கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து மணி நேரம் (300 நிமிடங்கள்) போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் எப்படியிருக்குமென்று.மதியம் மூன்று மணிக்கு பள்ளி முடிந்த சிறு குழந்தைகள் இரவு 8 மணிக்கு மேலாகவே வீடு திரும்பியிருக்கிறார்கள்.ஐந்து மணி நேரம் வாகத்தினுள்ளேயே அடைபட்டிருக்கிறார்கள்.
தண்ணீர், உணவு இல்லாமல்;கழிப்பிடம் செல்ல கூடவியலாமல் தவித்த காட்சிகள் மிகக் கொடுமை. குழந்தைகள் மட்டுமல்லாது மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறவியலாமல் சிலர், விமானத்தை,பேருந்தை,ரயிலை பிடிக்கவியலாமல் சிலர், இரவு பணிகளுக்கு செல்லவியலாமல் சிலர் இப்படி ஒவ்வொருவரும் பெரும் அவதிபட்டுள்ளனர் இந்த அரசியல் பேரணியால்.
இது இன்று நேற்றல்ல வெகு நாட்களாகவே நடந்து வரும் கொடுமை.போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் இன்னும் முடிந்த பாடில்லை.இதனிடையில் இவர்கள் பேரணிகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை ஈராண்டுகளுக்கு முன்னர் நானும் ஒருமுறை இவர்களின் பேரணி ஒன்றால் போக்குவரத்து நெரிசலில் இதை விட சற்றே குறைவான நேரம் தான் (மூன்று மணி நேரம்) சிறைபிடிக்கப்பட்டேன்(என்ன கொடும சார்).
சாதாரணமாகவே பெங்களூரு நகரம் போக்குவரத்து நெரிசலுக்கு உலகப் புகழ் வாய்ந்தது.குறிப்பாக போக்குவரத்து அதிகம் இல்லாத நேரங்களில் 10 நிமிடங்களில் கடக்கக் கூடிய ஓசூர் சாலையை பணி நேரங்களில் கடக்க வேண்டுமானால் குறைந்தது ஒரு மணி நேரமாவது தேவைப்படும். (உலகிலேயே மிக அதிக இரு சக்கர வாகனங்கள் பெங்களூரு நகரத்தில் தான் ஓடுகின்றன)
தேவேகவுடாவை பேரணி மூலம் மக்களுக்கு ஏற்பட்ட இடையூறைக் குறித்து பத்திரிக்கை ஒன்று கேட்கையில் இதெல்லாம் நடக்கின்ற ஒன்று தான் பெரிதாக கூற ஒன்றுமில்லை என்று மிக சாதாரணமாக பதிலளித்திருக்கிறார்.
மக்கள் பணத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தும் மக்களைக் குறித்துக் கவலைப் படாத இவரை எல்லாம் என்ன செய்வது? ஒருமுறை பிரதமராகக் கொண்டதற்கு வெட்கித் தலை குனிவதைத் தவிர!
No comments:
Post a Comment