January 15, 2022

1983



இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் மீது எனக்கு இருந்த அதீத பற்று இன்று இல்லை என்பது தான் நிதர்சனம். 


அசாருதீன், அஜய் ஜடேஜா காலகட்டங்களில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் Match Fixing க்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்த ஈடுபாடு குறைந்து போனது. எனினும், கால்பந்து, டென்னிஸ் போன்று கிரிக்கெட்டையும் ஒரு விளையாட்டாக  பின்தொடர்வது இன்றளவும் தொடர்கிறது. 


அணித் தேர்வுகளில் நடக்கும் பாரபட்சமும், அதீத காவிச்சாய பூசலும், கிரிக்கெட் குறித்து எவ்வித புரிதலும் இல்லாத அரசியல் பிரபலங்கள் கிரிக்கெட் வாரியங்களின் பதவிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருப்பதும் கிரிக்கெட் மீதான வெறுப்பை இன்னும் இறுகச் செய்கின்றன. 


எனினும் அண்மையில் பார்த்த '1983' திரைப்படம், பால்ய காலத்து நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் விதம்  அமைந்திருந்தது. அந்த உந்துதலில் தான் இதனைப் பதிவு செய்கிறேன். 


கடின உழைப்பும், தொடர் முயற்சிகளும், தன்னம்பிக்கையும் என்றேனும் வெற்றியை  ஈட்டித்தரும்  என்பது தான் 83 தரும் பாடம். 


அதைத்தான் கபில்தேவ் சாதித்துக் காட்டினார். அன்றைய நாட்களின் அசைக்க முடியாத அணியாக இருந்த மேற்கு இந்தியத் தீவை அவர்கள் மண்ணிலேயே 1983 மார்ச் ல் வீழ்த்திய கபில்தேவ், தொடர்ந்து ஜூன் மாதத்தில் அவர்களுடன் ஆடிய மூன்று ஆட்டங்களில் (இறுதிப் போட்டி உட்பட) இரண்டில் வெற்றி பெற்று உலகக் கோப்பையையும் நமதாக்கினார். 


ஒருவேளை, இந்தியா - பாக் பிரிவினைக்குப் பின்னர். 'சஹிவால்' என தற்போது அறியப்படும் ' மோண்ட்கோமெரி ' மாவட்டத்தில் கபிலின் பெற்றோர் தொடர்ந்திருந்தால், கபிலின் சாதனைகள், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியின் பக்கங்களில் இன்று எழுதப்பட்டிருக்கக் கூடும். 


வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்களை கடந்து வர நாம் எடுக்கும் பெருமுயற்சிகள் கண்டுகொள்ளப்படாமலும், பதிவு செய்யப்படாமலும் போவது தான் எக்காலத்தும் டிசைன் போல!! 


அப்படியாகத் தான் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் சதமும், உலகச் சாதனையும், 17/5 என்கிற நிலைமையில் அணி இருந்த போது தனியொருவராக செய்த அதகளமுமான 175 ஓட்டங்கள் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படவில்லை; வீடியோ பதிவும் செய்யப்படவில்லை. (அதற்குக் காரணமாக BBC ன் பணி நிறுத்தம் கூறப்பட்டாலும், இந்தியா பெரிதாக என்ன சாதித்து விடப் போகிறது என கருதிய BBC ன் மேட்டிமைத்தனம் தான் உண்மையாக இருக்க முடியும்) 


1983, ஜூன் 18 அன்று சிம்பாப்வே அணிக்கெதிரான அந்த ஆட்டத்தில்  அச்சாதனை நிகழாமல் இருந்திருந்தால், இந்தியா அரை இறுதிக்குக் கூட தகுதி பெற்றிருக்காது. 


உயர்த்தப்பட்ட சமூகத்தினர் மட்டுமே கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்கிற கட்டுக்கதைகளை உடைத்தெறிந்த கபில்கள், தோனிகளின் சாதனைகள் காலத்துக்கும் பேசு பொருளாக வேண்டும். 


கபிலைக் குறித்து Cricinfo இப்படியாக பதிவு செய்கிறது //The inspirational captain of the World Cup-winning team, Kapil Dev, was neither college-educated nor Brahmin.// 


//Post Independence International players emerged from Najafgarh, Rae Bareilly, Bharuch, Palarivattom, Aligarh, Jalandhar and Ranchi.// 


1983 கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல, இந்திய விளையாட்டு உலகிற்கும் புத்தொளி பாய்ச்சியது என்பது தான் வரலாற்று உண்மை. 

August 11, 2021

மெஸ்ஸி எனும் கால்பந்து வைரம்

கால்பந்து உலகில் கடந்த ஒருவாரமாக அதிகம் பேசப்பட்டு வருவது பார்சிலோனா வில் இருந்து பாரிஸ் ற்கு இடம் பெயர்ந்திருக்கும் மெஸ்ஸி குறித்து தான். 


இடம் பெயர்ந்து வாழ்தல் எல்லோருக்கும் எளிமையாக அமைந்து விடுதல் இல்லை. 2000 ஆவது ஆண்டில் பதிமன்றே வயது இருக்கையில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டு சிகிச்சைக்கான வசதிக்காக பார்சிலோனா கால்பந்து அணியின் வாயிலாக அர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினில் தனது தந்தையுடன் குடி பெயர்கிறார் "லியோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸி" 


அன்று துவங்கி அடுத்த 20 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தவர் தற்போதைய கோவிட் காலத்து புதிய பொருளாதாரத் தடைகளால் பார்சிலோனாவில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது!


தனது வருமானத்தை பாதியாகக் குறைத்துக் கொள்கிறேன் என அறிவித்த பின்னரும் கூட தொடர்ந்து பார்சிலோனாவிற்காக விளையாடுவது மறுக்கப்பட்ட ஒன்றாகிப் போய்விட்டது. 


அதனை அவர் அறிவிக்கையில் உடைந்து அழுத போது மெஸ்ஸியைத் தொடர்கிற ஒவ்வொருவரும் அவரது வலியை உணர்ந்திருக்கக் கூடும். 



தற்போது மெஸ்ஸி, PSG - பாரிஸ் செயின்ட் ஜெர்மன் என்கிற பிரான்ஸ் நாட்டின் அணிக்காக இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 


அது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் விட்டது. அதே அணியில் அவரது சக அர்ஜென்டினா வீரர் டி மரியா, அவருடன் பார்சிலோனாவில் முன்னர் ஆடிய நெய்மர், கூடவே பிரான்சின் சிறந்த இளம் வீரர் ம்பாப்பே என பன்முகத் திறமைகளும் அடங்கியிருக்கிறது. 


பார்சிலோனாவில் மெஸ்ஸி விளையாட ஆரம்பித்த காலங்களில் அளிக்கப்பட்ட 30 ஆம் எண் பாரிஸ் அணியிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அணியிலிருக்கும் நெய்மர் எண் 10 உடன் ஆடுவதால் மெஸ்ஸிக்கு எண் 30 வழங்கப்பட்டிருக்கிறது. 


இதுவரை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (UCL) பட்டத்தைப் பெற்றிராத PSG யை அதை நோக்கி பயணிக்க வைப்பதே முதல் நோக்கம் என்றிருக்கிறார் மெஸ்ஸி. 


இதுவரை PSG அணி குறித்து பேசாதவர்களும் இனி பேசக்கூடும்; அந்த அணிக்கு வியாபார ரீதியான நன்மைகளும் நடந்தேறும்; இங்கிலாந்தில் அதிகம் கவனிக்கப்படாத பிரான்சின் Ligue1 இனி கவனம் பெறக் கூடும்; இவை எல்லாவற்றிற்கும் பின்புலம் "லியோனல் ஆன்ட்ரஸ் மெஸ்ஸி" எனும் ஒற்றைப் பெயரும் அவரது திறமையும் தான்! 


மெஸ்ஸி காலத்தால் அழியாத கால்பந்து வைரம் என்றால் அது மிகையல்ல. 




July 25, 2021

ரித்விக்/ குழந்தை நட்சத்திரங்கள்

ரித்விக்/ குழந்தை நட்சத்திரங்கள்


ரித்விக் போன்ற குழந்தைகள் நடிப்பிலோ, பிற கலைகளிலோ சிறந்து விளங்குவது குறித்து தொடர்ந்து பலதரப்பட்டக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

செய்தி வாசிப்பாளர்களை பகடி செய்த காணொளி நிச்சயம் வாய் விட்டு சிரிக்கக் கூடிய வகையறா தான்.

ஆனாலும் 'என்ன வெங்காயத்துக்கு' மாதிரியான அல்லது 'லிப்ஸ்டிக் நல்லாருக்கு' ; ட்ரெஸ் நல்லாருக்கு மாதிரியான வயதுக்கு ஒவ்வாத வசனங்கள் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்!

ஒருசாரார், ரித்விக்கின் பெற்றோர் அவன் மீது சுமையை ஏற்றுகிறார்கள் என்கின்றனர்; மறுசாரார் கல்வி, கலை, விளையாட்டு, மதம் சார்ந்த ஏதாவது ஒரு விடயத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் மீது வலிந்து திணிக்கத் தானே செய்கிறார்கள் என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர்; அதுவும் உண்மை தான்.

எதுவாயினும், சிறுவர்களின் புரிதலுக்கு அப்பாலான வசனங்களை, அவர்களைக் கொண்டு பேச வைப்பது பெரும் அபத்தம்.

மழலை மொழிகளும், சிறுவயது குறும்புகளும் எப்போதும் ரசிக்கக் கூடியவையே. ஆனால் அவற்றை நமது சுயப்பிடித்தங்களுக்குள் நிறுத்த முயற்சிப்பது முறையல்ல!

பேபி ஷாமிலிகளும், குற்றாலீஸ்வரன்களும் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதறிவோம் தானே!

போற்றபோட வேண்டியவை மழலை மொழிகள் தானேயல்லாமல் வலிந்து திணிக்கப்படுகின்ற மலிவான வசனங்கள் அல்ல!

June 26, 2021

எரிக்சன்/CPR/யூரோ2020/Faith

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளில் டென்மார்க் - ஃபின்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம், முதல் பாதியை நெருங்கிக் கொண்டிருந்த தருணம். 42 ஆவது நிமிடத்தில் டென்மார்க்கின் எரிக்சன் சுயநினைவற்று கீழே விழுகிறார்.

அத பாத்ததும், பசங்க... "அப்பா... என்னாச்சி, என்னாச்சி!  ன்னு கேள்வி கேக்குறானுக; எனக்கும் அதிர்ச்சி! அவர் முகம் குப்புற விழுந்த விதமும் எவ்வித அசைவும் இல்லாத கண்களும் எரிக்சன் மரித்து விட்டார் என்பதைத் தான் உணர்த்தியது.

எரிக்சன் கீழே விழுந்ததும் டென்மார்க் அணியின் கேப்டன், எரிக்சன் உடைய நாக்கு அவரது தொண்டையை அடைக்காமல் இருப்பதற்கான முதலுதவி செய்கிறார்; அடுத்த சில வினாடிகளில் மருத்துவக் குழு களத்திற்குள் ஓடி வருகிறார்கள்.

இரு அணிகளைச் சார்ந்த வீரர்களும் அதிர்ச்சியில் உறைகிறார்கள்; சிலர் கண் கலங்குகின்றனர்; மைதானத்தில் பேரமைதி நிலவுகிறது.

CPR எனப்படும் அவசர கால முறைமையை மருத்துவக் குழு எரிக்சன் மீது செயல்படுத்துகிறது. அவரது நெஞ்சின் மேல் அழுத்துவதும், கூடவே Defibrillator கருவி மூலம் Electrical Shock அளிப்பதுமாக இருந்த அந்த காட்சியை மருத்துவத் துறை சாராத எவரும் காணுதல் நிச்சயம் இன்னும் பதட்டத்தையே ஏற்படுத்தும்.

இன்னும் சொல்லப்போனால் ஒருவரது தனிப்பட்ட சிகிச்சை முறைகளை நேரலையில் காண்பித்ததே அறமற்ற செயல். சிறுவர்கள் முதல் மனோதிடம் இல்லாதவர்கள் வரை இவற்றைக் காணும் வாய்ப்பு இருப்பதால் நேரலையை நிறுத்தியிருக்க வேண்டும்.

டென்மார்க் அணியின் மொத்த வீரர்களும் மருத்துவக் குழுவை சுற்றி நின்று எரிக்சனுக்கு கிடைக்க வேண்டிய தனிமையை உறுதிப்படுத்தியது நெகிழச் செய்த நிகழ்வு.

ஐந்து நிமிட அவசர முதலுதவிக்குப் பின்னர், எரிக்சனின் இதயம் மீண்டும் செயல்படத் துவங்கியிருக்கிறது! கேப்டன், நடுவர், மருத்துவக்குழு என அனைவரும் அதி வேகமாக செயல்பட்டதால் தான் இது சாத்தியப்பட்டது என்பதே நிதர்சனம்.

இத எல்லாம் பாத்த பசங்க, என்ன பண்ணாங்க, எப்டி இறந்து போன எரிக்சன் திரும்ப வந்தான்னு மேலும் கேள்விகள அடுக்கவே... CPR குறித்த தகவல்களை அவர்கள் காதிலும் போட்டு வைத்துவிட்டு இறுதியாக, கடவுளை நம்பி வேண்டினா மட்டும் இப்ப எரிக்சன் திரும்ப வந்திருப்பானான்னு ஒரு கேள்விய வச்சேன்!

அதுக்கு... ம்ம் ஹும், சான்சே இல்ல அப்டின்னானுக!

சற்று தெளிவாகத் தான் இருக்கானுக என்பதில் சிறிய ஆறுதல்!

எரிக்சனின் முழுப்பெயர் "கிறிஸ்டியன் டேனேமேன் எரிக்சன்" என்பது வெறும் தகவலுக்கு மட்டுமே! 🤭

CPR குறித்த விழிப்புணர்வை நம்மைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் ஏற்படுத்துவது நமது கடமை.

https://youtu.be/bEkrQzID8oc

May 29, 2021

இரு கொள்ளை நோய்கள் இடைவெளியில் தொலைக்கப்பட்ட பேரடையாளம் - CBH

பிறந்த சில மாதங்களில் தாயைப் பறிகொடுத்து விட்டு எங்கோ அனாதையாய் இருந்திருக்க வேண்டிய சிறுவன், தொண்டு நிறுவனம் ஒன்றினால் தத்து எடுக்கப்படுகிறான்; பின்னாளில் ஏழை எளிய மக்களுக்காக நாகர்கோவிலில் மருத்துவமனை ஒன்றைத் துவங்கிச் செல்கிறார்; துவங்கப்பட்ட போது  இந்தியா முழுவதும் காலரா எனும் கொள்ளைநோயினால் பீடிக்கப்பட்டிருந்திருக்கிறது.

அம்மருத்துவமனையின் மூலம் அப்பகுதியைச் சார்ந்த பெருந்திரளான மக்கள் பயனடைகின்றனர். சம காலத்தில் அங்கு சிகிச்சை பெற்றவர்கள், படித்தவர்கள், பணி செய்தவர்கள் என சில லட்சம் பேர் மிக உயர்ந்த நிலையில் உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கின்றனர்.

நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓரு கொள்ளை நோய் கொரோனா உருவில் அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் சனங்களை வெகுவாகப் பாதிக்கிறது; நாம் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனையாயிற்றே,

நாம் பயின்ற இடமாயிற்றே, நாம் பணிபுரிந்த நிறுவனமாயிற்றே, நம் உணர்வுகளோடு பிணைந்த மருத்துவமனையாயிற்றே என்பவற்றின்  பெயரில் மூச்சுத்திணறல்களோடும் நெஞ்சு வலிகளோடும் சாமானியர்கள் நம்பிக்கையோடு அம்மருத்துவமனையை நாடுகிறார்கள்; போகின்ற வேகத்தில், அவர்கள் நம்பிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் விதம் "இங்கு சிகிச்சையளிக்க முடியாது" என்கிற பதிலுடன் திருப்பி அனுப்பும் மிக மிகப் பரிதாபமான நிலையில் இன்று இருக்கிறது அம்மருத்துவமனை!

 அம்மருத்துவமனை துவங்க காரணமாக இருந்தவர் 'Harry' Henry John Andrews [b.1873 d.1919]

 அவரது சிறு வரலாறு கீழே

1873 ல் லண்டன் கிழக்கு முனையில் அனாதையாக தன் வாழ்நாளைக் கழித்திருக்க வேண்டிய அவர் எம்மா பூத் என்கிற பெண்மணியால் தத்து எடுக்கப்பட்டு அவர் பணி புரியும் சிறுவர் இல்லத்தில் வளர்க்கப்படுகிறான்.

எம்மா 1888 ல் இந்தியாவிற்கு பயணப்படுகையில் அச்சிறுவனையும் உடன் அழைத்து வருகிறார். இந்தியாவில் காலரா நோய் அதி தீவிரமாக இருந்த நேரமது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தனது பதின் பருவத்திலேயே (1893) மருத்துவப் பணியில் ஈடுபாடு காட்டத் தொடங்குகிறான் அச்சிறுவன்.

நாகர்கோவிலில் அவர்களது அலுவலகக் குளியலறையை மருத்துவப்பணிக்காக பயன்படுத்துகிறார்.

பின்னர் சிக்காகோ சென்று மருத்துவம் பயின்று விட்டு நாகர்கோவில் திரும்பும் அவர் மருத்துவர் பெர்சி டர்னருடன் 1901 ல் மருத்துவமனையை துவக்குகிறார். அங்கிருந்து குஜராத் Emery மருத்துவமனையில் சில காலமும், பின்னர் உ.பி மொரதாபாத்தில் சில காலமும் பணியாற்றி விட்டு வஷிரிஸ்தான் (இன்றைய பாகிஸ்தானில் இருக்கிறது) பகுதியில் இருந்த இந்திய ராணுவ முகாமில் மருத்துவராகப் பணியில் இருந்த போது தோட்டாக்களால் காயமடைந்த ராணுவ வீரர்களைப் பாதுகாப்பான இடத்தில் மாற்றிக் கொண்டிருந்த தருணத்தில் தோட்டாக்களால் துளைக்கப்பட்டு உயிர் நீத்திருக்கிறார்!

தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டச் சிறுவன், அவனது காலம் முழுமையும் பிறர் நலனிற்காக உழைத்து இறக்கும் தருவாயிலும் பிறருக்காகவே மாண்ட பேராளுமை எங்கே! அவர் துவக்கி வைத்துப் போன மருத்துவமனையினால் மூன்று தலைமுறைகள் வரை நன்மைகளைப் பெற்று விட்டு, இன்று அவ்விடத்தையே மீச்சிறு அவசரச் சிகிச்சைக்கு கூட ஒவ்வாத ஒரு இடமாக பேணுகின்றவர்கள் எங்கே!!

அங்கு பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையிலும், அங்கு பணிபுரிந்தவன் என்கிற அடிப்படையிலும், இன்றளவும் ஒரு அங்கமாகத் தொடர்பவன் என்கிற ஆதங்கத்திலும் இதைப் பதிவு செய்கிறேன்! 

இன்றைய தேதியில் - சுயநலன்களால் தொலைக்கப்பட்ட ஆகப்பெரும் அடையாளமாகத் தான் அவ்விடத்தைப் பார்க்கிறேன். 

நான் அண்ணாந்து, அதிகம் வியந்து பார்த்த, என் மனதிற்கினிய CBH குறித்து மன வருத்தத்துடன் எழுதுவது இதுவே இறுதியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில்  கனத்த இதயத்துடன் முடிக்கிறேன்.




December 31, 2020

அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்!

 

கடந்த பத்து ஆண்டுகளில் அளப்பெரிய மாற்றங்களை அடைந்திருக்கிறோம்.

செய்தித்தாள்களை/ வானொலியை/ தொலைக்காட்சியை நாம் திருப்பினால் மட்டுமே நுகர முடிகின்ற செய்திகள் பிரேக்கிங் நியூஸ்களாய்; ஆப்களில் நோட்டிபிகேசன்களாய் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

இவை போதாதென்று மெசஞ்சர்/வாட்சப் என நீளும் செயலிகளின் டிங் டிங் சத்தங்கள் நமை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றன.

வேலைகளை முடித்து விட்டு அமருகையில் கூட அடுத்த கணம் கரங்கள் போனைத் துழாவத் துவங்கி விடுகின்றன.

அலுவல்கள், இ. மெயில், என ஆன்லைனிலேயே இருந்து விட்டு, நண்பர்கள், உறவுகளிடம் கணினி வழியே பேசி அமர்ந்தாலும் பல நேரங்களில் மனம் வெறுமையாய் உணர்வதைத் தவிர்க்க முடிவதில்லை.

வீடுகளில் கனிவான உரையாடல்கள் நிகழ்வது வெகுவாகக் குறைந்து வருவதாகவே படுகிறது. பெற்றோர் - குழந்தைகள்; கணவன் - மனைவி; அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை என நீளும் உறவுகள் இன்னும் உறுதிப்படுதல் அவசியம். இல்லையென்றால் உறவுகளில் அடுத்த தலைமுறை பெரிதாக நம்பிக்கைக் கொள்ளுதல் அரிது.

எந்தவொரு உறவிற்கும் அடிப்படை, அன்பும்; பகிர்ந்து கொள்ளுதலும்; வெளிப்படைத்தன்மையுமே!

இரு பத்தாண்டுகளுக்கு முன்னர் எனது நாட் குறிப்புகளின் முகப்பில் எல்லாம் 'Only Caring and Sharing would keep us all alive and peaceful' என எழுதி வைத்திருப்பேன்.

இன்று அன்பையும், பொருட்களையும் பகிர்ந்து கொள்ளுகிறோமோ இல்லையோ... டிஜிட்டல் தகவல்களை Share செய்து முடங்கிக் கிடக்கிறோம்.

அன்பு தணிதல் ஒன்று போதும் மனதின் சமநிலை மாறுவதற்கும்; உறவுகள் உடைந்து போவதற்கும்.

பெற்றோர் இருந்தும், பெயருக்கென உறவுகள் இருந்தும் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத ஒருவரது மனது, சமநிலையற்றதாக தொடர்ந்து பயணிக்கும்.

ஏமாற்றம், வெறுப்பு, தனிமை, என ஒன்றின் மேல் ஒன்றாக சுமையேற்றப்படும் சமநிலையற்ற அந்த மனது ஏதாவது ஓர் புள்ளியில் தனது ஆற்றாமையை/ உள்ளக்கிடக்கைகளை அழுகை வடிவிலோ, கூச்சலிட்டோ, தன்னைத் தானே/பிறரைக் காயப்படுத்திக் கொள்வதன் மூலமாகவோ வெளிப்படுத்துகின்றது. உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் கூட இது தான் அடிப்படை.

இவ்வுலகை நம்பிக்கையாய் எதிர்கொள்ள கொஞ்சம் கவனிப்பும், அரவணைப்பும் தான் அடிப்படை!

சிறுவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரிடமும் பேசுங்கள், அவர்கள் மனதும் இலகுவாகும். மொபைலிலும், கணினியிலும் வாசிப்புகள், உரையாடல்கள் தொடர்ந்தாலும் ஒன்றாய் அமர்ந்து பேசுதல் மனங்களை அமைதிப்படுத்தும்.

அடுத்த பத்தாண்டுகள் இன்னும் மேம்பட வெறுப்பு தவிர்த்த அன்பு நம்மிடையே நிலைக்க வேண்டும்.

உடன் பயணித்த, பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்பும், நன்றிகளும்.

31/12/2020
சென்னை

December 30, 2020

விழாக்காலப் பேறுகள்

 

நான் சார்ந்திருந்த சமூகத்தில் டிசம்பர் துவங்கி விட்டாலே விழாக்கால உணர்வு மேலிடுவது பலர்க்கும் பொதுவானது. 


வீடுகளில் குடில்கள், வண்ணக் காகிதங்கள், நட்சத்திரங்கள், கொடிகள் வடிவமைப்பதில் இளைஞர்கள் தீவிரம் காட்டுவார்கள். 


வாழ்த்து அட்டைகள் அனுப்புவதில் முதிர்ந்தவர்கள் ஈடுபாடு காட்டுவார்கள். கூடவே தங்களுக்கு பிறர் அனுப்புகிற வாழ்த்து அட்டைகளை வீடு முழுவதும் அலங்காரமாக தொங்க விட்டிருப்பர்.


வீட்டைச் சுத்தம் செய்வதில் துவங்கி, வீட்டிலேயே இனிப்பு, பலகாரங்களைச் செய்வதற்கானப் பணிகளில் பெண்கள் மும்முரமாக இருப்பர். 


இவையனைத்தும் எனைச் சூழ்ந்திருந்த போதிலும், வாழ்த்து அட்டைகள் அனுப்புவது தவிர்த்து மற்றவைகள் எதிலும் அதீத நாட்டமில்லாமலே இன்றளவும் கடந்து வந்திருக்கிறேன். 


புத்தாடை அணிவதில் கூட ஆர்வம் காட்டியதில்லை. (அது என்னாத்துக்குங்கிறேன் 😆) 


இன்றைய தேதியில் வீடுகளில் வெகு அரிதாகத் தான் இனிப்பு, பலகாரங்கள் செய்கிறார்கள்.


கைப்பட எழுதி அனுப்பும் வாழ்த்து அட்டைகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. 


அலங்காரப் பொருட்களையும் கடைகளிலேயே வாங்கி விடும் போக்கும் இருக்கின்றது. 


நமது நலனைக் குறித்து எண்ணுவதற்குக் கூட நேரமின்றி எதற்காகவோ ஓடிக்கொண்டு இருக்கிறோம். 


இப்படியானதொரு பொழுதில் தான்... வாழ்த்து அட்டைகளும்; கைப்பட எழுதி அனுப்பும் கடிதங்களின் முக்கியத்துவமும்; அவைகள் அளிக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடுத்த தலைமுறையினரையும் சென்றைடைய வேண்டும் என்கிற நோக்கில் மகர்களைக் கொண்டு எழுத வைத்தவை இவை. 


என்ன தான் கணினியிலும், கைபேசியிலும் பக்கம் பக்கமாய் எழுதினாலும், கையெழுத்துகள் தரும் மனநிறைவிற்கு அவை ஈடாகாது. 






Related Posts with Thumbnails