April 16, 2009

மனைவியை கொன்ற தீவிரவாதிகளை மன்னித்த மகான்

நேற்று(15.04.09) ndtv தொலைக்காட்சியில் நவம்பர் 2008 மும்பை தாக்குதலின் விசாரணை குறித்த விவாதம் நடைபெற்றது. Times Of India's Consulting Editor ம் தனது மனைவியுமான திருமதி.சபீனா சாந்தனுவை, மும்பைத் தாக்குதலில் இழந்த திரு.சாந்தனு அவர்களும் பங்குபெற்று தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் குறிப்பிடுகையில் அஜ்மல் கசாப் வழக்கின் விசாரணையை நாங்கள் பின் தொடரவில்லை;அதனைக் குறித்து அறியவும் விரும்பவில்லை; நானும் எனது இரு பிள்ளைகளும் விரும்புவது எல்லாம் அஜ்மல் கசாப் மரண தண்டனைக்கு விலக்கப்பட வேண்டும்.அவர் உயிருடன் வைக்கப்பட வேண்டும்.

எனது மனைவி மும்பை தாக்குதலில் குறிவைக்கப்படவில்லை; தீவிரவாதிகளின் தாக்குதலில் மடிந்த மற்றுமொரு பலிகடா, அவ்வளவு தான்.

எங்களுக்கு வருத்தம் இல்லாமலில்லை,ஆனாலும் கசாப் மீது எந்த கோபமோ வெறுப்போ எங்களுக்கு இல்லை.அவர் மீது கோபம் கொள்வதினாலோ மேலும் கவலை அடைவதாலோ நாங்கள் எதனையும் ஈட்டப் போவதில்லை.மறைந்த எனது மனைவி மீண்டு வந்து விடப் போவதுமில்லை என கூறினார்.

அதோடு அவரின் 12 வயது மகன் அஜ்மல் கசாப்பை சிறைச்சாலையில் சென்று சந்திக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறான் எனவும் கூறினார்.

ஏற்கெனவே நளினியை சிறைச்சாலையில் பிரியங்கா காந்தி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போன்ற மனித நேயம் மிக்கவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் பாராட்டினாலும் தகும்.திரு.சாந்தனு அவர்களை மகான் என தலையங்கத்தில் குறிப்பிட்டதும் தகும் என்றே கருதுகிறேன்.

இந்த நிகழ்ச்சியின் போது பங்கு பெற்று பேசிய மூத்த வழக்கறிஞரும்,இந்திராகாந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதிட்டவருமான திரு.ராம்ஜெத்மலானி, சாந்தனுவை வெகுவாக பாராட்டியதோடு இந்த கருத்துக்களை கேட்கும் ஒவ்வொரு தீவிரவாதியும் வெட்கப் பட வேண்டும் என்றார்.அதோடு இந்த கருத்துக்களை அனைத்து செய்தி ஊடகங்களும் வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.

April 15, 2009

தண்ணீர் வீணாகுதலை நாமும் தவிர்ப்போம்...

இந்த பதிவை இட காரணமான... பதிவர் ஜீவா அவர்களுக்கு முதலில் நன்றி

-----------------------------


நீரின்றி அமையாது உலகம் எனவும்; நீர் வாழ்க்கையின் அமிர்தம் எனவும்,(water is the elixir of life) எனவும் பள்ளிக்கூடத்தில் படித்த ஞாபகம்.

அமிர்தம் போன்ற அந்த நீரானது இன்று பல பகுதிகளில் கிடைக்கவே மிகக் கடினமாக இருக்கிறது.

நான் அறிந்த வரை...தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அதிகம் கேட்டிராத தமிழகத்தின் பல பகுதிகளிலும் கூட இன்று தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கேள்விப்பட நேரிடுகிறது.

நம்மில் பலர் அன்றாட வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் பல நேரங்களில் தண்ணீரை வீணாக்குகிறோம்.

wwf-world wide fund for nature எனப்படும் அமைப்பானது இயற்கையை இன்றைய உலகமயமாக்கலில் இருந்தும்,வெப்பமாகுதலில் இருந்தும் பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதத்தில் பூமி நேரம்(Earth Hour) என்ற பெயரில் அந்த அமைப்பு உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

wwf அமைப்பு தண்ணீர் வீணாகுதலைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2007 ல் வெளியிட்ட 40 வினாடிகளே கொண்ட இந்த காணொளியில் சிறுகுழந்தை ஒன்று குழாயிலிருந்து வீணாகிக் கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்த முயற்சிப்பது மனதை தொடும்படி உள்ளது.நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.



ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 அன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தண்ணீரை தேவைக்கு மட்டும் உபயோகித்து, வீணாகாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

April 14, 2009

சுயேட்சை வேட்பாளர்கள் மீது ஏன் இந்த சாடல்?


"சுயேட்சை வேட்பாளர்கள் என்பவர்கள் சீரழிப்பவர்கள்"

இப்படி ஒரு வாக்கை இந்திய நாட்டின் உயர் பதவியிலிருப்பவர் ஒருவரிடமிருந்து அதுவும் பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

சில நாட்களாகவே பிரதமர் சிங் அவர்கள் முன் வைக்கும் கருத்துகள் முன்னுக்கு பின் முரணானவையாகவும். ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிற கட்சியினரை சாடுவதும், குறை சொல்வதும்,தனி மனித தாக்குதல் செய்வதுமாக இறங்கியிருக்கிறார் பெரியவர்.

முந்தைய பதிவிலேயே இவரை போன்றவர்களின் பிரச்சார பிதற்றல்களை குறிப்பிட்டிருந்தேன்.

இன்று அவற்றிக்கு எல்லாம் ஒரு படி மேலே போய்...'சுயேட்சை வேட்பாளர்கள் சீரழிப்பவர்கள்; அவர்களால் வெற்றி பெற முடியாது;அவர்களை ஊக்குவிக்க கூடாது' என்ற தரம் தாழ்ந்த கருத்தை கூறியிருக்கிறார் பிரதமர்.

சுயேட்சை வேட்பாளர்களின் மேல் ஏன் இந்த திடீர் சாடல் என்று தான் புரியவில்லை. மக்கள் அல்லவா அவர்கள் முடிவை சொல்ல வேண்டும்... சுயேட்சைகள் சீரழிப்பவர்களா இல்லை சீர்ப்படுததுபவர்களா என்று.

அதோடு "மாநில கட்சிகள் எவ்வளவு காலம் தேசிய அரசியலில் தாக்கு பிடிப்பார்கள் என சொல்ல முடியாது" ஆதலால் தேசிய கட்சியான எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறார். நீங்கள் தேசிய கட்சி என்றால்... நாணமில்லாமல் என்னத்திற்கு மாநில கட்சிகளுடன் கூட்டணி கூடுகிறீர்கள்?

சுயேட்சைகள் போட்டியிடுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல வந்து விட்டது. அவர்கள் தொகுதி மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் நிச்சயம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தான் போகிறார்கள்.

அப்படி சீரழிப்பவர்கள் என்றால் உங்கள் ஆட்சியில் சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டியது தானே... சுயேட்சை வேட்பாளர்களுக்கு போட்டியிட தடை என்று.

மைக் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா? இது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?

April 13, 2009

பண்டிகை கால பகட்டு பக்தி ஏன்


கடந்த வெள்ளி அன்றும் நேற்றும்(12.04.09) நான் உரையாடியவர்கள் எல்லாம் என்னிடம் கேட்ட பொதுவான ஒரு கேள்வி "ஆலயத்திற்கு சென்றாயா" என்பதே?

பண்டிகைக் காலங்களில் மட்டும் தேவாலயங்கள் வழக்கத்திற்கு மாறாக நிரம்பி வழிவதையும்; அன்று வரை பாரா முகங்களாக இருந்த பல முகங்களையும் பார்க்க நேரிடுவதும் உண்டு.இது பிற சமய வழிபாட்டு தலங்களில் எப்படி என தெரியவில்லை.என்றாலும் நண்பர்களிடம் விசாரித்த வரையில் பெரும்பாலும் அங்கும் இதே நிலை தான் என தெரிய வருகிறது.

வருடத்தின் பிற நாட்களில் வழிபாட்டிற்கு செல்லவில்லை என்றால் கூட வீட்டிலும்,நண்பர் வட்டாரத்திலும் என்ன ஏது என கேட்க ஒருவருமிருக்க மாட்டார்கள்.ஆனால் பண்டிகை காலங்களில் வழிபாட்டிற்கு செல்லவில்லை என்றால் போதும் உடனே கேள்விகளால் துளைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

என்னமோ அன்று தான் இறைவன் இம்மண்ணுலகிற்கு இர(ற)ங்கி வருவது போன்ற தோரணையை ஏற்படுத்தி விடுவர்

சமயங்கள் சொல்லும் சத்திய சிந்தனைகளையோ,நீதி நியாயங்களையோ நடைமுறைப் படுத்த முயல்பவர் இங்கு வெகு சிலரே.வழிபாட்டில் பங்கு கொண்டால் மட்டும் போதும் அவர்களுக்கு.அதுவும் பண்டிகைக் காலம் அல்லது விசேஷ வழிபாடு என்றால் நிச்சயம் செல்ல வேண்டும் என்பது அவர்கள் அகராதியில் எழுதப்பட்ட ஒன்று.

இறைவன் கருணை வடிவில்,அன்பின் உருவமாய் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதே உண்மை என நான் கருதுகிறேன். அதனை விட்டு விட்டு ஒரு நான்கு சுவருக்குள் நுழைந்தால் அல்லது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தலத்திற்கு சென்றால் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை.(விவிலியத்தில் கூட ஒரு இடத்தில் நீங்களே அந்த ஆலயம் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது)நம்மையும் நம்மைச் சார்ந்து இருக்கிறவர்களையும் தீமையிலிருந்து விலக்குதலே உண்மையான வழிபாடு.

வழிபாட்டிற்கு செல்வதை நான் குறை சொல்லவில்லை,செல்லக்கூடாது எனவும் சொல்லவில்லை.ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட தலத்திற்கு மட்டும் சென்றால் இறைவனை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கை ஏன் என்ற கேள்வி மட்டுமே என் மனதில் மையம் கொண்டிருக்கிறது.

பல வழிபாட்டு தலங்களில் விசேஷ வழிபாடுகளின் போது கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டவரையும் இப்பாரத பூமி பார்த்தவள் தானே!

அதோடு பண்டிகை காலங்களில் ஒலி பெருக்கிகளின் தொல்லை சொல்லி மாளாது.எந்த சமயத்தைச் சார்ந்த பண்டிகை ஆனாலும் வழிபாடு ஆனாலும் ஒலி பெருக்கிகள் மூலம் அவர்கள் தரும் இம்சை பெரும் இம்சை.இறைவனை வழிபடுகிறவர்கள் என்ன காரணத்திற்காக ஒலி பெருக்கிகளில் கூச்சல் போடுகிறார்கள் என்பது தான் விடை தெரியாத கேள்வி.

அருகாமையில் எவர் இருக்கிறார்,நோயாளிகள் இருக்கின்றனரா?வயது முதிர்ந்தவர்கள் இருக்கின்றனரா?தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் இருக்கினரா என ஒன்றும் யோசிப்பதில்லை.

ஒலிபெருக்கி வைத்து ஊரெல்லாம் கேட்கும்படி பிரச்சாரம் செய்யுங்கள் என அனைத்து சமய வழிபாட்டு நூல்களிலும் எழுதப்பட்டிருக்கிறதோ என்னமோ!

பிறர் தேவை அறிந்து அருளும் உதவியே நாம் செய்யும் உண்மையான வழிபாடாக இருக்கவியலும்.
அல்லாமல் வழிபாட்டு தலங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளைக் கொண்டு இறைவனை வழிபடலாம் என நினைப்பது சரியென படவில்லை.

April 12, 2009

ஆவேச பிரச்சாரங்களின் மத்தியில் ஒரு அமைதியான பிரச்சாரம்

15 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் எந்த கட்சியைச் சார்ந்த தலைவராகட்டும்,போட்டியிடும் வேட்பாளராகட்டும் பிற கட்சியினரை அல்லது அவர்களது கொள்கைகளை குறை சொல்லாத மேடைகளே இல்லை.

அதோடு பெரும்பாலானோர் தனி மனித தாக்குதல் தான் செய்கிறார்கள் இது குறித்து எனது முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.மக்களுக்கு நன்மை பயக்கும் நலத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்பவர்கள் வெகு சிலரே.

இவர்கள் அனைவரிலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பிரச்சாரம் செய்யும் ஒருவரும் இருக்கத்தான் செய்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானிருக்கிறது.

பிரியங்கா தான் அவர்.மிக மிக எளிமையாக வருகிறார்.எவரையும் சாடுவதில்லை.தொகுதியின் மக்களிடம் அன்போடு அளவலாடுகிறார்.மக்களோடு மக்களாக ஒன்று சேர்ந்து கருத்துக்கள் பரிமாறுகிறார்.

இவரது அன்னை சோனியா கூட இத்தனை சாதுவாக பேசியதில்லை என்றே நினைக்கிறேன்.

அமேதியிலும்,ரேபரேலியிலும் 11.4.09 அன்று அவர் பேசியது இங்கே காணொளியாக.



அவரது பேச்சின் சாராம்சங்கள் சில

1.உங்களுக்கு நன்மை செய்பவர் எவர் என்பதை அறிந்து அவர் மேல் நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள்

2.இந்த தேசம் எந்த அரசியல்வாதிகளுடையதும் அல்ல இது உங்கள் தேசம்

3.உங்கள் தொகுதியை முன்னேற்ற பாதையில் இட்டு செல்பவர் யார் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்.

அரசியல்வாதியாக இல்லாதிருப்பதும் அமேதியில் அவரின் அமைதியான பேச்சிற்கு காரணமாகி இருக்கலாம்.இவரைப் போன்றவர்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும்.வாழ்த்துக்கள் பிரியங்கா மேடம்.

April 11, 2009

தேர்தல் வாக்குறுதிகள் இப்படியும் இருக்கலாமோ!

தேர்தலும் நெருங்கி விட்டது.இந்த முறை கட்சிகள் என்ன மாதிரியான தேர்தல் வாக்குறுதிகள் முன் வைப்பார்கள் என்ற ஒரு சிந்தனை.

திராவிட முதியவர் கழகம்

1.எங்களுக்கு வாக்களிப்பீர்கள் என்றால் வாரம் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிற்கும் கழக கடிதம்/இரங்கற் பா கலரில் அனுப்பி வைக்கப்படும்.

2.தமிழக நலன் கருதி எம்.பிக்கள் பதவியேற்றதுமே ராஜினாமா செய்யச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்படும்(நன்கு கவனிக்க... தீர்மானம் மட்டும் தான் நிறைவேற்றப்படும்)

3.குடும்பங்களில் சண்டை போட்டு சொத்திற்காக மீண்டும் இணைபவர்களுக்கு இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும்

அம்மா திராவிடம் முன்னேற்றும் கழகம்

1.ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவிகளின் பெயருக்கு கீழ் தான் குடும்பத் தலைவர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட வேண்டும் என்ற அவசர சட்டம் அமுலாக்கப்படும்.

2.பெண்கள் அனைவரையும் அம்மா என்றழைக்கவும் அவர்கள் காலில் ஆண்கள் விழவும் சட்டம் கொண்டு வரப்படும்.

இதயமில்லா தேசிய காங்கிரேசு

1.தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளனும் ஒரு முறையாவது இல்லையென்றால் ஒரு நிமிடமாவது கட்சியின் மாநில தலைவராக பதவியேற்க பரிந்துரைக்கப்படும்.

2.அவதியுறும் தமிழினத்தை காக்க நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் (அதே நாளில் டில்லியில் இருந்து ரணம் ஏற்படுத்தும் வெடிபொருட்களும் அனுப்பப்படும்)

3.2011 ல் மாநிலத்தில் காமராஜி ஆட்சி அமைத்து திராவிட முதிய கழகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.(மன்னிக்கனும் வாக்காளர்களே... 2111 என வாசிக்கவும்)

பாட்டாளி மகன் கட்சி

1.முதலில் ஒரு அறிவிப்பு... எங்கள் சின்னம் வாக்காளர்களுக்கு எளிதில் நினைவில் இருக்கும் வகையில் குரங்கு சின்னமாக மாற்றப்பட்டிருக்கிறது.

2.மகனை மத்திய மந்திரி ஆக்கி அவதியுறும் தமிழ் உடன்பிறப்புகளின் அல்லல் உடனே துடைக்கப்படும்

3.திட்டங்களை எவர் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து மக்கள் சார்பாக அறிக்கை விடப்படும்.

மறுபுரட்சி திராவிட முனங்கலேற்ற கழகம்

1.உலகமே உற்றுநோக்கும் விதம் தமிழக நலன் காக்க! உணர்ச்சிப்பூர்வ கருத்துகள் முனங்கப்படும்.

2.சிறைச்சாலையில் மக்கள் குறை தீர்க்கும் கவுண்டர் ஒன்று திறக்கப்படும்.

3.தமிழின எதிரிகள் தமிழகத்திலிருந்து துரத்தப்பட ஆயுதம் ஏந்தப்படும்

இடவலசாரி கட்சி

1.மக்கள் நலனிற்காக குரல் கொடுத்து ஆட்சியின் இடையிலேயே மக்கள் நலன் கருதி ஆளுங்கட்சிக்கு ஆதரவும் விலக்கப்படும்

2.தமிழர் பண்பாட்டிற்காக சிவப்பேறிய எங்கள் கொள்கைகளையும் விட தயாராக இருக்கிறோம்.

எந்த தேர்தலிலும் இல்லாத படி இந்த முறை அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து முன்வைக்கும் வாக்குறுதி:பொதுமக்களின் பாதங்கள் மண் மீது நடக்க வேண்டியவை அல்ல,மலர்கள் மீது. அதனால் காலணிகளுக்கு குறிப்பாக ஷூக்களுக்கு கட்டாய தடை விதிக்கப்படும்.

-------------------------

யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

April 09, 2009

தேர்தல்-பிரச்சார கத்தலும்,கருத்துகளும்,காமெடிகளும்

நடக்கவிருக்கும் 15ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான கட்சிகளின் பீரங்கி பிரச்சாரத்தையும்,கூப்பாட்டையும்,கத்தலையும் உலகமே வேடிக்கைப் பார்த்து வருகிறது.

பீரங்கியாவது உடலைத் தான் துளைக்கும்; இங்கோ சிலரின் பீரங்கி பிரச்சார கருத்துக்கள் பிறரின் மனதை துளைக்கும் வீரியம் நிறைந்ததாக இருப்பது வருத்தத்திற்குரியது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்து பேசும் எவரையும் ரோலரை ஏற்றி நசுக்குவேன் என மத்திய மந்திரி பதவியில் இருப்பவரும் மதச் சார்பற்றவன் என காட்டிக் கொண்டிருப்பவருமான லாலு பகிரங்கமாக கூச்சலிடுகிறார்.

வருணின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும்,லாலுவின் கருத்து,ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வருண் கூறிய கருத்துகளுக்கான எதிர் பதிலே என்பதும் மறுக்க முடியாத விஷயம்.

அக்கருத்துக்களினால் இருவருமே கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.(மற்றொரு வழக்கில் வருண் இன்னும் விடுவிக்கப்படவில்லை)இதில் காமெடி என்னவென்றால் தேர்தல் ஆணையத்திற்கு இவர்களை தண்டிக்கும் உரிமை இல்லையாம்;தண்டனைக்கான சட்டமும் இவர்கள் கைவசம் இல்லை.

பின்னே எதற்கய்யா அரசு சாரா அமைப்பு என்று பாவனா காட்டுகிறீர்கள்.வெறுமனே விதிமுறைகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்??

இலங்கையில் ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என நேற்று வைகோ அய்யா அவர்கள் வீறு கொண்டு பேசியிருக்கிறார்.அவர்கள் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அதே மேடையில் இருந்திருக்கிறார்கள்.இதனை தமிழகக் கட்சிகள் எவையும்(ஆளுங்கட்சி உட்பட) கண்டித்ததாக தெரியவில்லை.

இப்படியெல்லாம் பேசுவதினால் தமிழகத்திற்கு என்ன நன்மை பயக்க போகிறது!(அல்லலுறும் தமிழர்களுக்கு குரல் கொடுங்கள்! அதை விட்டு விட்டு...)

(தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அதிகமென்றால் ம.தி.மு.க விற்கு வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்கள் மட்டுமே தமிழகத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என ஆங்கில ஊடகங்கள் சில கேள்வி எழுப்புகின்றன)

சிறுபான்மையினருக்கு எதிராக விரல் நீட்டும் எவரின் விரல்களையும் வெட்டி வீசுவேன்;டெல்லியில் ஆந்திர காங்கிரஸ் காரிய குழு தலைவர் ஸ்ரீனிவாஸ் இரு தினங்களுக்கு முன்னர் கூறியது இது.

இப்படி வெறி பிடித்தவர்கள் தான் நாளைய மந்திரிகள்,நாடாளப் போகிறவர்கள்!!

பிரதமர் சிங் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தெரியாதவர்,நோஞ்சான் பிரதமர்,ஒன்றிற்கும் லாயக்கில்லாதவர் என பா.ஜ.க முழங்காத பிரச்சார மேடைகளே இல்லை.பதிலுக்கு காங்கிரஸ் பக்கமிருந்து,அத்வானி 1992 ல் என்ன செய்தார் என இந்தியாவிற்கே தெரியும் என்கிறார்கள்.

மேலும் காங்கிரஸ் 2002 கலவரத்தையும் அதற்கு பதிலாக பா.ஜ.க 1984 கலவரத்தையும் கூறி ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதயே அனைத்து பிரச்சார மேடைகளும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி விட்டு கூட்டணி தாவுவதிற்கு எந்த கட்சியும் விதி விலக்கல்ல(இது குறித்த எனது முந்தைய பதிவு இங்கே) மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க இயலாத நிலைமை இந்தியாவில் ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணமோ?

தேர்தலில் போட்டியிட டைட்லருக்கு அனுமதியளித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் இருந்து சோனியாவிற்கு (உபயோகப்படுத்தப்பட்ட) ஷூக்கள் அடங்கிய பெட்டி ஒன்றை அனுப்பவிருப்பதாக அகாலிதளம் அறிவித்திருக்கிறது.

புஷ்ஷை நோக்கி எறியப்பட்ட ஷூ நிகழ்வு சீக் சமூகத்தைச் சார்ந்த நிருபர் ஒருவரை அது போன்று செய்யத் தூண்டியது என்றால் பிப்ரவரியில் பெண்கள் ராம் சேனாவிற்கு chaddi அனுப்பிய சம்பவம் இப்போது அகாலிதளத்தை ஷூ அனுப்ப தூண்டியிருப்பதாகவே படுகிறது!! (எப்பிடித் தான் யோசிக்கிறாங்களோ)

நேற்று (8.4.09) அத்வானி,முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் அனைவருமே மிகச் சரியாக 12.39 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.அந்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தால் வெற்றி நிச்சயம் என நம்புகிறார்களாம்.

ராமாயணத்தில் ராவணனை ராமன் 12.39 மணிக்கு வீழ்த்தினான் எனவே அந்த சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தால் நிச்சயம் வெற்றி அடைவோம் என்கிறது பா.ஜ.க.

(அப்போ எல்லா தொகுதியிலும் இந்த டைம்லயே வேட்புமனு தாக்கல் செய்தா ஆட்சிய பிடிச்சிரலாம்!!)
Related Posts with Thumbnails