May 30, 2020

இளையராஜா – Father. Severios Thomas – மாப்பிளபாட்டு

கலைக்கு முன்னர் மதம் ஒன்றுமில்லை என்பதை கேரள மண் மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.

மார்ச் மாதத்திற்குப் பிறகு குஜராத் மாடலை கழுவி ஊற்றலும், கேரள மாடலை சிலாகித்துப் பேசுவதும் பரவலாகி நிற்கிறது.

இது போதாதென்று சமூக வலைதளங்களில் கேரளத்தைக் குறித்த தொடர்ச்சியான நேர்மறையான தகவல்களைக் கேட்டும், பார்த்தும் நானும் ஓரளவு கடுப்பில் தான் இருந்தேன்.

இதன் பின்னே, திட்டமிட்ட செயல்நோக்கம் ஏதும் இருக்குமோ என்கிற அளவிற்கு கேரள மண் சிலாகிப்பு தொடரத்தான் செய்கிறது, ஆனால், அதில் பெருமளவு உண்மையிருப்பதாலாயே தொடர்ந்து மக்களால் பாராட்டப்படுகிறது என்பது யதார்த்தம்.

Fr Severios Thomas என்பவர் பாடிய சில பாடல்களை கேரள நண்பர் ஒருவர் Facebook ல் பகிர்ந்திருந்ததை இன்று கேட்க நேரிட்டது.

Father பாடியவைகளில் ஒரு பாடல், இளையராஜா அவர்கள் இசையில் 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்நேகத்தின் பூஞ்சோல’ என்கிற மலையாளப் பாடல். அப்பாடலை அவர் பாடிய நேர்த்தியும், அவரது குரலும் மனதை கட்டிப் போடக்கூடியவை. (இளவலின் மெட்டும் கூட)


அவர் குறித்த மேலதிகத் தேடலில் கிடைத்த தகவல்கள் அலாதியானவை. Jacobite Syrian Orthodox Church ஐ சார்ந்தவர் Fr Severios.

கேரளத்தில், மாப்பிள பாட்டுகள் எனப்படுகிற மண்ணின் மணம், வாழ்வியல், மென் மனித உணர்வுகளை வெளிப்படுத்துகிற இஸ்லாமியப் பாடல்களை அதிகம் ரசித்துப் பாடுவதில் சிறந்தவர். மாப்பிள பாட்டுகள் அரேபிய, பெர்சிய, உருது, தமிழ், இந்துஸ்தானி சொற்களை உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

போதகர்களுக்குரிய அங்கியை அணிந்தே இப்படியான பாடல்களைப் பாடுகிறார் Fr Severios; இவரது பாடல்களைக் கேட்கிற இஸ்லாமியச் சமூகம் இவரை “ஞங்களுடே அச்சன்” என்று பெருமைப் படுகிறார்கள்; அதைக் கேட்டு இவர் பேரானந்தப்படுகிறார். கூடவே, பிற சமூகத்தினரும் இவரைச் சிலாகிப்பதில் வெளிப்படுகிறது மத நல்லிணக்கம்!

உங்களது சபையில் இதற்கு என்ன சொல்கிறார்கள் என்கிற கேள்விக்கு, அச்சன் அவர்களின் பதில் ‘என்னுடைய மூத்த போதகர் இதற்கு தடை போடாமல், என்னுடைய திறமையை மேலும் ஊக்குவிக்கிறார்; மனிதர்கள் ஒருவரிலொருவர் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென்கிற கொள்கையோடு இருப்பவர் அவர்; சிலர் இதற்கு எதிராக இருந்தாலும் மனிதம் போற்றுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் இதை நான் கருதுகிறேன் என்கிறார் Fr Severios Thomas.

மனம் நெகிழ்கிறது, மதங்கள் கடந்து அன்பு செய்வோம், கலைகளைப் போற்றுவோம்.

என்றும் அன்புடன்,
எட்வின்
30/5/2020
சென்னை

May 08, 2020

ஏன் வீழ்ந்து கிடக்கின்றோம்!

'மன்னன் எவ்வழியோ
மக்களும் அவ்வழி' என்றார்கள் மன்னராட்சிக் காலத்தில். அது தற்போது ஓரளவுப் பொருந்திப் போனாலும், தற்போதைய நம் வாழ்வியலுக்கு அரசை மட்டுமே குறை சொல்லி விட முடியாது.

சிந்திக்காத மக்கள் கூட்டம், எல்லாவற்றிற்கும் தலையாட்டினர் அன்று!

இன்றோ, தகவல்களைப் பெறுவதற்கும், கற்பதற்கும், அதிலிருந்து சுயமாக சிந்திப்பதற்குமான சூழல் நமக்கு வாய்த்திருக்கிறது.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? என்பது ஒருபுறம்!

மறுபுறம்...

எந்த தலைமுறையும், சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான எவ்வித செயலையும் சுயமாக கற்றுக் கொள்வதில்லை. அது நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்தே நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

நம் வீட்டார், நண்பர்கள், அலுவல் சார்ந்தோர், ஊர்ப்பெரியோர் இப்படியானவர்களிடமிருந்து கற்பவையே பெரும்பாலும் நமக்குள்ளும் வியாபித்திருக்கிறது.

நமது குணங்களைத் தீர்மானிப்பதில் மேற்குறிப்பிட்டோருக்குப் பெரும்பங்கு உண்டு.

இப்போது சொல்லுங்கள், நம் வீட்டார், நண்பர்கள், அலுவல் சார்ந்தோர், ஊர்ப்பெரியோர் நமக்கு எவ்விதக் கருத்துகளை நமக்குக் கடத்தினர்? கடத்திக் கொண்டிருக்கின்றனர்? எவ்விதமான வாழும் சூழலை நமக்கு முன் வைத்தனர்? வைத்துக் கொண்டிருக்கின்றனர்?

இக்கேள்விகளுக்கான பதில்களில் அடங்கியிருக்கிறது நமது டாஸ்மாக் வேதனைகள் 😥

May 03, 2020

அரிதாரம் பூசிய நியோ வாழ்வியல்

(பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சிறுகதை)

.... என்னங்க! நல்லாச் சொல்லுங்க இந்த பையனுக்கு, 'எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேன்றான்! எப்பப்பாரு விளையாட்டுன்னு இருக்கான்' எப்ப தான் நல்ல புத்தி வருமோ தெரில!

'நீதிக் கதைகள், வேதாகமக் கதைகள், நீதிமொழிகள எடுத்துப் படிடா' அப்ப தான் நல்ல புத்தி வரும், கூடவே நல்லது செய்யத் தோணும் ஒனக்கு, அதிகாரம் அதிகம் பூசிய அக்கறையில் அப்பா!

...தொண்டைக்கு வலிக்காத அளவில் சரிப்பா என்றான் பையன்.

சரி... சரி... நான் இங்க வச்சிருந்த அந்த கவர் எங்கடி! கொஞ்ச நேரமா தேடுறேன், காணவே இல்ல!

அதுல, அப்டி என்னங்க இருக்கு? இப்டி பதட்டப்படுறீங்க!

என்ன இருக்காவா! அதுல தாண்டி நாளைக்கு நாம கட்டப் போற புது பில்டிங்கோட அப்ரூவ்ட் ப்ளான் இருக்கு.

என்னங்க சொல்றீங்க! அப்ரூவல் கிடைக்கலன்னீங்க!

அதெல்லாம் வாங்கியாச்சி, காச இறைச்சா இங்க என்ன வேணா நடக்கும்னு ஒனக்கு தெரியாதா! சரி, கவர் எங்க அதச் சொல்லு.

நான் தான் பீரோல எடுத்து வச்சிருக்கேங்க, இந்தாங்க.

அ..ப்..பா..டா... இப்ப தான் நிம்மதி! சரி சரி, நான் இந்த ப்ளானோட ரெண்டு காப்பி எடுத்துட்டு இப்ப வந்துர்ரேன்.

'... என்ன இவ போன் எடுக்க இவ்ளோ நேரம்'

...ம்ம்ம்... ஹலோ, எடி ஜெனிபரு, நேத்தைக்கு, ஒன்னயும் காணோம் ஒன் குடத்தயும் காணோம்!

... ஊர்ல தான இருக்கீங்க!!

ஆமாக்கா, ஊர்ல தான் இருக்கோம், அது ஒண்ணுமில்லக்கா, நீங்க போட்ட மாதிரியே நாங்களும் மண்ணுக்கடில பைப்ப போட்டு மெயின் லைன்ல மாட்டிட்டோம், இப்ப தண்ணிக்கு வெளிய வர வேணாம்ல.

... ஓ, அப்டியா கத, பரவாயில்லயே!! உங்களுக்கும் நல்ல யோசனை லாம் வந்திருக்கே!!

... சரி சரி, அவர் வர நேரமாச்சி, சர்ச்சுக்கு கிளம்பணும்... அப்புறம் பேசுறேன், பா...ய்!

... அப்பா சொன்ன நீதிமொழிகளை படித்துக் கொண்டிருக்கிற மகன்,

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்: பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன் (நீதிமொழிகள் 8:13)

என்பதில் நிறுத்துகிறான்.




August 21, 2018

கிரியைகள் இல்லாத விசுவாசமும் பகட்டான கிறிஸ்தவமும்


கிறிஸ்தவம்கிறிஸ்தவர்கள் என்கிற பெயர்களில் இன்றைய தேதியில்இந்த மணிப்பொழுதில் நடந்து வருகின்றவையும்அதன் ஆளுமைகளும்அதிகாரங்களும்மனித நேயத்தின் மீதும்மக்களின் மீதும்நீதி நியாயங்களின் மீதும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நாம் உணர்தல் அவசியம்.

ஆராதனை என்கிற பெயர்களில் போடுகிற சத்தமும்கூச்சலும் எம்மனிதரையும் முகம் சுளிக்க வைக்கிற ஒன்று. 2015 டிசம்பர் காலங்களில் இதே போன்றதொரு சந்தர்ப்பத்தில் தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரிந்து வரும் நண்பர் ஒருவர் பகிர்ந்த சில கருத்துகளை குறிப்பிட்டாக வேண்டும்.

பஜனை என்கிற பெயர்களிலும்கேரல் என்கிற பெயர்களிலும்பிரார்த்தனை என்கிற பெயர்களிலும் ஒலிபெருக்கிகளை வைத்துக் கொண்டு ஆன்மீக வாதிகள் என்றழைக்கப்படும் சில கோமாளிகளால் பாதிக்கப்படுவது முதியவர்களும்குழந்தைகளும்படிப்பில் ஆழ்ந்திருக்கும் மாணவ மாணவிகளும்வியாதியில்மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும்கர்ப்பிணிப் பெண்களும் தான்” என்று கருத்துப் பரிமாறியிருந்தார் அவர்.

மத் 6:5 அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும்வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்.

ஒபாமா அவர்களின் ஓய்விற்கு முந்தைய உரையை சமீபத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அவர் முன்னிறுத்திப் பேசியதும்அதைத்தான்மனித மனங்கள் மாறாமல்மனிதருடைய இருதயங்கல் மாறாமல்சட்டங்கள் மாறுவதினாலோஅமைப்புகள் மாறுவதினாலோ சமுதாயத்தில் அமைதியையும்ஒழுக்கத்தையும் கொண்டு வருதல் இயலாது என்றார்.

மத் 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

Salvation Army தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆன்ட்ரே காக்ஸ்  The Whole World Mobilising என்கிற நோக்கத்தில் அதைத்தான் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

By being clean in our heart and to reach out people and to stand for what is right.

மத் 6:7 அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்அவர்கள் அதிக வசனிப்பினாலே தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள் 

வேதாகம வசனங்களை படிக்கும் போது அது எதற்கு சொல்லப்பட்டதுயாருக்கு சொல்லப்பட்டதுஏன் சொல்லப்பட்டது என்பது குறித்த தெளிவு மிக அவசியம். The 7 Ws are very important Why? When? What? Where? Who? Which? HoW?

இதுவறியாமல் வேதாகமத்தை வாசிப்பது குழப்பத்தையே உருவாக்கும். ஒருமுறை ஷார்ஜா AG சபையில் ஆராதனைக்காய் சென்றிருந்த போதுசங்கீதங்களில் இருந்து ஒரு பகுதியை வாசித்த பல பட்டங்களைப் பெற்ற ஒருவர் “சேலா” என்பதையும் சேர்த்தே வாசித்தார்.

சேலா என்பது என்னவென்ற புரிதல் இல்லாமல் வாசித்தவர் போலத்தான் இன்று நம் நிலைமையும். `சேலாஎன்பது இசையில் வரும் Interlude.

சங் 3: 2, 4, 8

யாத் 20:8 ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

ஓய்வு நாளை ஓய்ந்திருந்து ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும்இல்லையென்றால் தேவ கோபாக்கினை வரும் என்று அதன் சாராம்சம் புரியாமல்வெறுமனே குற்றம் சாட்டுவதில் இங்கு எதும் மாறி விடப் போவதில்லை.

அப்படியென்றால் ஓய்வு நாட்களில், Emergency Room களிலும், Critical Care களிலும்மருத்துவமனைகளிலும்முதியோர் இல்லங்களிலும் பணிவிடை செய்பவர்கள் எல்லாரும் சாபத்தையே பெறுவார்களா?!!

மத் 12:5 அன்றியும் ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாயலத்தில் ஓய்ந்திராமல்ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும்குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

மத் 12:11 உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து அது ஓய்வு நாளில் குழியிலே விழுந்தால்அதைப் பிடித்து தூக்கிவிடமாட்டானோ?

மத் 12:12 ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயந்தான் எனறு சொன்னார்.

இவ்விதம் நியாயத்தைப் பேசினவருக்கும்பேசுபவர்களுக்கும் பொதுவாக என்ன சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...

மத் 12:14 அவரைக் கொலைசெய்யும் படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைப் பண்ணினார்கள்.

இன்று வேதாகமம் வாசிக்கப்படுகிறதுகாலை 5 மணிக்கு ஜெபம்மீண்டும் 7 மணிக்கும் 8 மணிக்குமாக பணியிடங்களிலும்ஆலயத்திலும் ஜெபம்ஆலயத்தை கடந்து போகையிலெல்லாம் உள்ளே சென்று ஜெபித்து கடந்து செல்வது... என ஜெபமும்வேதாகம வாசிப்பும் முற்றிப் போனதின் விளைவு என்ன?

கீழ்ப்படியாமையும்,நேரந்தவறுதலும்உண்மைக்குப் புறம்பானவைகளைப் பேசுவதும்தொடர்கிறதென்றால்நாம் ஆலயத்திற்கு செல்வதும்ஒரு நாளைக்கு 5 முறை ஜெபம் பண்ணுவதாலும் என்ன ஆகி விடப் போகிறது.

நீதி 19:1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப் பார்க்கிலும்உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.

எனவே இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு என்பதை மனதில் கொண்டுஎண்ணங்களில் ஆகாயத்தில் பறக்க ஆசைப்படாமல்நம் சுய கால்களில் நிற்க பழகுதல் அவசியம்.

கொரி 7:31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும். இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே.

யோவான் 3:18 என் பிள்ளைகளேவசனத்தினாலும் நாவினாலுமல்லகிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்

யாக் 2:24-26 ‘ஆதலால்மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்லகிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே’ ‘அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக் கொண்டு வேறு வழியாய் அனுப்பி விட்ட போதுகிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?’

அப்படியேஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது போலகிரியைகளிலில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.  

தேவையிலிருப்போருக்கு உதவுவோம், நம் செயல்களினால் மனிதம் போற்றுவோம். 

August 23, 2017

கவலை தரும் கல்வியின் தரம்!

அனைத்துமே வியாபாரமயமாக்கப்பட்ட  இன்றைய  காலகட்டத்தில் கல்வி மட்டும் விதி விலக்கல்ல. தனியார்மயமாக்கப்பட்டதில் ஒரு வகையில் நன்மைகள் இருந்தாலும், கல்வியின் தரம், இன்று பெரும் கேள்விக் குறியே! அதோடு, நேர்முகத்தேர்வைக் கூட நம்பிக்கையுடன்  சந்திக்கும் திறமை இன்றி, வெறும் வெத்து பட்டங்களோடே வெளிவரும் மாணவர்கள்தான் அதிகம்.

வாழ்க்கையைக் குறித்ததான புரிதலையோ; உலகின் மீதான தெளிவான, அகன்ற பார்வையையோ இன்றைய கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறுகின்றன.

வெறும் புத்தகத்தை மட்டுமே நம்பி, புத்தகப்புழுக்களாக மாறிப் போகும் மாணவர்களின் நிலைமை மிக வருத்தத்திற்குரியது. வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த கல்விமுறை மிக ஆபத்தானது; மன அழுத்தத்தைத் தரக் கூடியது என்றும் தாராளமாக சொல்லக் கூடிய அளவிற்கு தான் அதன் தரம் உள்ளது.

தோல்விகளை எதிர்கொள்ளவும்; தோல்விகளில் தரும் பாடங்களில் இருந்து புதிய பாதைகளை அமைத்துக் கொள்தலையும் பயிற்றுவிப்பதற்கு இங்கு ஆசிரியர்களோ, இந்த சமூக கட்டமைப்போ இடம் தராதது பரிதாபத்திற்குரியது/ உயிரை மாய்த்து விட வழிவகை செய்வது,

என்ன தான் ஆங்கில வழியில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பித்தல் இருந்தாலும், தெளிவான, சரியான ஆங்கில உச்சரிப்புகளைக் கூட அறியாத ஆசிரியர்களாலேயே மாணவர்கள் கற்பிக்கப்படுவது பெரும் ஏமாற்று வேலை.

நேற்று பள்ளியில் இருந்து வந்த மகன், க்றிஸ்ட் என்று சொல்லிப் படித்துக் கொண்டிருந்தான். என்னடா அதன் Spelling என்று கேட்டேன், ‘C-h-r-i-s-t என்றான்; அது க்றிஸ்ட் இல்லடா, க்றைஸ்ட் என்றேன்; இல்லை, இல்லை! எங்க மிஸ் இப்பிடித்தான் சொல்லிக்குடுத்தாங்க அப்டின்னான்!

வேறொரு கல்லூரியில் மாணவச் சேர்க்கைக்காக Prospectus வாங்குவதற்காக சென்றிருந்தேன், அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் PROS-PECTAAAS இப்ப குடுக்கிறதில்ல அப்படின்னாங்க; என்னங்கன்னு திரும்ப கேட்டேன்; Prospectus என்பதில் டாவை இன்னும் ஆ போட்டு ப்ரோஸ்பெக்ட்ஆஆஸ் என்றார்கள். பிறகு தான் விளங்கியது, Prospectus என்று.

ஆங்கிலத்தையும் முறையாக கற்பிக்காமல் தமிழிலும் சரிவர புரிய வைக்கத்தெரியாத ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கு கிடைத்த சாபம்.

March 15, 2017

'சிரியா' - 'சிரிய' சிறுவர்கள்

சிறுவனாயிருக்கும் போது என்னைப் பார்க்கையிலெல்லாம் மரியாதைக்குரிய பெரியவர் ஒருவர் 'சிரியா' நாட்டுக்காரன் என்பார். நானும் எதோ வெளிநாட்டுக்காரன் போன்று உவமைப்படுத்திச் சொல்கிறார் போலும் என்று கருதிக்கொள்வேன். ஆனால், நான் சிரிக்காமல் இருப்பதை நையாண்டி செய்வதற்காகவே 'சிரியா' நாட்டுக்காரன் என அழைத்திருக்கிறார்  என்பது தாமதமாகவே புரிந்தது!

இன்று 'சிரியா' வில் இருக்கும் பெரும்பாலான சிறுவர்களும் 'சிரியா' நிலைமையிலே இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். 

கடந்த ஓராண்டில் மட்டும் 652 சிறுவர்கள், குண்டுகளுக்கும், வன்முறைகளுக்கும் பலியாகியிருக்கிறார்கள் என்கிறது ஐ.நா சபை. 

இதை எழுதுகையிலேயே கண்களில் நீர் எட்டிப்பார்க்கிறது எனும் போது, அச்சிறுவர்கள் சார் உறவுகளின் துயரம் நிச்சயம் இருதயங்களை நொறுக்கிப் போடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

ஏழு வயது சிறுவர்கள் சிறைக் காவலாளிகளாகவும், போர்க்களங்களில் ஆயுதமேந்துபவர்களாகவும், மனித வெடிகுண்டுகளாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள். 

பெற்றவர்களைப் போரில் இழந்த நான்கு வயது சிறுவன் வயிற்றிற்காக உணவகத்தில் வேலை செய்வதெல்லாம் பெருங்கொடுமை! இவர்களின் மன ரீதியான உளைச்சலுக்கும், வலிகளுக்கும் இடையே நமது பிரச்சினைகளெல்லாம் ஒன்றுமேயில்லை.


இனியேனும் என் போன்றோர் சிரிக்கப் பழகுதல் வேண்டும்!

Photo Credit: AFP 

July 08, 2016

விபத்துகளும் - வேதனைகளும் - தொடரும் சமூக அலட்சியங்களும்

அண்மை காலங்களில், தினசரிகளைத் திறந்தாலே பக்கென்றிருக்கிறது. நின்று கொண்டிருப்பவர் முதல் பயணம் செய்பவர் வரை விபத்துகளால் மடிவது மிகச் சாதாரணமாகிப் போய் விட்டது. பல வழிகளிலும் பாழ் படிந்த நம் சமூகக் கட்டமைப்பையே இதற்கு முழு முதற் காரணமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

தமிழகம், இந்தியாவிலேயே அதிக விபத்துகளை எதிர்கொள்கிற மாநிலமாகத் திகழ்வதாக, கடந்த ஆண்டின் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.

போக்குவரத்து விதிகளையும், சட்டங்களையும் கடைபிடிக்கத் தவறும்  இந்த சமூகமும், தவறுபவர்களைத் தண்டிக்க வேண்டிய போக்குவரத்து காவல்துறையினர் தமது பணியை நிறைவேற்ற தவறுவதும், ஊழல் பேர்வழிகளால் அமையப்பெற்ற தரமற்ற சாலைகளும் மிகவும்  வருத்தப்பட வேண்டிய விடயம் மட்டுமல்லாமல், வெட்கப்பட வேண்டிய விடயமும் கூட.

எதிர்பாரா நிகழ்வை விபத்து என்று கணக்கில் கொள்ளலாம், ஆனால் வரைமுறைக்கு அதிகமான வேகத்தில் சென்றால் விபத்து ஏற்படும் என்பதறிந்தும்; தலைக்கவசம் அணியாமல் சென்றால் உயிருக்கு ஆபத்து என்பதறிந்தும்; இடம் வலம் திரும்பும் முன்னர் சைகை காண்பித்த பின்னரே திரும்ப வேண்டும் என்பதறிந்தும்; பின்பற்றாமல் ஏற்படுத்தும் மோதல்களை விபத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளல் ஆகாது. அவை கொலை/தற்கொலைகளாகவே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.


சமுக அக்கறையின்றி, வெறும் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்து வரும் இந்த சமுதாயமானது, சட்டங்களையும், விதிகளையும், வெறும் ஏடுகளில் உறங்கும் எழுத்துக்களாகவே தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயம்.

விதிமீறல்கள், எந்தவொரு குற்ற உணர்ச்சியுமில்லாமல் அப்பட்டமாக இங்கு செய்யப்படுவது தான் நம் சமூகத்தின் மிகப் பெரிய நோய்! எப்படி ஒரு அமைச்சர் காலாற நடந்து சென்று மக்களின் குறைகளைக் கேட்பதென்பது நம் சமூகத்தில் சாத்தியமில்லையோ, அதே போன்று, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர், தண்டனைகளுக்கு அஞ்சுவது என்பதும் இங்கு சாத்தியமில்லை.

ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், பிரதிபலிப்புக் கண்ணாடிகள் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் (குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள்)  தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், அதி வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கு தாண்டுதல்  என விதிமீறல் செய்வோர் தினம் தினம் லட்சக்கணக்கானோர்.

இப்படியாக விதிமீறல் செய்பவர்களால் கடந்த ஆறு மாதங்களில், இருமுறை சிறிய காயங்களுடன் இருசக்கர வாகன விபத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். (இரு தினங்கள் முன்னர் சரக்கு வாகனம் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் 24 வயதே நிரம்பிய சகோதரர் ஒருவர் சென்னையில் மாண்டிருக்கிறார்).

அப்படியே விதிமீறல் செய்வோர், போக்குவரத்துக் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டாலும், எனக்கு இன்னாரைத் தெரியும், நான் அன்னாரின் உறவு என்று கூறி சமாளித்து விடுகிறார்கள். மறுபுறம் காவல்துறையினர், அரசு அலுவலகங்களில் பணியிலிருப்பவர்களையும், அரசியல் செல்வாக்கு உடையவர்களையும் அவர்களுக்கு பரிச்சயமானவர்களையும் எவ்வித சோதனைகளுக்குள்ளாக்குவதுமில்லை.

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் இருந்தும் அதை அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம் கொடுத்து வைத்தலும், காவல்துறையினரைக் கண்டால் மட்டுமே அதைத் தலையில் அணிவதும். நான்கு சக்கர வாகனங்களில், இருக்கைப் பட்டையை (சீட் பெல்ட்) காவல்துறையினரின் சோதனையின் போது மட்டுமே அணிவதும், சிவப்பு விளக்கு நிறுத்தங்களில், காவல்துறையினர் இல்லாவிடில் எளிதாகக் கடந்து செல்லுதலும் நம்மவர்களுக்கு கைவந்த கலை.

இவை போன்றதான நம் சமூகத்தின் ‘ஏனோதானோ’ பழக்கவழக்கங்களும், பெரு வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகளையும், சிறு வாகன ஓட்டுனர்களையும் (குறிப்பாக மிதிவண்டிகளை) ஏளனமாகப் பாவித்தலும், போக்குவரத்து விதிமுறை மீறல்களும், கண்காணிப்புப் புகைப்படக் கருவிகள் இல்லா நிலையும், பாதசாரிகளுக்கான நடைபாதை ஆக்கிரமிரப்புகளைக் கண்டுகொள்ளாமையும், விதிமுறைகளை சரிவர நடைமுறைப் படுத்தாமையும், காவல்துறையின் கண்டுகொள்ளாமையும், மிக மோசமான சாலைகளும் மாறாத வரை, விபத்துகள் @ கொலைகளும், தற்கொலைகளும் தொடர்ந்து நிகழவே அதிகம் வாய்ப்பிருக்கின்றது. 
Related Posts with Thumbnails