February 23, 2016

சுவரொட்டி, விளம்பரப் பலகை மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழகம்

'டிஜிட்டல்’ தொழில்நுட்பம் முறையிலான அச்சுகள் வந்த பின்னர், விளம்பரப் படுத்துதல் என்பது ஒரு புதிய பரிமாணத்திற்குள் காலடி எடுத்து வைத்ததை மறுப்பதிற்கில்லை. வர்ணமயமான, ரசிக்கும் படியான டிஜிட்டல் விளம்பரப்படுத்துதல் என்பது இன்று துதிபாடல்களாலும், தனிமனித விளம்பரப்படுத்துதலாலும், சுய தம்பட்டங்களாலும் அதன் அழகை இழந்து நிற்கிறது.

சிறிய விழாக்கள் முதல் பெரிய மாநாடுகள் வரை டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் வைக்கப்படாத நிகழ்வுகள் இன்று விரல்விட்டு எண்ணக்கூடியவையே. கட்சி விழாக்கள், கோவில் விழாக்கள், கிறிஸ்தவ கூட்டங்கள், திருமணங்கள், திரைப்பட வெளியீடுகள் என எதுவும் இதற்கு விதிவிலக்கில்லை.

ஆளுயரத்திலிருந்து, ஆனை உயரம் வரை வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மூலம் சாமானியன் படும் அல்லல்களுக்கு அளவில்லை. இது போன்ற பலகைகள் @ Flex Board களை வைப்பவர்கள் பேருந்து நிலையங்கள் என்றும், பேருந்து நிறுத்தங்கள் என்றும், நெருக்கடி நிறைந்த போக்குவரத்து வளைவுகள் என்றும், நடைபாதை என்றும் கண்டுகொள்வதில்லை

நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டரங்கத்தின் முகப்பு, எஸ்.எல்.பி பள்ளியின் அருகேயுள்ள நடைபாதை, வேப்பமூடு சந்திப்பிலுள்ள பூங்கா, பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், சிறைச்சாலை என எதையும் விட்டு வைக்கவில்லை விளம்பரப் பலகைப் பிரியர்கள்.

ஒழுகினசேரி 

தேரேகால்புதூர் 

அண்ணா விளையாட்டரங்கம் 

வடசேரி 

 வேப்பமூடு சந்திப்பு 


அண்மையில் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இது போன்ற விளம்பரப் பலகை ஒன்று, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் அகற்றிய காவல்துறை அதிகாரியை பகிரங்கமாக மிரட்டிய அரசியல்வாதிகளைப் போன்றோர் கொண்டிருக்கும் பணபலமும், ஆள்பலமும் தான் இவர்களுக்கு தீனி.

இதில் உச்சபட்ச நகைச்சுவை, இவர்கள் மின்சார வாரியத்தின் Transformer ஐயும் கூட விட்டு வைக்காதது தான். மட்டுமல்லாது ஒரு மாவட்டத்தின் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் 'விளம்பரம் செய்யாதீர்' என்ற எச்சரிப்பிற்குப் பின்னரும், கிறிஸ்தவ கூட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்தியிருப்பதில் இருந்தே இந்த விளம்பரப்படுத்தல் எனும் மன நோயின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.


பதிவுத்துறை அலுவலகம் 

சிறைச்சாலை, நாகர்கோவில் 


கட்சிகள் ஒருபுறமென்றால் மறுபுறம் திரைப்பட ரசிகர்கள், புதிய திரைப்படங்கள் வெளிவரும் போது, கதாநாயகனுடன், இவர்கள் முகங்களையும் சேர்த்து அச்சிடும் விளம்பரப் பலகைகளின் கொடுமை சொல்லி மாளாது. அதே போன்று திருமண வீடுகளிலும், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும் தங்கள் விருப்ப நாயகர்களின் படங்களையும் சேர்த்து அச்சிட்டு வாழ்த்து தெரிவிக்கும் அக்கப்போர்களும் தொடரத்தான் செய்கின்றன. இதே பாணியில் அண்மைக் காலங்களில் கிறிஸ்தவர்களும் இறங்கியிருப்பது தான் ஆச்சர்யம்.

எப்படியாவது ஒரு விளம்பரப் பலகையில் நமது புகைப்படமும் வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஊருக்கு ஊர், இன்று விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது ஒரு வகை மனநோயாகவே மாறியிருக்கிறது. இத்தகைய சுய தம்பட்டங்கள், அரசியல் தலைவர்களை, மதத் தலைவர்களை திருப்திப்படுத்த அச்சடிக்கப்படும் விளம்பரங்கள், வரும் தலைமுறைக்கு மிகத்தவறான முன்னுதாரணமாக அமையும் என்பது தான் இன்னும் வேதனை தரும் விடயம்.

January 06, 2016

எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே!

திரைப்படப் பாடல்களை அதிகம் கேட்டிராத பருவம் அது, கேட்கும் வாய்ப்புகளும் கிடைக்கப் பெறாத காலம். வீட்டில் ஆன்மீகப் பாடல்களைக் கேட்பதற்கென சின்ன நேஷனல் டேப் ரெக்கார்டர் ஒன்றும், செய்திகள் கேட்பதற்கென ஒரு ரேடியோப் பெட்டியும் உண்டு. 

திரைப்படப் பாடல்கள் கேட்பதாக தெரிந்தாலே வீட்டில் அத்தனைக் கோபப்படுவார்கள், சத்தமும் போடுவார்கள். ஆனால் இன்று செல்கிற இடமெல்லாம் டங்காமாரியும், டண்டனக்காவுமாக காதில் வந்து விழுகின்றன. (இவ்விருப் பாடல்களுக்கும் இசையமைத்தது கிறிஸ்தவ நம்பிக்கைக் கொண்டவர்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்)

வீட்டில் இருந்த கெடுபிடிகள் மூலம் இளையராஜாவின் பல நல்ல இசைத்தொகுப்புகள் செவிகளைத் தீண்டாமலே போய்விட்டன. 

எனினும், பதின்ம வயதில், தொண்ணூறுகளுக்குப் பிறகு ரேடியோ அலைவரிசைகளை மாற்றுவது எப்படியென்பதை அறிந்த பின்னர் அப்பா இல்லாத நேரம் ரேடியோவில் சில பாடல்களையாவது கேட்டுவிட முயற்சித்தது உண்டு.

தமிழ்த் திரையுலகையே தன் வசம் வைத்திருந்த இசை சகாப்தமான இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. அப்போது தான் மணிரத்னம் அவர்கள் ரஹ்மான் எனும் இளைஞனை ரோஜா திரைப்படத்தின் வாயிலாக அறிமுகம் செய்து வைக்கிறார். இளைஞன் என்று கூட சொல்ல முடியாத  அளவிற்கு உருவத்தில் சிறுவனாய் ரஹ்மான் இருந்தார்.


1992 ல் 'சின்னச் சின்ன ஆசை' பாடல் ஒலிக்காத தெருக்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான். 

மின்மினியின் வசீகரக் குரல் 'சின்ன சின்ன ஆசை'க்கு அத்தனைப் பொருத்தம். ரோஜா திரைப்படம் வெளியான பின்னரும் ரேடியோவில் அடிக்கடி அந்த பாடலை ஒலிக்கச்செய்து கொண்டிருந்தார்கள். 

தமிழில் மட்டுமல்லாது 'சோட்டி சி ஆஷா' என இந்தியிலும் வெளியான 'சின்ன சின்ன ஆசை' இந்தியா முழுவதையும் ஒரு புதுவிதமான இசையை அனுபவிக்கச் செய்தது அன்று. 

இருபத்தைந்து வயது மட்டுமே நிறைந்த ஒரு இளம் இசையமைப்பாளரை இந்தியா 1992 ல் ரோஜாவிற்காக கொண்டாடியது. இன்று உலகம் முழுவதும் அவர் கோலோச்சாத இசைமேடைகள் இல்லை எனும் அளவுக்கு திலீப்குமார் @ அல்லா ரக்கா ரஹ்மான் வளர்ந்திருப்பதற்கு காரணம் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், அலட்டல் இல்லாத அவரது எளிமையும், ஆன்மீகப் பாதையுமே. 

அன்று ரஹ்மானை ரசிக்கத் தொடங்கியவன் இன்றும் தொடர்கிறேன். தென்றலே தென்றலே, ஓர் வெண்ணிலா - காதல்தேசம்; நேற்று இல்லாத மாற்றம் - புதியமுகம்; வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்; தொடத்தொட - இந்திரா; அன்பென்ற மழையிலே - மின்சாரக்கனவு; நேற்று அவள் இருந்தாள் - மரியான்; சித்திரை நிலா - கடல் என தொடர்கிறது நான் அதிகம் விரும்புகிற ரஹ்மானின் பாடல்கள். 

இன்று பிறந்தநாள் காணும் இசைப்புயலுக்கு வாழ்த்துகள். 

December 24, 2015

சந்தைப்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் @ இயேசுவின் பிறப்பு


வியாபாரமயமாக்கப்பட்ட இன்றைய உலகம், இயேசுவின் பிறப்பை நினைவுகூறும் காலங்களையும் விட்டுவைக்கவில்லை. 

யகூதா என்றறியப்படுகின்ற யூதேயாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவரான  יֵשׁוּעַ (Yeshu'a in Aramaic ) இயேசுவை, இந்த குளிர்காலங்களிலே ( டிசம்பர் 25 முதல் ஜனவரி 19 வரையிலான இடைப்பட்ட நாட்களில்) யூலே, கிறிஸ்துமஸ், எக்ஸ்மஸ், நோயல் என பல பெயர்களில் நினைவுகூர்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் அதாவது ஏறத்தாழ 6-12 நூற்றாண்டுகளில் இவ்விதம் நினைவு கூர்வதில் எவ்வித சந்தைப்படுத்தலோ, வியாபார நோக்கமோ இல்லையெனினும் அண்மைக் காலங்களில் இயேசுபிறப்பின் நினைவு கூறலை கிறிஸ்துமஸ் என்ற அடைமொழியோடு சந்தைப்படுத்தி, வியாபார களமாக்கி விட்டது தான் இம்மானுடத்தின் சூட்சுமம். 

வாழ்த்து அட்டையில் இருந்து ஆரம்பிக்கும் இந்த சந்தைப்படுத்தல், புத்தாடை, அலங்காரம், பட்டாசு, சான்டா கிளாஸ், சிவப்பு வர்ண தொப்பி, நட்சத்திர விளக்கு, அலங்காரத்தோரணை கொண்ட மரம், மதுபானம், கேக் என இன்னும் நீள்கிறது. 

மேற்கத்திய கலாச்சாரத்தை ஒரு போதையாகப் பார்ப்பவர்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் இரட்டிப்புப் போதை. 

அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 30-35 மில்லியன் அலங்கார மரங்கள் விற்கப்படுவதாக history இணையதளம் குறிப்பிடுகிறது. 

அமெரிக்காவில் மட்டுமே இப்படியான மூடத்தனத்திற்கு இவ்வளவு பணம் விரயமாகிறது என்றால் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்ட இந்த கிறிஸ்துமஸிற்கு எவ்வளவு பணம் விரயம் செய்யப்படுமென்பது ஊகிக்க முடியாதது. 

பணம் செழுத்தவன் விரயமாக்குவதில் இங்கு எவர்க்கும் நட்டமில்லை, மாறாக இவர்களைப் பார்த்து நாமும் அலங்காரப்படுத்த வேண்டும் என்று கடன் வாங்கி பிச்சைக்காரனாகும் பாமரன் தான் இந்த சந்தைப்படுத்தலில் விழுந்து போகிறான்.

விவேகானந்தரின் கூற்றான "சிக்கனம் என்பது எவ்வளவு குறைவாக செலவு செய்கிறோம் என்பதில் அல்ல; என்ன தேவைகளுக்காக செலவு செய்கிறோம் என்பதில் அடங்கியுள்ளது" என்பது தான் இந்த சந்தைப்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் காலங்களில் நாம் நம்மைக் கேட்க வேண்டிய கேள்வி. 

அதோடு இயேசுவின் பிறப்பையே, மேசியா(கிறிஸ்து)வின் பிறப்பு என்று அடையாளப்படுத்தி இந்த சந்தைப்படுத்தலை உலகமயமாக்கியது தான் அரசியல் வியாபாரிகளின் தந்திரம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளல் அவசியம். 

December 17, 2015

சென்னை வெள்ளத்தில் வெளுத்த கிறிஸ்தவ சபைகளின் சாயம்!

சென்னையில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடிந்தபாடில்லை; நிவாரணப்பணிகள் முழுமையாக சாமானியனை சென்று அடையவுமில்லை; குப்பைமேடுகளும், காசிமேடுகளும், முழுமையாக சுத்தமாக்கப்பட்டு மக்கள் குடுயேறும் நிலைக்கு வரவில்லை; அதற்குள்ளாக கிறிஸ்தவ வியாபாரிகள் டிசம்பர் 12 ஆம் தேதி புதுவாழ்வு ஏஜி சபையில் திறப்பின் வாசல் ஜெபம் என்பதன் பெயரில் தங்கள் சுயமுகத்தை மீண்டும் காண்பித்திருக்கிறார்கள்.

சாமானியர்களும், நெஞ்சில் ஈரமுடையவர்களும், தன்னார்வலர்களும் களத்தில் நின்று உதவிகளும், நிவாரணப்பணிகளும், சுகாதாரப்பணிகளும், மருத்துவப் பணிகளையும் செய்து வரும் இத்தருணத்தில் இவர்கள் ஜெபம் செய்கிறார்கள் (அதையும் விளம்பரப்படுத்தித் தான் செய்கிறார்கள்!!) அதிலும் சென்னையைப் பேரழிவிலிருந்து காத்த தேவனுக்கு நன்றி என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள் (அதாவது இவர்கள் பணம் ஈட்டுகின்ற தலைநகரத்தை முழுமையாக அழிக்காததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள் போலும்!!)


"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்கிற மத்தேயு 6:5 ஐ அறியாதவர்களா இந்த வியாபாரிகள்!!

ஜெபம் என்பதன் பெயரில், இது போன்ற சுய தம்பட்டங்களைத் தவிர்த்து இவர்கள் தலைமையில், இவர்களுக்கு கீழிருக்கும் மக்களை ஒருங்கிணைத்து களமிறங்கியிருந்தாலே, இந்நேரம் சென்னை சுத்தமாகியிருக்குமே! களப்பணி ஆற்றுவதிலிருந்து இவர்களை தடுப்பது எது?

 ஓய்வு நாளாதலால் ஜெபமும், போதனையும் தவிர்த்து உதவி செய்தல் ஆகாது என்று இறுமாப்புக் கொண்ட சீடர்களை இவர்கள் வணங்கும் இயேசு கடிந்து கொண்டதை அறியாதவர்களா!! இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். மத்தேயு 12:10-12

இந்த சிறியவர்களுக்கு எவனொருவன் செய்யாமலிருக்கிறானோ அது பரலோகத்திலிருக்கும் பிதாவுக்கு செய்யாமற் போனதாகும் என்பதையும் அறியாத பதர்களா இவர்கள்!! மத்தேயு 25:34-46

கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது என்பதையேனும் அறிவார்களா இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். யாக்கோபு 2:16-20

நற்போதனைகளைத் திரித்து மக்களுக்கு எடுத்துரைப்பதாலும், நற்செயல்கள் செய்ய இவர்கள் கைகள் குறுகியிருப்பதும் கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு புகழைச் சேர்ப்பதுமல்ல.

மக்களிடம் இருந்து காணிக்கை என்பதன் பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு மக்கள் அவர்களையும் அறியாமலே பலியாவது தான் வேதனை தரும் விடயம். மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளல் அவசியம்.

வியாபாரமாக்கப்பட்ட இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளிடம் மனிததத்தையும், சக மனிதனுக்கு உதவும் திராணியையும் எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்த்தனம் என்பது மட்டும் புரிகிறது.

October 27, 2015

கிரிக்கெட் எனும் பெரும் கனவு

கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு சராசரி இந்திய இளைஞனைப் போலவே நானும் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். வீட்டில் இருக்கும் பட்சத்தில் இந்திய ஆட்டங்கள் என்றால் ஆட்டம் துவங்கும் முன்னரே தொலைக்காட்சிப்  பெட்டிக்கு முன்னதாக  அமர்ந்து விடுதல் வழக்கம். 

ஐந்து  வயதில் இருந்தே கிரிக்கெட் என்றால் அத்தனைப் பிரியம். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது வீட்டில் தொலைக்காட்சி வாங்கி வைக்கும் அளவிற்கு வசதி இல்லை. 

அந்த சமயம் மார்த்தாண்டம் எல்.எம். துவக்கப்பள்ளியில்  ஐந்தாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 1992 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை ஆட்டங்களின் ஒளிபரப்பு உரிமையை  அன்றைய ஸ்டார் டிவி  (ஆரம்பத்தில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ்) நிறுவனம்  வாங்கியிருந்தது. 


நான்கு மணிக்கு எப்போது மணி அடிப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பேன், மணி அடித்ததும் பையை தலையில் போட்டுக் கொண்டு எந்த கடையில் கிரிக்கெட் காண்பிக்கப்படுகிறது என்பதை அறிய ஒவ்வொரு கடையாக ஏறிட்டுப் பாத்துச் செல்வேன். 

நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், அன்றைய திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப்  பணிமனையிலிருந்து சற்று கீழ்ப்புறம் அமைந்திருக்கும் ஸ்டார் லாட்ஜ் ல் தான் வழக்கமாக கிரிக்கெட் பார்ப்பதுண்டு. 

நேரலையானாலும், பழைய ஆட்டங்களானாலும் கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் இன்னும் ஒரு ஓவர் பார்த்து விட்டு வீட்டிற்குக் கிளம்பி விட வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் அடுத்த ஓவரின் இறுதியிலும் இன்னும் ஒரே ஓவர் பார்த்து விட்டு சென்று விடலாம் என்கிற அதே எண்ணம் தான் வந்து செல்லும். 

அப்படிப் பார்த்துப் பார்த்து ஒரு நாள் இரவு 7 மணி ஆகி விட்டது. வீட்டில் அனைவரும் அன்று ஒரு நாள் பதட்டப்பட்டதோடு சரி. அதன் பின்னர் நான் தாமதமாக போனால் கூட 'அவன் எங்கயாவது கிரிக்கெட் பாத்திட்டிருப்பான்' என்று சமாதானப்பட்டுக் கொள்வார்கள். எனினும் ஆறரை மணிக்குள் வீடு திரும்பி விடுவேன். 

அத்தனை மோகம் கொண்டிருந்தும்  முழுநேரமாக  கிரிக்கெட் ஆடுவதற்கு மட்டும் வீட்டில் சம்மதம் இல்லை. நண்பர்களுடன்,  பக்கத்து ஊர்களிடையே நடைபெறும் போட்டிகள் வரை மட்டுமே எட்டியிருந்தேன். பிற்காலங்களில், அவ்வப்போது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்திலும், ஜான்ஸ் பள்ளி மைதானத்திலும் நடைபெறும் லெதர் பால் ஆட்டங்களை வேடிக்கை பார்ப்பது வழக்கம். 

இப்படியாக தொடர்ந்த பயணத்தில், சர்வதேச ஆட்டம் ஒன்றை நேரடியாக மைதானத்தில் சென்று பார்த்து விட வேண்டும் என்று வெகுநாள் கனவு கொண்டிருந்தேன், அது சமீபத்தில் தான் நிறைவேறியிருக்கிறது, இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் நான்காவது நாள் ஆட்டத்தை காணும் வாய்ப்பை துபாயில் பெற்றேன். 

டெஸ்ட் ஆட்டம் என்பதால் டிக்கெட் எளிதில் கிடைத்தது, தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் நேரடியாக மைதானத்தில் ஆட்டத்தைப் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. சர்வதேச ஆட்டம் என்றாலும் அது சாதாரணமாக மாவட்ட அளவில் ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பது போன்ற உணர்வே தோன்றியது. 

தொலைக்காட்சியில் Replay, மற்றும் பிற Statistics களின் தரவு சேர்க்கப்படுவதால் அதன் சுவாரஸ்யம் கூட்டப்படுகிறது, நேரடியாக மைதானத்தில் ஆட்டத்தைப்  பார்ப்பதன் அனுபவம் சிறப்பானது என்றாலும் மைதானத்தின் எந்த பகுதியில் உட்கார்ந்திருக்கிறோம்  என்பது தான் நமக்கான காட்சியைத் தீர்மானிக்கிறது. 

எப்படியாயினும் வெகுநாளைய கனவு நனவானதில் ஒரு திருப்தி. 









August 27, 2015

நல்ல நாள் பார்க்கும் கிறிஸ்தவர்கள்

சமீபத்திய பதிவுகள் அனைத்தும் கிறிஸ்தவம் சார்ந்தும், சமயங்கள் சார்ந்துமே இருப்பதை மறுப்பதற்கில்லை. பெற்று வருகின்ற பெரும்பாலான அனுபவங்கள் சமயம் சார்ந்து இருக்கின்ற படியால் இப்படியாக பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்தின் பிற மாவட்டங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், கிறிஸ்தவர்கள் என்று அறியப்படுபவர்களையும்!! கொண்டிருப்பதை பலரும் அறிந்ததே.

பெரும்பாலும் மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர்களை உடைய குடும்பங்கள் தான் குமரி மாவட்டத்தில் அதிகம். அதில் பெரும்பாலான குடும்பங்கள் இரண்டாம் தலைமுறை பட்டதாரிகளையும் கொண்டிருக்கின்றன.

நாள், நேரம், நட்சத்திரம், ஜாதகம் மற்றும் இன்னபிற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தவர் தான் கிறிஸ்தவர்கள் தெய்வமாக வணங்கும் 'இயேசுகிறிஸ்து'. ஆனால் இன்று, மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் அதிலும் பட்டதாரிகள் கூட மூட நம்பிக்கைகளில் ஒரு பிடியை வைத்திருப்பதைத்தான் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

இன்று (27/08/2015) தற்செயலாக அரசன்குழியில், திருமணம் நடைபெறும் ஆலயம் வரை செல்ல வேண்டியதாயிற்று. அரசன்குழியில் திருமணம் நடத்தும் போதகரை அந்த திருமணம் முடிந்து இறச்சகுளம் அருகில் இருக்கும் டென்னிஸ்புரம் ஆலயம் வரை கொண்டு சென்று விட வேண்டியிருந்தது. டென்னிஸ்புரத்தில் மற்றுமொரு திருமணத்தை அதே போதகர் நடத்த வேண்டிய கட்டாயம். (பெண் வீட்டார் அழைப்பின் படி)

10:20 ற்கு முடிய வேண்டிய திருமணம், மாப்பிள்ளை வீட்டாரின் தாமதத்தால் மணி 10:50 கடந்தும் முடிந்தபாடில்லை. மற்ற வீட்டிலிருந்து போதகருக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கவே,  போதகரை அரசன்குழியில் இருந்து டென்னிஸ்புரத்திற்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றேன்.

இவ்விரு திருமணங்கள் மட்டுமல்லாது துவரங்காடு, திட்டுவிளை மற்றும் இறச்சகுளம் போன்ற பகுதிகளிலும் திருமணங்கள் நடைபெற்றன. இத்தனை திருமணங்கள் ஒரே நாளில் வைப்பதன் பின்னணியை ஆராய்ந்தால் அது நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் சார்ந்த விஷயமாகத்தான் இருக்கும்.

இன்றும் அதற்கு விதிவிலக்கல்ல, நாட்காட்டியின் பஞ்சாங்கத்தில் இன்று முகூர்த்த நாள் எனவும், 10:45 முதல் 11:45 வரை நல்ல நேரம் என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து நல்லதைச் செய்வார், நல்லதையே செய்வார் என விசுவாசிக்கிறவர்கள் நல்ல நாளும், நல்ல நேரமும் பார்த்து திருமணம் செய்வதும், செய்துவைப்பதும் முரண்.


பாமர ஜனங்கள் தான் மூடநம்பிக்கைகளில் இன்னும் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்றால் போதகர்களும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அவர்களது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஆச்சர்யம் தருகிறது. நிச்சயமாகவே, நாசரேத் ஊரைச் சார்ந்த இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதிலும், கிறிஸ்தவன் என்று பெயரளவில் சொல்லிக்கொள்வதற்குமிடையே அதிக வித்தியாசமிருப்பதை மறுப்பதற்கில்லை.

August 16, 2015

மதுவிலக்கு - களியக்காவிளை - மலையடி குமார் பேச்சு



சசி பெருமாள் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து ஆளுங்கட்சியைத் தவிர்த்து பிற கட்சிகள் அனைத்தும் டாஸ்மாக் ஒழிப்பிறகு ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சில தினங்கள் முன்னர் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சொந்த அலுவல் நிமித்தம் தமிழக-கேரள எல்லையில் இருக்கும் காரக்கோணம் மருத்துவக்கல்லூரிக்கு 13 ஆம் தியதி செல்ல வேண்டியிருந்தது. காரக்கோணம் செல்வதற்கு களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து பிறிதொரு பேருந்தில் பயணம் செய்தாக வேண்டுமென்பதால களியக்காவிளையில் இறங்கினேன்.

இறங்கியதுமே காதில் விழுந்த மலையாள குரலிலிருந்து,  அங்கு அரசியல் கூட்டம் நடைபெறுவதாக அறிய முடிந்தது. சற்றே உன்னித்து கவனித்ததும் அது மது ஒழிப்புக்கு ஆதரவான உரை என புரிந்தது.

அந்த உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில் தமிழில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தாலும் நிகழ்த்தப்பட்ட உரை மலையாளத்தில் இருந்தது என்பதாலும், உரையாற்றியவர் தெளிவான நடையோடு பேசியதாலும் அதனை பதிவு செய்ய ஆரம்பித்தேன். கேரளத்தின் மதுவிலக்கு, தமிழகத்தின் டாஸ்மாக், தோழர் சசி பெருமாளின் மதுவிலக்குக்கு எதிரான போராட்டங்கள் போன்றவைக் குறித்து விரிவாக கருத்துக்களைப் பதிவு செய்தார் உரையாற்றியவர்.

உரையின் இறுதியில் அவரை சந்தித்து அவரது பெயரை அறிந்து கொண்டதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் பரிமாறும் வாய்ப்பும் கிடைத்தது. மலையடி பகுதியைச் சார்ந்த குமார் என்பதாக தெரிவித்தார் அந்த பெரியவர். ஏறக்குறைய 60 வயது இருக்கும் அவருக்கு. இத்தனை வயதிலும் மிகத்தெளிவாக, புள்ளிவிவரங்களோடு, உரை நிகழ்த்துகிறார் என்பது குறித்து பெரிதும் ஆச்சர்யப்பட்டேன். பேச்சை முடித்த கையோடு அவர் மற்றுமொரு இடத்தில் உரையாற்றுவதற்காக புறப்பட்டு சென்றார்.

இப்படியாக மதுவிலக்குக்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையிலும் பிடிவாதம் கொண்டு மது குறைப்பு குறித்து கூட எந்த அறிவிப்பும் வெளியிடாத ஒரு அரசைப் பெற்றிருப்பதற்கு நாம் வெட்கப்படவேண்டும்.

Related Posts with Thumbnails