April 29, 2009

முறையற்ற வெற்றி நிரந்தரமாகாது;நிதர்சனமுமாகாது.

விளையாட்டுகளில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் முறையற்ற வழிகளில் ஒருவர் ஈட்டும் வெற்றி எத்தனை காலம் நிலைக்கும் என்பதற்கு எவரும் வாக்குறுதி அளிக்கவியலாது.

2008 பெய்ஜிங்க் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற இருவருடன் மொத்தம் ஆறு பேர் ஊக்க மருந்து உபயோகித்ததாக நேற்று (28.04) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் முன்பு பெய்ஜிங்க் ஒலிம்பிக் போட்டிகளினிடையிலேயே ஒன்பது பேர் ஊக்கமருந்து உபயோகித்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னரே இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மோனிகா என்பவர் ஊக்கமருந்து உபயோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டார்.

இப்படியாக வரலாற்றில் இன்னும் பல நிகழ்வுகள் உண்டு,இன்றளவும் பலர் ஊக்கமருந்து பயன்படுத்தி வருவதாகாவே தெரிகிறது.

முறையற்ற வழியில் வெற்றி ஈட்ட அல்ல எதிரணி வெற்றி ஈட்ட உதவி செய்ததாகவும்,பந்தய நிர்ணயம் (match fixing) செய்ததாகவும் அசாருதீன்,ஜடேஜா,கிப்ஸ்,ஹன்சி குரோனியே போன்ற கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீதும் சில ஆண்டுகள் முன்பு குற்றம் சாட்டப்பட்டது.அதன் பின்னர் அசார்,ஜடேஜா போன்றொருக்கு கிரிக்கெட் ஆட தடையும் விதிக்கப்பட்டது.

முறையற்ற வழி பெற்ற வெற்றிகள் ஒரு வகையில் சந்தோஷத்தை அளித்தாலும் பல வகையில் மன சங்கடத்தையும்,வருத்தத்தையும் ஒரு வித குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தவே அதிகம் வாய்ப்புள்ளது.

அந்த விதத்தில் குற்ற உணர்ச்சி கொண்டு அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ், 2000 ஆம் வருடம் சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் தான் ஊக்க மருந்து உபயோகித்ததாக ஒப்புக்கொண்டு அவர் பெற்ற ஐந்து பதக்கங்களையும் 2007 ல் சர்வதேச ஒலிம்பிக் கழகத்திடம் திருப்பிக் கொடுத்து இரண்டு வருடம் தடகள போட்டிகளில் பங்கு கொள்ள விதிக்கப்பட்ட தடையையும் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் சில தவிர்க்க முடியாத விஷயங்களில் அல்லது சூழ்நிலைகளில் பொய்களைக் கூறியோ; முறையற்ற வழிகளில் சென்றோ தான் வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு விடுகிறது.உதாரணத்திற்கு லஞ்சம் கொடுப்பதையும், பெறுதலையும் கூறலாம்.

வாழ்க்கை பயணத்தில் எத்தகைய போட்டி ஆனாலும், முறையற்ற வழியில் ஈட்டும் வெற்றி எத்தனை காலம் நிலைக்கும் என்பது கேள்விக்குறி தான்(அரசியல்வாதிகளுக்கு இங்கு ஆச்சரியக்குறி இட்டுக் கொள்ளலாம்!!)

"பேராசை பெருநஷ்டம்" என்ற வாக்கிற்கு இணங்க பேராசை கொண்டு தவறான வழிகளில் ஈட்டும் வெற்றியை இன்றல்லது...என்றாவது ஒரு நாள் உலகறியும் போது அந்த வேதனையையும்,வருத்தத்தையும்,வெட்கக் கேட்டையும் அனுபவிப்பதற்கு பதிலாக இருக்கின்றதை வைத்து நிறைவாக வாழ முயற்சிப்போம்.

---------------------------------


கீழே உள்ள புகைப்படத்தில் இன்றைய அரசாங்கங்களின் உயர்பதவியிலிருப்பவர்களில் எத்தனை பேர் நேர்மையாக இருக்கிறார்கள் என்பது நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.பார்த்து, நம் தலை எழுத்தை நொந்துகொள்ளுங்கள்.

2 comments:

கடைக்குட்டி said...

வித்தியாசமான பதிவு தல..

கிறிச்சான் said...

நல்லா இருக்கு கட்டுரை.கார்ட்டூன் கலக்கீட்டு போங்க!

Post a Comment

Related Posts with Thumbnails