நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவிருக்கும் ஆசியப் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மாட்டோம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறாதாம். இதனைக் கண்டித்து கிரிக்கெட் அன்பர்கள் பதிவிடவில்லை என பதிவர் தருமி ஆதங்கப்பட்டிருக்கிறார். நியாயம் தான்
இந்த செய்தியைக் குறித்து நான் அறிந்திருக்கவில்லை; இல்லையென்றால் நிச்சயம் பதிவிட்டிருப்பேன். IPL அட்டகாசங்களினாலும் T20 ஆட்டங்கள் மேல் பிடிப்பு இல்லாமையினாலும் இந்திய கிரிக்கெட்டின் நிகழ்வுகளை சரிவர கவனிப்பதில்லை.
கிரிக்கெட் மட்டுமல்லாது பிற விளையாட்டுகளையும் ரசிப்பவன் நான். நேற்று கூட ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் குறித்து பதிவிட்டிருந்தேன்.
அதை விடுங்கள்... விஷயத்திற்கு வருவோம். ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணியை அனுப்ப மாட்டோம் என சொல்லியிருப்பது ஒரு பார்வையில் சரியென பட்டாலும் மற்றொரு பார்வையில் அப்படி படவில்லை.
காரணங்களை சொல்லி விடுகிறேன். ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது இது தான் முதல் முறை அதுவும் 20-20 போட்டிகள் தான். இதற்கு முன்னதாக சர்வதேச அரங்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது 1998 காமென் வெல்த் போட்டிகளில் தான். இவற்றிற்கெல்லாம் தலையாயதான ஒலிம்பிக்கில் இன்று வரை கிரிக்கெட் இடம் பெறவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
தடகள வீரர்களுக்கு அவர்களது உயரிய ஆசை அல்லது கனவு (Pinnacle என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதாகத் தானிருக்கும்.
அதே போன்றே கிரிக்கெட் ஆடும் அனைத்து வீரர்களுக்கும் உள்ள கனவு உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்பதே.அதனை விட பெரிய சந்தோஷம் இருந்து விட முடியாது.
இங்கிலாந்திலோ, ஸ்பெயினிலோ, இத்தாலியிலோ Liverpool, Barcelona, AC Milan CLUB களுக்காக கால்பந்து ஆடும் ஒருவரின் உயரிய கனவு அவரது நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்பதாகத் தானிருக்குமே ஒழிய ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதாக இருக்காது. அப்படித் தான் இன்று வரை இருந்து வந்திருக்கிறது.
கிரிக்கெட்டிற்கு மகுடம் உலகக்கோப்பை அல்லது டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணி என்ற பெயரை அடைவது தானேயல்லாமல் ஆசியப் போட்டிகளில் ஓமன், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுடன் மோதி பதக்கம் பெறுவதாக இருக்காது.
எந்த போட்டியானாலும் வெற்றி என்பது பெருமை தான் அதில் சந்தேகமில்லை ஆனால் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு இரு மாதங்கள் இருக்கின்ற நிலையில் இது தேவையா என்பது தான் கேள்வி. ஏற்கெனவே ஐ.பி.எல் ல் ஆடி T-20 உலகக்கோப்பையை கோட்டை விட்டதைத் தான் உலகறியுமே!
நவம்பர் மாதம் துவங்கவிருக்கும் ஆசியப்போட்டிகளின் போது இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆடவிருக்கிறது.
இரு மாதங்கள் கழித்து 2011 பிப்ரவரியில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு, ஆப்கானிஸ்தான், ஓமன் போன்ற அணிகளிடம் ஆடுவதை விட நியூசிலாந்துடன் ஆடுவது சிறந்த பயனளிக்க வாய்ப்புள்ளது. (2007 ல் பங்களாதேசிடம் தோற்றதைத் தான் நாங்கள் அறிவோமே என்கிறீர்களா!!!)
மற்றொரு விதமாக பார்த்தால் பி.சி.சி.ஐ செய்தது தவறு என சொல்லலாம். 2007 ஆம் வருடத்திலேயே ஆசிய விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் இடம்பெறும் என ஆசிய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்திருக்கிறது. அப்போதே மறுத்திருக்கலாம். ஆனால் போட்டிகள் துவங்க சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் இப்போது மறுத்திருப்பது அழகல்லவே.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அதற்கு ஆதரவு வேறு தெரிவிப்பது தான் மேலும் காமெடியான விஷயம். வீரர்கள் அதிக போட்டிகளில் ஆடுகிறார்கள்; அவர்கள் என்ன செய்வார்கள் என ஜால்ரா அடித்திருக்கிறார்.
அரசாங்கமும் கேள்வி ஏதும் கேட்கின்ற மாதிரி தெரியவில்லை. பத்திரிக்கையாளர்களிடம் மட்டும், நாங்கள் பி.சி.சி.ஐ யை வன்மையாகக் கண்டிக்கிறோம் என சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம். அரசு தலையிடவும் முடியாது. ஏனென்றால் பி.சி.சி.ஐ அரசு நிறுவனம் இல்லையே! கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுகளில் பங்கு பெற வேண்டும் என கூறும் நமது அரசு தடகள போட்டிகள் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கு செய்து வரும் உதவிகள் நாடே அறிந்தது தானே.
அரசியல்வாதிகளுக்கு தேவையெல்லாம் ஐ.பி.எல் ம் அதில் புழங்கும் பணமுமேயன்றி வேறு ஏதுமில்லை. அவர்களின் அரசியலுக்கு இன்று விளையாட்டுக்கள் தான் பலிகடா ஆக்கப்படுகின்றன.அது கிரிக்கெட்டானாலும் சரி, பிற விளையாட்டுக்களானாலும் சரி.












