September 12, 2020

நீட் எனும் தமிழனத்துவேசம்

 மோனிஷா, விக்னேஷ், ஜோதிஸ்ரீ என இன்றளவும் தொடரும் இந்த ஏமாற்றங்களுக்கும், இழப்புகளுக்கும், சொல்லவொண்ணா துயரங்களுக்கும் பின்னால் இருப்பது அப்பட்டமான வாக்கரசியலும், தமிழனத்தின் மீதான வன்மமும் மட்டுமே. 


முயன்று முயன்று ஒரு தருணத்தில் நமக்கே என்னடா இது என்று வெறுப்பும், மன அழுத்தமும் ஒரு சேர தாண்டவமாடும். 


அப்படியெனில் 1176/1200 மதிப்பெண் எடுத்த அனிதாவின் மன நிலைமையை சற்றும் ஊகித்து கூட நம்மால் பார்க்கவியலாது. 


எத்தனை நம்பிக்கையோடு அவர் உச்ச நீதிமன்றத்தின் வாயிலில் காத்திருந்தார் 💔



நம் தமிழ் பிள்ளைகளை இனியும் இழத்தல் கூடாது. 


அவர்களுக்கு சொல்ல வேண்டியது இவைகளை மட்டும் தான்...


' நம் தலையெழுத்து இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் பிறந்தது '


 ' இங்கு நீதி என்பது விலை கொடுத்து வாங்கப்படுவது '


' நீ தோற்றாலும் பரவாயில்லை; எங்களைத் தோல்வியில் தள்ளி விடாதே ' 


' என்ன நிகழ்ந்தாலும் உன் பக்


கம் நிற்கிறோம் ' அன்பு குழந்தைச் செல்வங்களே!




August 30, 2020

சுந்தரபாய் ஐயப்பன் @ அருளப்பன்

பாட்டி காலமாகி இன்றோடு ஒரு ஆண்டு ஆகிறது. தந்தையாரின் பணியினிமித்தமும் எனது படிப்பினிமித்தமும் சொந்த ஊரில் அதிக நாட்களைக் கழிக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.


ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைகளில் மட்டும் சென்று வருவதுண்டு. செல்கின்ற போதெல்லாம் தாத்தாவும் பாட்டியும் தங்களது பிரியத்தால் திக்குமுக்காடச் செய்வார்கள்.

பாட்டிக்காக வீட்டில் காத்திருக்கையில் வயல்வெளிகளில் வேலையை முடித்து விட்டு தலை மேல் ஒரு பாரம் விறகுக் கட்டையும் வைத்து வீடு வந்து சேர்ந்ததும் சேராததுமாக கேட்கின்ற முதல் கேள்வி 'காப்பி தண்ணி எதும் குடிச்சியா எட்டினு' என்பதாகத் தானிருக்கும்.

தொண்ணூறுகளில் இட்லி தோசை எல்லாம் கனவு உணவுகள் தான். ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இருமுறை அதுவும் உறவினர்கள் வந்தால் தான் சாத்தியம்.

தெரு வழியே இட்லி விற்பனை செய்யும் பெண்மணியின் ' இட்லீ...ஈ...ஈ...ஈ ' குரல் கேட்டுவிட்டால் போதும் பாட்டிக்கு; உடனே ஒரு தட்டையும், சிறு சில்வர் டம்ப்ளரையும் எடுத்துக் கொண்டு சேலைத் தலைப்பில் முடித்து வைத்திருக்கும் சேமிப்புககளைத் துழாவத் தொடங்கி விடுவார்.

அவ்வளவு வறுமையிலும் எட்டு பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் ஐயப்பன் என்கிற அருளப்பனும்; சுந்தரபாயும் அவர்களால் இயன்ற மட்டும் குறைவின்றியே வளர்த்தனர்.

பாட்டி குறித்து பொது வெளியில் இதுவரை எழுதியதில்லை. இதனைப் பதிவு செய்கையில் நாளை நமைக் குறித்து நம் சந்ததி எவ்விதம் வரலாற்றைப் பதிவு செய்யும் என்கிற பதட்டம் மேலிடுகிறது!

வாழ்நாள் முழுவதும் நம் முன்னோர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறோம்! 

August 03, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 5

  ‘இதுவரை இல்லாத அளவு’ அச்சுறுத்தல்!

ஒரு நாட்டின் தூண்கள் என சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய இந்நான்கை குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப காலங்களில் காட்சி ஊடகங்கள் என்றால் அரசே ஏற்று நடத்திய தூர்தர்சன் மட்டும் தான். 1991 ல்  அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசின் தாராளமயமாக்கக் கொள்கைகளினால் தனியாருக்கும் தொலைக்காட்சி உரிமங்கள் வழங்கப்பட்டன, தென் இந்தியாவின் முதல் தனியார்த் தொலைக்காட்சியாக 1992 ல் சன் குழுமத்தினர் அறிமுகமானார்கள்; இன்றைய தேதியில் அந்த எண்ணிக்கை பல நூறுகளைத் தொடும்.

அரசு ஏற்று நடத்துகின்ற தூர்தர்சனில் இன்றளவும் அரசு சம்பந்தமான நிகழ்வுகளும், செய்திகளும் தான் இடம் பெறும். அந்த தொனியில், தனியார் ஊடகங்களும் அதன் தலைமைக்குச் சாதகமான செய்திகளையே வெளிக்கொணர்ந்தாலும் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானக் கருத்துகள் இருப்பின் அவற்றையும் அவ்வப்போது எடுத்துரைப்பவையாக இருந்து வந்திருக்கின்றன. 

ஆனால் இன்றைய தேதியில் தனியார் செய்தி ஊடகங்களில் கூட எப்படியான செய்திகளை முன்னிறுத்த வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், எவற்றை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டும் என்பதை ஆளும் ஒன்றிய அரசே தீர்மானம் செய்வதாகத்தான் படுகிறது. குணசேகரன்கள் தரம் தாழ்ந்து நடத்தப்படுவதற்கும் அதைத்தான் காரணம் என்கிறார்கள். இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் அவர்களும் அதனை உறுதி செய்திருக்கிறார்.

கோவிட்-19 குறித்தச் செய்திகள் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை ஊடகங்கள் ‘இன்று மட்டும்/ இன்று ஒரே நாளில்/ இதுவரை இல்லாத அளவு’ என்பவற்றைத் தான் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லி வருகின்றன. ஆகஸ்ட் 3  மாலை நேரப் புள்ளிவிவரங்களின் படி தமிழகத்தில் 56,698 பேருக்கு தொற்று இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. இது வெறும் தொற்று இருப்பவர்களது எண்ணிக்கை தான். இவர்களில் எத்தனை பேர் நலமாய் இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் மறைத்து விட்டு மொத்த எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட்டு ‘இதுவரை 2.63,222’ பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆகஸ்ட் 3 நிலவரத்தின் படி, தொற்று ஏற்பட்டு நலமாகி வீட்டிற்கு போனவர்கள் 2,02,283 பேர். இந்த எண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை இவ்வளவு என்று லட்சக்கணக்கை காட்டுவதும், இன்று இத்தனை பேருக்கு என குறிப்பிடுவதை விடுத்து, ‘இன்று மட்டும் ஒரே நாளில் இது வரை இல்லாத அளவிற்கு’ எனவும் அழுத்தி சொல்வதும் மக்களை பயமுறுத்துவதற்கான ஒரு உக்தியாகத்தான் படுகிறது. 

உள்ளிருப்பில் நான்கு மாதங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வாதாரத்திற்கு மக்கள் பெரும் அல்லல் படுகிறார்கள். இன்னமும் உள்ளிருப்புக் காலத்தைத் தொடர்வதன் மூலம் மக்களை அடைத்து விட்டு, தொடர் அச்சத்தில் வைத்துக்  கொண்டு, உரிமைகளுக்கெதிரான அவர்களின் குரல்வளைகளையும் நெறித்து விட்டு என்ன சாதிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

July 25, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் - 4 (பசிப்பிணி/ வேலையிழப்பு/மன அழுத்தம்)


இந்த உள்ளிருப்பு காலங்கள் கோடிக்கணக்கான இந்திய சாமானியர்களின் இயல்பு வாழ்க்கையைத் திருப்பிப் போட்டிருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும் போது இங்கு இறப்பு விகிதம் குறைவு என்றாலும், கிராமங்களுக்கும் பரவி விட்ட தற்போதைய நிலையில் இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் ஆறு மாத காலம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அரசு பணியிலிருப்போரும், தனியார்ப் பணிகளில் மாத ஊதியம் பெறுபவர்களும் தவிர்த்து கூலித்தொழிலாளர்கள் துவங்கி வியாபாரம் செய்பவர்கள் வரை அனைத்துத் தர மக்களும் பெரும் அல்லல் படுகிறார்கள்.

சிலர், அறிந்தவர்களிடம்  உதவிகளைக் கேட்டு விடுகிறார்கள்; பலர், கேட்கும் திராணியின்றி பசிக்கொடுமையில் மடிகிறார்கள். வேலைகளைப் பறிகொடுத்த மன அழுத்தத்தில் பலர் உயிரை மாய்த்திருக்கின்றனர்.

கடந்த நான்கு மாதங்களில் அரசு கொடுத்தது ரூ. 2,000 மட்டுமே. அரிசியும், பருப்பும் இலவசம் என அறிவித்து விட்டு, எரிபொருளிலும், மின்சாரத்திலும் கை வைத்து இருக்கிறார்கள்.

இப்படியான தருணத்தில் இன, மத, மொழி வேறுபாடு இன்றி பல்வேறு தரப்பினர் உதவிகள் செய்து வருகின்ற நிலையிலும் சுயபிடித்தங்களுடன் சிலர் தங்கள் கரங்களைக் குறுக்கிக் கொள்வதும் தொடர்கிறது.

மாத ஊதியம் பெறுகின்ற ஒருவரிடம் சிறு உதவி கேட்டு நண்பர் ஒருவர் முறையிடுகையில்... ' அய்யோ என் கிட்டவே பெருசா எதும் இல்ல ' என்றவர், தவறாமல் ஆன்லைனில் கோடிக்கணக்கில் புரளும் சாமியார்களுக்கு அனுப்புவது முரண்.

தனியார்ப் பள்ளி/ கல்லூரி ஆசிரியர்களும், ஊழியர்களும் போதுமான ஊதியமின்றி தவிக்கிறார்கள். மாத ஊதியம் தவறாமல் பெறுவோரேனும் நமது பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றும் கற்பிப்பவர்களுக்கு உதவியாய் இருத்தல் அவசியம்.

பெரிய அளவில் செய்யவில்லை எனினும், குறைந்த பட்சம், நமக்கு அருகில் இருப்பவரின் பசிப்பிணி போக்கினாலே போதுமானது. கூடவே தனிமையில் இருக்கின்ற உறவுகளை அடிக்கடி அழைத்து அவர்களின் மன உறுதியை உறுதி செய்து கொள்ளுங்கள். பேரன்பினால் எதையும் எதிர்கொள்ளவியலும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்
எட்வின்
சென்னை

July 23, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 3



சமகாலத்தில் இப்படியானதொரு உலகளவிலான பெருந்தொற்று நமை ஆட்கொண்டிருப்பது பெருந்துயரம் தரும் நிகழ்வு என்றாலும், இது நமை தகவமைத்துக் கொள்வதற்கும், நமது அதீத சுயநலம் பிடித்த லட்சியங்கள் தவறென்பதை உணர்ந்து கொள்வதற்கும், நமை ஆளும் தலைமைகள் எப்படியானவை என்பதை புரிந்து கொள்வதற்கும், அவர்களின் பின்னிருக்கும் கயமைகளை அறிந்து கொள்வதற்கும் கூடவே அவர்களது இயலாமைகளை உலகறிந்து கொள்வதற்கும் நமக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு இது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் சார் நலன்கள் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; எனினும், குறிப்பிட்ட சில சுய தேவைகளைத் தாண்டி பொதுநலன் சார் விடயங்களிலும், சமூகம் சார் விடயங்களிலும் கண்களைக் கட்டிக் கொண்டிருப்போமானால் நமது பிறப்பிற்கு நியாயம் செய்து விட முடியும் எனத் தோன்றவில்லை.

தொற்றின் ஆரம்ப நிலையில் அறிவியல் பூர்வமாக அதனை அணுகாமல், தமிழகத்திற்குள் தொற்று வரும் வாய்ப்பில்லை; ஏப்ரல், மே மாதங்களின் வெயிலுக்கு எந்த கிருமியானாலும் பரவாது; வயது மூத்தோருக்கு மட்டும் தொற்றும்/ பாதிப்பை ஏற்படுத்தும் என அவையிலேயே கேலி பேசிக்கொண்டும், மெத்தனமாகவும் இருந்து விட்டு இப்போது முட்டிக்கொண்டிருக்கிறது அரசு.

அரசு மருத்துவமனைகளுக்கான முக்ககவசங்கள், தற்காப்பு உடைகள் கொள்முதலில் கூட பெருமளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. மறுபுறம், தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 ன் பெயரில் பெருங்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. ரூபாய் 500 மதிப்பிலான தற்காப்பு உடைகளுக்கு ரூ. 2500 வரை கணக்கு காட்டப்படுகின்றன. நுகம் சுமக்கும் மக்களின் மீது தனியார் மருத்துவமனைகள் தமது வணிகத்தை வலிந்து திணிக்கின்றன என்பது கண்கூடு.

PPE எனப்படும் தற்காப்பு உடைகளின் தேவையிலும், அவற்றை அணிவதிலும் சில நகைமுரண்களும், பெருமுரண்களும் இருப்பதாகப் படுகிறது. இன்றைய தேதியில் எந்த மருத்துவமனை வளாகத்தை நெருங்கினாலும் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு நிற்கும் மருத்துவப் பணியாளர்களை நாம் காண முடியும். அவர்கள் அணிந்திருக்கும் தற்காப்பு உடையை அவர்களின் பணி நேரம் முடியும் மட்டும் அணிந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

முரண் என்னவென பார்ப்போம்… தொற்று இருக்கும் ஒரு நபரை, மருத்துவப் பணியாளர் ஒருவர் சோதனை செய்திருக்கிறார் அல்லது குறிப்பிட்ட அறையில் சென்று அனுமதித்து விட்டு வருகிறார் அல்லது கொரோனாப் பிரிவில் உடனிருந்து கவனிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பின்னர் அம்மருத்துவப் பணியாளர் அதே தற்காப்பு உடையுடன் தொற்று இல்லாத வேறொருவரை அணுகுதல் புதிய தொற்றிற்கு வழிவகுக்கத்தானே செய்யும்!! அதைத்தானே நம் சமூகம் தொடர்ந்து செய்கிறது.

மருத்துவப்பணியாளர்கள் அவ்விதம் செய்வதிலும் தவறில்லை… PPE என்பதற்கு Personal Protective Equipment – ‘தற்’காப்பு உடைகள் என்பது தானே பொருள். பிறர் எக்கேடு கெட்டால் என்ன!!  

எட்வின்
சென்னை
23/7/2020

July 19, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 2


சென்னையில் மெதுவாகத் தொற்று பரவ ஆரம்பித்த நாட்களிலேயே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பில்லை.

ஆரம்பத்தில் 'குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின்' டெல்லி மாநாட்டைக் காரணம் சொல்லிக் கொண்டும், பின்னர் ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றானக் கோயம்பேடு சந்தையை காரணம் சொல்லிக்கொண்டும் இருந்தார்களே தவிர, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ/ சுகாதார நடவடிக்கைகளையோ போதுமான அளவு திட்டமிடவில்லை.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூடுகின்ற சந்தைகளிலேனும் போதுமான கண்காணிப்பு நடவடிக்கைகளை செய்திருத்தல் அவசியம். அதை விடுத்து டாஸ்மாக் கடைளைக் கண்காணிப்புச் செய்த பெருமையெல்லாம், காலத்திற்கும் பல்லிளிக்குமாறு வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன.

இதற்கடுத்து கையைக் காண்பித்தது வடசென்னையின் சேரிப் பகுதகளைத் தான். சாலையோரங்களிலும், தெரு ஓரங்களிலும், குடிசைகளிலும், வாழ்க்கை நடத்தும் மக்கள் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் என்ன பங்களிப்பைச் செய்து விட முடியும்!?

ராயபுரம், மண்ணடி, தண்டையார்பேட்டை முதலான இடங்களில், சுகாதாரமில்லாத பகுதிகளில் வாழும் மக்களைப் பள்ளிக்கூடங்களிலோ, கல்லூரிகளிலோ ஆரம்பத்திலேயே தனிமைப் படுத்தியிருந்தால் வடசென்னையின் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

உள் ஊரடங்கு அறிவித்த அன்று ராயபுரம் சந்தையில் கூடிய பெருந்திரளான மக்களையும் கூடக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தான் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் களுக்கு டோக்கன் விநியோகம் சிறப்பான கண்காணிப்புகளோடு நடைபெற்றது.

இன்றளவும், மண்ணடி, தண்டையார்பேட்டைப் பகுதிகளைக் கடந்து போகின்ற போது, சாலையோரங்களில் குடியிருக்கும் மக்களைக் காண முடியும்.

இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு தொற்றிற்கு அவர் காரணம், இவர் காரணம் என்கிற பழி போடல்கள் இன்றளவும் தொடர்கிறது… இன்னும் உண்டு

July 18, 2020

கோவிட் – 19 சில புரிதல்கள்


முடக்கல் ஆரம்பித்த மார்ச் ஏப்ரலிலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயங்களும், அனுபவங்களும் பல உண்டு.

பொதுவாக தொற்று வியாதிகள் மக்கள் நெருக்கடி மிகு இடங்களிலும், சுகாதாரமில்லாத இடங்களிலும் இன்னும் அதிகமாக தொற்றவே செய்யும் என்பது பிறர் விளக்கித்தான் நமக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை.

அதிலும் பிற மாநிலங்களைக் காட்டிலும் உயர் மருத்துவக்கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் நமது சுகாதாரத் துறைக்கும், அரசுக்கும் நினைவூட்ட வேண்டிய அவசியமேயில்லை.

கைகளைக் கழுவுங்கள், தனி மனித இடைவெளியை கடைபிடியுங்கள் என அறிவித்து விட்டு

மூக்கிற்கு கீழே முகக்கவசத்தை மாட்டிக் கொண்டு நடப்பதும்
அருகருகே நின்று கொண்டு விழாக்களில் பங்கு பெறுவதும்
முடக்குதலின் உள்ளேயே உள் முடக்குதல் அறிவிப்பதும்
கூடி நின்று கைதட்டுவதும், விளக்கேற்றுவதும்
மதுக் கடைகளை திறந்து விடுவதும்

என இருந்தால் தொற்று பரவாமல் என்ன செய்யும்!

சில நூறுகளாகத் தொற்று இருந்த போதும் சரி, கட்டுப்படுத்தவியலாத அளவிற்கு பரவிய  பின்னரும் சரி, பொது சுகாதாரத்தைக் குறித்து அரசும் மக்களும் எவ்வித கவலையும் பட்டதாகவோ! படுவதாகவோ! தெரியவில்லை.

குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன, அவைகள் முறையாக அகற்றப்படுவதில்லை, அவைகளில் எவ்விதமான கழிவுகள் கொட்டப்படுகின்றன என்பதும் எவருமறியார்; அதின் துர்நாற்றம் அதன் வழியாக கடந்து போகின்றவர்களின் முகக்கவசத்தையும் மீறி மூக்கிலடிக்கிறது.

மறுபுறம் மக்கள், தனி மனித இடைவெளியை முறையாகக் கடைபிடிப்பதில்லை, கறிக்கடைகளிலும். மீன் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் இடைவெளி விட்டு நில்லுங்கள் என Flex விளம்பரங்கள் கண் சிமிட்டினாலும், ‘அத ஏன் நாங்க செய்யப்போறோம்‘ என்கிற தொனியிலேயே கூடுகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு அடைப்பு என அறிவித்ததில் இருந்து மேற்குறிப்பிட்ட கடைகளில் சனிக்கிழமை அந்தி வேளைகளில் தள்ளுமுள்ளு என்பது வாடிக்கையாகிப் போனது. ‘சண்டேன்னா கறி’ அப்படிங்கிற எண்ணத்தில இருந்து கூட இன்னும் மீள முடியாத சமூகம் கொரோனா தொற்றிலிருந்து மீள இன்னும் காலம் இருக்கிறது!

முகக்கசவசங்கள் நாடிக் கவசங்களாகவே அணியப்படுகின்றன. அறிகுறிகள் தமக்கு இருந்தாலும், அதனை மறைக்கும் முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன; அதற்கு,  சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவோம் என்பதும், அரசினால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் படுவோம் என்பதும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன… இன்னும் உண்டு
Related Posts with Thumbnails