April 30, 2009

வம்பு பேசிய வாக்காளர்கள் எங்கே போனார்கள்?


இந்தியாவின் பதினைந்தாவது பாராளுமன்றத்திற்கான மூன்றாவது கட்ட வாக்கெடுப்பு இன்று(30.04) மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.

மூன்றாவது கட்ட வாக்கெடுப்பில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் வெறும் 50 மட்டுமே. குறிப்பாக மும்பை தொகுதியில் பதிவான வாக்குகள் 45% மட்டுமே. 2004 ல் பதிவான வாக்குகளை விட இரு சதவீதம் இது குறைவாகும்.

வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள்,பாலிவுட் திரைத்துறையினர் பலராலும் பல விதமான கோரிக்கைகளும்,வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்ட பின்னரும் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மும்பை தாக்குதலுக்கு பின்னர் அரசியல்வாதிகள் மேலும்,ஆட்சியாளர்கள் மேலும் வெகு கோபம் கொண்டு அமைதி ஊர்வலங்கள், போராட்டங்கள், இணைய பிரச்சாரங்கள் பலவும் செய்தவர்கள் வாக்கெடுப்பு சமயத்தில் எங்கு சென்றார்களோ தெரியவில்லை.இத்தனைக்கும் இன்று மும்பையில் விடுமுறையாகும்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னரே jaagore.com என்ற இணைய தளத்தின் மூலம் infosys, wipro ஆகியவற்றின் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இளைஞர்கள் மத்தியில் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மும்பை மக்கள் நாட்டின் மேல் தட்டு மக்கள்,விவரமானவர்கள் என ஊடகங்கள் செய்து வந்த பொய் பிரச்சாரங்களையும்,பிரமையையும் இன்று பதிவான வாக்கு சதவீதம் பொய்க்க வைத்துள்ளது. அவர்களும் நாட்டின் பிற பகுதிகளின் மக்களுக்கு சமமே என்பதும் நிரூபணமாகியிருக்கிறது.

மும்பை 40 சதவீதத்திற்கும் மேல் சேரிப்பகுதியாக இருப்பதும் குறைவான வாக்குப்பதிவிற்கு ஒருவேளை காரணமாகியிருக்கலாம்.

இளைஞர்கள் பலரும் இணையத்தில் உலவுகிறார்கள்,சூடான அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.ஆனால் வாக்கெடுப்பு என்று வரும் போது அவர்களால் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதற்கான சமயம் ஒதுக்க முடியாதது ஏனோ?

பார்ட்டி,டிஸ்கொதே ஆகியவற்றிற்கு முக்கியத்துவமும் போதிய நேரமும் அளிக்கும் மும்பை வாசிகள் வாக்கெடுப்பிற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.தேர்தலை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை போலும்.

ஒருவேளை ஆன்லைனிலோ,ஆர்குட்டிலோ,ஃபேஸ்புக்கிலோ வாக்கெடுப்பு வைத்திருந்தால் வாக்களித்திருப்பார்களோ?

இவ்வாறு வாக்களிக்காமல் இருந்து விட்டு ... பின்னர் அரசியல்வாதிகள் நல்லதே செய்யவில்லை,பாதுகாப்பு சரியில்லை என்றெல்லாம் வாய் கிழிய வசைபாடுபவர்களும் இதே பொதுமக்கள் தான்.

யாரைக்குற்றம் சொல்வதோ? பொதுமக்களையா? இல்லை வாக்களிக்காமல் இருப்பதற்கும் சட்டமியற்றி வைத்திருக்கும் இந்திய அரசாங்கத்தையா?

இந்திய திருநாட்டில் இதெல்லாம் சகஜம் தானோ!!

April 29, 2009

முறையற்ற வெற்றி நிரந்தரமாகாது;நிதர்சனமுமாகாது.

விளையாட்டுகளில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் முறையற்ற வழிகளில் ஒருவர் ஈட்டும் வெற்றி எத்தனை காலம் நிலைக்கும் என்பதற்கு எவரும் வாக்குறுதி அளிக்கவியலாது.

2008 பெய்ஜிங்க் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற இருவருடன் மொத்தம் ஆறு பேர் ஊக்க மருந்து உபயோகித்ததாக நேற்று (28.04) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் முன்பு பெய்ஜிங்க் ஒலிம்பிக் போட்டிகளினிடையிலேயே ஒன்பது பேர் ஊக்கமருந்து உபயோகித்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னரே இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மோனிகா என்பவர் ஊக்கமருந்து உபயோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டார்.

இப்படியாக வரலாற்றில் இன்னும் பல நிகழ்வுகள் உண்டு,இன்றளவும் பலர் ஊக்கமருந்து பயன்படுத்தி வருவதாகாவே தெரிகிறது.

முறையற்ற வழியில் வெற்றி ஈட்ட அல்ல எதிரணி வெற்றி ஈட்ட உதவி செய்ததாகவும்,பந்தய நிர்ணயம் (match fixing) செய்ததாகவும் அசாருதீன்,ஜடேஜா,கிப்ஸ்,ஹன்சி குரோனியே போன்ற கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீதும் சில ஆண்டுகள் முன்பு குற்றம் சாட்டப்பட்டது.அதன் பின்னர் அசார்,ஜடேஜா போன்றொருக்கு கிரிக்கெட் ஆட தடையும் விதிக்கப்பட்டது.

முறையற்ற வழி பெற்ற வெற்றிகள் ஒரு வகையில் சந்தோஷத்தை அளித்தாலும் பல வகையில் மன சங்கடத்தையும்,வருத்தத்தையும் ஒரு வித குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தவே அதிகம் வாய்ப்புள்ளது.

அந்த விதத்தில் குற்ற உணர்ச்சி கொண்டு அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ், 2000 ஆம் வருடம் சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் தான் ஊக்க மருந்து உபயோகித்ததாக ஒப்புக்கொண்டு அவர் பெற்ற ஐந்து பதக்கங்களையும் 2007 ல் சர்வதேச ஒலிம்பிக் கழகத்திடம் திருப்பிக் கொடுத்து இரண்டு வருடம் தடகள போட்டிகளில் பங்கு கொள்ள விதிக்கப்பட்ட தடையையும் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் சில தவிர்க்க முடியாத விஷயங்களில் அல்லது சூழ்நிலைகளில் பொய்களைக் கூறியோ; முறையற்ற வழிகளில் சென்றோ தான் வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு விடுகிறது.உதாரணத்திற்கு லஞ்சம் கொடுப்பதையும், பெறுதலையும் கூறலாம்.

வாழ்க்கை பயணத்தில் எத்தகைய போட்டி ஆனாலும், முறையற்ற வழியில் ஈட்டும் வெற்றி எத்தனை காலம் நிலைக்கும் என்பது கேள்விக்குறி தான்(அரசியல்வாதிகளுக்கு இங்கு ஆச்சரியக்குறி இட்டுக் கொள்ளலாம்!!)

"பேராசை பெருநஷ்டம்" என்ற வாக்கிற்கு இணங்க பேராசை கொண்டு தவறான வழிகளில் ஈட்டும் வெற்றியை இன்றல்லது...என்றாவது ஒரு நாள் உலகறியும் போது அந்த வேதனையையும்,வருத்தத்தையும்,வெட்கக் கேட்டையும் அனுபவிப்பதற்கு பதிலாக இருக்கின்றதை வைத்து நிறைவாக வாழ முயற்சிப்போம்.

---------------------------------


கீழே உள்ள புகைப்படத்தில் இன்றைய அரசாங்கங்களின் உயர்பதவியிலிருப்பவர்களில் எத்தனை பேர் நேர்மையாக இருக்கிறார்கள் என்பது நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.பார்த்து, நம் தலை எழுத்தை நொந்துகொள்ளுங்கள்.

April 28, 2009

உறவுகளின் மறுபக்கம்


உறவுகள் சுமையானால்-மனித
உறவுகள் சுமையானால்
உதறவும் செய்யும்-மனதுகள்
உலவும் உலகமிது
---------------------------------------------------
தாய்-சேய் உறவு
தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு

தொட்டிலில் தொடர்ந்து
கரங்களில் தவழ்ந்து

கடல் போன்ற தரணியைக்
கரிசனையுடன் கற்றுத்தந்து

கனிவால்
கண்ணீர் களைந்து

கவலையுடன்
கரை சேர்க்கிறது

தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு
----------------------------------
தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு

சுயநலம் கருதி
சிசுக்கொலை செய்கையில்

சுய இன்பம் வேண்டி
சுரணையற்று சிசுவை விற்கையில்

சில்லறை காண
சிறார் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கையில்

கரை சேர வேண்டிய
கனவுகளை

கடலிலேயேகவிழ்த்து
கருமாதியும் செய்கிறது

தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு
----------------------------------
நட்பு

முன்னாளில்

கல்விச் சாலையின்
கசப்பான பாலைகளில்

கருத்தாய் மாறி
கவிதையாய் கலந்து

கண்ணீரிலும் கவலையிலும்
கைத்தாங்கலானாய்

காவலனாய்-முதல் உறவின்
கவனிப்பிற்கு போட்டியாய்


அதிர்ச்சிகள் ஆக்கிரமிக்கையில்
அன்புடன் ஆதரவானாய்


நட்பு என்னும் புதிய உறவாய்
நாழிகையும் என்னுடன் கழித்தாய்
-----------------------------------------
பின்னாளில்

பிரமை பிடித்தவனாய் - நான்
பிதற்றுகையில்
பிரதானமாகிப் போனாள் - நின்
பெண்ணொருவள்.

நட்பினைத் தேடி
நடையாய் நடந்தவனை
நானில்லை என
நாணமில்லாமல் நவின்றாய்

அநாதையாய்
அவசர தேவை என-சில நூறுகளுக்காக
அண்டுகையில்
அயலானாய் அகன்றாய்-பின்னாளில்

நட்பு என்ற உறவும்-சில
நூறு நாழிகையே
நிலைக்கும் என கூறாமல் கூறிச் சென்றாய்
------------------------------------------------------
சகோதர/சகோதிரி இரத்த உறவு

முன்னாளில்

சகோதரனாய்/சகோதரியாய் சளைக்காமல்
சகோதரம் பாராட்டினாய்

சிறு சண்டைகள்
சிடுமூஞ்சியாக்கினாலும்
சில்மிஷங்களால் சிரிக்கச் செய்தாய்

பனித்த கண்களுக்கு
பரிவு காட்டினாய்

பகடிகளின் மத்தியில்
பாசத்தின் பகலவனானாய்-முன்னாளில்
-------------------------------------------------
பின்னாளில்

விரும்பியது வினையானதால்
வெறுப்பை விதைத்தாய்

புதிய வழி நாடியவனை
புதிரால் புதைத்தாய்

சில்லறை விஷயங்களை
சிக்கலாக்கினாய்

நம்பிக்கை கொண்டு காத்திருக்கையில்
நம்ப வைத்து கழுவேற்றினாய்
------------------------------------------------
உறவுகள் சுமையானால்-மனித
உறவுகள் சுமையானால்
உறவுகளை உதறவும் செய்யும்-மனதுகள்
உலவும் உலகமிது

------------------------------------------------

தொலைதூரம் உடன் பயணித்து
தொலைந்தும் போன உறவுகளை
தொலைவிலிருந்து! திரும்பிப் பார்க்கையில்
தோன்றியவை!

------------------------------------------------

யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

April 27, 2009

உலகை அச்சுறுத்தும் swine flu


(பதிவர் சுல்தான் அவர்களின் பதிவைத் தொடர்ந்து மேலும் சில தகவல்களுடன்)
swine flu எனப்படும் பன்றிக் காய்ச்சல் மேற்கத்திய நாடுகளை வெகுவாக கவலைக்குள்ளாக்கியிருக்கிறது

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் மட்டும் 150பேர் பலியாக காரணமாகியிருக்கும் இந்த பன்றிக் காய்ச்சல் தற்போது வேகமாக பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது.

பன்றிகளையே (swine) அதிகம் தாக்கியதால் பன்றிக் காய்ச்சல் என அறியப்படுகிறது.இந்த வகை காய்ச்சல் ஆரம்பத்தில் பன்றிகளில் இருந்து மனிதனுக்கு பரவியது என்றாலும் மெக்சிகோவில் தற்பொழுது பாதிக்கப்பட்ட எவரும் பன்றிகளுடன் நெருங்கி இருந்ததாகக் கண்டறியப்படவில்லை.

அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து, ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது swine flu.

உலக சுகாதார அமைப்பு சர்வதேச அளவில் மருத்துவ நெருக்கடி நிலையை அமுல்படுத்தியுள்ளது.இந் நோய் பரவியுள்ள நாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருக்குமாறு இந்திய அரசாங்கம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Swine flu வைக் குறித்து அனைவருக்கும் எழும் சில கேள்விகளும் பதில்களும்

எப்படி பரவுகிறது?

1.இந்த காய்ச்சல் H1N1 swine flu எனப்படும் வைரஸால் பரவுகிறது.
2.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை விரைவாக தாக்குகிறது.
3.வைரஸ் தாக்கப்பட்ட ஒருவர் இருமும் போதோ தும்மும் போதோ வைரஸ் காற்றில் கலப்பதால் அருகில் இருப்பவருக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

வைரஸ் பரவுதலை தடுக்க முடியுமா?

1.வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் 70-90% வரை வைரஸ் பரவுவதலை தடுக்க முடியும்
2.இருமும் போதோ தும்மும் போதோ கை அல்லது கைக்குட்டையால் வாயை மறைப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும்.
3.சுத்தமாக இருப்பதன் மூலம் தடுக்கலாம்.

வைரஸ் தாக்குவதால் என்ன பாதிப்பு?

1.மூன்று நாள்களுக்கும் அதிகமான காய்ச்சல்
2.தொடர்ச்சியான இருமல்
3.உடல் சோர்வு
4.வாந்தி,வயிற்றுப் போக்கு
5.கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.

Swine flu விற்கு சிகிச்சை உள்ளதா ?

1.ஓரிரு நாள்களுக்கு அதிகமாக காய்ச்சல் இருப்பின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்
2.வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மூலம் தக்க சிகிச்சை பெறுதல்
3.வைரஸ் தாக்குதலுக்குள்ளான நபர் 48 மணி நேரத்திற்குள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை பெறுவாரானால் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

swine flu வினால் பாதிக்கப்பட்டிருக்கும் மெக்சிகோவிற்கு பயணம் செய்ய வேண்டாமென சில நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஏற்கெனவே நலிந்திருக்கும் பொருளாதாரம் swine flu வினால் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

நன்றி யாஹூ

ஈழத் தமிழர் நலனுக்கேனும் ஒன்றுபடுங்கள்

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருக்கிறார் என ஊடகங்கள் வழி கேள்விப்பட்டதும் சற்றே ஆச்சரியமாகத் தானிருந்தது.இழக்கப் போகும் வாக்குகளை மீட்பதற்காக அவர் எடுக்கும் அரசியல் ஆதாய முயற்சியா என்ற கோணத்தில் பார்க்கவும் செய்தது உண்ணாவிரத செய்தி.

ஆனாலும் நெடுங்காலமாக ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் என்ற கோணத்தில் பார்ப்பதானால் முதல்வரின் நிலைப்பாடு சரியெனவேப் படுகிறது.அதோடு உடல்நிலை ஒத்துழைக்காத 86 வயதிலும் அவர் எடுத்த இந்த முடிவு உறுதியானதே.

கருணாநிதி நடத்தும் அரசியல் நாடகம் என பலர் குறிப்பாக எதிர்க்கட்சிகள் கருதக்கூடும்.ஜெயலலிதா அம்மையார் உண்ணாவிரதம் இருந்த போதும் இது அவரது அரசியல் நாடகம்,வாக்குகளை பெற அவர் முன் வைக்கும் உக்தி என்றும் பிற கட்சிகள் அவரை சாடின.

இலங்கை தமிழர் நலனிற்காக இரு பெரும் திராவிட கட்சிகளோ இல்லை பிற கட்சிகளோ எடுக்கும் எந்த முயற்சிகளும் பாராட்டப்பட வேண்டியவையும்,வரவேற்கப் பட வேண்டியவைகளுமாகும்.ஓட்டிற்கான நாடகமாகவே தோன்றியாலும் இலங்கை தமிழரின் நலனுக்காக தானே குரல் கொடுக்கிறார்கள் என்ற முறையில் அதனை பிற கட்சிகளும் ஆதரித்திருக்க(ஆதரிக்க) வேண்டும்.

தமிழர் நலனுக்காக தமிழர் பிரிவுபட்டு நிற்பதும் இனியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதும் இலங்கை தமிழர் விஷயத்தில் எந்த வகையிலும் நன்மையை கொண்டு வரப்போவதில்லை.

April 24, 2009

சச்சின் ஒரு சகாப்தம்

இது ஒரு மீள்பதிவு. இன்று (24.04) சச்சினின் பிறந்த நாளாதலால் அவரின் சாதனைகள் சிலவற்றை இந்த பதிவில் திரும்பிப்பார்க்கலாம்.முந்தைய பதிவு இங்கே.சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
24 ஏப்ரல் 1973 ல் பிறந்த வலக்கை ஆட்டக்காரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் பள்ளிப்பருவங்களிலே சச்சினின் குரு மற்றும் ஆரம்பகால பயிற்சியாளர் "ரமாக்கந்த் அச்ரேக்கர்" அவரின் கீழ் கிரிக்கெட் வாழ்வைத் துவக்கினார். எம்.ஆர்.எஃப் அகடமியில் ஆஸ்திரேலியர் "திரு.டென்னிஸ் லில்லி"யின் கீழ் வேகப் பந்துவீச்சாளராக பயிற்சி பெற அனுப்பப்பட்டார்.அங்கு அவர் மட்டை வீச்சில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாக லில்லியால் குறை கூறப்பட்டார்.

பள்ளிப்பருவத்திலே அச்ரேக்கர் ஒரு ரூபாய் நாணயத்தை விக்கெட் மீது வைத்து விடுவாராம்,சச்சினின் விக்கெட்டை எடுப்பவர்களுக்கு அந்த நாணயம் வழங்கப்படும் என்று பந்தயம் வைத்திருக்கிறார்.இல்லையென்றால் அந்த நாணயம் சச்சினுக்கு சொந்தம். அப்படியாக 13 நாணயங்களை பெற்ற சச்சின் இன்றும் கூட பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.

1988 களில் சச்சினின் ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.1988 ல் அவர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் சதமடித்தார்.அந்த வருடத்தில் தான் 2006 ஆம் வருடம் வரை தகர்க்கப்படாமலிருந்த உலகத்திலே ஒரு விக்கெட்டிற்கு எடுத்த அதிகபட்ச ரன்னான 664* ஐ வினோத் காம்ளியுடன் சச்சின் எடுத்தார், பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற லார்ட் ஹாரிஸ் பட்டயத்திற்கான போட்டி அது. 326 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

14 வயதுடன் தனது முதல் தரக் கிரிக்கெட்டை சச்சின் தொடங்கிய போது திரு.சுனில்கவாஸ்கர் அவர்கள் இரண்டு மென்மையான கால் கவசத்தை (Pad)அளித்திருக்கிறார்.அது தான் நான் நன்றாக விளையாட தனக்கு மிகுந்த ஊக்கமளித்ததாக 20 ஆண்டுகளுக்கு பின்னர் உலக வரலாற்றில் அதிக சதமாகிய கவாஸ்கரின் 34 சதத்தை முறியடித்த போது கூறி கவாஸ்கருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்.

1988 டிசம்பர் 11ல் 15 வயது 232 நாட்களாகிய சச்சின் தனது முதல் தர கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்திலேயே மும்பைக்காக குஜராத்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதமடித்து மிக இள வயதிலேயே சதமடித்தவர் என்ற புகழைப் பெற்றார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தான் ஆடிய மூன்று(ரஞ்சி, துலீப், இரானி) அறிமுகப் போட்டிகளிலும் சதமடித்த பெருமையையும் பெற்றுள்ளார்.

என்றாலும் சச்சினின் சர்வதேச அறிமுக ஆட்டங்களிலும் ஆரம்ப காலங்களிலும் சொல்லும்படியான பங்களிப்பு இல்லை.16 வயதில் 15 நவம்பர்,1989 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக,கிரிஸ் ஷ்ரீக்காந்த் தலைமையின் கீழ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.முதல் இன்னிங்க்சில் 15 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார்.ஆனாலும் பாகிஸ்தானின் அதிவேகப் பந்து வீச்சை சமாளித்ததே மிகப் பெரிய விஷயம் என கிரிக்கெட் வல்லுனர்கள் இன்றும் கூறுகின்றனர்.ஏனென்றால் வக்கார் வீசிய ஒரு பந்து சச்சினின் தாடையைப் பதம் பார்த்தது;அதன் பின்னரும் இரத்தக் கறைபடிந்த சட்டையுடன் சச்சின் தொடர்ந்து ஆடியது தான்.

அதே ஆண்டு டிசம்பர் 18 ல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது கால் தடம் பதித்தார்.முதல் ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் அறிமுக ஆட்டங்களில் சச்சினின் விக்கெட்டைச் சாய்த்தவர் வக்கார் யூனிஸ்.வக்காருக்கும் அது அறிமுக ஆட்டங்கள் தான் என்பது சுவாரஸ்யம்.

17 ஆவது வயதில் 1990 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் சதத்தை சச்சின் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓல்ட் ட்ரஃபோர்டில் எடுத்தார்.அதன் பின்னர் தனக்கு 25 வயது ஆகுமுன் 16 சதங்கள் அடித்தார்.2000 ல் உலக கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களுக்கு மேல்(டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இணைந்து) எடுத்த முதல் வீரர் என்ற புகழைப் பெற்றார்.

1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில்(ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் குவித்த 148 ஓட்டங்கள் மற்றும் பெர்த் வாக்கா மைதானத்தில் அடித்த சதமும் தான் இன்று வரை அவரடித்த சதங்களில் முதலிடம் பெறுகிறது.ஏனென்றால் பெர்த் மைதான ஆடுதளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிக சாதகமானது.

அன்றே ஆஸ்திரேலியாவின் மெர்வ் ஹூஜ்ஸ் ஆலன் பார்டரிடம் இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான் என்று கூறியிருக்கிறார்.

உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர். டான் பிராட்மேனே சச்சினின் ஆட்டம் அவரது ஆட்டத்தைப் போன்றே இருப்பதாக சச்சினைப் புகழ்ந்திருக்கிறார். பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியர் ஷேன் வார்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.

1994 செப்டம்பர் 9 ல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.

1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்(523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.65 ரன்கள் குவித்தார் சச்சின் அரையிறுதியில்.

1998 ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார்.அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற "கோகோ-கோலா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்" தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார்.

1999ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது. அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.அந்த தோல்விக்காக இன்றும் வருத்தப்படுகிறார் சச்சின்.

1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியை விட்டுக் கொடுத்து இந்தியா வர வேண்டியிருந்தது.பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141* குவித்தார்.அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.கிரிக்கெட் மீது அத்தனை ஈடுபாடு உள்ளவர் தான் சச்சின்.

2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற காரணகர்த்தாவானார்.இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

2005, டிசம்பர் 10 அன்று திரு.கவாஸ்கரின் 34 டெஸ்ட் சதங்களை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.

2007-2008 ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.

2008 அக்டோபர்17ல் உலகில் மேற்கு இந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12773 (ஏப்ரல் 7, 2009 ன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் .டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை மொத்தம் 42சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார். அதிக பட்ச ஓட்டம் 248*.

ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்களுடன் 16684 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (மார்ச் 8, 2009 ன் படி). அதிகபட்ச ஓட்டம் 186*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது சற்றே விசித்திரம் தான்.

23 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களை கோட்டை விட்டுமிருக்கிறார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கேட்ச் எடுப்பதிலும் சதமடித்துள்ளார்,ஒரு நாள் போட்டிகளில் 129, டெஸ்ட் போட்டிகளில் 102.மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.

இத்தனை சாதனைகளின் மத்தியில் சோதனைகள் இல்லாமல் இல்லை.

இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.

2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது.இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது.இதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தடையை நீக்கியது.இந்திய பாராளுமன்றம் வரை இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டது(வேற பிரச்சினைகளே நாட்டில் இல்லையென்பதால்?!)

2003 ல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.

2004 ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்து சச்சினின் இரட்டை சதத்திற்கு வேட்டு வைத்தார்.அது இன்றும் தனிப்பட்ட முறையில் வருத்தப்படுத்துவதாக சச்சினே கூறியுள்ளார்.

2006ல் தோள்பட்டை பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.போட்டிகளில் பங்கேற்காமலிருந்த அந்த சில மாதங்கள் "கபில் தேவ், அந்நாள் பயிற்சியாளர் உள்ளிட்ட பலரும் சச்சின் ஓய்வு பெற வேண்டுமென வலியுறுத்தினார்கள்".அந்த நாட்களை மறக்க நினைக்கிறேன் என்று வருத்தப்படுகிறார் சச்சின் இப்போது.

விருதுகள்

1994 அர்ஜூனா விருது
1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது

1999-பத்மஸ்ரீ விருது

2008-பத்மவிபூஷன் விருது

சச்சினின் ஆட்டத்தில் எனக்கு பிடித்தது
-அவரின் அற்புதமான Straight drive (சுனில் கவாஸ்கரே வியக்கிறார் சச்சினின் Straight drive ற்கு), Cover drive மற்றும் Leg flick.
-1998 சார்ஜாவில் ஆஸிக்கு எதிரான தொடர்ச்சியான இரு சதங்கள்.
-2003 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானின் சோயிப் அக்தர் பந்து வீச்சில் ஆஃப் சைடில் அவரடித்த சிக்சர்.
-2003 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி கேடிக்கின் பந்தை மைதானத்திற்கு வெளியே விரட்டிய சிக்சர்.அதோடு கேடிக்கின் வார்த்தை விளையாட்டுகளுக்கு முற்றுப் புள்ளியும் வைத்தார்.
-2007-08 ல் காமன்வெல்த் பேங்க் தொடரில் அடித்த இரு சதங்கள்.

------------------------------
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும்,அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.இந்தியாவிற்கு மேலும் புகழ் சேர்க்க சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
-------------------
(ஆனாலும் 20-20 ஆட்டங்களுக்கு உடலை மிகவும் வருத்த வேண்டி இருக்கிறது, இளைஞர்கள் தான் 20-20 ஆட்டத்திற்கு சரி என 2007 ல் முடிவெடுத்து விலகியிருந்தவர் ஐ.பி.எல் ல் ஆட என்ன காரணம் என்பது தான் புரியவில்லை. 20-20 ஆட்டங்களில் அவரது இரட்டை நிலையும் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை)

நன்றி மற்றும் தகவல் ஆதாரம்,

April 23, 2009

ஏப்ரல்,மே மாதங்களின் சுடும் வெயிலில் தான் தேர்தல் வேண்டுமா?

பொதுவாகவே பாரதத்தில் ஏப்ரல் மே மாதங்களிலேயே தேர்தல் நடைபெற்று வந்திருக்கின்றன. பதினைந்தாவது பாராளுமன்றத்தை தெரிந்தெடுக்கும் இந்த முறையும் அனல் வீசும் ஏப்ரல் மே மாதங்களில் தான் ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த இன்று(23.04.2009)ஒரிசாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இரு தேர்தல் அலுவலர்கள் மரணமடைந்ததாக ஊடகங்கள் வழி செய்தியைக் கேள்விப் பட நேரிடுகிறது.

மேலும் ஒரிசா,பீகார் போன்ற பிற்படுத்தப்பட்ட மாநிலங்களில் பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீரோ,வெயிலில் இருந்து மறைவதற்கு ஒரு மறைவோ தேர்தல் பணியாளர்களால் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை.

இவை போன்ற மாநிலங்களில் கேள்வி கேட்பதற்கு எவருமிருக்க மாட்டார்கள் என்ற தைரியம் தான் இதற்கு காரணமா என்றும் தெரியவில்லை.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 16.04.2009 அன்று வெயிலின் தாக்கம் அவ்வளவாக இல்லை.இனி நடக்கவிருக்கின்ற அடுத்த மூன்று கட்ட வாக்குப்பதிவுகளின் போதும் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கப் போகிறது.

இந்தியாவின் ஒரிசா, பீகார் உள்ளிட்ட கிழக்குமாநிலங்களில் மட்டும் ஏப்ரல் 19 வரை 23உயிர்கள் வெயிலின் கொடுமைக்கு பலியாகி இருக்கின்றனர்.அதிகபட்சமாக44 டிகிரி பதிவாகியிருக்கிறது அங்கு.

குறிப்பாக தமிழ்நாட்டில் மே 13 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. அக்னி நட்சத்திரம் என சொல்லப்படும் உச்ச கட்ட வெயில் அந்த இடைவெளியில் வர வாய்ப்புள்ளது.எனவே தமிழர்கள் சுதாரிப்பாக இருத்தல் நல்லது.

ஏப்ரல்,மே மாதங்களில் பொதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை காலம்.வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளிலேயே அமைக்கப்படுகின்றன.மேலும் வாக்குப்பதிவு நடந்த பின்னர் (முன்பு)வாக்குச்சீட்டுகள்,(தற்பொழுது)வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு பள்ளிகள் தேவையாதலால் ஏப்ரல்,மே மாதங்களை தேர்தல் ஆணையம் தெரிந்தெடுத்திருக்கலாம்.

ஆனால் 5 வருடத்திற்கு முன்னர் இருந்த தட்பவெப்பநிலை இப்போது நிலவுகிறதா என்றால்... நிச்சயமாக இல்லை. மும்பை பிப்ரவரி மாதமே 40 டிகிரிக்கும் மேலான வெப்பத்தை அனுபவித்து விட்டது இம்முறை.சென்னையும்,இந்தியாவின் பிற மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.டில்லியில் புழுதியுடன் அனல் காற்றி வீசி வந்திருக்கிறது மார்ச் மாதத்திலும்,இந்த மாதத்திலுமாக.

நேற்று (22.04.2009)தான் சர்வதேச பூமி தினம் அனுசரிக்கப்பட்டது.பல அமைப்புகள் பொதுமக்களுக்கு பூமி வெப்பமாகுதலையும்,தண்ணீர் வீணாகுதலையும் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் இயற்கைக்கு நவீன உலகம் செய்த துரோகத்தை இயற்கை ஒரு போதும் மன்னிக்க தயாராக இல்லை என்றே தெரிகிறது.வருடத்திற்கு வருடம் தட்பவெப்பநிலையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

சரி காலநிலையை நம்மால் மாற்ற முடியாது,தேர்தல் நாளை மாற்றலாம் அல்லவா.தவிர்க்க முடியாத காரணத்தால் தேர்தல் நாள்களையும் மாற்றி வைக்க முடியவில்லை என்றால் வாக்குச்சாவடிகளுக்கு உரிய வசதிகளையாவது செய்து கொடுக்கலாமே தேர்தல் ஆணையம்.

வேட்பாளர்கள்,கட்சித்தலைவர்கள் ஹாயாக ஏ.சி.காரில் கூலிங் க்ளாஸ் சகிதம் வந்து விட்டு போய் விடுவார்கள். இதைக் குறித்து எல்லாம் அவர்கள் ஏன் கவலைபடுகிறார்கள்.எத்தனை வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன என நோக்குகின்றனரோ?
Related Posts with Thumbnails