December 24, 2015

சந்தைப்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் @ இயேசுவின் பிறப்பு


வியாபாரமயமாக்கப்பட்ட இன்றைய உலகம், இயேசுவின் பிறப்பை நினைவுகூறும் காலங்களையும் விட்டுவைக்கவில்லை. 

யகூதா என்றறியப்படுகின்ற யூதேயாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவரான  יֵשׁוּעַ (Yeshu'a in Aramaic ) இயேசுவை, இந்த குளிர்காலங்களிலே ( டிசம்பர் 25 முதல் ஜனவரி 19 வரையிலான இடைப்பட்ட நாட்களில்) யூலே, கிறிஸ்துமஸ், எக்ஸ்மஸ், நோயல் என பல பெயர்களில் நினைவுகூர்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் அதாவது ஏறத்தாழ 6-12 நூற்றாண்டுகளில் இவ்விதம் நினைவு கூர்வதில் எவ்வித சந்தைப்படுத்தலோ, வியாபார நோக்கமோ இல்லையெனினும் அண்மைக் காலங்களில் இயேசுபிறப்பின் நினைவு கூறலை கிறிஸ்துமஸ் என்ற அடைமொழியோடு சந்தைப்படுத்தி, வியாபார களமாக்கி விட்டது தான் இம்மானுடத்தின் சூட்சுமம். 

வாழ்த்து அட்டையில் இருந்து ஆரம்பிக்கும் இந்த சந்தைப்படுத்தல், புத்தாடை, அலங்காரம், பட்டாசு, சான்டா கிளாஸ், சிவப்பு வர்ண தொப்பி, நட்சத்திர விளக்கு, அலங்காரத்தோரணை கொண்ட மரம், மதுபானம், கேக் என இன்னும் நீள்கிறது. 

மேற்கத்திய கலாச்சாரத்தை ஒரு போதையாகப் பார்ப்பவர்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் இரட்டிப்புப் போதை. 

அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 30-35 மில்லியன் அலங்கார மரங்கள் விற்கப்படுவதாக history இணையதளம் குறிப்பிடுகிறது. 

அமெரிக்காவில் மட்டுமே இப்படியான மூடத்தனத்திற்கு இவ்வளவு பணம் விரயமாகிறது என்றால் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்ட இந்த கிறிஸ்துமஸிற்கு எவ்வளவு பணம் விரயம் செய்யப்படுமென்பது ஊகிக்க முடியாதது. 

பணம் செழுத்தவன் விரயமாக்குவதில் இங்கு எவர்க்கும் நட்டமில்லை, மாறாக இவர்களைப் பார்த்து நாமும் அலங்காரப்படுத்த வேண்டும் என்று கடன் வாங்கி பிச்சைக்காரனாகும் பாமரன் தான் இந்த சந்தைப்படுத்தலில் விழுந்து போகிறான்.

விவேகானந்தரின் கூற்றான "சிக்கனம் என்பது எவ்வளவு குறைவாக செலவு செய்கிறோம் என்பதில் அல்ல; என்ன தேவைகளுக்காக செலவு செய்கிறோம் என்பதில் அடங்கியுள்ளது" என்பது தான் இந்த சந்தைப்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் காலங்களில் நாம் நம்மைக் கேட்க வேண்டிய கேள்வி. 

அதோடு இயேசுவின் பிறப்பையே, மேசியா(கிறிஸ்து)வின் பிறப்பு என்று அடையாளப்படுத்தி இந்த சந்தைப்படுத்தலை உலகமயமாக்கியது தான் அரசியல் வியாபாரிகளின் தந்திரம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளல் அவசியம். 

December 17, 2015

சென்னை வெள்ளத்தில் வெளுத்த கிறிஸ்தவ சபைகளின் சாயம்!

சென்னையில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடிந்தபாடில்லை; நிவாரணப்பணிகள் முழுமையாக சாமானியனை சென்று அடையவுமில்லை; குப்பைமேடுகளும், காசிமேடுகளும், முழுமையாக சுத்தமாக்கப்பட்டு மக்கள் குடுயேறும் நிலைக்கு வரவில்லை; அதற்குள்ளாக கிறிஸ்தவ வியாபாரிகள் டிசம்பர் 12 ஆம் தேதி புதுவாழ்வு ஏஜி சபையில் திறப்பின் வாசல் ஜெபம் என்பதன் பெயரில் தங்கள் சுயமுகத்தை மீண்டும் காண்பித்திருக்கிறார்கள்.

சாமானியர்களும், நெஞ்சில் ஈரமுடையவர்களும், தன்னார்வலர்களும் களத்தில் நின்று உதவிகளும், நிவாரணப்பணிகளும், சுகாதாரப்பணிகளும், மருத்துவப் பணிகளையும் செய்து வரும் இத்தருணத்தில் இவர்கள் ஜெபம் செய்கிறார்கள் (அதையும் விளம்பரப்படுத்தித் தான் செய்கிறார்கள்!!) அதிலும் சென்னையைப் பேரழிவிலிருந்து காத்த தேவனுக்கு நன்றி என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள் (அதாவது இவர்கள் பணம் ஈட்டுகின்ற தலைநகரத்தை முழுமையாக அழிக்காததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள் போலும்!!)


"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்கிற மத்தேயு 6:5 ஐ அறியாதவர்களா இந்த வியாபாரிகள்!!

ஜெபம் என்பதன் பெயரில், இது போன்ற சுய தம்பட்டங்களைத் தவிர்த்து இவர்கள் தலைமையில், இவர்களுக்கு கீழிருக்கும் மக்களை ஒருங்கிணைத்து களமிறங்கியிருந்தாலே, இந்நேரம் சென்னை சுத்தமாகியிருக்குமே! களப்பணி ஆற்றுவதிலிருந்து இவர்களை தடுப்பது எது?

 ஓய்வு நாளாதலால் ஜெபமும், போதனையும் தவிர்த்து உதவி செய்தல் ஆகாது என்று இறுமாப்புக் கொண்ட சீடர்களை இவர்கள் வணங்கும் இயேசு கடிந்து கொண்டதை அறியாதவர்களா!! இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். மத்தேயு 12:10-12

இந்த சிறியவர்களுக்கு எவனொருவன் செய்யாமலிருக்கிறானோ அது பரலோகத்திலிருக்கும் பிதாவுக்கு செய்யாமற் போனதாகும் என்பதையும் அறியாத பதர்களா இவர்கள்!! மத்தேயு 25:34-46

கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது என்பதையேனும் அறிவார்களா இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். யாக்கோபு 2:16-20

நற்போதனைகளைத் திரித்து மக்களுக்கு எடுத்துரைப்பதாலும், நற்செயல்கள் செய்ய இவர்கள் கைகள் குறுகியிருப்பதும் கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு புகழைச் சேர்ப்பதுமல்ல.

மக்களிடம் இருந்து காணிக்கை என்பதன் பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு மக்கள் அவர்களையும் அறியாமலே பலியாவது தான் வேதனை தரும் விடயம். மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளல் அவசியம்.

வியாபாரமாக்கப்பட்ட இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளிடம் மனிததத்தையும், சக மனிதனுக்கு உதவும் திராணியையும் எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்த்தனம் என்பது மட்டும் புரிகிறது.

October 27, 2015

கிரிக்கெட் எனும் பெரும் கனவு

கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு சராசரி இந்திய இளைஞனைப் போலவே நானும் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். வீட்டில் இருக்கும் பட்சத்தில் இந்திய ஆட்டங்கள் என்றால் ஆட்டம் துவங்கும் முன்னரே தொலைக்காட்சிப்  பெட்டிக்கு முன்னதாக  அமர்ந்து விடுதல் வழக்கம். 

ஐந்து  வயதில் இருந்தே கிரிக்கெட் என்றால் அத்தனைப் பிரியம். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது வீட்டில் தொலைக்காட்சி வாங்கி வைக்கும் அளவிற்கு வசதி இல்லை. 

அந்த சமயம் மார்த்தாண்டம் எல்.எம். துவக்கப்பள்ளியில்  ஐந்தாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 1992 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை ஆட்டங்களின் ஒளிபரப்பு உரிமையை  அன்றைய ஸ்டார் டிவி  (ஆரம்பத்தில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ்) நிறுவனம்  வாங்கியிருந்தது. 


நான்கு மணிக்கு எப்போது மணி அடிப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பேன், மணி அடித்ததும் பையை தலையில் போட்டுக் கொண்டு எந்த கடையில் கிரிக்கெட் காண்பிக்கப்படுகிறது என்பதை அறிய ஒவ்வொரு கடையாக ஏறிட்டுப் பாத்துச் செல்வேன். 

நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், அன்றைய திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப்  பணிமனையிலிருந்து சற்று கீழ்ப்புறம் அமைந்திருக்கும் ஸ்டார் லாட்ஜ் ல் தான் வழக்கமாக கிரிக்கெட் பார்ப்பதுண்டு. 

நேரலையானாலும், பழைய ஆட்டங்களானாலும் கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் இன்னும் ஒரு ஓவர் பார்த்து விட்டு வீட்டிற்குக் கிளம்பி விட வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் அடுத்த ஓவரின் இறுதியிலும் இன்னும் ஒரே ஓவர் பார்த்து விட்டு சென்று விடலாம் என்கிற அதே எண்ணம் தான் வந்து செல்லும். 

அப்படிப் பார்த்துப் பார்த்து ஒரு நாள் இரவு 7 மணி ஆகி விட்டது. வீட்டில் அனைவரும் அன்று ஒரு நாள் பதட்டப்பட்டதோடு சரி. அதன் பின்னர் நான் தாமதமாக போனால் கூட 'அவன் எங்கயாவது கிரிக்கெட் பாத்திட்டிருப்பான்' என்று சமாதானப்பட்டுக் கொள்வார்கள். எனினும் ஆறரை மணிக்குள் வீடு திரும்பி விடுவேன். 

அத்தனை மோகம் கொண்டிருந்தும்  முழுநேரமாக  கிரிக்கெட் ஆடுவதற்கு மட்டும் வீட்டில் சம்மதம் இல்லை. நண்பர்களுடன்,  பக்கத்து ஊர்களிடையே நடைபெறும் போட்டிகள் வரை மட்டுமே எட்டியிருந்தேன். பிற்காலங்களில், அவ்வப்போது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்திலும், ஜான்ஸ் பள்ளி மைதானத்திலும் நடைபெறும் லெதர் பால் ஆட்டங்களை வேடிக்கை பார்ப்பது வழக்கம். 

இப்படியாக தொடர்ந்த பயணத்தில், சர்வதேச ஆட்டம் ஒன்றை நேரடியாக மைதானத்தில் சென்று பார்த்து விட வேண்டும் என்று வெகுநாள் கனவு கொண்டிருந்தேன், அது சமீபத்தில் தான் நிறைவேறியிருக்கிறது, இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் நான்காவது நாள் ஆட்டத்தை காணும் வாய்ப்பை துபாயில் பெற்றேன். 

டெஸ்ட் ஆட்டம் என்பதால் டிக்கெட் எளிதில் கிடைத்தது, தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் நேரடியாக மைதானத்தில் ஆட்டத்தைப் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. சர்வதேச ஆட்டம் என்றாலும் அது சாதாரணமாக மாவட்ட அளவில் ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பது போன்ற உணர்வே தோன்றியது. 

தொலைக்காட்சியில் Replay, மற்றும் பிற Statistics களின் தரவு சேர்க்கப்படுவதால் அதன் சுவாரஸ்யம் கூட்டப்படுகிறது, நேரடியாக மைதானத்தில் ஆட்டத்தைப்  பார்ப்பதன் அனுபவம் சிறப்பானது என்றாலும் மைதானத்தின் எந்த பகுதியில் உட்கார்ந்திருக்கிறோம்  என்பது தான் நமக்கான காட்சியைத் தீர்மானிக்கிறது. 

எப்படியாயினும் வெகுநாளைய கனவு நனவானதில் ஒரு திருப்தி. 









August 27, 2015

நல்ல நாள் பார்க்கும் கிறிஸ்தவர்கள்

சமீபத்திய பதிவுகள் அனைத்தும் கிறிஸ்தவம் சார்ந்தும், சமயங்கள் சார்ந்துமே இருப்பதை மறுப்பதற்கில்லை. பெற்று வருகின்ற பெரும்பாலான அனுபவங்கள் சமயம் சார்ந்து இருக்கின்ற படியால் இப்படியாக பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்தின் பிற மாவட்டங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், கிறிஸ்தவர்கள் என்று அறியப்படுபவர்களையும்!! கொண்டிருப்பதை பலரும் அறிந்ததே.

பெரும்பாலும் மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர்களை உடைய குடும்பங்கள் தான் குமரி மாவட்டத்தில் அதிகம். அதில் பெரும்பாலான குடும்பங்கள் இரண்டாம் தலைமுறை பட்டதாரிகளையும் கொண்டிருக்கின்றன.

நாள், நேரம், நட்சத்திரம், ஜாதகம் மற்றும் இன்னபிற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தவர் தான் கிறிஸ்தவர்கள் தெய்வமாக வணங்கும் 'இயேசுகிறிஸ்து'. ஆனால் இன்று, மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் அதிலும் பட்டதாரிகள் கூட மூட நம்பிக்கைகளில் ஒரு பிடியை வைத்திருப்பதைத்தான் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

இன்று (27/08/2015) தற்செயலாக அரசன்குழியில், திருமணம் நடைபெறும் ஆலயம் வரை செல்ல வேண்டியதாயிற்று. அரசன்குழியில் திருமணம் நடத்தும் போதகரை அந்த திருமணம் முடிந்து இறச்சகுளம் அருகில் இருக்கும் டென்னிஸ்புரம் ஆலயம் வரை கொண்டு சென்று விட வேண்டியிருந்தது. டென்னிஸ்புரத்தில் மற்றுமொரு திருமணத்தை அதே போதகர் நடத்த வேண்டிய கட்டாயம். (பெண் வீட்டார் அழைப்பின் படி)

10:20 ற்கு முடிய வேண்டிய திருமணம், மாப்பிள்ளை வீட்டாரின் தாமதத்தால் மணி 10:50 கடந்தும் முடிந்தபாடில்லை. மற்ற வீட்டிலிருந்து போதகருக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கவே,  போதகரை அரசன்குழியில் இருந்து டென்னிஸ்புரத்திற்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றேன்.

இவ்விரு திருமணங்கள் மட்டுமல்லாது துவரங்காடு, திட்டுவிளை மற்றும் இறச்சகுளம் போன்ற பகுதிகளிலும் திருமணங்கள் நடைபெற்றன. இத்தனை திருமணங்கள் ஒரே நாளில் வைப்பதன் பின்னணியை ஆராய்ந்தால் அது நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் சார்ந்த விஷயமாகத்தான் இருக்கும்.

இன்றும் அதற்கு விதிவிலக்கல்ல, நாட்காட்டியின் பஞ்சாங்கத்தில் இன்று முகூர்த்த நாள் எனவும், 10:45 முதல் 11:45 வரை நல்ல நேரம் என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து நல்லதைச் செய்வார், நல்லதையே செய்வார் என விசுவாசிக்கிறவர்கள் நல்ல நாளும், நல்ல நேரமும் பார்த்து திருமணம் செய்வதும், செய்துவைப்பதும் முரண்.


பாமர ஜனங்கள் தான் மூடநம்பிக்கைகளில் இன்னும் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்றால் போதகர்களும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அவர்களது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஆச்சர்யம் தருகிறது. நிச்சயமாகவே, நாசரேத் ஊரைச் சார்ந்த இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதிலும், கிறிஸ்தவன் என்று பெயரளவில் சொல்லிக்கொள்வதற்குமிடையே அதிக வித்தியாசமிருப்பதை மறுப்பதற்கில்லை.

August 16, 2015

மதுவிலக்கு - களியக்காவிளை - மலையடி குமார் பேச்சு



சசி பெருமாள் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து ஆளுங்கட்சியைத் தவிர்த்து பிற கட்சிகள் அனைத்தும் டாஸ்மாக் ஒழிப்பிறகு ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சில தினங்கள் முன்னர் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சொந்த அலுவல் நிமித்தம் தமிழக-கேரள எல்லையில் இருக்கும் காரக்கோணம் மருத்துவக்கல்லூரிக்கு 13 ஆம் தியதி செல்ல வேண்டியிருந்தது. காரக்கோணம் செல்வதற்கு களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து பிறிதொரு பேருந்தில் பயணம் செய்தாக வேண்டுமென்பதால களியக்காவிளையில் இறங்கினேன்.

இறங்கியதுமே காதில் விழுந்த மலையாள குரலிலிருந்து,  அங்கு அரசியல் கூட்டம் நடைபெறுவதாக அறிய முடிந்தது. சற்றே உன்னித்து கவனித்ததும் அது மது ஒழிப்புக்கு ஆதரவான உரை என புரிந்தது.

அந்த உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில் தமிழில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தாலும் நிகழ்த்தப்பட்ட உரை மலையாளத்தில் இருந்தது என்பதாலும், உரையாற்றியவர் தெளிவான நடையோடு பேசியதாலும் அதனை பதிவு செய்ய ஆரம்பித்தேன். கேரளத்தின் மதுவிலக்கு, தமிழகத்தின் டாஸ்மாக், தோழர் சசி பெருமாளின் மதுவிலக்குக்கு எதிரான போராட்டங்கள் போன்றவைக் குறித்து விரிவாக கருத்துக்களைப் பதிவு செய்தார் உரையாற்றியவர்.

உரையின் இறுதியில் அவரை சந்தித்து அவரது பெயரை அறிந்து கொண்டதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் பரிமாறும் வாய்ப்பும் கிடைத்தது. மலையடி பகுதியைச் சார்ந்த குமார் என்பதாக தெரிவித்தார் அந்த பெரியவர். ஏறக்குறைய 60 வயது இருக்கும் அவருக்கு. இத்தனை வயதிலும் மிகத்தெளிவாக, புள்ளிவிவரங்களோடு, உரை நிகழ்த்துகிறார் என்பது குறித்து பெரிதும் ஆச்சர்யப்பட்டேன். பேச்சை முடித்த கையோடு அவர் மற்றுமொரு இடத்தில் உரையாற்றுவதற்காக புறப்பட்டு சென்றார்.

இப்படியாக மதுவிலக்குக்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையிலும் பிடிவாதம் கொண்டு மது குறைப்பு குறித்து கூட எந்த அறிவிப்பும் வெளியிடாத ஒரு அரசைப் பெற்றிருப்பதற்கு நாம் வெட்கப்படவேண்டும்.

August 06, 2015

'நயா' பைசாவும் - சில புரிதல்களும்



சில தினங்கள் முன்பு பழைய நாணயங்களைக் குறித்த எண்ண ஓட்டங்களில் திளைத்திருந்த போது அணா என்ற சொல்லை உபயோகித்து எத்தனை வருடங்கள் கடந்து போயிற்று என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன்.

அணா என்ற சொல் வழக்கு 2000 ஆண்டு வரை இருந்ததாகவும் ஞாபகம். ஒரு அணா என்பது ஒரு ரூபாயின் 16 ல் ஒரு பங்கு என கணக்கிடப்பட்டு வந்ததாக வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன.

அணா முறை நாணயப் புழக்கத்தை தொண்ணுறுகளிலேயே அரசு விலக்கி வைத்த பின்னரும் அந்த சொல் வழக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இது, தமிழக அரசு விரைவுப் பேருந்து என பெயர் மாற்றம் செய்த பின்னரும்  திருவள்ளுவர் பேருந்து என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டது போன்றதே!


'அணா' நாணயப் புழக்கத்தை அரசு நடைமுறையில் இருந்து மாற்றிய பின்னரும் நாலணா (25 பைசா), எட்டணா (50 பைசா) என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2011 ல் நாலணா (25 பைசா) புழக்கத்தில் இருந்து முழுவதுமாக எடுக்கப்படுவதாக  அரசு  அறிவித்திருந்தது. எனினும் 50 பைசா இன்றளவும் பலராலும் எட்டணா என தொடர்ந்து அழைக்கப்பட்டுவருகிறது; 50 காசுகள் தொடர்ந்து புழக்கத்திலும் இருந்து வருகிறது.

1947 வரை பிரித்தானிய - இந்திய நாணய முறைகளில் பணப் பரிவர்த்தனை செய்து வந்த இந்தியா 1950 ல் தான் குடியரசு இந்தியாவின் முதல் நாணயத்தை அச்சேற்றி வெளியிட்டிருக்கிறது. ஒரு ரூபாய் என்பது 64 Pice அல்லது 16 அணா என நடப்பில் வைத்திருந்த இந்திய அரசு 1957 ல் தசமபின்ன (Decimal) முறையைப் பின்பற்றி 100 பைசா என்பது ஒரு ரூபாய் என்ற முறையில் புதிய காசு/நாணயத்தை வெளியிட்டது

பழைய அணா/பைஸ் முறைக்கும் புதிய பைசா/ரூபாய் முறைக்குமான வித்தியாசத்தை மக்களிடத்தில் எடுத்துரைக்கும் முறையாக 1957 - 1966 வரை புதிய நாணயங்கள் வெளியிடுகையிலெல்லாம் நயா (புதிய) பைசா என்றே விளம்பரம் செய்து வந்திருக்கிறது அரசு.

நயா பைசா என்பதில் 'நயா' என்ற சொல் இந்தி சொல் வழக்கு என்பது இந்தி பேசாத மாநில மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும் வாய்ப்பு இல்லை.

நயா என்றால் புதிய என்று அர்த்தப்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறையும் அரசு புதிய நாணயம் வெளியிடுகையில் 'நயா'/புதிய பைசா என அறிக்கை விடுகிறது.

நயா என்கிற சொல் வழக்கு மிகச் சாதாரணமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றும் பேசப்பட்டு வருவது சற்றே வியப்பு தான்.

இன்றும் கிராமப்புறங்களில் ,  பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டோர் பலர், எங்கிட்ட 'அஞ்சு நயா பைசா இல்லன்னு' சரளமாக பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

பலரும் நயா என்பதன் அர்த்தம் புரிந்து தான் பேசுகிறார்களா என்பதை அறியேன். எனினும் ஒரு வேற்று மொழி சொல் நாமறியாமலே அல்லது நம்மால் விளங்கிக் கொள்ளப்படாமலே நமக்குள் வியாபித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூபாய், ரூபா என்ற சமஸ்கிருத சொல் (ரூபா=ரூபம்=வடிவம்) என்பதையும், பைசாவும் Padamsa என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து மருவியது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

 --------------

புகைப்படங்கள் நன்றி
14gaam.com
coinquest.com

July 29, 2015

கலாம், எம் எஸ் வி மரணமும் ஊடகங்களின் மறுபக்கமும்

ஊடகங்களின் வளர்ச்சி ஒரு விதத்தில் நல்லது என்றாலும் சில ஊடகங்கள் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்று அவைகளின் மறுமுகத்தை காட்டி விடுகின்றன. ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்கள் மூலம் முரணான, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பலர் பகிர்வதும் இணையம் வளர்ந்த அளவு எண்ணங்கள் வளரவில்லை என்பதையும் உறுதி செய்கின்றன.

கடந்த இரு வார இடைவெளியில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் இயற்கை எய்தினர். இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் அவர்கள் இருவர் தொடர்பான செய்திகளை வெளியிட்டும், அவர்கள் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்டும் இருந்தன.

எம்.எஸ்.வி அவர்கள் இயற்கை எய்திய மறு தினம் தந்தி தொலைக்காட்சியில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களிடம், பெண் தொகுப்பாளர் ஒருவர், விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த 'காதோடு தான் நான் பாடுவேன்' பாடலைப் பாடுங்கன்னு கேக்கவும், பயங்கரமா கோபப்பட்டாங்க ஈஸ்வரி அவர்கள். அது குமார் இசையமைத்தது, இங்க தான் நீங்க தப்பு செய்றீங்க, இது கூட தெரியாம ஏன் கேள்வி கேக்குறீங்கன்னுட்டாங்க.

அத சமாளிச்சிட்டு அந்த பெண் தொகுப்பாளர், எம்.எஸ்,வி இசையில வேற எதாவது பாடல் பாடுங்கன்னு கேக்கப் போக, அதுக்கு ஈஸ்வரி அவர்கள் சொன்ன பதிலை அந்த தொகுப்பாளர் மறக்க பல நாட்கள் ஆகலாம். 'மனுசர் இறந்திட்டாருங்கிற துக்கத்தில இருக்கேன், இதில பாடல் பாட சொல்றீங்களேன்னு சொல்ல, சரி தொடர்ந்து பேசுவோம்னு எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் இணைப்பைத் துண்டித்து விட்டு தொடர்ந்து சங்கர் கணேஷ் அவர்களோடு உரையாடலைத் துவங்குகிறார்.

இது இப்படியெனில், கலாம் அவர்கள் மறைவிற்கு பின்னர் தேச, மத, இன, மொழி வேறுபாடின்றி மக்களும், ஊடகங்களும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த வேளையில், 24/7 செய்திகள் என விளம்பரம் செய்திருக்கின்ற சத்தியம் தொலைக்காட்சியில் நள்ளிரவு ஒரு மணி வரை கிறிஸ்தவ போதனைகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். காலை 6 மணி வரை அவரகளது ட்விட்டர் பக்கத்திலோ, இணையதளத்திலோ கலாம் அவர்களின் மறைவு குறித்த எந்த பதிவும் கிடையாது. இதிலிருந்தே இவர்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது.

மறுபுறம் சமூக வலைதளங்கள் வாயிலாக சில சுயநலம் பிடித்த பதிவர்கள், பழைய நிகழ்வுகளை, கலாம் அவர்களின் இறுதிப் புகைப்படம், அவர் பேசிய இறுதி காணொளி/லி எனவும்; அமெரிக்க அதிபர் ஒபாமா, கலாம் அவர்களின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க வருகிறார், கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதம் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருக்கிறது (திர்) என உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவு செய்து மக்களை ஏமாற்றினர்.



இது போன்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் பதிவு செய்பவர்கள் தான் இப்படி என்றால், அதன் ஆழமும், உண்மையும் அறியாமல் பகிர்பவர்களும் ஆயிரக்கணக்கானோர் என்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இன்று பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பு இருக்கிறது. ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் பலரும் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. கூடவே, தகவல்களை உறுதிப்படுத்தாமல் பகிர்வதும் அதிகரித்திருக்கிறது. 2011 ஆம் வருடத்திலிருந்தே பலமுறை இந்த சமூக வலைதளங்கள் டாக்டர்.கலாம், ஆச்சி மனோரமா, இயக்குனர் பாலச்சந்தர் போன்ற பலரை  புரளிகளால் நோயாளிகளாக்கியிருக்கிறது, சாகடித்துமிருக்கிறது.

இது, 2014 ல் நான் நலமாய் இருக்கிறேன்  என மறைந்த அப்துல் கலாம் அவர்களே எழுதிய ட்வீட்.
  
சில like களுக்காகவும், share களுக்காகவும் சமூக வலைதளங்களில் இது போன்ற பொய் பிரச்சாரங்களை பதிவு செய்வது வாடிக்கையாகவே தொடர்கிறது. நாம் சுதாரிக்கவில்லையென்றால் நம்மையும் முட்டாளிக்கி விடும் இந்த இணைய சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

பி.கு: இதுவரை ஷில்லாங்கில், கலாம் அவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்ததோ, அவர் உரையாடிய இரு நிமிட உரையோ எங்கும் வலையேற்றப்படவில்லை.

Related Posts with Thumbnails