August 21, 2018

கிரியைகள் இல்லாத விசுவாசமும் பகட்டான கிறிஸ்தவமும்


கிறிஸ்தவம், கிறிஸ்தவர்கள் என்கிற பெயர்களில் இன்றைய தேதியில், இந்த மணிப்பொழுதில் நடந்து வருகின்றவையும், அதன் ஆளுமைகளும், அதிகாரங்களும், மனித நேயத்தின் மீதும், மக்களின் மீதும், நீதி நியாயங்களின் மீதும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நாம் உணர்தல் அவசியம்.

ஆராதனை என்கிற பெயர்களில் போடுகிற சத்தமும், கூச்சலும் எம்மனிதரையும் முகம் சுளிக்க வைக்கிற ஒன்று. 2015 டிசம்பர் காலங்களில் இதே போன்றதொரு சந்தர்ப்பத்தில் தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரிந்து வரும் நண்பர் ஒருவர் பகிர்ந்த சில கருத்துகளை குறிப்பிட்டாக வேண்டும்.

“பஜனை என்கிற பெயர்களிலும், கேரல் என்கிற பெயர்களிலும், பிரார்த்தனை என்கிற பெயர்களிலும் ஒலிபெருக்கிகளை வைத்துக் கொண்டு ஆன்மீக வாதிகள் என்றழைக்கப்படும் சில கோமாளிகளால் பாதிக்கப்படுவது முதியவர்களும், குழந்தைகளும், படிப்பில் ஆழ்ந்திருக்கும் மாணவ மாணவிகளும், வியாதியில், மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் தான்” என்று கருத்துப் பரிமாறியிருந்தார் அவர்.

மத் 6:5 அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்.

ஒபாமா அவர்களின் ஓய்விற்கு முந்தைய உரையை சமீபத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அவர் முன்னிறுத்திப் பேசியதும், அதைத்தான்; மனித மனங்கள் மாறாமல், மனிதருடைய இருதயங்கல் மாறாமல், சட்டங்கள் மாறுவதினாலோ, அமைப்புகள் மாறுவதினாலோ சமுதாயத்தில் அமைதியையும், ஒழுக்கத்தையும் கொண்டு வருதல் இயலாது என்றார்.

மத் 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

Salvation Army தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆன்ட்ரே காக்ஸ்  The Whole World Mobilising என்கிற நோக்கத்தில் அதைத்தான் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

By being clean in our heart and to reach out people and to stand for what is right.

மத் 6:7 அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், அவர்கள் அதிக வசனிப்பினாலே தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள் 

வேதாகம வசனங்களை படிக்கும் போது அது எதற்கு சொல்லப்பட்டது, யாருக்கு சொல்லப்பட்டது, ஏன் சொல்லப்பட்டது என்பது குறித்த தெளிவு மிக அவசியம். The 7 Ws are very important Why? When? What? Where? Who? Which? HoW?

இதுவறியாமல் வேதாகமத்தை வாசிப்பது குழப்பத்தையே உருவாக்கும். ஒருமுறை ஷார்ஜா AG சபையில் ஆராதனைக்காய் சென்றிருந்த போது, சங்கீதங்களில் இருந்து ஒரு பகுதியை வாசித்த பல பட்டங்களைப் பெற்ற ஒருவர் “சேலா” என்பதையும் சேர்த்தே வாசித்தார்.

சேலா என்பது என்னவென்ற புரிதல் இல்லாமல் வாசித்தவர் போலத்தான் இன்று நம் நிலைமையும். `சேலா` என்பது இசையில் வரும் Interlude.

சங் 3: 2, 4, 8

யாத் 20:8 ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

ஓய்வு நாளை ஓய்ந்திருந்து ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும், இல்லையென்றால் தேவ கோபாக்கினை வரும் என்று அதன் சாராம்சம் புரியாமல், வெறுமனே குற்றம் சாட்டுவதில் இங்கு எதும் மாறி விடப் போவதில்லை.

அப்படியென்றால் ஓய்வு நாட்களில், Emergency Room களிலும், Critical Care களிலும், மருத்துவமனைகளிலும், முதியோர் இல்லங்களிலும் பணிவிடை செய்பவர்கள் எல்லாரும் சாபத்தையே பெறுவார்களா?!!

மத் 12:5 அன்றியும் ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாயலத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

மத் 12:11 உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து அது ஓய்வு நாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்து தூக்கிவிடமாட்டானோ?

மத் 12:12 ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயந்தான் எனறு சொன்னார்.

இவ்விதம் நியாயத்தைப் பேசினவருக்கும், பேசுபவர்களுக்கும் பொதுவாக என்ன சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...

மத் 12:14 அவரைக் கொலைசெய்யும் படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைப் பண்ணினார்கள்.

இன்று வேதாகமம் வாசிக்கப்படுகிறது, காலை 5 மணிக்கு ஜெபம்; மீண்டும் 7 மணிக்கும் 8 மணிக்குமாக பணியிடங்களிலும், ஆலயத்திலும் ஜெபம்; ஆலயத்தை கடந்து போகையிலெல்லாம் உள்ளே சென்று ஜெபித்து கடந்து செல்வது... என ஜெபமும், வேதாகம வாசிப்பும் முற்றிப் போனதின் விளைவு என்ன?

கீழ்ப்படியாமையும்,நேரந்தவறுதலும், உண்மைக்குப் புறம்பானவைகளைப் பேசுவதும், தொடர்கிறதென்றால், நாம் ஆலயத்திற்கு செல்வதும், ஒரு நாளைக்கு 5 முறை ஜெபம் பண்ணுவதாலும் என்ன ஆகி விடப் போகிறது.

நீதி 19:1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப் பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.

எனவே இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு என்பதை மனதில் கொண்டு, எண்ணங்களில் ஆகாயத்தில் பறக்க ஆசைப்படாமல், நம் சுய கால்களில் நிற்க பழகுதல் அவசியம்.

I கொரி 7:31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும். இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே.

I யோவான் 3:18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்

யாக் 2:24-26 ‘ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே’ ‘அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக் கொண்டு வேறு வழியாய் அனுப்பி விட்ட போது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?’

“அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது போல, கிரியைகளிலில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.  

தேவையிலிருப்போருக்கு உதவுவோம், நம் செயல்களினால் மனிதம் போற்றுவோம். 

August 23, 2017

கவலை தரும் கல்வியின் தரம்!

அனைத்துமே வியாபாரமயமாக்கப்பட்ட  இன்றைய  காலகட்டத்தில் கல்வி மட்டும் விதி விலக்கல்ல. தனியார்மயமாக்கப்பட்டதில் ஒரு வகையில் நன்மைகள் இருந்தாலும், கல்வியின் தரம், இன்று பெரும் கேள்விக் குறியே! அதோடு, நேர்முகத்தேர்வைக் கூட நம்பிக்கையுடன்  சந்திக்கும் திறமை இன்றி, வெறும் வெத்து பட்டங்களோடே வெளிவரும் மாணவர்கள்தான் அதிகம்.

வாழ்க்கையைக் குறித்ததான புரிதலையோ; உலகின் மீதான தெளிவான, அகன்ற பார்வையையோ இன்றைய கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறுகின்றன.

வெறும் புத்தகத்தை மட்டுமே நம்பி, புத்தகப்புழுக்களாக மாறிப் போகும் மாணவர்களின் நிலைமை மிக வருத்தத்திற்குரியது. வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த கல்விமுறை மிக ஆபத்தானது; மன அழுத்தத்தைத் தரக் கூடியது என்றும் தாராளமாக சொல்லக் கூடிய அளவிற்கு தான் அதன் தரம் உள்ளது.

தோல்விகளை எதிர்கொள்ளவும்; தோல்விகளில் தரும் பாடங்களில் இருந்து புதிய பாதைகளை அமைத்துக் கொள்தலையும் பயிற்றுவிப்பதற்கு இங்கு ஆசிரியர்களோ, இந்த சமூக கட்டமைப்போ இடம் தராதது பரிதாபத்திற்குரியது/ உயிரை மாய்த்து விட வழிவகை செய்வது,

என்ன தான் ஆங்கில வழியில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பித்தல் இருந்தாலும், தெளிவான, சரியான ஆங்கில உச்சரிப்புகளைக் கூட அறியாத ஆசிரியர்களாலேயே மாணவர்கள் கற்பிக்கப்படுவது பெரும் ஏமாற்று வேலை.

நேற்று பள்ளியில் இருந்து வந்த மகன், க்றிஸ்ட் என்று சொல்லிப் படித்துக் கொண்டிருந்தான். என்னடா அதன் Spelling என்று கேட்டேன், ‘C-h-r-i-s-t என்றான்; அது க்றிஸ்ட் இல்லடா, க்றைஸ்ட் என்றேன்; இல்லை, இல்லை! எங்க மிஸ் இப்பிடித்தான் சொல்லிக்குடுத்தாங்க அப்டின்னான்!

வேறொரு கல்லூரியில் மாணவச் சேர்க்கைக்காக Prospectus வாங்குவதற்காக சென்றிருந்தேன், அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் PROS-PECTAAAS இப்ப குடுக்கிறதில்ல அப்படின்னாங்க; என்னங்கன்னு திரும்ப கேட்டேன்; Prospectus என்பதில் டாவை இன்னும் ஆ போட்டு ப்ரோஸ்பெக்ட்ஆஆஸ் என்றார்கள். பிறகு தான் விளங்கியது, Prospectus என்று.

ஆங்கிலத்தையும் முறையாக கற்பிக்காமல் தமிழிலும் சரிவர புரிய வைக்கத்தெரியாத ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கு கிடைத்த சாபம்.

March 15, 2017

'சிரியா' - 'சிரிய' சிறுவர்கள்

சிறுவனாயிருக்கும் போது என்னைப் பார்க்கையிலெல்லாம் மரியாதைக்குரிய பெரியவர் ஒருவர் 'சிரியா' நாட்டுக்காரன் என்பார். நானும் எதோ வெளிநாட்டுக்காரன் போன்று உவமைப்படுத்திச் சொல்கிறார் போலும் என்று கருதிக்கொள்வேன். ஆனால், நான் சிரிக்காமல் இருப்பதை நையாண்டி செய்வதற்காகவே 'சிரியா' நாட்டுக்காரன் என அழைத்திருக்கிறார்  என்பது தாமதமாகவே புரிந்தது!

இன்று 'சிரியா' வில் இருக்கும் பெரும்பாலான சிறுவர்களும் 'சிரியா' நிலைமையிலே இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். 

கடந்த ஓராண்டில் மட்டும் 652 சிறுவர்கள், குண்டுகளுக்கும், வன்முறைகளுக்கும் பலியாகியிருக்கிறார்கள் என்கிறது ஐ.நா சபை. 

இதை எழுதுகையிலேயே கண்களில் நீர் எட்டிப்பார்க்கிறது எனும் போது, அச்சிறுவர்கள் சார் உறவுகளின் துயரம் நிச்சயம் இருதயங்களை நொறுக்கிப் போடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

ஏழு வயது சிறுவர்கள் சிறைக் காவலாளிகளாகவும், போர்க்களங்களில் ஆயுதமேந்துபவர்களாகவும், மனித வெடிகுண்டுகளாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள். 

பெற்றவர்களைப் போரில் இழந்த நான்கு வயது சிறுவன் வயிற்றிற்காக உணவகத்தில் வேலை செய்வதெல்லாம் பெருங்கொடுமை! இவர்களின் மன ரீதியான உளைச்சலுக்கும், வலிகளுக்கும் இடையே நமது பிரச்சினைகளெல்லாம் ஒன்றுமேயில்லை.


இனியேனும் என் போன்றோர் சிரிக்கப் பழகுதல் வேண்டும்!

Photo Credit: AFP 

July 08, 2016

விபத்துகளும் - வேதனைகளும் - தொடரும் சமூக அலட்சியங்களும்

அண்மை காலங்களில், தினசரிகளைத் திறந்தாலே பக்கென்றிருக்கிறது. நின்று கொண்டிருப்பவர் முதல் பயணம் செய்பவர் வரை விபத்துகளால் மடிவது மிகச் சாதாரணமாகிப் போய் விட்டது. பல வழிகளிலும் பாழ் படிந்த நம் சமூகக் கட்டமைப்பையே இதற்கு முழு முதற் காரணமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

தமிழகம், இந்தியாவிலேயே அதிக விபத்துகளை எதிர்கொள்கிற மாநிலமாகத் திகழ்வதாக, கடந்த ஆண்டின் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.

போக்குவரத்து விதிகளையும், சட்டங்களையும் கடைபிடிக்கத் தவறும்  இந்த சமூகமும், தவறுபவர்களைத் தண்டிக்க வேண்டிய போக்குவரத்து காவல்துறையினர் தமது பணியை நிறைவேற்ற தவறுவதும், ஊழல் பேர்வழிகளால் அமையப்பெற்ற தரமற்ற சாலைகளும் மிகவும்  வருத்தப்பட வேண்டிய விடயம் மட்டுமல்லாமல், வெட்கப்பட வேண்டிய விடயமும் கூட.

எதிர்பாரா நிகழ்வை விபத்து என்று கணக்கில் கொள்ளலாம், ஆனால் வரைமுறைக்கு அதிகமான வேகத்தில் சென்றால் விபத்து ஏற்படும் என்பதறிந்தும்; தலைக்கவசம் அணியாமல் சென்றால் உயிருக்கு ஆபத்து என்பதறிந்தும்; இடம் வலம் திரும்பும் முன்னர் சைகை காண்பித்த பின்னரே திரும்ப வேண்டும் என்பதறிந்தும்; பின்பற்றாமல் ஏற்படுத்தும் மோதல்களை விபத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளல் ஆகாது. அவை கொலை/தற்கொலைகளாகவே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.


சமுக அக்கறையின்றி, வெறும் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்து வரும் இந்த சமுதாயமானது, சட்டங்களையும், விதிகளையும், வெறும் ஏடுகளில் உறங்கும் எழுத்துக்களாகவே தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயம்.

விதிமீறல்கள், எந்தவொரு குற்ற உணர்ச்சியுமில்லாமல் அப்பட்டமாக இங்கு செய்யப்படுவது தான் நம் சமூகத்தின் மிகப் பெரிய நோய்! எப்படி ஒரு அமைச்சர் காலாற நடந்து சென்று மக்களின் குறைகளைக் கேட்பதென்பது நம் சமூகத்தில் சாத்தியமில்லையோ, அதே போன்று, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர், தண்டனைகளுக்கு அஞ்சுவது என்பதும் இங்கு சாத்தியமில்லை.

ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், பிரதிபலிப்புக் கண்ணாடிகள் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் (குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள்)  தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், அதி வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கு தாண்டுதல்  என விதிமீறல் செய்வோர் தினம் தினம் லட்சக்கணக்கானோர்.

இப்படியாக விதிமீறல் செய்பவர்களால் கடந்த ஆறு மாதங்களில், இருமுறை சிறிய காயங்களுடன் இருசக்கர வாகன விபத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். (இரு தினங்கள் முன்னர் சரக்கு வாகனம் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் 24 வயதே நிரம்பிய சகோதரர் ஒருவர் சென்னையில் மாண்டிருக்கிறார்).

அப்படியே விதிமீறல் செய்வோர், போக்குவரத்துக் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டாலும், எனக்கு இன்னாரைத் தெரியும், நான் அன்னாரின் உறவு என்று கூறி சமாளித்து விடுகிறார்கள். மறுபுறம் காவல்துறையினர், அரசு அலுவலகங்களில் பணியிலிருப்பவர்களையும், அரசியல் செல்வாக்கு உடையவர்களையும் அவர்களுக்கு பரிச்சயமானவர்களையும் எவ்வித சோதனைகளுக்குள்ளாக்குவதுமில்லை.

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் இருந்தும் அதை அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம் கொடுத்து வைத்தலும், காவல்துறையினரைக் கண்டால் மட்டுமே அதைத் தலையில் அணிவதும். நான்கு சக்கர வாகனங்களில், இருக்கைப் பட்டையை (சீட் பெல்ட்) காவல்துறையினரின் சோதனையின் போது மட்டுமே அணிவதும், சிவப்பு விளக்கு நிறுத்தங்களில், காவல்துறையினர் இல்லாவிடில் எளிதாகக் கடந்து செல்லுதலும் நம்மவர்களுக்கு கைவந்த கலை.

இவை போன்றதான நம் சமூகத்தின் ‘ஏனோதானோ’ பழக்கவழக்கங்களும், பெரு வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகளையும், சிறு வாகன ஓட்டுனர்களையும் (குறிப்பாக மிதிவண்டிகளை) ஏளனமாகப் பாவித்தலும், போக்குவரத்து விதிமுறை மீறல்களும், கண்காணிப்புப் புகைப்படக் கருவிகள் இல்லா நிலையும், பாதசாரிகளுக்கான நடைபாதை ஆக்கிரமிரப்புகளைக் கண்டுகொள்ளாமையும், விதிமுறைகளை சரிவர நடைமுறைப் படுத்தாமையும், காவல்துறையின் கண்டுகொள்ளாமையும், மிக மோசமான சாலைகளும் மாறாத வரை, விபத்துகள் @ கொலைகளும், தற்கொலைகளும் தொடர்ந்து நிகழவே அதிகம் வாய்ப்பிருக்கின்றது. 

May 19, 2016

தேர்தல் முடிவுகளும், புரிதலும்

இந்த முறை மக்களை மொத்தமாக குறை சொல்லி விடவும் முடியாது. சற்று தெளிவாகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். வாக்கு சதவீதம் குறைந்தாலும் சென்ற ஆட்சிக்கெதிரான அதிருப்தியை சென்னையிலும், குமரியிலும் காண்பித்திருக்கிறார்கள். வளர்மதி, கோகுல இந்திரா, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் போன்றோரை தோற்கடித்திருக்கின்றனர். சரத்குமார் எனும் கருவேப்பிலையை தாளித்திருக்கிறார்கள். தெளிவற்ற விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக வினர் தோற்கடிப்பட்டு அவர்களின் வாக்கு சதவீதம் சரிக்கப்பட்டு இருக்கிறது. 

இனவாத அரசியல் செய்த சீமான் விரட்டப்பட்டிருக்கிறார். சாதி அரசியல் செய்கின்ற அன்புமணி அவரது சொந்த மண்ணிலேயே வீழ்ந்திருக்கிறார். 

திருமாவளவனை வெற்றி பெற வைக்கவே போராடியிருக்கிறார்கள், ஆனால் அவர்,சூழ்ச்சியால் வெறும் 87 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். 
கம்யூனிஸ்ட் தோழர்கள் கூடாநட்பில் சேர்ந்து வாங்கிக் கொண்டார்கள். 

கோவை. தெற்கில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வானதி தோற்றது போன்ற ஒரு சில தொகுதி வேட்பாளர்களே ஏமாற்றம் தந்தாலும் திமுக, அதிமுக வின் பிற வேட்பாளர்களை மக்கள் ஆதரித்திருப்பதில் அதிகம் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. 

காரணம் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற வேட்பாளர்களும் அந்த அளவிலேயே இருந்தனர். 

சிலர் பணத்திற்கு வாக்கு செலுத்தியிருந்தாலும், பணம் மட்டுமே இந்த முடிவுகளை தீர்மானித்திருக்கின்ற்ன என்று எளிதில் சொல்லி விடவும் முடியாது. 

தேர்தல் நேரங்களில் மக்கள் பணத்தை இயல்பாகவே எதிர்பார்க்கிறார்கள். வாங்கக்கூடாது என்று பலமுனை தாக்குதல் தொடுத்தாலும்... அவர்களாக தருகிறார்கள் உங்களுக்கு ஏன் வலிக்கிறது என தேர்தல் அலுவலர்களிடமே மல்லுக்கு நிற்கிறார்கள். 'அரசு அலுவலகத்திற்கு சென்றால் எங்களிடம் பிடுங்குகிறார்கள் தானே' 'இப்போது நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நேரம்' என்று தெளிவாக இருக்கிறார்கள். 

பணம் எவரிடமிருந்து கிடைக்கப்பெற்றாலும் அவர்கள் எவருக்கு வாக்களிக்க வேண்டுமென்றிருக்கிறார்களோ அதையே செய்வார்கள். 

ஆக இங்கு முன்மாதிரியான தலைவர்கள் இல்லாதவரை மக்களில் ஒரு சாரார் தொடர்ந்து வாக்குகளை வியாபாரப் பொருளாக பாவிப்பதையே தொடர்ந்து செய்வர். 

எப்படியாயினும் தமிழகத்தில் இதுவரையில்லாத அளவிற்கு ஒரு வலுவான எதிர்கட்சி பலம் சட்டமன்றத்திற்குள் நுழைவதே இந்த தேர்தலின் வெற்றி தான். ஒரே குறை கம்யூனிஸ்ட்கள் அந்த பட்டியலில் இல்லையென்பதே!


May 17, 2016

வாக்குப்பதிவு சதவீத குறைவும் - மக்களின் அலட்சியமும் - தேர்தல் ஆணையமும்

அதென்னவோ தெரியல, சென்னையும், கன்னியாகுமரியும் திரும்பத் திரும்ப வாக்குப்பதிவு சதவீதத்தில் சுணக்கம் காண்பித்து வருகின்றன. இத்தனைக்கும் கற்றவர்களை அதிகம் கொண்டிருக்கின்றன இவ்விரு மாவட்டங்களும். 

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே மிகக்குறைவாக சென்னையிலும், குமரியிலும் 68 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்த முறையும் சென்னையில் 60% குமரியில் 66% அளவிற்கே வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
தமிழகம் நூறு சதவீதம் என்ற நோக்கத்தோடு தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் சென்னை மிகக் குறைவான வாக்குப்பதிவைக் கண்டிருப்பது சில விடயங்களை நமக்கு உணர்த்துகிறது.
முதல் முறை வாக்காளர்கள் அதிகம் வாக்களிக்கவில்லையா என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும், 2011 ஐ விட 2016 ல் பத்து சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் சென்னையில் பதிவாகியிருப்பதற்கு அது ஒரு பெரிய காரணியாக இருந்து விடும் என்று சொல்வதிற்கில்லை.

டிசம்பரில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு பலரும் சென்னையை விட்டு வேறு மாவட்டங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து விட்டதால் கூட குறைவான வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது.
அப்படியே இடம் பெயர்ந்திருந்தாலும், தேர்தலுக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்டதான நான்கு மாத கால இடைவெளியில் முகவரி மாற்றம் செய்து அவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்க முடியும்.
தேர்தல் ஆணையம் பழைய முகவரியில் இருக்கும் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சதவீதத்தைக் குறைத்திருக்ககூடும். ஆனால் ஓட்டுப் போடுவதால் என்ன ஆகி விடப் போகிறது என்கிற மனநிலையில் இருப்பவர்களால் இதெல்லாம் சாத்தியமில்லை.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வதும் சாத்தியமான ஒன்றே. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் பிழைப்பிற்காக குடியேறிய பலர் அவர்கள் சொந்த மாவட்டங்களில் ஒன்றும், சென்னையில் ஒன்றுமாக இரட்டைப் பதிவு செய்திருப்பார்கள். இதுவும் வாக்குப்பதிவு சதவீதத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்த சாத்தியமான ஒன்று.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் ஒருபுறம் தவறு செய்கிறார்களென்றால் மறுபுறம் தேர்தல் ஆணையம் இது போன்ற இரட்டைப் பதிவுகளை சரிவர கணக்கில் கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகிறது. உதாரணத்திற்கு, இரு வருடத்திற்கும் மேலான எனது முகவரி மாற்றத்திற்குப் பின்னரும் எனது பெயர் நெல்லை வாக்காளர் பட்டியலில் இன்னும் தொடர்கிறது. அதனை நீக்குமாறு இருமுறை வேண்டுகோள் விடுத்தும் இன்னும் நமது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
இவையெல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய விடயம் நமது மக்களின் அலட்சியம். படித்தவர்களை விட படிக்காதக் கிராமப்புற மக்கள் அதிகம் வாக்குப்பதிவு செய்வது கண்கூடு. வாக்களிப்பதால் என்னவாகி விடப் போகிறது, எவர் வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் போகிறார்கள் என்ற பரவலான பேச்சு பலருக்குள் இல்லாமலில்லை.
வாக்களிப்பதை ஒரு கடமையாகக் கருதாமல், நமது உரிமையாக கருதும் நிலைமை இருந்தால் வாக்குப் பதிவு சதவீதத்தில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்குப் பதிவு சதவீதம் வரும் தேர்தல்களில் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.
அதோடு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருக்கும் வாக்காளர்களுக்கு தபால் மூலம் அல்லது கணினி மூலமாக Online வாக்கு அளிக்கும் வாய்ப்புகள் குறைத்து தேர்தல் ஆணையம் வரும் காலங்களில் ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

நாகர்கோவில்
17.05.2016

May 01, 2016

தற்'போதை'ய தமிழகம்!

என்ன கொடுமைடா இது! என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கின்றது தமிழகத்தில் தற்போதைய நிலைமை. பத்திரிக்கையைத் திருப்பினால் விபத்து, கொலை, கொள்ளை, மோசடி, வரதட்சணைக் கொடுமை, கடத்தல், கற்பழிப்பு என பட்டியலிடப்படும் தனி மனித அல்லல்கள் ஒரு புறமென்றால், மறுபுறம், அந்த கட்சி சரியில்லை, இந்த கட்சி இவ்வளவு கொள்ளை என பட்டியல் போடப்படும் அரசியல் கட்சிகளின் வெறித்தனங்கள் பக்கங்களை நிரப்புகின்றன.
தொலைக்காட்சியைத் திருப்பினால் எந்நேரமும் எவரேனும் நாங்கள் இதைச் செய்வோம்! அதைச் செய்வோம்!! என கூவிக் கொண்டிருக்கின்றனர். போதா குறைக்கு அரசியல் நாகரீகமின்றி தனிமனிதத் தாக்குதல் பரவலாக அனைத்து கட்சியினராலும் தொடுக்கப்படுகின்றது; அந்த அளவில் தான் ஒவ்வொரு கட்சியினரும் நடந்தும் கொள்கிறார்கள்.
நிதித்துறையில் இருந்து நீதித்துறை வரை எங்கு செல்லினும் பாமரனுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கனியை எட்டும் முயற்சியெடுக்கவே இங்கு பலருக்கு கணி காண்பிக்க வேண்டியிருக்கிறது.
சாதிய அடக்கு முறைகளும், மதச்சண்டைகளும், பெண்ணடிமைத்தனங்களும், கல்வி வியாபாரமாக்கப்படுதலும், விவசாயிகளின் அவலங்களும், தற்கொலைகளும், இன்னும் தொடரத்தான் செய்கின்றன.
பொதுவெளியில் மக்களின் செயல்பாடு இன்னும் ஏமாற்றமளிப்பதாய் இருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து, முன் பதிவு மையங்கள் வரை வரிசையில் நிற்க வேண்டும் என்ற சாதாரண மனநிலை கூட பெரும்பாலான மக்களிடம் இல்லை. இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை ஏன் இத்தனை வேகமாக இயக்கப்படுகின்றன என்பதன் விடை தெரியவில்லை. சக வாகன ஓட்டுனர்களை, பாதசாரிகளை இன்னும் சொல்லப் போனால் போக்குவரத்து விதிமுறைகளைக் கூட பலரும் மதிப்பதில்லை.
மக்கள் மிக வேகமாக பயணிக்கின்றனர், ஒருவரை மற்றவர் முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் பரவலாக அனைவருக்கும் இருக்கிறது; ஆனால் தானும் வாழ வேண்டும், கூடவே மற்றவரும் வாழ வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. சக மனிதர்கள் இன்றி சுயமாக வாழ்ந்து விட முடியாது என்ற புரிதலும் இல்லை.
குப்பைகளைக் களைவதிலும், சுகாதாரமாய் வாழ்வதிலும் பொது மனிதராய் நமக்கு இருக்கும் அக்கறை இன்னும் சராசரிக்குக் கீழே தான். பிரயாணங்களின் நடுவே, சன்னல்களின் வழியே வீசியெறியப்படும் காகித, பிளாஸ்டிக் குப்பைகளும்; வயல்வெளிகளில் கொட்டப்படும் வேதிக் கழிவுகளும், மக்காத குப்பைகளுமே போதும் நம் அக்கறையைச் சுட்டிக்காட்ட!!
பணம் செழுத்தவன் வரி ஏய்ப்பு செய்து பகட்டாக வாழ்வதும், பணம் இல்லாதவன் கடனாலும், பசியினாலும் தொடர்ந்து மடிவதும் ஒரே மண்ணில் தான் என்பது வேதனைக்குரிய விடயம்.
இவையெல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடும் சங்கதி ‘டாஸ்மாக்’மதுபானக் கடைகள். கல்லூரி விழாக்களில் துவங்கி, திருவிழா, திருமணவிழா, கட்சி விழாக்கள் வரை மதுபானமில்லாத விழாக்கள் இல்லையெனலாம். போதை ஏற்படுத்தும் வில்லங்கங்களும், கைகலப்புகளும், விபத்துக்களும், குடும்பத் தகராறுகளும், வியாதிகளும், மரணங்களும் இன்னும் தொடர்வது தான் கொடுமைகளில் எல்லாம் பெரிய கொடுமை.
இத்தனைக் கொடுமைகளின் ஊடே நமது ஊரில் வாழ்வதை ஒரு சாகசம் என்று கூட சொல்லலாம்!
மதுவிலக்கு, கல்விக்கடன்களில் இருந்து விலக்கு, முதியோர் உதவித் திட்டம், விவசாயிகளின் நலன் காப்பு என கட்சிகள் அளித்திருக்கிற வாக்குறுதிகள் தமிழகத்தை நேர்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், சில நூறுகளுக்காக விலை போகிறவர்களும், இலவசங்களை எதிர்பார்ப்பவர்களும், அரசு நிதிகளை தம் வசமாக்கும் அதிகார வர்க்கமும், லஞ்சம் பெறும் கயவர்களும், கல்விக் கொள்ளையர்களும் தமிழகத்தில் தொடரும் வரை தமிழகத்தின் அல்லல்கள் தொடரவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

01/05/2016
நாகர்கோவில்.

Related Posts with Thumbnails