசி உயர்வு,மின்தடை,இலங்கைப் பிரச்சினையில் தடுமாற்றம் இவைகளுக்கு அப்பாலும் முதியவரின் உண்ணாவிரதமும் கள்ள ஓட்டும், சொல்லும்படியான வாக்குகளை அளித்திருக்கிறது என ஒருசாரார் நம்பினாலும் பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கிய இலவசங்களும்,கேப்டன் சிதறச் செய்த வாக்குகளும் முதியவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

இதே பாணியிலேயே இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் நல்லாட்சி செய்த ஆளுங்கட்சியினருக்கே மக்கள் மீண்டும் வாக்களித்திருக்கிறார்கள்,ஆந்திராவில் காங்கிரஸின் ரெட்டி,டெல்லியில் காங்கிரஸின் ஷீலாதீட்சித்,ஒரிசாவில் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக்,பீகாரில் ஜனதா தளத்தின் நிதிஷ் குமார்,ஜம்முகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா,குஜராத்தில் பா.ஜ.க வின் நரேந்திர மோடி என இந்த முதல்வர்கள் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் மக்களுக்கு அவர்கள் செய்த நலத்திட்டங்கள் அவர்களுக்கு பெரும்பான்மை இடங்களை அளித்திருக்கிறது.

நல்லாட்சி செய்யாத கேரளா,மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு சரியான அடியும் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டுகளின் பழமைவாத கொள்கைகளையும் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

ஐக்கிய முற்போக்கு முன்னணியில் ஒருகாலும், மூன்றாவது அணியில் ஒருகாலுமாக நாடகமாடிய லாலு சரண்,பாடலிபுத்திரா என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.இரு தொகுதிகளிலும் தோற்க வேண்டிய நிலையிலிருந்தவர் இறுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சரண் தொகுதியிலிருந்து மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்.

பிரதமர் கனவு கண்ட சந்தர்ப்பவாதிகள் மாயாவதி, சந்திரபாபுநாயுடு, பாஸ்வான் ஆகியோருக்கு பெரும் தோல்வியை தந்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.இத்தனைக்கும் பாஸ்வான் தனது சொந்த தொகுதியிலேயே தெரிந்தெடுக்கப்படவில்லை.இதே பீகார்,ஹஜிபூர் தொகுதியில் 4,24,000 வாக்குகள் வித்தியாசத்தில் 1977 ல் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை செய்தவரும், 1977 முதல் 2004 வரை ஏழு முறை இந்த தொகுதியில் இருந்து தெரிந்தெடுக்கபட்டவரும் இவரே.

சரிவர செயல்படாத மத்திய சமூகநலைத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரியும் ஆந்திராவில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படியாக நல்லாட்சி செய்தவர்களுக்கும்,ஓரளவு நியாயமாக இருந்தவர்களுக்கும் மக்கள் மீண்டும் தங்கள் ஆதரவை அளித்து சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அகங்காரிகளுக்கு தக்க பதிலும் கொடுத்திருக்கின்றனர்.

பொருளாதர வீழ்ச்சியிலிருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் எவருக்குமே பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டிருக்குமானால் அது மேலும் இந்திய பொருளாதாரத்தை சீரழித்திருக்கும்.அந்த நோக்கத்தில் நிலையான ஆட்சி வேண்டியும் மக்கள் வாக்களித்திருக்கக் கூடும்.

ஆனாலும் காங்கிரசுக்கு 200 ற்கும் மேல் தொகுதிகள் கிடைத்தது சற்றே ஆச்சரியம் தான்!

May 15, 2009

நாளையேனும் விடியுமா இவர்களுக்கு?


இனத்தின் பெயரால்
இரக்கமற்று இதயமின்றி
இனப்படுகொலை செய்யும்
இதயமற்றவர்கள் இடையிலும்

பசியின் கொடுமை
பரிவு காட்ட யாருமில்லாத் தனிமை
பச்சோந்திகளின் கயமை-என
பார்க்கின்றவை பயமுறுத்துகையிலும்

நானூறு உயிர்கள் மடிவு
நான்று கொண்டு மரணம்
நாணத்தால் தற்கொலை-என்ற
நாளிதழ்களின் செய்திகள் நடுவிலும்

அதிகாரத்தின் போதையால்
அகங்காரிகளின் வதையால்
விதியின் சதியால்
வீதியில் சாமானியன் வீழ்கையிலும்

விடியும் என்ற நம்பிக்கையில்
வினாக்களோடு பயணிக்கிறவர்கள்
விடைகளைப் பெறுவது என்றோ?
------------------------------
அனுதினம் சீறும் பீரங்கிக் குண்டுகளுக்கு
அக்கரையில் உயிர்கள் மடிவது கண்டு
அகம் அங்கலாய்ப்பதுண்டு
அமைதி நிலவ வேண்டும்-என வேண்டுவது
அல்லாது வேறென்ன செய்வேன் நான்.


May 13, 2009

ஆட்சியை பிடிக்கும் அணி என்ற புதிய அணி உருவாக்கம்?

கார்ட்டூன் நன்றி sulekha.com
---------------

இந்தியா முழுதும் ஒரு வழியாக ஐந்து கட்ட தேர்தலும் நடந்து முடிந்தாகி விட்டது.முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எந்த கூட்டணி ஆட்சியமைக்கும்,எவர் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பு சற்றே அதிகமாகத் தான் உள்ளது.

1991 ற்கு பிறகு எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்ற கேள்வி மாறி எந்த கூட்டணி ஆட்சியமைக்கும் என்ற நிலைமை உருவெடுத்துள்ளது எவரும் மறுக்கமுடியாத ஒன்று.இந்தியா முழுதும் தனக்கு ஆதரவைக் கொண்டிருந்த காங்கிரஸ் தனது ஆட்சி முறைகளினாலும் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லாமையாலும் தனது செல்வாக்கை பல மாநிலங்களில் இழந்தது.

குறிப்பாக தமிழகத்தில், காங்கிரசின் அழிவிற்கு காங்கிரசாரே காரணம் என்றாலும் மிகையல்ல.உட்கட்சி விவகாரங்களினாலும்,பதவி மோகத்தினாலும் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த ஓரளவு மரியாதையையும் குறைத்துக் கொண்டனர்.அவர்களின் கோஷ்டி பூசல்கள் இன்று வரை தீர்ந்த பாடில்லை.பிற மாநிலங்களும் (சில கட்சிகளும்) இதற்கு விதிவிலக்கல்ல. பதவி மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலைமையினால் மாநில கட்சிகள் தேசிய அரசியலில் மெதுவாக காலூன்ற ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.மெல்ல காலூன்றிய மாநில கட்சிகள் தேசிய ஆட்சியில் பதவிகளைப் பிடிக்கவும் செய்து தற்போது டெல்லியில் தங்களுக்கென ஒரு அடையாளத்தையும் உறுதியான இடத்தையும் பிடித்துள்ளன.

15 ஆவது மக்களவையைத் தெரிந்தெடுக்கும் தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே அனைத்துக்கட்சிகளும் கூட்டணிக்காக தங்கள் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு பிற கட்சிகளின் வாலைப்பிடித்துக் கெஞ்சத் தொடங்கியிருந்தன.இழுபறியின் இறுதியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி;பாரதீய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி;கம்யூனிஸ்டுகள்,பகுஜன் சமாஜ்,அ.தி.மு.க,தெலுங்கு தேசம் உட்பட்ட கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி என மூன்று கூட்டணிகள் உருவாகின.

ஒவ்வொரு கட்ட தேர்தலும் முடிந்து வர வர இந்த மூன்று கூட்டணிகளினுள் உள்ள கட்சிகள் எந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை கணித்து அந்த கூட்டணிக்கு தாவுவதற்கு தங்களைத் தயாராக்கிக் கொண்டிருந்தன.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்த லாலு,பாஸ்வான் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆப்பு வைத்தனர்.பா.ஜ.க வுடன் இருந்த சந்திரபாபு நாயுடு மூன்றாவது அணிக்கு தாவினார்,அது போன்று ஒரிசா முதல்வர் பிஜூ பட்நாயக் பா.ஜ.க வுடனான உறவை முடித்துக் கொண்டார்.மூன்றாவது அணியிலிருந்த ஆந்திராவின் டி.ஆர்.எஸ் கட்சி அதிலிருந்து விலகியது.தற்பொழுது அம்மாவும்,சரத்பவாரும்,சந்திரபாபு நாயுடுவும் எந்த கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கு சாடுவதற்கு மதில் மேல் பூனையாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.

இறுதியில் மூன்றாவது அணி உருவாக காரணமான,தங்கள் கொள்கைகளை எளிதில் விட்டுக்கொடுக்காத இடது மற்றும் வலதுசாரி தோழர்கள் தோற்கடிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாகவே தோன்றுகிறது. தோழர்கள் ஏமாற்றப்பட போகிறார்கள் என்பது கர்நாடகாவின் குமாரசாமி-சோனியாகாந்தியின் நேற்றைய சந்திப்பிலேயே துளிர் விட்ட நிலையில் எவருக்கும் ஆதரவு என்ற ஜெ'ன் இன்றைய நிலையும்,சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜ.க வின் வெங்கையா நாயுடு சந்திப்பும் அதனை உறுதிப்படுத்துவதாகவே தெரிகிறது.

எனவே அடுத்து வரும் சில நாட்களில் இந்த மூன்று அணிகளும் மாறி "ஆட்சியைப் பிடிக்கும் அணி" என்ற ஒரு அணி தான் உருவாகும் வாய்ப்புள்ளது.அவர்கள் அதற்கு என்ன விதமான பெயரினை வைத்தாலும் அது ஆட்சியை பிடிக்கும் அணியாகவே இருக்கும்.அதற்கு என்ன விலையும்,என்ன பதவியும் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்... தங்கள் கொள்கைகளையும் காற்றில் பறக்க விட்டு பதவி மோகம் பிடித்துத் திரியும் சில அரசியல் ஆதாய ஆசாமிக் கூட்டங்கள்.

இந்த கொடுமைகளை எல்லாம் நாம் கண்டு சகிக்க வேண்டியிருக்கிறது... என்ன செய்வது இந்தியனாகி விட்டோமே!

May 11, 2009

இந்தியால தான் இப்படின்னா இங்கிலாந்திலுமா!

நவம்பர் 2008 மும்பை தாக்குதலில் ஊடகங்களும் சரி அரசும் சரி ஹோட்டல் தாஜில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தியதாக இன்றளவும் குற்றச்சாட்டு உண்டு.விக்டோரியா ரயில் நிலையத்தில் பயணிகளும் பொதுமக்களுமாக பலர் மரித்துக் கிடந்ததை ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. பெரும்பாலானோரின் கவனமும் உயர் மட்ட மக்கள் இருந்த ஹோட்டல் தாஜின் மேலேயே இருந்தது.

இன்று வரை தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் சென்று சேர வேண்டிய நிவாரணம் முழுமையாக சென்றடைந்ததா என்பதும் கேள்விக்குறியே.

இந்தியாவில் தான் இந்த நிலை என்றால் இங்கிலாந்திலும் இதே நிலை தான் போல.

இங்கிலாந்தைச் சார்ந்த வில் பைக்(will pike) என்பவர் மும்பைத் தாக்குதலின் போது ஹோட்டல் தாஜினுள் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர்.தப்பிப்பதற்காக ஹோட்டல் தாஜின் போர்வைகளை கயிறாக பாவித்து மூன்றாவது தள ஜன்னல் வழி கீழே குதித்திருக்கிறார்; பாதியிலேயே போர்வைகள் கிழிந்து விட, அவரின் கைஎலும்புகள்,காலெலும்புகள், முதுகெலும்பு, இடுப்பெலும்பு ஆகியவை முறிந்திருக்கின்றன.

இருபதிற்கும் மேல் அறுவை சிகிச்சை பெற்று தற்பொழுது குணமடைந்திருக்கிறார்.இப்போது நிம்மதியாக இருப்பார் என நாம் நினைத்தால்... அது தான் இல்லை! முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் நரம்புகளையும் பாதிக்கவே இனி மேல் அவரால் நடக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.தற்பொழுது சக்கர நாற்காலியில் காலத்தை ஓட்டுகிறார்.



இத்தகைய நிலையில் இங்கிலாந்து அரசு எந்த விதமான உதவியும் இதுவரை செய்ததில்லை என கவலை தோய்ந்த முகத்துடன் வில்லியமும் அவரது துணைவியாரும் கண்ணீர் மல்குகின்றனர்.உதவி கிடைக்கும் வரை போராடுவது என முடிவெடுத்து இணையதளம் ஒன்றின் மூலம் வேண்டுகோளும் விடுத்திருக்கிறார் வில் பைக்.அந்த இணையதளம் இங்கே

ஏற்கெனவே 2005ல் எகிப்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது இறந்த இங்கிலாந்து பிரஜைகளுக்கும் இங்கிலாந்து அரசு சரியான நிவாரணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க...

இங்கிலாந்தில் அமைச்சர்கள் அரசு பணத்தில் ராஜபோகமாக வாழ்கிறார்கள் எனவும்,அளவுக்கு மீறி செலவு செய்து வருகிறார்கள் எனவும் தற்பொழுது பிரச்சினை கிளம்பியிருக்கிறது.

நம் அரசாங்கங்கள் தான் சரிவர நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்குவதில்லை, வெளிநாடுகளில் என்றால் நிவாரணங்கள் சரியான முறையில் மக்களை சென்றடைகிறது என நினைத்தோமென்றால் அது தவறு.

ஊழலும்,அரசாங்கங்களின் ஊதாரித்தனமும் உலகமெங்கும் ஒன்று தான் போல.
Related Posts with Thumbnails